கடந்த காலத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப்பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனநாயக ரீதியாக மக்களிடையே சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து 17 மாகாண சபை உறுப்பினர்களை (தவறுக்கு வருந்துகிறோம் – 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதே சரியானது) வடக்கு கிழக்கு சார்பாக அனுப்பிவைத்துள்ளனர். இதில் பெரும் பங்கு வகிப்பது ஆயுதக்குழுக்களே. இதில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் அடங்கும். இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார். அதுபோன்று மட்டக்களப்பிலும் முன்னாள் எம்.பிக்கள் ஓரங்கட்டப்பட்டு புதிதானவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். வாக்குகளைச் சேகரித்துக்கொள்வதற்காக பணபலம் மிக்கவர்களை உள்வாங்கிக்கொண்ட தமிழரசுக்கட்சி அவர்களை தமது வாக்கு வங்கியாளர்கள் என்று இனங்கண்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு தேர்தல்களிலும் பணபலம் படைத்தவர்களை தமது கட்சிக்கான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், தமது சுயநல தேவைகளுக்காகவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாராளு மன்றத்திற்குச்சென்று எவ்வாறு பேசுவது என்று கூட இவர்களுக்குத் தெரியாது. தற்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுள் வைத்திய கலாநிதி சிவ மோகனைத் தவிர அரசியலில் நெழிவு சுழிவு தெரிந்து பேசக்கூடியவர்கள் இல்லை. இவர்கள் யாருமே தேசிய மட்ட அரசியல் பேசுவதில்லை. முன்பு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ப.அரியநேந்திரன், பொன்.செல்வராசா போன்றோர் தேசிய அரசியல் பேசுவதிலும் எழுந்தமானத்தில் பேசப்படுகின்ற விடயங்களுக்கு பதிலளிப்பதிலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள். இவர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளே வைத்திருந்தால் தமது அரசி யலைச் செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட தமிழரசுக்கட்சி இவர்களைத் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பியது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தாம் சொல்வதை செய்விக்கலாம் என்ற கருத்தாடலிலேயே தற்பொழுது தமிழரசுக்கட்சி செயற்பட்டு வருகின்றது. இதுபோன்று வடமாகாண சபையிலும் கூட தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடியவர்களுள் ஒருசில உறுப்பினர்களே தேசிய அரசியல் சார்ந்த விடயங்களையும், தமிழ் மக்களுக்கானத் தீர்வினையும் பேசி வருகின்றனர். வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியில் இருக்கக்கூடிய இளைஞர் அணியின் செயலாளர் சிவகரன் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவிருந்த சமயத்தில் ரெலொ சார்பாக மயூரன் அவர்களே தெரிவு செய்யப்பட்டார். மயூரனைவிடவும் அரசி யலில் மிகவும் தேர்ச்சிபெற்றவர் சிவ கரன். சிறந்த பேச்சாற்றலைக்கொண்ட இவரை மாகாணசபைக்கு உள்வாங்கிக் கொள்ளாமைக்கான காரணம் என்னவென்றால், அரசியலில் இருக்கக்கூடிய நெழிவு சுழிவுகளை நன்கு அறிந்துகொண்டவர் அத்தோடு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினைகள் எழலாம் என்ற காரணத்தினாலுமே ஆகும். தமிழரசுக்கட்சியின் பிழை களையும் சுட்டிக்காட்டும் ஆற்றல் சிவகரனுக்கு இருக்கின்றது. தலை யில் குட்டக்கூடியவர்களை தம் பக்கத்தில் வைத்திருப்பதுதான் தமி ழரசுக் கட்சியினுடைய அரசியல் தந்திரோபாயம். தமிழரசுக்கட்சியைவிட்டு இந்த ஆயுதக்கட்சிகள் விலகிச்சென்றால் தாம் தோற்றுவிடுவோமோ என்ற பயமும் இவர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக இருந்தாலும் சரி, அபிவிருத்திகள் தொடர்பான விடயமாக இருந்தாலும் சரி, எல்லாக்கட்சிகளும் தமி ழரசுக்கட்சியுடன் இணைந்து முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் தமிழரசுக் கட்சி எடுக்கின்ற முடிவே இறுதி முடிவாக இருக்கும்.
இதன் காரணமாக கட்சிகளிடையே குழப்பங்கள் உருவாகிவந்தாலும் கூட்டமைப்பாகவே இயங்கவேண்டும் என்ற கருத்தாடலையும் ஒருசில கட்சிகள் கொண்டுள்ளன. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வாருங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பலமுறை அறிவித்திருக்கின்றது. ஏதோவொரு காரணங்களைக்காட்டி ரெலோவும், புளொட்டும் தப்பித்து விடுகின்றது. ரெலோவினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அதிகமான பதவிகள் தமிழரசுக்கட்சியினால் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்கள் எத்தனையோ பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். பதவிகளைக்கொடுத்து கட்சியில் நீண்ட காலமாக இவரை வைத்துக்கொள்ள முடியும் என்பது தமிழரசுக்கட்சியினுடைய அரசி யல் தந்திரோபாயமாகும். ஒருவேளை ஆயுதக்கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என்றுகூறி ஒன்றாக நிற்கின்றபொழுது தமிழரசுக்கட்சி அதற்கு மறுப்புத்தெரிவித்தால் எதிர்வரும் தேர்தல்களில் தனித்துப்போட்டியிடுங்கள் என்ற நிபந்தனையை முன்வைக்கும். அவ்வாறு நடைபெற்றால் தமிழரசுக்கட்சி ஆயுதக்கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இக்கட்சிகளுடைய அடி அஸ்திவாரம் வரை கிண்டப்படும். ஆகவே அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மக்கள் மத்தியிலிருந்து இவ் ஆயுதக்கட்சிகள் அனைத்தும் தூக்கிவீசப்படும். இவ்வாறான ஒரு நிலையையே தமிழரசுக்கட்சி எதிர்பார்க்கும். கட்சி பதிவு செய்யப்பட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்து வரும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே தமிழரசுக் கட்சி கொடுக்கின்ற சோறை யும் கஞ்சியையும் சாப்பிட்டு வாழ்கின்ற நிலைமை உருவாகிவிடும். தமிழரசுக் கட்சியினால் இக்கட்சிகள் நாளுக்கு நாள் ஓரங்கட்டப்படுவதையும், பிற கட்சிகளிலிருந்து தமிழரசுக்கட்சிக்கு என அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் வன்னிப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைத்திய கலாநிதி சிவ மோகன், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரொபின் போன்றோரும் உள்ளடக்கப்படுகின்றனர். ஜனநாயகம், ஜனநாயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறிக்கொண்டு இவ் ஆயுதக்கட்சிகளை ஓரங்கட்டும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு காரணங்களுக்காக கட்சி பதிவு செய்யும் விடயங்களில் தமிழரசுக்கட்சியினது நிலைப்பாடானது வெளிப்படையாகவே கட்சியிலிருந்து விலகிச்செல்லுங்கள் எனக்கூறும் அடிப்படையில் இருக்கிறது. ஒருவேளை தமிழரசுக்கட்சி இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டினால் வெற்றிபெறுமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது ஆட்சிபீடத்தை மூன்று தசாப்த காலமாக கட்டமைத்துக்கொண்டுள்ளார். இது அவருடைய அரசியலில் தனித்துவமான விடயமாகும். இதுபோன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்களாகவிருந்தால் வெற்றி பெறமுடியுமா? என்ற நிலைப் பாட்டில் இருப்பதன் காரணமாகவே தமிழரசுக்கட்சியில் தங்கி வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியினது நிலைப் பாட்டினைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து கட்சியை விலக்கி தனியாகப்போட்டியிடுங்கள் என ஒருபோதும் கூறமாட்டார்கள். அவ்வாறு தனித்துப்போட்டியிடுங்கள் என தமிழரசுக்கட்சி அறிவிக்குமாகவிருந்தால் தமிழரசுக்கட்சியும் தேர்தலில் பல ஆசனங்களை இழக்கநேரிடும். அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியினுடைய செயற்பாடானது ஆயுதக்கட்சிகளை வைத்து தமது கட்சியைப் பலப்படுத்தும் திட்டமாகவே அமையப்பெற்றுள்ளது. தற்போதுங்கூட தமது பிரதேச அங்கத்தவர்களை உறுதி செய்துகொள்ளும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் கூறினார்கள் என்ற காரணத்தால் இவ்வாயுதக்கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட்டன. அப்பொழுது விடுதலைப்புலிகளாலும் பாரிய அழுத்தம் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது. த.தே.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடாத அனைவரும் துரோகிகளா கவே கணிக்கப்பட்டனர். தமிழ் மக்களது ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும் என்ற காரணத்திற்காகவே தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிடவேண்டும் என்ற கட்டளை தேசியத்தலைவர் பிரபாகரனால் வழங்கப்பட்டது. அதற்கமைவாகவே அனைத்து செயற்றிட்டங்களும் நடை முறைப்படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலையீடு இன்று இல்லை என்ற காரணத்தினால் தமிழரசுக்கட்சி தனக்கான ஒரு இடத்தைப்பிடிக்க ஆயத்தமாகியுள்ளது. இவர்கள் தற்போது ஓரங்கட்டப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் தமிழரசுக்கட்சியினது ஆசனங்கள் பறிபோய்விடும். மட்டுமல்லாது இவர்களுடைய கை உயர்த்தப்படாமல் இருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு தொடர்பான விடயத்தில் வெற்றிபெற்றுவிடுவார்கள். அதனால் தமிழரசுக்கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துவிடும். அதனால் வேறுவேறு கட்சியிலிருப்பவர்களையும் தமிழரசுக்கட்சி தன்னோடு இணைத்துக்கொள்ள படாத பாடுபடுகின்றது. இதற்கிடையில் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக ஆயுதக்குழுக்கள் எடுத்துவந்த பல்வேறு முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்திற்காகப் போராடினார்கள். இவ்வியக்கங்களும் இணைந்து ஒரே நோக்கத்தோடு போராடின. இறுதியில் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமிழினத்தையும், போராட்டத்தையும் விடுதலைப்புலிகளைத்தவிர ஏனைய இயக்கங்கள் காட்டிக்கொடுத்தன. இந்திய இராணுவம் இருந்தகாலத்தில் அவர்களோடு இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியதையடுத்து விடுதலைப் புலிகளுக்கும், இவ்வாயுதக் கட்சிகளுக்கும் இடையில் பாரிய மோதல்கள் ஏற்பட்டது. சரணாகதியான இவர்கள் தங்கள் இருப்பினைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சிங்கள அரசுடன் ஒட்டுக்குழுக்களாக இணைந்து செயற்பட்டுவந்தனர். இவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் போன்றவற்றை இலங்கை இராணுவமே செய்துவந்தது. இக்காலகட்டத்தில் இவர்கள் பல கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பில் மக்கள் கடும் விசனத்தையும் வெளியிட்டனர். மீண்டும் இந்நாட்டில் யுத்தம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் இந்த ஆயுதக்கட்சிகள் அனைத்தும் தமது கைவரிசையினைக் காட்டும் என்ற நிலையில் இவர்கள் வாழ்ந்துவருகின்றனார். அன்று ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்தர்கள் சித்திரவதைகளைச் செய்து பணத்தினைப் பெற்றவர்கள். இன்று வியாபாரங்களில் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. அன்று அவர்கள் இராணுவக் கைக்கூலிகாளக செயற்பட்டு எமது போராட்டத்தையும், இனத்தையும் காட்டிக்கொடுத்து, பலவந்தமாக திருமணம் செய்து காமப்பசிக்கு இரையாக்கிய சம்பவங்களை மக்கள் மறப்பதாக இல்லை. இவர்கள் தனித்துச்செயற்படுவார்களாக விருந்தால் தேர்தல் பிரச்சாரத்தின்போது த.தே.கூட்டமைப்பு இவ்வாறான குற்றச் சாட்டுக்களை இவர்கள் மீது மீண்டும் சுமத்தக்கூடும். விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் இவர்களால் செயற்படமுடியாமைக்கு சகோதரப் படுகொலையும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் இன்று இவர்கள் அனைவரும் ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்துள்ள நிலையில் மீண்டும் இவர்களைப் புறந்தள்ளுவது நியாயமற்றது. ஆயுதமேந்திப்போராடவேண்டிய தேவை ஏன் இவர்களுக்கு ஏற்பட்டது. இதற்குப் பின்புலமாகவிருந்து செயற்பட்டவர்கள் தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர்களே. இதில் மாவைசேனாதிராஜாவும், சுமந்திரனும் உள்ளடக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பதிவு விடயத்தினைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் வழங்கப்பட்டாலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதியப்பட மாட்டாது என்பதுதான் உண்மை. இதனைச் செயற்படுத்த எந்தக்கட்சி முன்வருகின்றதோ அவர்களுக்குப் பதவிகளை வழங்கி அவர்களை தம்மோடு இணைத்துக் கொள்வார்கள் அல்லது அவர்களுக்கு குழி பறிப்பார்கள்.
தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற மனமுண்டானால் இடமுண்டு என்பதுபோல் ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற கட்சிகள் எதிர்வரும் காலங்களில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் மக்களுக்கானத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் ஜனநாயக நீரோட்டத்தின் வழியே வந்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் எதிர்க்கட்சி ஆசனத்தைப் பலமடங்காக அதிகரிக்க முடியும். ஆயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு இது சிறந்த தருணமல்ல. ஒற்றுமையில்லையேல் எதிர்வரும் காலங்களில் ஆயுதக்கட்சிகள் தமது கட்சிகளைப் பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என்பதை நினைவில் வைத்துச்செயற்படுங்கள்.
நெற்றிப்பொறியன்