தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன்.
படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன்.
திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக வேறு சிலரும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னராகத் திருகோணமலையில் இடம்பெற்ற வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மொழித் தினப் போட்டியில் வவுனியா மாவட்டத்தில் இருந்து பங்குபற்றி இருந்தேன். அப்போதுதான் நான் முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். கோணேஸ்வரர் கோயில், கன்னியாய் வெந்நீர் ஊற்றுப் போன்றவற்றினை அப்போதுதான் முதலிலே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் சென்றதாக ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வந்து ஒரு வாரத்தினுள் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற படுகொலைகளினை உதயன் பத்திரிகையில் வாசிக்கும் போது நான் அண்மையில் சென்றிருந்த ஒரு பாடசாலையிலே இந்த கிரனைட் தாக்குதல் இடம்பெற்றிருந்தது என்ற செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
சில வருடங்களுக்குப் பின்னர் அதே சம்பவத்தில் உயிரிழந்த பொறியியலாளர் திரு ரட்ணராஜா அவர்களின் சகோதரி நான் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்ற இணைந்தார். அப்போது அவர் இந்தச் சம்பவத்தினைப் பற்றி ஒரு முறை என்னிடம் கூறியமை ஞாபகமாக இருக்கிறது. சமூகத்துக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றியவர்கள் ஒரே மேடையிலே கொல்லப்பட்ட சம்பவமாக 1997 யூலை மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் அமைந்தது.
அண்மையில் வடக்குக் கிழக்கில் சுயநிர்ணயம் பற்றிய ஆய்வு ஒன்றின் நிமித்தம் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் (யாழ்ப்பாணம்) வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவற்றினை இணையத்திலே வாசித்துக் கொண்டிருந்த போது தங்கத்துரையின் படுகொலை, அவரது அரசியற் பார்வை, அவர் போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய கிராமிய அபிவிருத்தி சார்ந்த பணிகள், மூவின சமூகத்தவரும் வாழும் திருகோணமலை மாவட்டக் கிராமங்களிலே அவர் இனவேற்றுமை பாராது மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ராஜன் ஹூலினால் தங்கத்துரையின் படுகொலையினை அடுத்து ஆங்கிலத்திலே எழுதப்பட்ட “Murder in Trincomalee and the Tamil Predicament” என்ற கட்டுரை எனது கண்ணிலே பட்டது. கிழக்கின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியும் அங்குள்ள வேறுபட்ட சமூகத்தவர்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் கரிசனை மிக்க ஒருவராக அந்தக் கட்டுரை தங்கத்துரையினை பார்க்கிறது.
2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடித்தொகை அறிக்கையின் படி கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் 39.2% ஆனோர் தமிழர்களாகவும், 36.9% ஆனோர் முஸ்லிம்களாகவும், 23.2% ஆனோர் சிங்களவர்களாகவும் உள்ளனர். இந்தியத் தமிழர்கள், பறங்கியர் முறையே 0.26%, 0.30% ஆக உள்ளனர். இவர்களை விட மலே மற்றும் வேடுவர் போன்ற வேறு சில இனத்தவரும் மிகச்சிறிய அளவிலே கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்றனர். கிழக்கிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் அரசியற் பலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து குன்றத் தொடங்கியிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவும், குறிப்பாக ஆயுதப் போராட்டக் காலத்திலிருந்து, இந்தப் பிராந்தியத்திலே மிகவும் விரிசல் கண்டு போயிருக்கிறது.
கிழக்கின் சிங்களச் சனத்தொகை அதிகரித்தமைக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மிகவும் பிரதானமான காரணமாக அமைந்தன. நாட்டின் ஒரு பகுதியில் தீவிரமான நிலப் பற்றாக்குறை நிலவிய சூழலிலே, நிலவளம் கூடியளவு பயன்படுத்தப்படாத ஏனைய பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினை ஒரு தீய செயற்பாடு என எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்திட முடியாது. ஆனால், அக்குடியேற்றத் திட்டங்கள் இனவெறி நோக்கிலே, நாட்டில் எண்ணிக்கையில் குறைந்த இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பதற்றங்களையும், பயங்களையும் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட போது அபாயகரமானவையாக மாறின. கிழக்கிலே இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் நோக்கங்கள், விளைவுகள் பற்றியும் பலர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றிலே செல்வதுரை மனோகரன் (1987, 1994), ஜீ.எச். பீரிஸ் (1991), பற்றிக் பீபிள்ஸ் (1990) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் கவனமாக வாசிக்கப்பட வேண்டியவை. இந்த ஆய்வாளர்களின் கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதும், அவர்கள் முன்வைக்கும் வேறுபட்ட வாதங்களைத் தொகுத்தும், தொடர்புகளை ஏற்படுத்தியும், விமர்சனபூர்வமாகவும் வாசிக்கும் போது குடியேற்றத் திட்டங்களைப் பற்றிய ஆழமானதும் பரந்துபட்டதுமான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினை விட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்வெளியிட்ட அறிக்கைகளும், ராஜன் ஹூலினால் எழுதப்பட்ட The Arrogance of Power என்ற நூலும் இந்த விடயம் தொடர்பான விளக்கங்களை வழங்கும் முக்கியத்துவம் மிக்க பதிவுகளாக இருக்கின்றன. ராஜன் ஹூலும் அவர் சார்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அரசின் குடியேற்றத் திட்டங்களுக்கு பின்னணியாக இருந்த சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலினை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதேவேளை, குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும், போர்க்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் இராணுவத்தினராலும் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், இழப்புக்களையும் அக்கறையுடனும், அனுதாபத்துடனும் விபரிப்பனவாக அமைகின்றன. குடியேற்றத் திட்டங்களின் அரசியல் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல. மாறாகக் கிழக்கிலங்கையில் சுயநிர்ணயம் பற்றிச் சிந்திக்கையிலே அங்கு தற்போது அவதானிக்கப்படும் இனப் பன்மைத்துவத்தினை நாம் எவ்வாறு நோக்கலாம் என்பதனைச் சிந்திப்பதற்கான ஒரு அழைப்பாக நான் இந்தப் பதிவினை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் 20ஆம் ஆண்டு நினைவுதினத்தினை ஒட்டி எழுதுகிறேன்.
சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியவாதம், கிழக்குமாகாணம்
வடக்குக் கிழக்கிலே சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அந்தப் பிரதேசம் தமிழர்களின் மரபு வழித் தாயகம் என்ற அடிப்படையிலே எழுச்சி பெற்றது. இந்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் இருப்பினும், இது தான் உரிமை கோரும் நிலப்பரப்பில் வாழும் எல்லா சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் சமூகத்திலே இருக்கும் பால், சாதிய, வர்க்க, சமய ரீதியிலான முரண்களைப் பேசுவதற்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட தமிழ் சமூகத்துக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான முரண்களைப் பற்றிப் பேசுவதற்கு சற்றுத் தயங்குவதனை நாம் காண்கிறோம். ஏனைய சமூகத்தினர் ஏனைய தேசங்களுக்குரியவர்கள், எனவே அவர்கள் அக முரண்பாடுகள் பற்றிய தேசியவாத உரையாடலினுள் வர மாட்டார்கள் என்பது இவ்வாறான நிலைப்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு அரசோ அல்லது அரசக் கட்டமைப்போ உருவாகுமானால் அது தனது எல்லைக்குட்பட்டு வாழும் சமூகங்கள் யாவற்றினது நலன்களையும், எல்லோருக்குமான நீதியினையும், சமத்துவத்தினையும் முன்னிறுத்த வேண்டும். இங்கு அகம் புறம் என்ற வேறுபாடுகளை வளர்ப்பது பிரச்சினைக்குரியதும், குரோதங்களைக் கூர்மைப்படுத்தவுமே வழி செய்யும். வடக்குக் கிழக்கிலே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்கு இந்தப் பிராந்தியத்திலே தனிநபர் உரிமைகளே இருக்கின்றன போன்ற எழுக தமிழிலே முன்வைக்கப்படும் வாதங்கள் இன நல்லிணக்கத்துக்கும், பல்லினங்களின் நலன்களையும் உள்ளடக்கிய சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் வலு சேர்க்கமாட்டா என்பதனை இந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்ட விரும்புகிறார்.
தனது சனத்தொகையிலே 98.8%ஆன தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கொண்டு சிக்கல் மிகுந்த வரலாற்றினையும், சனத்தொகைப் பரம்பலினையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி எடுத்த எடுப்பிலே கருத்துக்களை முன்வைப்பது அபாயமானது. தமிழ்த் தேசியவாதத்தின் யாழ். மையவாதத் தன்மையினைத் தங்கத்துரை அடிக்கடி கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் என்பதனை ராஜன் ஹூலின் கட்டுரையின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கிலங்கையின் வரலாறு கூட, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலானது. இது பற்றி எழுதும் வரலாற்றாசிரியரான ட்கமர் ஹெல்மன்-ராஜநாயகம் (1994) மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகள் ஒருபோதும் யாழ்ப்பாண இராசதானியின் கீழ் இருக்கவில்லை என்பதனையும், மட்டக்களப்பு ஒரு காலத்தில் ருகுணு இராசதானியுடனும், மற்றொரு காலத்தில் கண்டிய இரசாதானியுடன் அரசியல் ரீதியில் தொடர்புபட்டிருந்தது என்றும் கூறுகிறார்.
கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் வடக்குக் கிழக்கு இணைப்பினை வலியுறுத்தும் ஒரு போக்குக் காணப்படும் அதேவேளை, தாம் வடக்குடன் இணைகையில் மேலும் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வு கிழக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது (2012ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இணைந்த வடக்குக் கிழக்கின் சனத்தொகை பின்வருமாறு அமையும்: இலங்கைத் தமிழர் – 61.07%, முஸ்லிம்கள் – 23.20%, சிங்களவர்கள் – 15%, இந்தியத் தமிழர் – 0.45%, பறங்கியர் – 0.19%). இந்த நிலைமை கடந்த வருடத்திலே அரசியலமைப்புத் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்தறியும் பணிகள் இடம்பெற்ற போது வெகுவாக அவதானிக்கப்பட்டது.
கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களிலே, வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக இருப்பதற்கு மாற்றாக, நிலத் தொடர்ச்சியற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்றினை அமைப்பது பற்றிய கருத்துக்களும் வெளியிடப்பட்டன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புத் தொடர்பில் இன முரண்பாடுகளைக் கருத்திலே கொண்டு மிகவும் விரிவான முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தது. அவற்றிலே அம்பாறை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு மாகாணத்தின் உருவாக்கம் (இந்த மாகாணத்தின் நிருவாகத்தின் கீழ் விரும்பின் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களைக் கொண்டு வருதல்), அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் உட்புறமாக அமைந்திருக்கும் சிங்களப் பிராந்தியங்களை ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களுடன் இணைத்தல் போன்றன அடங்கும். கண்டி ஃபோரத்தினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்கள் கிழக்கு மாகாணம் தற்போதுள்ளவாறு ஒரு தனி மாகாணமாக இருக்க வேண்டும் எனவும், அதுவே இனங்களுக்கு இடையில் நீண்ட காலத்தில் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தினையும், ஒற்றுமையினையும் வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றன. இந்தக் கோரிக்கைகளிலே சிலவற்றின் பின்னால் அண்மைக் காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகளும், ஏனையவற்றுக்குப் பின்னால் எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் இனவொற்றுமையும் பன்மைத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுவதனை நாம் காணலாம்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் இருந்து கலாசார ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், சனத்தொகை ரீதியிலும் முற்றிலும் வேறுபட்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அந்தப் பிராந்தியத்தின் மக்கள் தமக்குள்ளே உரையாடல்களை மேற்கொள்வதே ஜனநாயகபூர்வமானதும், அவர்களின் சுயநிர்ணய உரிமையினை வலுப்படுத்துவதாகவும் அமையும். இதுவே இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன ரீதியிலான பதற்றங்களும், நிலம் நீர் வளங்கள் மீதான இனத்துவ ரீதியிலான போட்டிகளும் தணிவதற்கு வழியினை ஏற்படுத்தும். வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதுவும், அவர்கள் இழந்துபோன நில நீர் வளங்கள் மீளவும் அவர்களிற்கு அதே வடிவிலோ அல்லது அதற்கு இணையான வேறு வடிவிலோ கிடைக்க வேண்டியதும் இங்கு முக்கியமானது.
தனது அரசியலின் ஆரம்பக் காலங்களிலே கிழக்கிலே மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்த படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, பிற்பட்ட காலத்திலே இன ஒற்றுமையினை வளர்த்தெடுக்கும் வகையில், திருகோணமலையின் கிராமங்களிலே தனது சேவைகளை இன, மத, கலாசார ரீதியிலான வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கிறார் என்பதனை இவரின் மறைவுக்குப் பின்னர் ராஜன் ஹூல் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நலன்களுக்கும் தங்கத்துரை முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதனை ராஜன் ஹூலின் பதிவில் இருந்து நாம் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்தவாறே, தூய்மைப்படுத்திய தேசியவாத அரசியலினைக் கேள்விக்குட்படுத்தி, பன்மைத்துவத்தினை மதிக்கும் அரசியலிலே ஈடுபட்ட தங்கத்துரையிடம் இருந்து இன்றைய அரசியற் தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், நாமும் கற்றுக்கொள்ளுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.
வடக்கிலும், கிழக்கிலும் தனித் தனியாகவோ, இணைந்தோ சுயநிர்ணயத்துக்கான அரசியல், சமூக முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகையில், அரசியற் தீர்வின் வடிவம் அதன் உள்ளடக்கம் பற்றிப் பேசப்படும் இன்றைய சூழலிலே, தங்கத்துரையின் அரசியல், சமூகப் பணிகள் பற்றியும், திருகோணமலையின் கிராமங்களிலே உட்கட்டுமாண அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றியும், தமிழ்த் தேசிய ரீதியிலான அரசியல் உரிமைப் போராட்டத்துக்கும் கிழக்கின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைவெளிகள் பற்றி அவர் முன்வைக்கும் அவதானங்கள் பற்றியும் ராஜன் ஹூலினால் 1997இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையினை மீளவாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் கட்டுரையின் முக்கியமான பகுதிகளை இந்தப் பதிவின் எஞ்சிய பகுதியில் தமிழிற்கு மொழி பெயர்த்திருக்கிறேன். தற்காலத் தமிழ்ச் சமூகத்திலே அதிகம் பேசப்படாத இந்த அரசியற் தலைவரினையும், அவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அவரது இருபதாவது சிரார்த்த தினத்திலே நினைவுகூரும் ஒரு முயற்சியாகவும் நான் இந்தப் பதிவினையும் மொழிபெயர்ப்பினையும் நோக்குகிறேன்.
திரு. தங்கத்துரை பிரதிநிதித்துவம் செய்த திருகோணமலை மாவட்டம் தமிழ்ச் சமூகத்தின் உள் நிலவும் பிரிவுகளினை வெளிப்படுத்தும் ஒரு இடமாகவும் அமைகிறது. திருகோணமலை நகரம் உட்கட்டுமாண வசதிகளினையும், நல்ல பாடசாலைகளையும் கொண்டிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க அளவிலான நடுத்தர வர்க்கம் ஒன்று வாழ்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், காணிகளின் பெறுமதியும் இங்கு உயர்வாக இருக்கிறது. அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்ட, நகருக்கு வெளியில் இருக்கும் பகுதிகளினைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க அகதிகள் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் நிவாரணத்திலே தங்கியிருக்கும் மக்களும், நம்பிக்கை இழந்து, கைவிடப்பட்ட நிலையில் வாழும் சிறுவர்களும், உடைந்து கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் இந்தத் தரப்பினரில் அடங்குகிறார்கள். திருகோணமலையின் கைவிடப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இந்த மக்கள் முல்லைத்தீவில் இருந்து, மடு மற்றும் தென்னிந்தியா வரை சிதறுண்டு போயுள்ளார்கள்.
தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாகத் தமது அடையாளத்துடனும், கலாசாரத்துடனும் வாழ வேண்டுமாயின் கிராமிய வாழ்வு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீளமைக்கப்படல் வேண்டும் என்பதிலே தங்கத்துரை தெளிவாக இருந்தார். அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சிதைந்து போகிறது என்பதனை உணர்ந்த தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தின் மீள்கட்டுமாணத்தில் கிராமங்களுக்கு பிரத்தியேகமான இடம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். இந்த விடயத்தில் அரசாங்கம் போதியளவு ஒத்துழைப்பு நல்கியதாகவும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் நியாயத்தன்மை அற்றனவாக இருந்ததாகவும் அவர் கருதினார். நீண்டகாலத்தில் இந்தப் பிராந்தியத்தின் அரசியல் பற்றிய கேள்விகள் இந்த நிலத்தில் வாழும் மக்களின் பலத்திலேயே தங்கியிருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். இந்த வகையிலே ஒவ்வொரு கிராமத்திலும் போதியளவு வசதிகள் கொண்ட ஒரு பாடசாலை, ஒரு வைத்தியசாலை, வீதி, நீர் போன்ற அடிப்படை உட்கட்டுமாணப் பணிகள் இருக்கவேண்டும் என அவர் உணர்ந்தார். இதுவே அகதியாக்கப்பட்ட மக்கள் தமது கிராமங்களுக்கு மீளத்திரும்புவதற்கு வழியினை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று அவர் நம்பினார். இந்த வகையில் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட நேர்முகமான மாற்றங்கள் அவருக்கு உற்சாகத்தினைக் கொடுத்தன.
தங்கத்துரை நகரப் பகுதியினைப் புறக்கணிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், இந்த விமர்சனம் நியாயமற்றது என்று அவர் கருதினார். நகர்ப்புறத்தினைச் சேர்ந்தோர் தமிழ் மக்களின் பிரச்சினையின் ஆழம் தொடர்பிலும், கிராமப்புறங்களிலே இருந்த பிரச்சினைகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமற்றவர்களாக இருந்ததாகவே அவர் உணர்ந்தார்.
கிழக்கிலே தமிழ் மக்களின் நலன்களும் எதிர்காலமும் அந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியிருக்கிறது என அவர் திடமாக நம்பினார். கிண்ணியாவினைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ மஜீட்டினை ஒரு நெருங்கிய நண்பராகவே தங்கத்துரை கருதினார். 1988இல் மஜீட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை அவரைக் கவலையும், ஏமாற்றமும் அடையச் செய்தது. மீள்கட்டுமாணப் பணிகளினை மற்றவர்களுடன் இணைந்து சுமூகமான முறையில் முன்னெடுத்தமையும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பான தனிப்பட்ட உறவுகளைப் பேணியமையும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தங்கத்துரையினது வெற்றிகரமான செயற்பாடுகளுக்குப் பங்களித்தன.
கிராமிய வாழ்வுடன் ஒன்றிப் போன ஒரு மனிதனாகத் தங்கத்துரை விளங்கினார். அவருடன் கலந்துரையாடுவது, கலந்துரையாடுவோருக்கு அறிவூட்டும் வகையிலே அமைந்தது. சாதாரண கிராமப்புற மக்களினை அரச அலுவர்கள் எவ்வளவு தூரம் உண்மையாகவும், அக்கறையுடனும் நடாத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் தங்கத்துரை அவர்களை மதிப்பிட்டார். ஈச்சிலம்பத்தை போன்ற பின் தங்கிய தமிழ்க் கிராமங்களை முன்னேற்றுவதற்காக உழைத்த சிங்கள ஊழியர்களை அவர் மனதாரப் பாராட்டினார். அதேநேரம் தம்மிடம் இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையாற்றத் தவறிய தமிழ் அலுவலர்கள் குறித்து அவர் தீவிரமாக விமர்சித்தார். கோமரன்கடவலப் பகுதியிலே நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சிங்களக் கிராமத்துக்கு ஒரு வீதியினை அமைத்துக்கொடுத்தமையினை, மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக 1981ஆம் ஆண்டு இருந்தபோது தான் செய்த பெருமைக்குரிய விடயமாகத் தங்கத்துரை கருதினார்.
இவ்வாறான ஒரு வித்தியாசமான முறையில் தங்கத்துரை செயற்பட்டமைக்கு எவ்வாறான காரணிகள் அவரை ஊக்குவித்திருந்திருக்கக் கூடும் என்பதனை விளங்கிக்கொள்ளுவதற்கு அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்வின் தீவிரமான பக்கங்களை நாம் பார்க்க வேண்டும். அல்லைக் குளத்தின் கரையிலே, மூதூர் (கொட்டியாரம்) பிரதேசத்தின் மிகவும் பழமை வாய்ந்த உட்கிராமமான கிளிவெட்டியினைச் சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய தந்தையார் கிராமியப் பதிவாளராக இருந்தார். சட்டத்தரணியாகி, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கு முன்னர் அவர் நீர்ப்பாசன திணைக்களத்திலே பணியாற்றினார். 1950இல் அல்லைக் குடியேற்றத்திட்டத்தின் மூலமாக தங்கத்துரையின் கிராமத்திலே சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போது, இன ரீதியிலான பதற்றங்கள் அங்கு தீவிரம் அடைந்தன. ஆனால், தங்கத்துரையின் மனதிலே இனவாதத்துக்கு இடம் இருக்கவில்லை. தனது வாழ்வாதாரத்துக்காக நிலத்தினைப் பண்படுத்திக் கடினமாக உழைக்கும் ஒரு தமிழ் விவசாயியினை அவர் எவ்வாறு பாராட்டினாரோ அதேபோலவே வருந்தி உழைக்கும் ஒரு சிங்கள விவசாயியினையும் அவர் பாராட்டினார். தெஹிவத்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களுடனும் தங்கத்துரைக்கு நெருக்கமான உறவுகள் இருந்தன. தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்கள மக்கள் தயிர் போன்ற பொருட்களை வாங்குவதற்காக கிளிவெட்டிக்கு வருவார்கள். அந்த மக்களின் குடும்ப நிகழ்வுகளுக்கான பதிவாளராக தங்கத்துரையின் தந்தையார் விளங்கினார். 1996ஆம் ஆண்டு குமாரபுரத்திலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, படுகொலையினை நிகழ்த்தியவர்களையும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இலங்கை இராணுவத்தின் கேர்ணலினையும் பற்றி முக்கியமான தகவல்களைத் தங்கத்துரைக்கு வழங்கியவர்கள் தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்களவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அரச ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்கள் குறித்து கரிசனையினை வெளியிட்டு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே சுறுசுறுப்பாக தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலே தங்கத்துரை பணியாற்றியமை இயல்பான ஒரு விடயமே. அரசின் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக உள்ளூர் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு நிலைமயினை உணர்ந்தார்கள். தங்கத்துரையின் சொந்த ஊரான கிளிவெட்டியும் பிரச்சினையின் மையங்களில் ஒன்றாக இருந்தது. 70களிலே தங்கத்துரையும் யோகேஸ்வரனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே இருந்த தீவிரத்தன்மை மிக்க இளைஞர்களாகப் பார்க்கப்பட்டனர். சனத்தொகையின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை முறியடிக்கும் நோக்கில், தங்கத்துரையின் குடும்பத்தினர், குறிப்பாக அவரும், அவரது சகோதரர் குமாரத்துரையும் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் அங்கு தமிழ்க் குடியிருப்புக்களை ஏற்படுத்தும் முயற்சிகளிலே ஈடுபட்டனர். மிகவும் கடினமான சூழ்நிலையினை அவர்கள் இந்தக் காலப் பகுதியில் எதிர்கொண்டதுடன், தங்கத்துரை 70களிலே கைதுசெய்யப்படும் நிலைமையினையும் எதிர்கொண்டார்.
1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் நிலைமை மிகவும் மோசமாகியது. நாட்டில் பொதுவாகவே அரச அடக்குமுறை மேலும் தீவிரமான நிலையில், 1984 ஜனவரியில் தங்கத்துரையின் சகோதரர் குமாரத்துரை கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் பதியப்படாத நிலையிலும் அவர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், தங்கத்துரை தொடர்ந்தும் திருகோணமலையிலே இருந்தார். 1985 மே மாதத்திலே இந்தப் பகுதியிலே இனப் பதற்றநிலை மேலும் தீவிரமடைந்து, இலங்கைப் படையினருக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இனரீதியிலான தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி இரவு பொலிஸாரின் ஒரு குழுவினர் கிளிவெட்டியின் தெற்குக் கரைக் கிராமம் ஒன்றில் நுழைந்து பெண்கள் உள்ளடங்கலாக அங்கிருந்த 36 தமிழ்ப் பொதுமக்களினைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்தப் பொதுமக்கள் யாவரும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். மறுநாட் காலை கிராமத்தினுள் நுழைந்த இராணுவத்தினர் கிராமத்தினை விட்டு வெளியேறிச் செல்லாதிருந்த வயோதிபர்கள் உள்ளடங்கலாக 8 பேரினைச் சுட்டுக் கொலை செய்தனர். திருகோணமலையில் அப்போதிருந்த லண்டன் ரைம்ஸின் செய்திச் சேகரிப்பாளரிடம் இந்தச் சம்பவம் குறித்து தங்கத்துரை பேசியதனை அடுத்து இந்தச் சம்பவம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகியது (இதே காலப் பகுதியில் தெஹிவத்தையில் 18 சிங்களப் பொதுமக்கள் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தோரின் தாக்குதல்களில் பலியாகினர்). இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கத்துரை வதந்திகளைப் பரப்பினார் என அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியினால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையினை எதிர்கொண்ட போது நாட்டை விட்டுத் தப்பியோடி அவர் இந்தியாவிலே தஞ்சம் அடைந்தார். 1986இல் குமாரத்துரை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது அவரது கிராமமே இல்லாது போயிருந்தது. அவர் டென்மார்க்கிலே தஞ்சம் புகுந்தார்.
இவ்வாறான துன்பமான அனுபவங்கள் பலவற்றினைச் சந்திக்க நேர்ந்த போதிலும், சட்டரீதியாக வரைவிலக்கணம் செய்யப்படும் உரிமைகளே எமக்கு முக்கியமானவை என்ற கருத்தினை முன்னிறுத்திச் செயற்பட்ட யாழ்ப்பாணத்தின் மத்திய தர வர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியவாதத்தினை தங்கத்துரை கேள்விக்குட்படுத்தியே இருந்தார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் அமைச்சர்கள் தமது பிரதேசங்களுக்கு வரும் போது அந்த வருகையினைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரப்பட்டனர். சில சமயங்களில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திலே தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கினாலும் அமைச்சரவைப் பதவிகளைப் பெறுவதற்கு அது தயங்கியது. வடக்கினைப் பொறுத்த வரையில் இந்த அணுகுமுறை பரவாயில்லை. ஆனால், பல சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருந்த கிழக்கிலே இந்த அணுகுமுறை தமிழ்ச் சமூகம் மேலும் பின் தங்கிச் செல்லும் நிலையினை ஏற்படுத்தியது. ஏனைய இனத்தவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று முன்னேறிச் சென்ற வேளையில் தமிழர்கள் கைவிடப்பட்ட நிலையில் கசப்புணர்வு மிக்கவர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். 1970களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, நல்ல விடயங்களைச் செய்வதற்காக அமைச்சர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவிப்பது ஓர் அர்த்தமற்ற செயன்முறை எனத் தங்கத்துரை தனது கட்சியிடம் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் ‘உரிமைகளை’ விளங்கக் கூடியவர்கள்; ஆனால், அவர்களுக்கு வீதிகள், குளங்கள், கால்வாய்கள், பாலங்கள் போன்றன எல்லாம் விளங்கமாட்டாது என அவர் ஒருமுறை என்னிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மேலும், சிங்களவர்களுடன் வாழ்ந்தவர் என்ற வகையில் தங்கத்துரைக்கு சிங்களவர்களை மனிதர்கள் என்ற ரீதியிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவருடைய தொகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான சிங்களவர்கள் வாழ்ந்தனர். அவர் பதவியில் இல்லாத காலங்களிலும் கூட அவரின் சேவைகளைப் பெறுவதற்காக அவருடைய முன்னைய கந்தளாய்த் தொகுதியினைச் சேர்ந்த சிங்கள மக்கள் அவரினை நாடியமையினை நான் கண்டிருக்கிறேன். தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு தமிழ்த் தேசியவாதம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு நண்பர்களைப் பெற்றுத் தரமாட்டாது என்பதனையும் தங்கத்துரை அறிந்திருந்தார். நீர்கொழும்பில் இருந்து வந்திருந்த இடம்பெயர்ந்த மீனவர்கள் ஒருமுறை தன்னிடம் குறிப்பிட்ட சில உருக்கமான விடயங்களை அவர் என்னிடம் பகிர்ந்தார்: “ஐயா, எங்களுடைய தாய் மொழி தமிழ்; ஆனால், றோமன் கத்தோலிக்கத் திருச்சபை நாம் தமிழிலே வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. இப்பொழுது உங்களுடைய மக்களும், உங்களுடைய அலுவலர்களும் கூட எங்களை நிராகரிக்கிறார்கள். எங்களுடைய பிள்ளைகளுக்கு உங்களுடைய பள்ளிக்கூடங்களிலே படிப்பதற்கு இடம் கொடுங்கள்.”
சிங்களவருடன் வாழவே முடியாது என்ற முடிவுக்கு தங்கத்துரை ஒரு போதும் வரவில்லை. ஆனால், பொதுவாக சிங்கள இராணுவத்தினரையும், சிங்களப் பொலிஸாரினையும் மட்டுமே கண்டிருந்த மக்கள் வாழ்ந்த வடக்கிலே இதற்கு மாறான கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தின. இலங்கை அரசு என ஒருமைப்படுத்தப்பட்ட நிலையிலே வடக்கிலே பார்க்கப்பட்ட அமைப்பின் வெடிப்புக்களின் ஊடாக தங்கத்துரை தனது பார்வையினைச் செலுத்தினார். அங்கு அவர் மனிதத் தன்மையினையும் கண்டுகொண்டார்.
தென்னிலங்கையிலும் சில பிரச்சினைகள் இருந்தன என்பதனை தங்கத்துரை அறிந்திருந்தார். வேதனையினைத் தரும் ஒரு கிளர்ச்சிவாதமும், இனப் பிரச்சினை தொடர்பாக சிங்கள மக்களின் மனப்போகிலே மாற்றங்கள் ஏற்பட்டமையினையும் அவர் கவனித்தார். அரசு ஒருபோதும் அசையமாட்டாது என்ற வாதமும் அவரைப் பொறுத்த வரையிலே பலவீனமுற்ற ஒன்றாக இருந்தது. இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றிருந்த தங்கத்துரை கொழும்பில் இருந்தபடி தீவிரத் தன்மை மிக்க அரசியல் பேசுவதனைக் காட்டிலும், அகதியாக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வு முக்கியமானது எனக் கருதினார். இந்த நோக்கத்துக்காக அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். அவருடைய செயற்பாடுகள் யாவும் எளிமை மிக்கனவாகவும் அமைதியான முறையில் பற்றுறுதியினை வெளிப்படுத்துவனவாகவும் இருந்தன.
தமிழ்த் தலைவர்களின் மத்தியில் தங்கத்துரைக்கு இருந்த சில விசேடமான குணாதிசயங்களையும், அவரின் தனித்துவத்தினையும் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நாம் சென்று கொண்டிருக்கும் மரணப் பாதையில் இருந்து சமூகத்தினை மீட்டெடுக்க அவர் தனக்கே உரிய வகையில் பாடுபட்டிருக்கிறார்.
தங்கத்துரை போன்றோரின் கொலைக்குக் காரணமான அரசியல் […], அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் ஓர் அரசியலே. இந்த வகையில் அழிக்கப்பட்டவர்களிடம் இருந்தும், அரசியல் ரீதியாக மௌனமாக்கப்பட்டவர்களிடம் இருந்தும் நாம் கற்பதற்கு நிறையவே இருக்கின்றன. அதன் மூலமாகவே எமது சமூகம் உயிர்ப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இவ்வாறான ஒரு அரசியலே பிறழ்வான மனங்களுக்கும், வெறுமையான மனங்களுக்கும் ஒரு தடுப்பாக அமையும். எங்களுடைய நன்மைக்காகவேனும், நாம் இந்தக் கொலைகளிற்கு எதிராக எமது கோபத்தினை இப்போதாவது வெளிக்காட்டுவோமா?
மகேந்திரன் திருவரங்கன்