ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
களனியில் நேற்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அளித்த பதில்களும் வருமாறு,
கேள்வி – தேர்தல் நெருங்குகின்றது என்பதனாலா அரிசி விநியோகம் செய்கிறீர்கள்?
பதில் – அண்மைக் காலத்தில் எமது நாட்டில் அரிசியின் விலை அதிகப்படியாக இருந்தது. அதனால் அரிசி விலையை கட்டுப்படுத்த ஆளுநர்கள் ஊடாக அரசாங்கம் அரிசியை கொள்வனவு செய்தது. அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கோவிட் மற்றும் போராட்டம் காரணமாக, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் போனது. ஆனால் தற்போது பொருளாதாரம் ஓரளவுக்கு நிலையாக உள்ளது. மக்களின் தியாகத்தினால் தான் இது நடந்தது. குறைந்த வருமானம் பெறுபவர்கள் அதிக தியாகங்களைச் செய்தனர். நலன்புரிப் பணிகளைச் செய்ய வேண்டாம் என்று சர்வதேச அமைப்புகள் கூறினாலும் ஜனாதிபதி நலன்புரிப் பணிகளைச் செய்கிறார்.
கேள்வி – ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் 5 வருடங்கள் ஆகின்றன. மக்கள் விடுதலை முன்னணி அது தொடர்பில் விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதே?
பதில் – இப்படியான பெரிய மூளைக்காரன் யார் என்று அனைவருக்கும் தெர்யும். ஜே.வி.பி. இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கியது நல்லது. ஏனெனில் அவர்களின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் மூன்று மகன்களும் கொலைசெய்து கொல்லப்பட்டனர். அதற்கு குழுக்களை நியமித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை.
இப்ராஹீம் இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருடைய மகன்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும். அதை அவர் நாட்டிற்கு சொல்வார் என்றார் எல்லாம் முடிந்து விடும். ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேசிய பட்டியலில் வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதாகக் கூறும் ஜே.வி.பி.யை விட கேலிக்கூத்து இந்த நாட்டில் வேறு எதுவும் இல்லை.
கேள்வி – கத்தோலிக்க வாக்குகளை பெற்றபோது, நீங்கள் எல்லோரும் அவ்வாறு கூறவில்லை. ஜே.வி.பிக்கு இம்முறை வாக்கு கிடைக்குமா?
பதில் – ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் மகன்கள் கத்தோலிக்கர்களைக் கொன்றனர். அப்படியானால் ஜேவிபிக்கு கத்தோலிக்க வாக்குகள் கிடைக்குமா?
கேள்வி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நடக்கும்?
பதில் – நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கிறேன். மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி நான் முன்னர் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
கேள்வி – இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை நீங்கள் பிடிப்பீர்களா?
பதில் – எங்களுக்கு தேவையில்லை. மக்களைப் பாதுகாக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
கேள்வி – திருமதி சந்திரிகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராமே? அது பற்றி உங்களின் கருத்து என்ன?
பதில் – முன்னாள் அரச தலைவர்கள் இதனை நாட்டுக்கு செய்தார்கள். திருமதி சந்திரிகா சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டார். போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார் மகிந்த அவர்கள். ஜனாதிபதி கோட்டாபய மக்களை கோவிட் நோயிலிருந்து வெளியேற்றினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். ஆனால் கத்தி கூச்சல் போட்ட ஜேவிபி தலைவர்கள் ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆதரித்தனர். நாட்டுக்கு செய்த ஒரு சேவையை சொல்லுங்கள்.
கேள்வி – 69 இலட்சம் வாக்குகளை 10 கிலோ அரிசியால் காப்பாற்ற முடியுமா?
பதில் – நாங்கள் வாக்குகளுக்காக வேலை செய்யவில்லை. இங்கு அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் கொண்டவர்கள் உள்ளனர். பொருட்கள் விநியோகத்திற்காக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் தெரிவு செய்கிறார்கள். ஏனெனில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும்.