பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிரா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பிவிட்டனர்.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழகத்தில் இன்னும் தங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அது பரிசீலனையில் இருக்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.
எனினும் ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் அவர்கள் வேறு எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இனப்பிரச்சினையில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் காட்டிய தீவிர பங்களிப்புக்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேரடியான பங்களிப்பை வழங்கவில்லை.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவமே இதற்கு காரணமாக இருந்தது.
திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரையில் அது இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில் தமது செல்வாக்கை பயன்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடக ஒரு போர்நிறுத்தத்தை கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் மீண்டும் இந்தப்பிரச்சினையில் தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும். மற்றும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கு ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் அவசியமானது என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பினர் ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
TPN NEWS