தனது கட்சியைப் பலப்படுத்த காய்நகர்த்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

385

இலங்கையின் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்களின் தெரிவின் மூலம் அல்லாமல் பாராளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பதவி இராஜினாமாவையடுத்து பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கையின் நீண்டகால அனுபவ அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்பில் உள்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கடும் எதிர்ப்புக்களும் இல்லாமலில்லை. குறிப்பாக அவரது தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பும் அவருக்கு இருந்ததால் தேர்தல் தோல்விகளும், தலைமைத்துவப் போட்டிகளும் விடாமல் துரத்தியது. இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ் – முஸ்லீம் மக்கள் இவர் மீது அதிருப்தியிலேயே அன்று முதல் இன்று வரை உள்ளனர்.

1946 செப்டம்பர் 06 ஆம் திகதியே டி.எஸ்.சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அக்கட்சியே வெற்றிபெற்று அரியணையேறியது. இன்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு, இக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு வருடாந்த மாநாட்டை கொண்டாடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்தும் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே நீடிக்கவுள்ளார். அவர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை 1994இல் ஏற்றிருந்தார்.

இலங்கையின் அரசியலில் ரணில் விக்கிரமிங்கவுக்கும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு என்பது அவருடன் இரத்தத்தில் கலந்தது. கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படக்கூடிய ஒருவராக தென்னிலங்கை அரசியலில் பேசப்படும் ஒருவர் தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. மாறி மாறி ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் அல்லது தாம் பதவி வகித்த ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது கட்சிக்காரர்களை, கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு வரும் ஒரு நபராக அறியப்படுகிறார் ரணில்.

கட்சித் தலைமைப் பதவிக்கு பல வழிகளிலும் போட்டிகளும் எதிர்ப்புக்களும் எழும்பிய போதெல்லாம், பல தோல்விகளைக் கண்டபோதெல்லாம் துவண்டுவிடாமல், தனக்கு நாட்டின் உயர் பதவிகளில் ஆசையில்லை கட்சியின் தலைவராக தானே மரணிக்கும்வரை தொடரவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து இன்று சாதித்தும் காட்டியிருக்கின்றார். ஒரு காலத்தில் மிகப் பலமான கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி, பின்னாளில் நல்லாட்சி என்கிற போர்வையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியில் கைகோர்த்து, பின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் தெரிவில் குளறுபடிகளைச் சந்தித்து, சஜித் தலைமையிலான மிகப்பெரிய உடைவைச் சந்தித்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. பல உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறினர். அப்போதும் ரணில் அவர்களே கட்சியின் தலைவர். ஒரேயொரு தேசியப்பட்டியலை கைவசம் வைத்துக்கொண்டு யாரை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது என்பதில் ஒரு வருடம் காலதாமதம் செய்த கட்சியாக திகழ்ந்தது. அக்கட்சி ஏகமனதாகத் தீர்மானித்து பாராளுமன்றம் வந்தவர் தான் அக்கட்சியின் தலைவரான ரணில் அவர்கள்.

பலமிழந்து போயுள்ள தனது கட்சிக்கு உயிர்கொடுக்க தன்னாலானதைச் செய்வேன் என கங்கணம் கட்டிக்கொண்டு அரசையும் விமர்சித்துக்கொண்டு, நாட்டின் சூழலையும் ஆட்சியாளர்களின் போக்கையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, உரிய நேரத்தில் பேச்சுக்களை மேற்கொண்டு, சர்வதேச ரீதியாகவும் தனக்கிருக்கும் செல்வாக்கினை பயன்படுத்திக்கொண்டு, சத்தமில்லாமல் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலமாக நாட்டின் ஜனாதிபதியானார் ரணில்.

தந்திரத்திற்குப் பேர் போன ரணில் அவர்கள், மிகக் கச்சிதமாக புதிதாக சுதந்திரக் கட்சியில் இருந்து பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்த ராஜபக்ச சகோதரர்களின் மொட்டுக் கட்சியை தன்னிடம் அடிபணியவும் வைத்துள்ளார். மீண்டும் இந்த நாட்டில் ஐக்கிய தேசிக் கட்சி தலைமையிலான ஒரு அரசை அமைப்பதை நோக்கமாகக் கொண்டே தனது காய்களை மெதுவாக நகர்த்திவந்தார் ரணில். சந்தர்ப்பம் வரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. சுதந்திரக்கட்சியாக ஓரணியில் இருந்த அணியினர் பின்னாளில் பிளவுண்டு மஹிந்த ராஜபக்சவுடன் மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுனவாக கைகோர்த்தமையும், மைத்திரி தலைமையில் ஒரு அணி பிரிந்துசென்றமையும் ஜனாதிபதி ரணில் அவர்களுக்கு ஏற்கனவே பிளவடைந்துள்ள தனது கட்சியை மீண்டும் இலங்கை அரசியலில் தூக்கி நிறுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது. ஏற்கனவே மைத்திரி-ரணில் நல்லாட்சியை சுதந்திரக்கட்சியினரில் பலர் எதிர்க்காமலும் இருக்கவில்லை.

மிகவேகமாக இலங்கையின் அரசியலில் கோலோச்சிய மொட்டு தரப்பினர் வந்த வேகத்திற்குள்ளேயே பள்ளத்திற்குள் தென்னிலங்கை மக்களால் தள்ளப்பட்டுள்ளனர். வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு இக்கட்சியினர் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர். ராஜபக்சக்களை பாதுகாக்கும் காவலனாக வலம்வரும் ரணில் அவர்கள், மொட்டுக் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தி உள்ளுராட்சிகளுக்கானத் தேர்தலை நடத்தி மீண்டும் தான் ஜனாதிபதியாகலாம் என்கிற கனவுடன் கருத்துக்களை வெளியிடுவதைக் காணமுடிகிறது. யாராலும் இயலாததை பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் தான் செய்து முடித்ததாக உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் ஜனாதிபதி ரணில்.

பதவி மோகத்தில் எதிர்த்தரப்பினராகிய ஐக்கிய மக்கள் சக்தி தம்முடன் சிறுபான்மைக் கட்சிகளையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. சஜித் அணியினருக்குள் தற்போது முரன்பாடுகளும் எழுந்துள்ளது. ரணில் அவர்களின் ஐக்கிய தேசிக் கட்சியின் பக்கம் தாவ பலர் தயாராகி வருகின்றனர் எனவும் அறிய முடிகிறது. பலமிழந்துள்ள எதிர்க்கட்சியை நம்பி சிறுபான்மைக் கட்சிகள் களத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் மக்களுக்கு பயன் ஏதுமில்லை. அதற்காக ரணில் விக்கிரமசிங்க பக்கமோ அல்லது ராஜபக்ச தரப்பினருடனோ கைகோர்க்கவேண்டும் என்பதாக அர்த்தமாகாது. தமது கட்சியை வளர்க்க எம்மைப் பயன்படுத்துவார்களே தவிர, தீர்வு எதுவும் இவர்களால் எமக்குக் கிடைக்காது.

இன்று மஹிந்த தரப்பினருடன் இணைந்திருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களையும் ரணில் உடைத்தெரிந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது மக்கள் அதிருப்தியடைந்து போராட்டங்களை ஆரம்பித்தபோது, ரணில் அவர்களின் பலம் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது. நாசுக்காக விடயங்களைக் கையாண்டு தனது கட்சியின் வளர்ச்சிக்காக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

தேசியப்பட்டியல் ஊடாக ஒருவராக நுழைந்து இன்று இருவராகியுள்ளனர். இன்றைய அரசில் கூட்டு இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி தான் பிரதான பங்கினை வகிக்கின்றது என்பது உண்மை. தனக்கு அருகில் ஆலோசகர்களாக உதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரையே வைத்துக்கொண்டுள்ளார். மீண்டும் தனது கட்சியைப் பலப்படுத்த கிராமங்களை நோக்கி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. அழிவடைந்த நிலையில் இருக்கும் விவசாயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளார். நாட்டை நோக்கி வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வை, சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பன ஆரம்பமாகியுள்ளன. நாலா பக்கமும் கதவுகள் திறக்கப்பட்டு நாட்டிலுள்ள எவரும் வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளார். இவையணைத்தும் தான் வாழும் காலத்திலே மீண்டும் தனது கட்சியை தூக்கி நிறுத்தவேண்டும் என்கிற ஒற்றை விடயத்துக்காகத்தான்.

மொட்டுக் கட்சியினரின் வாயை அடைப்பதற்காகவும், அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும் என்கிற நோக்கோடும் நேரடியாக சிலரைப் பழிவாங்கவே, இரட்டைப் பிரஜாவுரிமை வைத்திருப்பவர்களுக்கான அரசியல் பிரவேசம் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட இரு திருத்தங்களை உள்வாங்க இணங்கியதாகவும், அரசியலமைப்பு பேரவைக்கான 3 சிவில் பிரதிநிதிகள் நியமனத்தின்போது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன், நடு நிலையானவர்களை நியமித்தல், பாதுகாப்பு அமைச்சை தவிர ஜனாதிபதி வேறு அமைச்சு பதவிகளை வகிக்காதிருத்தல் என்பனவே அந்த இரு திருத்தங்களாகும். இவற்றைதவிர வேறு திருத்தங்களை உள்வாங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதேவேளை, ஜனாதிபதியால் நான்கரை வருடங்களுக்கு பிறகே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்ற சரத்து 19ஆவது திருத்தச்சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டது. இரண்டரை வருடங்கள் என்ற காலவரையறைக்கு எதிரணி தரப்பில் இருந்தும் எதிர்ப்பு இல்லை. அதனால்தான் 22 இல் அந்த கால எல்லை விவகாரத்தில் கைவைக்கவில்லை.

அத்துடன், இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனையை மாற்ற அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து அது அமுலுக்கு வரும். இரட்டைக் குடியுரிமையை நீக்குவதற்கு ஒரு சில எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அதற்கு அரசாங்கம் உடன்படவில்லை எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், 22 வது திருத்தச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் அவர்களுடன் நெருக்கமான பலர் இன்று அரசில் உள்ளனர்.

எவ்வாறு தனது பலத்தை நிரூபிக்க, ஐக்கிய தேசியக் கட்சியை வளர்க்க கடந்த காலங்களில் யுத்தம் – தமிழ் மக்களை ரணில் அவர்கள் பயன்படுத்தினாரோ, அதேபோல் மீண்டும் இன்று பிளவடைந்துள்ள தனது தாய் வீட்டைப் புனரமைக்க தன்னுடைய வீட்டையும் இழந்து துணிந்துள்ளார் என்பதே உண்மை. தனக்கென தனது கட்சிக்கென கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயற்படும் ஒருவராக மாறியிருக்கிறார் ரணில். யார் பேச்சையும் கேட்கும் அளவில் அவர் இல்லை என்றே அவதானிகள் கூறுகின்றனர். இலங்கையின் அரசியலமைப்பையும் சரி, இந்த நாட்டின் அரசியல் போக்குகளையும், சர்வதேச சமூகங்களின் நிலைப்பாடுகளையும், நன்கு அறிந்துவைத்திருக்கக்கூடிய ஒருவராக, இலங்கை அரசியலின் நெளிவு சுழிவுகளுக்கு ஏற்ப அனுசரித்து பொறுமையாக காரியங்களை கச்சிதமாக முன்னகர்த்தும் ஒருவராக ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் இருப்பதாகவும் அவருக்கு ஆதரவானவர்கள் கூறுகின்றனர்.

இன்று இலங்கையின் அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கும் ஒரு நபராக இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக பயணிப்பதையும், அரசுக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றபோது அதனை அடக்கிய விதத்தையும் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே பழியைப் போட்டு அனைத்தையும் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி முப்படையினரின் துணையுடன் நடத்திக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையை சீரமைப்பதில் கடந்த அரசான கோட்டாபய ராஜபக்ச தவறவிட்டதன் காரணமாக அரியணையை இழக்க நேரிட்டது. 69 இலட்சம் மக்களது வாக்குகளைப் பெற்று உச்சத்தில் இருந்த ராஜபக்சக்களை தென்னிலங்கை மக்களே வீதியில் தூக்கியெறிந்தபோது, தானும் மக்களுக்காக குரல்கொடுத்து நின்றதையும், ஒரு பக்கம் ராஜபக்சக்களுக்கு தனது எதிர்ப்பினையும் மறுபக்கம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில்.

விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் மக்கள் அதிக கோபடைந்திருந்த நிலையில், எரிபொருளுக்காகவும் எரிவாயுவுக்காகவும் வீதிகளில் பல நாட்களாக தங்கியிருந்தபோதிலும், உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடும், மின்துண்டிப்பும், வேலைவாய்ப்பின்மையும் உச்சமடைந்திருந்த இறுக்கமான சூழலில், பொறுப்பேற்ற இச்சிறிய காலப்பகுதிக்குள்ளேயே ஓரளவு மக்கள் தலைநிமிர உடனடியான திட்டமிடல்களுடன் சில மாற்றங்களைச் செய்து, மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்து அரியணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் நிலைக்க மிகத் தீவிரமாக அதேவேளை உன்னிப்பாகவும் செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. ரணில் என்கிற ஒருவராலேயே உடைபட்டு சின்னாபின்னமான ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் மீண்டும் வரலாற்றில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை எள்ளளவும் இல்லாமலாக்க ரணில் அவர்கள் துணியமாட்டார். இனிவரும் காலங்களில் தனக்கான கூட்டணிகளை அமைத்துக்கொண்டு பாராளுமன்றில் செயற்படவேண்டும் என்ற நோக்குடன் தான் தனது சகாக்களை வைத்துக்கொண்டு, தனக்குச் சார்பான மொட்டு மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார். பிரதமர் பதவி இன்று பெயரளவில் இருக்கிறதே தவிர ஜனாதிபதியே அதிகாரம் பொருந்தியவராக இருக்கிறார். இவ்வாட்சி கலைக்கப்படவேண்டும் என்கிற மக்களின், அரசியல்வாதிகளின் கோசங்களை எல்லாம் உடைத்தெறிந்து, நான்கரை வருடங்களில் மீதமுள்ள இரு வருடங்களையும் முழுமையாக ஆட்சி செய்ய ரணில் அவர்கள் துணிந்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளையே அவர் தற்போது மேற்கொண்டுள்ளார்.

மீண்டுமொருமுறை ராஜபக்சக்களுக்கான வாக்கு வங்கி இந்த நாட்டில் கிடையாது. அதற்கான அனைத்து எதிர்ப்பு வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கை மக்களால் எதிர்க்கும் தரப்பாக மஹிந்த தரப்பு மாறியிருக்கிறது. நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் ஆட்சியாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு வந்து வீட்டிற்குள் முடங்கியுள்ளார். பசில் ராஜபக்ச நாட்டைவிட்டே தப்பியோடியுள்ளார். எனவே இவர்களுக்கான வாக்கு வங்கி என்பது இனிவரும் காலங்களில் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது.

மற்றைய பக்கம் மைத்திரி தரப்பினர் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளனர். சுதந்திரக்கட்சி பிளவடைந்து சின்னாபின்னமாகி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் தேர்தலில் பெருமளவில் வெற்றிபெற இப்போதைக்கு வாய்ப்பில்லை. இனிவரும் தேர்தல்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவுத்தளத்தையே தேடித்தரும். சஜித் அணியினரின் பக்கமாக சிறுபான்மைக் கட்சிகள் இணைந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஆதரவு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த காலத்தில் சஜித் அவர்களின் இயலாமை வெளிப்பட்டதைக் காண முடிந்துள்ளது. எந்தநேரத்திலும் ரணில் பக்கம் தாவுவதற்கு பல உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர். இதனை ஜனாதிபதித் தெரிவின் போதான பாராளுமன்ற வாக்கெடுப்பில் அறிய முடிந்தது. டளஸ் அணி ஒரு பக்கமாக பயணத்தை ஆரம்பிப்போமா? அல்லது அடங்கிவிடுவோமா என்று இன்னமும் முடிவு செய்யவில்லை.

இன்று சந்திரிக்கா அம்மையாரது மகனின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசப்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சி என்பது கூட்டணிகளை நம்பியே அமையும் போக்கு காணப்படுகிறது. தனித்து யாரும் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க இயலாது. கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவானது, நாட்டிலிருந்து வெளியேறிவரும் மக்கள் தொகை என்பன இலங்கையின் எதிர்கால அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. தமிழ் மக்களின் போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுவதற்கு வித்திட்ட நபராக அறியப்படும் இவர், தனது தேவைக்கேற்ப தமிழ்த் தரப்பினரைப் பயன்படுத்தியுள்ளார் என்பது வெளிப்படையானது. ரணில் அவர்களைப் பயன்படுத்தி ராஜபக்சக்களோ அல்லது சஜித் அணியினரோ, மைத்திரி தரப்போ பயனடையலாம் என கனவுகண்டால் அது வேடிக்கையானது. யார் என்ன கூறினாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவிட்டார் என்றே கூறலாம். – க.சசீகரன்

SHARE