இலங்கையின் 67வது சுதந்திர தின வைபவத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் கலந்து சிறப்பித்தமையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசில அரசியல் வாதிகளினாலும், தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருசில அரசியல்வாதிகளாலும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் அதே நேரம், நாம் ஏன் இந்த வைபவத்தில் கலந்துகொண்டோம் என இரா.சம்பந்தன் அவர்கள் தெளிவாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால், தமிழர்களின் எதிர்காலம் கருதியே மூத்த அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் நாம் இவ் வைபவத்தில் கலந்துகொள்ள தீர்மானம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, இரா. சம்பந்தனின் சில தன்னிச்சையான முடிவுகளே இந்த சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதற்கான தீர்வாக இருந்தது.
ஜே.வி.பி மற்றும் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய விடய மாகும். சுதந்திரதின வைபவத்தில் பங்கெடுப்பதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் கலந் தாலோசிக்கவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவனபவான், சிவஞானம் சிறி தரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன் ஆகியோரும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாது மேற் குறிப்பிடப்பட்டவர்களது தனிப்பட்ட கருத்தின்படி, இன்னமும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதே அவர்களது கருத்தாகும். சம்பந்தனின் தன்னிச்சையான முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அதேநேரம், கட்சியின் தலைமை எந்தமுடிவுகளை மேற்கொள்கிறதோ அதற்கு தலைசாய்க்கவேண்டும் என்ற தோரணையிலேயே இவர்களுடைய நடவடிக்கைகளும் அமையப்பெற்றுள்ளது.
எனினும் சம்பந்தன் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்ளும் விடயத்தினை தடுத்திருக்கலாம். ஆனால் அவரை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவிற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியில் உள்ளவர்கள் இதற்கு திராணியற்றவர்கள் என்றே கூறப்படுகின்றது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் எனப் பேசிக்கொள்ளும் அதேநேரம், தேர்தல் காலங்கள் வருகின்றபொழுது மாத்திரம் மக்கள் மத்தியில் சென்று வாக்குகள் கேட்பதற்காக சுலோகங்களை ஏந்திச் செல்கின்றார்களே தவிர, ஏனைய விடயங்களில் அரசுடன் ஒத்துப்போகும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர் போல செயற்படுவது, தமிழ் மக்களைப்பொறுத்தவரை கீழ்த்தனமான அரசியல் நடவடிக்கை என்றே கருதப்படுகின்றது.
அதேநேரம் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் இந்த வைபவத்திற்குச் சென்றிருந்தால் துரோகிகள் என பட்டம் சூட்டப்பட்டு, கட்சியில் இருந்து விலக்கும் நடவடிக்கைகளை சம்பந்தன் அவர்கள் மேற்கொண்டிருப்பார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்படுவது வழமையானதொன்று. அதுமட்டுமல்லாது தனிப்பட்ட ரீதி யாகவும் தொலைபேசியின் ஊடாக அழைப்புவிடுவார்கள்.
30வருடகால போராட்ட வாழ்க்கையில் கிடைக்கப்பெறாத சுதந்திரத்தினை சம்பந்தன் அவர்கள் பெற்றுத்தந்துவிட்டதாகவே அவரு டைய செயற்பாடுகள் அமையப்பெறுவதாக மேற் குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ் விடயத்தினையும் சர்வதேசம் பார்க்கின்றது. இந்தியா, அமெரிக்காவின் அழுத்தம் காரண மாகவே, இந்த வைபவத்தில் கலந்துகொண்டோம் எனக்கூறுவதற்கு சம்பந்தன் முன்வரவில்லை. அல்லது இராஜதந்திர அணுகுமுறை எனக்கூறவும் முன்வரவில்லை. தற்பொழுது புதிய இராஜதந்திர அணுகுமுறையாக மக்களின் நலன் கருதியே சென்றோம் எனக்கூறி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்களது வாயினை அடைத்திருக்கிறார் சம்பந்தன். அது அவரது அரசி யல் சாணக்கியத்தில் ஒன்று. பாராட்டப்படவேண்டியது.
சம்பந்தன் அவர்கள் அரசி யல் ரீதியாக செய்யும் தவறுகள் தட்டிக்கேட்கப்பட்டால், அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். இதற்கு உதாரணமாக, விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, பத்மினி, கஜேந்திரன், கனகரத்தினம் போன்றோர் இக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் இரண்டிற்கும் கட்டுப்பட்டவர்களாகவும், அதனை இறுதிவரை கடைப்பிடிக்கவேண்டும் என்ற கோட்பாட்டுக்குள்ளும் இருந்தவர்கள. இதில் பாதுகாப்பு காரணம் கருதி சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, கனகரத்தினம் போன்றோர் அரச பக்கம் தாவினர்.
தற்பொழுது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர் தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்ற பேச்சிற்கே சம்பந்தன் இடத்தில் இடமில்லை என்று அவர்களும், மக்களும் கூறுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்றபொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றபொழுது ஆசனங்கள் கிடைக்கப்பெறாது போகும் என்கின்ற காரணத்தினால் சம்பந்தன் அவர்களின் முடிவினை தட்டிக்கேட்க முடியாதவர்களாக ஏனைய அரசியல்வாதிகள் இருந்துவருவது கவலைக்குரிய விடயமே.
வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதனையும், வீராப்பு பேசுவதனையும் இவ் அரசியல்வாதிகள் தங்களுடனேயே வைத்துக்கொள்கின்றார்கள். தற் பொழுது சம்பந்தன் அவர்களுக்குத் தடையாகவும், அரசியலை மேற்கொண்டுவருபவராகவும் பாரா ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமையப்பெற்றுள்ளார். இவரையும் சந்தர்ப்பம் பார்த்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தன் அவர்கள் மேற்கொண்டுவருகின்றார். இவருடைய கடந்தகால அரசியலைப்பொறுத்தவரை தமிழீழ விடுதலைப்புலிகள் கூறுவதற்கு தலைசாய்க்க வேண்டியதொரு சூழ்நிலை இருந்ததாகவும், தற்பொழுது தான் தமிழரசுக்கட்சியின் கோட்பாடுகளுக்கமைய அதனை நடைமுறைப்படுத்த முடிகிறது என்பதும் சம்பந்தனுடைய கருத்தாகும்.
இதனை இக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ளாதுபோனால் அவர் களது நிலை பரிதாபகரமானதாக அமை யும். தற்பொழுது இக்கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலைவர் சம்பந்தனின் நெறியாளுகையின் கீழ் உள்ளவர்களே.
தமிழ்த்தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றிற்கு முரண்பாடான செயற்பாடுகளை சம்பந்தன் அவர்கள் மேற்கொள்கின்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை ஏன் இவர்களால் தடுத்துநிறுத்தமுடியவில்லை என்பது மக்களின் கேள்விகளில் ஒன்று. சுதந்திரம் கிடைத்துவிட்டதாக இக்காலகட்டத்தினை கருதி விடமுடியாது. இணக்கப்பாட்டு அரசியல் எனக்கூறிக்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செல்வது அபாயகரமானதொன்று.
மைத்திரிபாலவோ அல்லது மஹிந்தவோ, இதற்கு முன் இருந்த சிங்களத்தலைவர்கள் எவரும் அவர்களது சுயநலத்தினை பார்த்தவர்களே தவிர, புதிதாக எதனையும் தமிழ் இனத்திற்காக செய்துவிட்டுப் போனவர்கள் அல்ல. மைத்திரி-மஹிந்த பிளவுபட்டதைப்போன்று, பிரபாகரன் -கருணா பிளவுபட்டதைப்போன்று, தமிழ்த்தேசிய முன்னணி தமிழரசுக்கட்சி யினை மிஞ்சி செயற்படலாம். காரணம் என்னவென்றால், தமிழ்த்தேசிய முன்னணி தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்ற இரண்டினையும் விட்டுக்கொடுக்காது அதே நோக்கத்தில் செயற்படுபவர்கள். இதனையே தமிழ் பேசும் மக்களும் விரும்புகின்றனர். ஒருசிலரைத் தவிர.
குறிப்பாக வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஊது குழலாக செயற்படும் ஒருசில மாகாண சபை உறுப்பினர்களைத் தவிர, ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்களும் எதிர்ப்பாகவே செயற்பட்டுவருகின்றனர். வெளிப்படையாக அவர்களை எதிர்க்க திராணியற்றவர்களாகவே அவர்களது செயற்பாடுகள் அமையப்பெறுகின்றது. தொடர்ச்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய செயற்பாடுகள் வரலாற்று ரீதியாக பிழைகளை விட்டுச்செல்லுமாகவிருந்தால், அது சம்பந்தனின் தலைமைப்பதவிக்கு ஆபத்தினை ஏற்படுத்துவதுடன், தமிழரசுக்கட்சி சம்பந்தனை விலக்கிக்கொள்ளக்கூடிய காலம் தொலைவில் இல்லை.
சாணக்கியமாக தலைவர்களில் ஒருவராக திகழ்ந்துவந்த சம்பந்தன் அவர்கள் 67வது இலங்கை சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் குழிதோண்டிப்புதைத்துவிட்டதாகவே தமிழ்பேசும் மக்களும், ஆய்வாளர்களும், அவதானிகளும் கருதுகிறார்கள். இதுதொடர்பில் தினப்புயல் ஊடகம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களிடம் நீங்கள் ஏன் இந்த வைபவத்தில் பங்கெடுத்தீர்கள்? உங்களை சம்பந்தன் அவர்கள் அழைத்துச்சென்றாரா? என வினவியதற்கு, இல்லை அவ்வாறில்லை. எனக்கு அழைப்பிதழ் தனியாக வந்தது. நான் அதற்கு சென்றிருந்தேன் எனக்கூறினார்.
ஆனால் சம்பந்தன் அவர்கள் ஏனைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாது சென்றிருந்தமை அக்கட்சியில் இருப்பவர்களுக்கு மனவேதனையினை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் அடுத்த கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கும் ஆசனங்கள் இல்லாதுபோய்விடும் என்ற காரணத்தினால் யாருமே சம்பந்தன் அவர்களிடம் முரண்பட மாட்டார்கள். அவரும் அவர்களினது தனிப்பட்ட கருத்து எனக்கூறிவிட்டு போய்விடுவார். ஆகவே தமிழ்த்தேசி யக்கூட்டமைப்பிலுள்ளவர்கள் தமி ழரசுக்கட்சியினாலும், இரா.சம்பந்தன் அவர்களினாலும் மந்திரித்துவிடப்பட்டவர்களே. அதனை மீறி செயற்படுபவர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கு ஏற்பட்ட நிலைமைகளே ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
– நெற்றிப்பொறியன் –