ஜூன் 2ல் மலரும் 16வது லோக்சபா : புதிய எம்.பி.,க்களுக்காக தயாராகும் பார்லி.,

608

லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய 15வது லோக்சபாவை கலைப்பதற்கான, ஜனாதிபதியின் உத்தரவு, இம்மாதம், 18ல் வெளியாகலாம். புதிய, 16வது லோக்சபாவை அமைக்க, வரும் ஜூன் 2ல், பார்லிமென்ட் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

மிகப்பெரிய பணிகள்

லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும், 16ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அன்று மாலையே, அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கான தெளிவான விடை தெரிந்து விடும்.இதனால், புதிய அரசு அமைக்க ஜனாதிபதி மாளிகையும், புதிய எம்.பி.,க்களை வரவேற்க பார்லிமென்டும், தயார் நிலையில் இருந்தாக வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளில் இருந்து, ஜனாதிபதி மாளிகை மற்றும் பார்லிமென்ட் செயலகம் ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு, மிகப்பெரிய பணிகள் காத்திருக்கின்றன.இதனால், இந்த அதிகாரிகள் அனைவரும், புதிய ஆட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகளை தற்போதே கவனிக்கத் துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து, பார்லிமென்ட் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:ஓட்டு எண்ணிக்கை இறுதி நிலவரங்கள் எல்லாம் முடிந்ததும், தேர்தல் முடிவுகள் அனைத்தும், தலைமைத் தேர்தல் கமிஷன் சார்பில், ஜனாதிபதியிடம், முறைப்படி ஒப்படைக்கப்படும்.அத்துடன், தேர்தல் கமிஷன் பணி, முடிவடைந்துவிடும். தற்போதுள்ள, 15வது லோக்சபாவின் ஆயுட்காலம், வரும் மே மாதம், 31ம் தேதி வரை தான் உள்ளது.எனவே, புதிய, 16வது லோக்சபாவை அமைப்பதற்கு முன், தற்போதுள்ள 15வது லோக்சபாவை, கலைத்தாக வேண்டும். அதற்கான உத்தரவை, முறைப்படி, ஜனாதிபதி தான் வெளியிடுவார்.தற்போதுள்ள நிலவரப்படி, இம்மாதம், 18ல், தற்போதைய லோக்சபாவை கலைப்பதற்கான அறிவிப்பை, ஜனாதிபதி அலுவலகம் வெளியிடலாம். அன்றுடன், தற்போதைய லோக்சபா எம்.பி.,க்களின் பதவிக் காலம் முடிந்து விடும். சபாநாயகர் மட்டும், பதவியில் நீடிப்பார்.

 

ஜனாதிபதி உரை

புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, தற்காலிக சபாநாயகர், யார் என்பதை, ஜனாதிபதி அறிவித்தாக வேண்டும். பெரும்பாலும், இம்மாதம், 25ல், இந்த அறிவிப்பை, ஜனாதிபதி வெளியிடலாம்.பின், புதிய எம்.பி.,க்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்ய வேண்டு மென்பதால், வரும், ஜூன் மாதம் 2ல், பார்லிமென்ட் கூடுகிறது. அன்று, லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டு சபைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.அடுத்த இரண்டு நாட்களுக்கு, லோக்சபாவில் புதிய எம்.பி.,க்கள் அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி முடிந்த மறுநாள், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கும். அதற்கு அடுத்த நாள், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.கடைசியாக, ஒரு நாள், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, எம்.பி.,க்கள் பேசுவதுடன், இந்த ஆறு நாள் கூட்டத்தொடர், முடிவுக்கு வரும்.இவை அனைத்துமே, தேர்தல் முடிவுகளில், இழுபறி ஏற்படாமல், பெரும்பான்மையுடன், ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியைப் பிடித்தால் மட்டுமே சாத்தியம்.எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், புதிய அரசுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, ஜனாதிபதி உத்தரவிடுவார். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், பார்லிமென்ட் நடக்கும் நாட்கள், அதிகரிக்கப்படலாம்.

 

புதிய அரசின் பட்ஜெட்

அடுத்ததாக, புதிய அரசு சார்பில், பட்ஜெட் சமர்ப்பித்தாக வேண்டும். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட துணைநிலை பட்ஜெட்டின் ஆயுள், வரும், ஜூலை மாதம் 31ல், முடிவடைகிறது.எனவே, அதற்கு முன்பாகவே, புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். புதிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்திலேயே கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.

SHARE