ஜெய்ஸ்வால் மீண்டும் அதிரடி… மும்பை அணியை நொறுக்கிய ராஜஸ்தான்

109

 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

திலக் வர்மா 65 ஓட்டங்கள்
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. ஆனால் மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

தொடக்க வீரரான ரோகித் சர்மா 6 ஓட்டங்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் ( 0 ), சூர்யகுமார் யாதவ் ( 10 ) ஓட்டங்களிலும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய முகமது நபி சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில் 23 ஓட்டங்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மா – நேஹால் வதேரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அதிரடியாகவும் விளையாடி ஓட்டங்களை குவித்தது.

இவர்களில் திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் வதேரா 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரை தொடர்ந்து திலக் வர்மா 65 ஓட்டங்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் 104 ஓட்டங்கள்
இதனையடுத்து 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்றதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியநிலையில் பட்லர் 35 ஓட்டங்களில் போல்ட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வாலுடன், அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்த ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 7 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 38 (28) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 183 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

SHARE