ஜெயலலிதாவுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் ஆதரவு

783
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.

இலங்கை தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அதிமுகவின் வெற்றிக்காக இணையத்தள பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா இந்தியாவின் அடுத்த பிரதமராக தெரிவானால், தனித் தமிழ் ஈழத்திற்கான ஒரு வலுவான நபராக இருப்பார் எனவும் அவர்கள் எண்ணுகின்றனர்.

இதனால் புலம்பெயர் குழுக்கள் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டி வருகின்றனர்.

அதேவேளை மதிமுக தலைவரும் புலிகளின் முக்கிய ஆதரவாளரும் புலம்பெயர் தமிழர்களின் அன்புக்கு பாத்திரமான வைகோவால் கூட அவர்கள் மத்தியில் இவ்வாறான ஆதரவை பெற முடியவில்லை.

மத்தியில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தால், ஈழ தமிழர்களுக்கான தனது ஆதரவு நிலையில் வேகம் காட்டுவார் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் தமிழர்கள் பெருமளவில் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி ஜெயலலிதாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழர்களின் அமெரிக்காவை தளமாக கொண்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழப்பிரச்சினை, கொழும்பு மீதான பொருளாதார தடை, இனப்படுகொலைக்கு உறுதியான பொறுப்புக் கூறல் போன்ற தனது நிலைப்பாடுகளை முதல்வர் தொடர்வார் என அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் இது முக்கியமான தேர்தல், தமிழ் சகோதரர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை தவறவிடாது உணர்வு பூர்வமாக முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE