இலங்கை சரித்திரத்தில் 2004 ஆம் ஆண்டு மிக முக்கியமானவொரு காலப்பகுதியாகும். அதற்கு முன்பு பல துயரச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்பின்பும் அவ்வாறே. ஆனால் 2004 ஆம் ஆண்டு எமது நாட்டின் சரித்திரத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டியதாகும்.
சரியான முறையில் கையாளப்படாததினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையையும், பிரச்சினையை தீர்ப்பதற்கும், எம்மை தேடிவந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தமை பெரும் வருத்தத்துக்குரிய விடயமாகும்.
தமித் தேசிக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட பெரும் சாபக்கேடு என எண்ணத் தோன்றுகிறது.
இதே கருத்தைத்தான் 11022004 ஆம் ஆண்டு தராக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ, அதிலும் பார்க்க கூடுதலாக மிகைப்படுத்தியே காட்டப்படுகிறது.
பலவிதமான பிற அழுத்தங்கள் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அது ஆரம்பத்திலேயே உள்ளுக்குள்ளேயே வலுவிழந்து அற்றுப் போயிருக்கும்.
விடுதலைப் புலிகளாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தப்படுகின்றது என்ற பெரும் மாயைக்கு முரணாக, சில முன்னணி தமிழ் அரசியல்வாதிகளே, மனசாட்சிக்கு விரோதமாக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.
அவர்களே மனசாட்சிக்கு விரோதமாக, தங்களின் அரசியல் இலாபம் கருதி, புத்திசாலித்தனமான முறையில் புலிகளின் பெயரை பயன்படுத்துகின்றார்கள்.
என்னை கேட்டால் அவர்களில் சிலர் தமிழ் மக்களுடைய போராட்டங்கள், அபிலாஷைகள் ஆகியவற்றில் எவ்விதமான அக்கறையும் இல்லாதவர்கள் என்றே கூறுவேன்.
தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி, சமாதானத்துக்கு விரோதமானவர் என படம்பிடித்துக் காட்டுவது பெரும் பிழையான விடயமாகும். குறைந்தபட்சம் இந்த மனிதர் தனது சிந்தனையில் உதிப்பதையேனும் வெளிப்படுத்துகின்றார்.
மூன்று தசாப்தங்களாக நாடு பெரும் குழப்பகரமான நிலையில் இருந்து வந்தது. வன்முறையே தலைதூக்கி நின்ற காலகட்டமாகும்.
ஆயுதப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முன்னணி அரசியல் தலைவர்கள் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
வீதியால் நடந்து செல்வது, பஸ்ஸிலோ அல்லது புகைவண்டியிலோ பிரயாணம் செய்வது பாதுகாப்பற்றதாக இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக தமிழ் சமூகம் பெரிதும் அனுபவித்துவந்த ஜனநாயக உரிமைகள் சின்னாபின்னமாக்கப்பட்டு அச்சுறுத்தல், கட்டாயப்படுத்தல், ஆள்மாறாட்டம் போன்றவற்றின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுமளவுக்கு ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வந்தது.
இன்று வரைக்கும் சீரழிக்கப்பட்ட ஜனநாயகம் உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவரப்படவில்லை.
இக்கட்டத்திலேதான் இன, பேதம் இல்லாமல் அனைவரும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமை முற்றுமுழுதாக மறைய வேண்டுமென்று விரும்பினர்.
பல தமிழ் அமைப்புக்களை கொண்ட ஒரு குழு உதாரணமாக சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சில அரசியல்கட்சிகள் என இதுபோன்ற பல ஒன்றிணைந்து நாட்டுக்கு அவசியமான அனைவரும் வேண்டிய சமாதானத்தை கொண்டுவர விரும்பினர்.
தராக்கி சிவராமின் கருத்துப்படி இந்த அமைப்புக்கள் எல்லாம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளும், குழுக்களும் தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளையும் மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களையும், பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே. இந்த ஆலோசனையை விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அமைப்புக்களுடன் ஏனைய பல அமைப்புக்களும் இணைந்து 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்காக பாடுபட்டு முதற்படியாக சகல அரசியல் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்தனர்.
அடுத்த கட்டமாக, அடுத்து வரும் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஒரே பொதுக்கொள்கை, ஒரே பொதுச்சின்னமான “உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிட வைப்பதென தீர்மானித்தனர்.
இவற்றில் முக்கிய குழுவாகிய விடுதலைப்புலிகள் ஒன்றுபட்ட ஒரேகுழு ஒரு பொதுக்கொள்கையிலும், பொதுச்சின்னத்தின் கீழும் போட்டியிட வேண்டுமென்பதில் அக்கறை கொண்டிருந்தனர்.
ஆயுதக் குழுக்களை இணைத்துக்கொள்வது சம்பந்தமாகன பேச்சுவார்த்தையின் போது தராக்கி சிவராம், கிழக்கு பிராந்திய விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கரிகாலன், மட்டக்களப்பை சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்திற்கு பின்வருமாறு கூறியுள்ளதாக தெரியப்படுத்தி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்கள் இணைவதற்கு, விடுதலைப்புலிகளுக்கு எதுவித ஆட்சேபனையில் இல்லையென்றும், இந்த இரு குழுக்களும் தமிழ்த் தேசிய குடையின் கீழ் விரைவாக இணைக்கப்பட வேண்டுமென ஆர்வமும் காட்டினார்.
புளொட் இயக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர வேண்டுமென்றும் கூறினார். இந்த சம்பவம் எப்போதென்றால் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட் ஆகிய மூன்று இயக்கங்களும் உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவத்தில் இணைந்து செயற்பட்டவர்கள், என்பது மட்டுமல்ல இராணுவத்தின் உளவுத் துறையிலும், வடகிழக்கில் நடைபெற்ற இராணுவத்துடனான கூட்டு எதிர் நடவடிக்கைகளிலும், ஈடுபட்டிருந்த காலம் ஆகும்.
இந்த சூழ்நிலையில்தான் 11-02-2004 இல் தராக்கியின் கட்டுரை வெளிவந்திருந்தது. அதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்.
ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தங்களுடைய கடந்தகாலத்தில் யார், யார் எத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் அதனை மறந்து ஒரு பொதுவான அமைப்பொன்றை உருவாக்குவதற்கு ஒத்துக்கொண்டன.
நான்கு அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான கொள்கையின் அடிப்படையில் பொது சின்னமான “உதயசூரியன்’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்தன.
பொதுத் தேர்தலில், பொதுச் சின்னமான “உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுப்பதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாமதித்தது.
அச்சமயத்தில் தமிழரசு கட்சி வெறும் கடதாசியில் மட்டுமே காணப்பட்டது. இந்த செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தால் யுத்தகளத்திலும், வெளியிலும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்த்திருக்கலாம்.
யுத்தமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். அன்றேல் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கப்பட்டவுடன் தற்காலிகமாகவேனும் யுத்தம் நிறுத்தப்பட்டிருந்திருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளை சேர்ந்த 22 வேட்பாளர்களும் வெற்றியடைந்திருப்பார்கள்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், விடுதலைப்புலிகளின் போராளிகள், உறுப்பினர்கள், பிரபாகரன் உட்பட தலைவர்கள் அனைவரும் இறந்திருக்கமாட்டார்கள்.
புதிதாக ஏற்பட்டுள்ள நிலைமையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த சர்வதேச சமூகத்தினர், அரசாங்கத்தினர் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.
தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் சாதகமான சில அம்சங்களை பேசிப் பெற்றிருக்கலாம். சிங்கள பொதுமக்கள், தலைவர்கள் ஆகியோரின் சிந்தனையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இராணுவத்தினரும் விரோத மனப்பான்மையை கைவிட்டு நட்புடன் பல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கியிருப்பார்கள்.
பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும். மேலும் பல சாதகமான நல்ல விடயங்கள் பற்றி பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக இவை அத்தனையையும் நாம் இழந்துள்ளோம்.
மேலே கூறப்பட்ட அத்தனையும் பெறக்கூடிய நிலைமை உருவாகியதன் பின்பு இந்த ஏற்பாடு என்ன காரணத்தினால் குறிதவறியது? புதிய அரசாங்கம் அமைவதோடு, பல மாற்றங்கள் ஏற்படுமென்று மகிழ்ச்சியோடு மக்கள் இருந்தார்கள்.
இந்த முயற்சியில் மிகச்சிரமப்பட்டு உழைத்த அமைப்புக்கள் மட்டுமல்ல, சமாதானம் கிட்டப்போகிறது என ஆவலோடு இருந்த முழு சமூகமும் ஏமாற்றமடையக்கூடிய வகையில் திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு யார் பொறுப்பாளிகள்?
கிளிநொச்சியில் உருவாகிய இச்சதித் திட்டத்தில் முன்னின்று உழைத்த இருவர் இந்த துன்பகரமான முடிவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இச்சதித் திட்டத்தின் ஒரு அம்சமாக அவர்களில் ஒருவர் 30 ஆண்டுகளாக, அதாவது தந்தை செல்வா இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இறந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து இயங்காதிருந்த கட்சியை இவர்கள் மீளபுனரமைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள்.
தமிழரசு கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், அதன் செயலாளர் நாயகமாகவும் செயற்பட்ட, அ.அமிர்தலிங்கம் வேறு எவரேனும் இக்கட்சியை சுயநலம் கருதி அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதற்காக கட்சியின் பதிவை தொடர்ந்து பாதுகாத்து வைத்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்ப்பதிலேயே தீவிரமாக உழைத்தார். அவருடைய இக்கருத்தை, கணவர் இறந்ததன் பின், தான் இறப்பதற்கு முன்பு, திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனது அறிக்கை மூலம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
தமிழரசுக் கட்சியை மீள புனரமைத்தது பிழையான விடயம் மட்டுமல்ல, உருவாக்கியவர்களின் கருத்துக்கும் இச் செயல் மாறுபட்டதாகும். கட்சிகளை ஒன்றிணைக்க ஒருசாரார் முயற்சிக்க இன்னுமொரு சாரார் புதிதாக கட்சிகளை உருவாக்குகின்றனர்.
இப்பிரமுகருக்கு வரப்பிரசாதகமாக இரு தடவைகள் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்நியமனம் தகுதி அடிப்படையில் இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியால் இரு தடவைகள் இவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு இரு தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார்.
இரண்டாவது பிரமுகர் பாராளுமன்றத்தில் எனது ஆசனத்தின் அருகில் அமர்ந்திருப்பவர். எனது பல உரைகளை அவர் அவதானித்துள்ளார். உதவி பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்தையை பார்த்து, பத்து வருடம் போராடினாலும் பளையை உங்களால் கைப்பற்ற முடியாது, மேலும் ஆனையிறவை கைப்பற்றுவதென்பது பகற் கனவாகும் என்றேன்.
பல சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் பற்றி நான் குறிப்பிட்டவேளைகளில் அவை பிரதிபாதுகாப்பு அமைச்சருக்கு மகிழ்ச்சி தரவில்லை.
நான் ஆனையிறவை மீண்டும் இராணுவத்தினரிடமே ஒப்படைக்க வேண்டுமென கூறியதாக என் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்காக இந்த இரு பிரமுகர்களும் ஓடித்திரிந்தார்கள்.
முறையற்ற வகையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதாகக் கூட தெரிவித்தார்கள். பல சந்தர்ப்பங்களில் நான் விடுதலைப்புலிகளை ஆதரித்தே பேசியுள்ளேன்.
இதிலே குறிப்பிட்ட விடயங்களை உண்மையில் நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் எல்லா தமிழ் அமைப்புக்களும் இன ஒற்றுமை பற்றியும், அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றியும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த இரு பிரமுகர்களும் என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் வகையிலேயே தமது முழு நேரத்தையும் செலவழித்தனர்.
அன்றும் இன்றும் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்பதே எனது குறிக்கோளாக இருந்தது.
இன்றும் அதே கொள்கையுடனுமே குறிக்கோளுடனேயே வாழ்கிறேன். பல்வேறு இலட்சியத்துக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்ட வேளையில் இவர்கள் இருவரும் என்னை ஓரங்கட்டுவதையே தங்களின் அரசியல் நடவடிக்கையாக கொண்டிருந்தனர்.
எக்காலத்திலும், சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
இன்றும் அந்த கொள்கையைதான் கடைப்பிடித்து வருகின்றேன். இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் தீர்வு காணக்கூடிய வாய்ப்புக்களையும் இழந்து, எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்பை இழந்துள்ளதோடு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தியாகம் ஒரு பிரயோசனமற்றதாக போய்விட்டது என்பதுவுமே எனது பெரும் கவலையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்தி மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும், தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்கிறது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
வெற்றி பெற்றவுடன் தங்களுக்குள் தனித்தனியாக, குழுவாக பிரிந்து செயற்படுவார்கள். அதன் விளைவு சமீபத்தில் வட மாகாணசபையில் பிரதிபலித்ததை நாம் கண்கூடாக பார்த்தோம்.
தொடர்ந்தும் அந்த மாய வலைக்குள் சிக்கித்தவிக்காமல் மக்கள் மீண்டு வந்து உண்மையை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.