ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை ஒட்டுகேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் மீது விசாரணை நடத்த ஜெர்மனி அரசு முடிவெடுத்துள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம்(என்எஸ்ஏ), உலகம் முழுவதும் உளவு பார்க்கிறது. பல்வேறு நாடுகளில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை அந்த அமைப்பு ஒட்டுகேட்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதே போல், ஜெர்மனியில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஏராளமானோரின் செல்போன் பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டுகேட்டு உளவு வேலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, என்எஸ்ஏ மீது கிரிமினல் விசாரணை நடத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டிருப்பதாக பெர்லினில் வெளியாகும் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. விசாரணையை துவங்குவதற்கு ஜெர்மனியின் பிராசிகியூட்டர் ஜெனரல் ஹரால்டு ராஞ்ச் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், என்எஸ்ஏ மீது விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், அதே சமயம் இது அந்த அமைப்புக்கு விடும் எச்சரிக்கையாக அமையும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.