டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட்டார், சீன வீராங்கனை லீ நா

683
சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே தொடாத உயரத்தை எட்டினார்.

2011-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்த ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்று தனது 2-வது கிராண்ட்ஸ்லாமை ருசித்தார்.

32 வயதான லீ நா களத்தில் வெற்றிக்காக போராடியதை விட தனது வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீள கடுமையாக போராட வேண்டி இருந்தது. கறுப்பு பட்டையை அணிந்தபடி வலியை பொறுத்துக்கொண்டு ஆடி வந்த லீ நாவால் தனது காயத்தை கடைசி வரை வெல்ல முடியவில்லை.

உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் லீ நா டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முறைப்படி அறிவித்து இருக்கிறார். இது குறித்து லீ நா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது முழங்காலில் ஏற்பட்ட காயம் எனக்கு பல மாதங்களாக கடுமையான வேதனையை அளித்தது. அடிக்கடி ஏற்பட்ட காயத்தால் டென்னிஸ் வீராங்கனைக்கு உரிய உடல் தகுதியுடன் என்னால் இருக்க முடியவில்லை. இதனால் கடைசியாக டென்னிஸ் ஆட்டத்தில் இருந்து விலகும் இந்த முடிவை எடுத்தேன்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அதிக வெப்பத்துக்கு மத்தியில் தொடர்ந்து 7 போட்டிகளில் வென்றதை விட இந்த ஓய்வு முடிவு மிகவும் கடினமானது. டென்னிஸ் உலகை சேர்ந்த நிறைய பேருக்கு எனது டென்னிஸ் வாழ்க்கை பிரச்சினைக்குரிய வலது முழங்காலை பொறுத்தது என்பது தெரியும்.

நான் முழங்காலில் கறுப்பு பட்டை அணிந்து களம் இறங்குவதால் அது எனது டென்னிஸ் அடையாளமாகி விட்டது. காயம் எனது வாழ்க்கையையே மாற்றி போட்டு விட்டது. 4 தடவை முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததுடன், ஒரு வாரத்தில் 100-க்கும் அதிகமான வலி நிவாரண ஊசி போட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலியால் கடினமான இந்த பாரத்தை நிறுத்தும் படி எனது உடல் என்னிடம் கெஞ்சியது.

இவ்வாறு லீ நா கூறியுள்ளார்.

SHARE