உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத அமைப்பின் முக்கியஸ்தர்கள் என கருதப்படும் இரு பயங்கரவாதிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
குறித்த இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என நம்பும் விசாரணையாளர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து நாட்டுக்கு அழைத்துவர திட்டம் வகுத்துள்ளதாகவும், அது தொடர்பில் இராஜதந்திர மட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே பின்னணியில் செயற்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படியே அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர். அத்துடன், தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்படைவாத அமைப்பின் பல முக்கியஸ்தர்கள் சிக்கியுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அந்த அதிகாரி சுட்டிக்காடடினார்.
இதனிடையே, தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நெறிப்படுத்தியதாக நம்பப்படும் தற்கொலை குன்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிமின் மிக பிரதான சகாக்களுக்கு சொந்தமான தெமட்டகொட மஹவில கார்டன் வீடு முற்றாக சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலும் தற்கொலை தககுதல்கள் நடாத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் தெமட்டகொடை பொலிசாரிடம் இருந்து சிஐ.டி. விசாரணைகளைப் பொறுப்பேற்று நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிரிக்கை சமர்ப்பித்தது. இதன்போதே வீட்டை பொறுப்பேற்றதாக சி.ஐ.டி. நீதிவானுக்கு தெரிவித்தது.
இவ்வாறு சி.ஐ.டி.யால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வீடானது, சஹ்ரானுடன் ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இல்ஹாம் மற்றும் சினமன் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இன்சாப் ஆகியோர் வசித்த, அவர்களது தந்தையான பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் இப்ராஹீமுக்கு சொந்தமானதாகும். மொஹம்மட் இபராஹீம் உள்ளிட்ட 19 பேர் தெமட்டகொடை குன்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக நேற்று மன்றில் ஆஜரான சி.ஐ.டி. அதிகாரி நீதிவானுக்கு அறிவித்தார்.
தெமட்டகொடை தாக்குதலில் இறந்தவர்களின் டி.என்.ஏ. சோதனைகள் ஊடாக மரண விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட நீதிவான் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழ்ககை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
என்.ரி.ஜே. கொழும்பு அமைப்பாளருக்கு பிணை மறுப்பு
இதனிடையே தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும் மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டாளராக சந்தேகநபர் செயற்பட்டு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போதுமன்றுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆவணங்கள், காணொளிகள் என்பன சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமையால் அவருக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என, பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பா?: தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர சபையின் ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாஜா மொஜிதீன் அல் உஸ்மான், அவரது சகோதரர் உள்ளிட்ட நால்வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா நேற்று அனுமதியளித்தார்.
ஹாஜா அமொஹிதீன் அல் உஸ்மான், ஹாஜா மொஹிதீன் சுல்தான் பாரிஸ், மொஹம்மட் அல்லாத், மொஹம்மட் பெளசான் ஆகியோரையே இவ்வாறு தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் சந்தேக நபர்களை விசாரணை செய்த பின்னர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்ற 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிவானுக்கு வெலிக்கடை பொலிசார் அறிவித்தனர்.
இதனிடையே பாதுகாப்பை உறுதி செய்ய பொலிசார், முப்படையினர் நடாத்தும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட சோதனை ஒன்றின் போது வவுனியா அலகல்ல அளுத்கம பகுதியிலிருந்து சொப்பர் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 85 குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா – ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் மெற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 243 ஜெலனைட் குச்சிகளும் வெடி மருந்துகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இபொலோகம பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சுர்றிவலைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்லுடைக்க பயன்படும் வெடிபொருட்கள் 12 கிலோ, இலத்திரனியல் டெட்டனைட்டர் என ஏராளமான பொருட்கள் சிக்கியுள்ளன. அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியமைக்காக இதன்போது ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் சேனபுர பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் இரண்டும் இராணுவ சீருடைகளை ஒத்த 54 உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, மீரிகம பாதுராகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வடிகாண் ஒன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகளும் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.