உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் கோபமடைந்துள்ள ஜேர்மனிய சான்சலர் ஓலஃப் ஷோல்ஸ்,இராணுவ அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் மற்றும் புலனாய்வு தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Taurus ஏவுகணை
ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் இடையில் கலந்துரையாடப்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் சம்பந்தமான இரகசிய தகவல்கள் அடங்கிய குரல் பதிவு 40 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இதில் உக்ரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய Taurus ஏவுகணை வழங்கப்படுவது சம்பந்தமான தகவல் வெளியில் கசிந்துள்ளமை பாரதூரமான விடயம் என ஜேர்மன் சான்சலர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இப்படியான மிகவும் இரகசியமான விடயங்கள் அடங்கிய உரையாடலை எப்படி பதிவு செய்ய முடியும், அதனை செய்தது யார்?, ஜேர்மனிய இராணுவத்தில் ரஷ்யாவின் உளவாளிகள் இருக்கின்றனரா என்பதை விசாரணையில் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என சான்சலர் உத்தரவிட்டுள்ளார்.
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமை வெளியான இந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
விமானப்படை
“எமது கணிப்புக்கு அமைய விமானப்படைக்குள் நடந்த உரையாடலை திருடி தயாரித்து பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் உரையாடல் பதிவு செய்யப்பட்டதா அல்லது பிரதி எடுக்கப்பட்டதா என்ற வித்தியாசத்தை சரியாக கூற முடியாது” என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் Taurus ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்திற்கு வழங்க ஜேர்மன் சான்சலர் மறுத்துள்ளார்.
500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட Taurus ஏவுகணை மூலம் உக்ரைனில் இருந்து மொஸ்கோவை இலகுவாக தாக்க முடியும் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இது ரஷ்யாவுக்கு எதிரான நேரடியாக போர் அறிவிப்பை செய்தமை போன்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.