டக்ளஸின் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

94

 

மந்துவில் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (17.04.2024) காலை இடம் பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மக்கள் மற்றும் அமைச்சர் குழுவினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் இராசையா உதயகுமார் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார்.

இதன்போது அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் (MSD) காணொளி எடுக்க வேண்டாமென தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் என ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு தெரியப்படுத்தபட்டதனை தொடர்ந்து அவர் அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மக்கள் சந்திப்பு முடிவடைந்து அமைச்சர் வெளியே வரும்போது வெளியில் நின்ற குறித்த ஊடகவியலாளரிடம் “ஒரே அடி பிடி ”என்று கூறுங்கள் என கூறி சென்றுள்ளார்.

SHARE