ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன.
இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி அக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. 9 நாட்களை கொண்ட இக் கூட்டத்தொடரில் ஐ.நா.பொச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் வேறு. நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.பொச்சபை கூட்டத்தொடர் வேறு என்பதை புரியாது இரண்டும் ஒன்றுதான் என எண்ணுபவர்கள் பலர். சாதாரண பொதுமக்கள் மட்டுமல்ல சில தமிழ் ஊடகங்களுக்கும் இதுபற்றிய சரியான விளக்கம் தெரிவதில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட அறிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கையை தவிர வேறு விவாதங்கள் நடைபெறவில்லை. இலங்கை அரசாங்க தரப்பு பிரதிநிதிகளாக ஜெனிவாவில் உள்ள தூதரக அதிகாரிகளே கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வெளிவிவகார அமைச்சரோ அல்லது அமைச்சு மட்ட அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை.
வழக்கமாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இம்முறை இலங்கையிலிருந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளின் வரவு குறைவாகவே காணப்பட்டது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியா தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் உட்பட சில அமைப்புக்கள் கலந்து கொண்டன. பக்க நிகழ்வுகள் சிலவற்றையும் நடத்தியிருந்தன.
இலங்கையிலிருந்து சர்வதேச பௌத்த சங்கத்தின் பிரதிநிதியும் முன்னாள் படைஅதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தலைமையில் இலங்கையிலிருந்தும் இத்தாலி, லண்டன், பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சிங்களவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பக்க நிகழ்வுகள் பலவற்றை நடத்தியிருந்தனர்.
விடுதலைப்புலிகள் போர்க்குற்றங்களை செய்தனர். சிறுவர்களை படையில் சேர்ந்தனர். எல்லைக்கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை படுகொலை செய்தனர். உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக விடுதலைப்புலிகள் காணப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கையேட்டை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு முன்னால் உள்ள மைதானத்தில் சிறிலங்கா இராணுவம் செய்த படுகொலைகள் என படங்கள் தமிழர் தரப்பால் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த சிங்களவர்கள் சிலர் இந்த படுகொலைகளை விடுதலைப்புலிகளே செய்தனர் என வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பிரசாரம் செய்தனர். அதனை வீடியோ எடுத்து உலகம் எங்கும் பிரசாரம் செய்தனர். அதனை தமிழர் தரப்பு சரியாக எதிர்கொள்ள முடியாமல் கைகட்டி நின்றனர்.
சரத் வீரசேகர தலைமையில் வந்த சிங்களவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை என்பதே உண்மையாகும்.
தமிழர் தரப்பு ஜெனீவா தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவொன்றை எடுத்து ஒரே இலக்குடன் பயணிக்காமையே தமிழர் தரப்பின் பலவீனத்திற்கு காரணமாகும்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவோம் என சிறிலங்கா தரப்பும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த பிரேரணைக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு மேலும் இருவருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இரு வருடகாலத்தில் போர்க்குற்ற விசாரணைகள், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை, காணிவிடுவிப்பு, வடக்கிலிருந்து படையினரின் வெளியேற்றம், மீள்குடியேற்றம் என 20க்கு மேற்பட்ட விடயங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன.
இருவருட காலஅவகாசம் நிறைவடைவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. 2015ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த பிரேரணையில் சொல்லப்பட்ட பிரதான விடயங்கள் எதனையும் சிறிலங்கா நிறைவேற்றவில்லை. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட படையினர் மீது பன்னாட்டு நீதியாளர்களை கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான பொறிமுறையை அமைக்க வேண்டும், வடக்கில் படையினர் விலக்கி கொள்ளப்பட வேண்டும், பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் உட்பட 20க்கு மேற்பட்ட விடயங்கள் இதில் அடங்கியிருந்தன.
இதில் பொதுக்களின் காணிகள் சொற்ப அளவில் விடுவிக்கப்பட்ட போதிலும் ஏனைய விடயங்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அக்கறைப்படவே இல்லை.
முக்கியமாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீதான விசாரணை என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அமைச்சர்களும் மறுதலித்தே வந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் பேச செல்வதற்கு முதல் கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்கள் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை ஐ.நா.பொதுச்சபையில் முன்வைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து அதில் சில திருத்தங்களை செய்யும் பிரேரணையை முன்வைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருந்த உரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றினார் என கூறப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள் என மைத்திரிபால சிறிசேனா உலக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நாங்கள் ஒரு சுதந்திர நாடு. எங்கள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பவில்லை. எங்கள் பிரச்சனைகளை எமது மக்களே தீர்த்துக் கொள்ள அனுமதியுங்கள் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மோசமான பயங்கரவாதிகளை தோற்கடித்து எமது நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் ஏற்படுத்திய எமது துருப்புக்களை எமது தேசம் வணங்குகிறது என சிறிலங்கா படையினருக்கு நற்சான்றிதழ் ஒன்றையும் வழங்கிய மைத்திரிபால சிறிசேனா ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர்க்குற்றம் புரிந்த படையினர் மீது பன்னாட்டு நீதியாளர்கள் முன்னிலையிலான நீதி விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னின்று வழிநடத்தியது அமெரிக்கா ஆகும். ஆனால் அமெரிக்கா தற்போது ஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலகி விட்டது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ரம் ஐ.நா.மனித உரிமை பேரவை மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். கடந்த வாரம் ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் உரை தெளிவு படுத்துகின்றது.
இந்நிலையில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 40ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அதற்காக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம், அக்காலப்பகுதியில் சிறிலங்கா இப்பிரேரணையில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றியிருக்கிறதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது ஐ.நா.மனித உரிமை பேரவையில் உள்ள நாடுகளுக்கு தெரியும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலம் கடத்தி வரும் சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுதான் இப்போது பிரேரணையை முன்னின்று வழிமொழிந்த நாடுகளிடம் உள்ள கேள்வியாகும்.
இப்பிரேரணையை வழிமொழிந்த நாடுகளில் அமெரிக்கா இப்போது ஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலகி விட்டது. அமெரிக்காவின் பொறுப்பை இன்று பிரித்தானியாவே எடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல. சிறிலங்கா மீது காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் தான் உள்ளது.
சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிவிசாரணையை நடத்தப்போவதில்லை என்றும் படையினரை தண்டிக்கப்போவதில்லை என்றும் சிறிலங்கா ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சிறிலங்காவின் சர்வதேச குற்றங்கள் மீது, சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை நோக்கியே சர்வதேச நாடுகளை நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்பிடம் காணப்படுகிறது.
சிறிலங்காவுக்குள் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்தான் நீதி கிடைக்க வாய்ப்புண்டு. சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரும், 1.7 மில்லியன் மக்களின் கையெழுத்து அட்டையை அண்மையில் ஐ.நா. பொதுச்சபையிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு சமர்ப்பித்திருந்தது.
தமிழர்களின் மனித உரிமைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்து மீறி வருவதாகத் தெளிவாக்குகிறது. அது தொடர்ந்து சித்திரவதையைப் பயன்படுத்துகிறது என்பதையும், உள்நாட்டளவில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள் குடியமர்த்தம் செய்யத் தவறியதையும், வேறுபல மோசமான தோல்விகளையும் எடுத்துக்காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒருபோதும் யாரும் பொறுப்பாக்கப்படவே இல்லை. பாதிப்புற்ற தமிழர்கள் நீதியை மேலும் நெருங்கவும், ஐநாவின் ஆணையுரிமையையும் நம்பகத்தன்மையையும் விழுமியங்களையும் பாதுகாக்கவும் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு கடப்பாடு உண்டெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், குறைந்தது ஐ.நாவின் மூன்று அறிக்கைகளில் ஆவணப்படுத்தியுள்ளவாறு, சிறிலங்கா அரசு புரிந்த மனிதநேயச் சட்ட மீறல்களையும், மானிட விரோதக் குற்றங்களையும், புலனாய்வு செய்யவும் ஆவணப்படுத்தவும் அவை மீது வழக்குத் தொடுக்கவும் நடுநிலையான, சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றைத் தோற்றுவிக்குமாறு,ஐ.நா பொதுமன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல எதிர்காலத்தில் ஆட்சியில் அமரப்போகும் அரசுகளாலும் இலங்கையில் நீதி கிடைக்காது என்பதே யதார்த்தம். மகிந்த ராசபக்சவின் செயற்பாடுகளைப் போலவே மைத்திரிபால சிறிசேனாவின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
இன்னும் 5 மாதங்கள் கடந்த பின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 40ஆவது கூட்டத்தொடரிலும் சிறிலங்கா இன்னுமொரு கால அவகாசத்தை கோரலாம்.
சிறிலங்காவை காப்பாற்றுவதற்கு ஐ.நா.மனித உரிமை பேரவையில் சிங்கள தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முன்னால் தமிழர்கள் தோல்வியடைந்த தரப்பாகவே உள்ளனர்.
( இரா.துரைரத்தினம் )