இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமைப்பதவியில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஓய்வு எடுக்கின்றார். இது அவர் விரும்பி எடுக்கும் ஓய்வு இது அல்ல. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், தமிழ் தேசிய ஊடகங்களின் நிர்ப்பந்தத்தாலேயே அவர் இந்த ஓய்வைக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்ப அவருக்கு என்ன பதவி என்றால் ‘பெருந்தலைவர்’ என்ற உயரிய பதவி வழங்கப்படுகின்றது.
அதற்குரிய தகைமையை அவர் வளர்த்துக்கொள்ளவேண்டும். அது தமிழரசுக் கட்சியின் முழுமைக்கும் மட்டும்தான். காங்கேசன்துறைத் தொகுதிக்கு அல்ல!
அண்மையில் காங்கேசன் துறைத் தொகுதித் தெரிவு இடம்பெற்றது. அதில் மாவை ஐயாவே மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஏனைய பதவிகளுக்கும் அவரால் நியமிக்கப்பட்ட அவரது அல்லக்கைகள். நான் இதில் ‘நியமிப்பு’ என்பதற்குக் காரணம் அங்கு ஜனநாயகத் ‘தெரிவு’ நடைபெறாதமையாலேயே! ஜனநாயகக் கட்சியில் ஜனநாயகமே என்னவென்று தெரியாத தெரிவு அல்ல, நியமிப்பு பதவிகள். காரணம் அடுத்த கட்சித் தலைமைத் தெரிவுக்கு மாவை ஐயா கூறும் எல்லாத்துக்கும் தலையசைக்கும் பூம்பும் மாட்டை தலைவராக வாக்களிப்பதற்கே இந்தப் பதவி தெரிவுகள்.
உயிர் அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் – வீடுகளுக்கு முன்னாள் மண்டை ஓடு வைத்து அச்சுறுத்தும் காலத்தில் – உயிரைத் துச்சமென மதித்து தேர்தல்களில் நின்று, காங்கேசன்துறைத் தொகுதியை மீள தூக்கிநிறுத்திய தொகுதியின் செயலாளர், நான் உட்பட தேர்தல்களில் வெற்றிபெற்ற – மக்;கள் மனதை வென்ற பலர் தொகுதித் தெரிவுக்கு வெளியில்…..! எனக்கும் செயலாளருக்கும் அழைப்பிதழ் வழங்கவில்லை. பலர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டும் நியமிப்பில் உள்வாங்கப்படவில்லை.
ஒரு தொகுதியைத் தெரிவுசெய்வதாயின் பழைய செயலாளரே உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவேண்டும். கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பும் அவருடையதே. புதிய செயலாளரை பொதுச்சபை தெரிவுசெய்யும் வரைக்கும் அவரே நிர்வாக அதிகாரி. ஆனால், இங்கு மாவை ஐயா அவருக்கே தெரியாமல் தான்தோன்றித் தனமாகத் தொகுதியைக் கூட்டியுள்ளார். இன்று தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் கட்சியில் இணைந்த காலம், அல்லது அதற்கு சற்று முற்பட்ட காலத்தில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தவர்கள் நானும் எமது தொகுதி செயலாளரும். ஆனால், தொகுதிக்கிளைக் கூட்டத்துக்கு எம் இருவருக்கும் அழைப்பு இல்லை.
இதற்கான முக்கிய காரணம், தமிழரசுக் கட்சியில் ஓரளவு இளைஞர்களாக இருக்கும் சுமந்திரன், சிறிதரனை விடுத்து – புறந்தள்ளி – தனக்கு அடுத்த மூப்பின் சிரேஷ்ட பிரஜையாகிய மட்டக்களப்பு சாமியார் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வாக்களிக்க காங்கேசன்துறைத் தொகுதி திட்டமிட்டுள்ளது என உள்வீட்டு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தந்தை செல்வாவின் காலத்தில் மாவை ஐயாவின் வீரம்செறிந்த அஹிம்சைப் போராட்ட தியாகங்களை சிறுவயதிலிருந்தே எனது தந்தை புல்லரிக்கும் விதமாகத் தெரிவித்த கருத்துக்களால் நான் தமிழரசுக் கட்சியில் ஈர்க்கப்பட்டேன். பின், எனது தந்தையின் இறுதிக் கிரியைகளின்போது அவர் ஆற்றிய அஞ்சலி உரை என் ஆழ்மனதைத் தொட்டு நான் கட்சியில் இணைந்து அன்றுதொடக்கம் இன்றுவரை தொகுதியின் உப செயலாளராக, உபதலைவராக தொடர்ந்து பதவி வகித்தேன். ஆனால், இன்று எம்மை முதியவர்கள் என்றோ என்னவோ மாவை ஐயா வெளியே விட்டுவிட்டார்.
தமிழரசுக் கட்சியில் இளைஞர், யுவதிகள் வரவேண்டும் என்று மாவை ஐயா தன் தாரக மந்திரமாக அடிக்கடி கூறுவார். இது ”ஊருக்கடி உபதேசம் உணக்கில்லையடி கண்ணே” என்பது போன்றதே. நாங்கள் 30 வயது இளைஞராகக் கட்சியில் இணைந்தோம். இன்றுவரை தொகுதிக்கிளை பதவி, பிரதேசசபை உறுப்பினர் பதவி மட்டும்தான். தற்போது எம்மை முதியவர்களென அதிலிருந்து புறந்தள்ளிவிட்டார் என்றும் மார்க்கண்டேயர் மாவை.
எம்மைப் புறந்தள்ளியமை பிரச்சினை அல்ல. தொடர்ந்தும் தொகுதிக்கிளையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும் தேர்தல் களங்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கொண்டுவந்தால் 5 வீத வாக்குகளை மட்டுமே கட்சியால் தக்கவைக்கமுடியும். தமிழரசுக் கட்சிக்கும் தற்போதுள்ள வாக்காளர்களுக்கும் இடையில் 50 வருட இடைவெளி காணப்படுகின்றது. ஆரம்பத்தில் தமிழ் மக்களின் ஏக கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி படிப்படியாக மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து தேர்தலில் பின்னடைவை சந்திப்பதற்கும் இதுவே காரணம். தற்போது ஒவ்வொருவருடமும் 18 வயதைப் பூர்த்திசெய்த புதிய வாக்காளர்கள் உருவாகிறார்கள்.
அவர்களைக் கட்சியில் உள்வாங்கும் எந்தப் பொறிமுறையும் மாவை ஐயா தலைமையிலான மாட்டீன் வீதி முதியவர்களுக்குக் கிடையாது.
தற்போது, புதிய தலைவர்களாக சாணக்கியம், மதிநுட்பம், இராஜதந்திரம் மிக்க சுமந்திரனும், தலைமைத்துவம், நிர்வாகக் கட்டமைப்பு மிக்க சிறிதரனும் போட்டியிடுகிறார்கள். தமிழரசுக் கட்சியில் இருப்பவர்களில் நாங்கள் சிறுவர்கள். இவர்களே இளைஞர்கள். மாவை ஐயா தனக்கு வயதுவந்ததை உணர்ந்து தனது தம்பியாகிய யோகேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.
எது எப்படியோ, யார் தலைவராக வந்தாலும், இளைஞர்களை – அதுவும் 18 வயது தாண்டியவர்களை உள்வாங்குவதற்கான பொறிமுறை அவசியம். இளைஞர் அணி செயலாளராக கட்சியில் இருக்கும் 60 வயது இளைஞர் என்று தாம் நினைப்பவரைத் தெரிவுசெய்யாமல், உண்மை இஞைர்களான 18 – 30 வயதுக்குட்பட்டவர்களை கட்சியில் உள்வாங்கி தெரிவுசெய்யவேண்டும். சகல தேர்தல்களிலும் இளைஞர்களுக்கு புதிய தலைவர்கள் சந்தர்ப்பம் வழங்கவேண்டும். கட்சியின் முக்கிய பதவியில் உள்ளவர்கள் தேர்தல் களத்தில் நிற்கக்கூடாது. அது அவர்களின் தலைமைப் பதவியைப் பாதிக்கும். மாவை ஐயா போன்று ”வே….. வீட்டு வெற்றிலைப் பெட்டி” போன்று செயற்படக்கூடாது. வாக்குக்காக ”முகத்துக்கு அஞ்சி ….. ஆடக்கூடாது”. மாவை ஐயாவிடம் 30 வயதில் கத்தத் தொடங்கி 47 வயதாகிவிட்டது. தற்போது நாமும் முதியவர்களே. தற்போது புதிதாகத் தலைமை ஏற்பவர்களிடம் வினயமாகக் கேட்கின்றேன். தற்போதுள்ள இளம் தலைமுறை எம்மைவிட அறிவு மிகுந்தவர்கள். வித்தியாசமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.
தற்போது மக்கள் மத்தியில் எது செல்வாக்கு செலுத்தும் என்பதை இராஜதந்திர அறிவால் உய்த்துணர்ந்து அதை மக்கள் மனதை வெல்லச்செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். பெரியவர்கள் நாம் அவர்களை தேர்தல் களங்களில் நிறுத்தவேண்டும். கட்சித் தலைமையை மட்டும் பெரியவர்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கவேண்டும். மாவை ஐயா போன்று போராட்டம், தியாகம் போராளி போன்ற பெயர்களை தானே கெடுத்தமை போன்று சுமந்திரன், சிறிதரனும் அவ்வாறு தாமே தமது பெயரைக் கெடுக்கக்கூடாது. மரணத்தின் பின்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக பெயர் நிலைக்கவேண்டும். அதற்கு தலைமுறை உருவாக்கம் அவசியம். மாவை ஐயா போன்றவர்கள் இளம் தலைமுறையை உருவாக்காதமையால் இவ்வளவு காலமும் நீண்டு நிலைத்த தந்தை செல்வாவின் பெயரே காணமல் போகும் நிலையில் உள்ளது. அந்தப் பொறுப்பு புதிய தலைமை ஏற்பவர்களிடத்தில் தான் உள்ளது.
மாவிட்டபுரத்தில் ஆரம்பித்த கட்சி மாவிட்டபுரத்தில் அஸ்தமிக்காமல் தலைமை மாற்றம் ஏற்பட்டது மகிழ்ச்சியே! ஆனால், தந்தை செல்வாவின் தொகுதியில் – அவரது வட்டாரத்தில் நின்ற அத்தனை தேர்தல்களிலும் வெற்றிபெற்றவன் நான். அந்த அடிப்படையில் புதிய தலைவர்களை வினயமாக வேண்டுகின்றேன். தலைமையை ஏற்றவுடன் எமது காங்கேசன்துறைத் தொகுதியைக் காப்பாற்றவேண்டும். மானிப்பாய் தொகுதியை புளொட்டிடம் தாரைவார்த்த பெருமை மாவை ஐயாவையே சாரும். தற்போது தேர்தலில் நிற்பவர்களால் அது ஓரளவு மீட்கப்பட்டுள்ளது. அதனோடு பெயருக்கு மாவை தலைவராக இருக்கும் காங்கேசன்துறைத் தொகுதியை புதிய தலைவர்கள் மீட்டு தந்தை செல்வாவின் பெயரைக் காப்பாற்றுவதுடன், அழிந்துசெல்லும் மாவை ஐயாவின் பெயரையும் காப்பாற்றவேண்டும்.
எனக்குப் பதவி முக்கியமல்ல. நான், பதவி தரவில்லை, தேர்தலில் போட்டியிட இடமளிக்கவில்லை என்பவற்றுக்காக கட்சி மாறுபவனும் அல்லன். இது என்னுடைய கட்சி. எனது தந்தை ஒரு சாதாரண தொண்டனாக இருந்து தந்தை செல்வாவை வெல்லவைத்த கட்சி. இது மாவையினதோ வேறு யாருடையதோ அல்ல. எனக்கு ஆசனம் வழங்காவிட்டால் தேர்தலில் சுயமாக அணிநிறுத்தி வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் தவிசாளர் தெரிவில் புளொட்டிடம் இருந்து கட்சியை மீட்க பிரகாஷை நிறுத்தி சமவாக்குகள் பெற்றோம். அந்த ‘ஹெத்து’ எம்மிடம் உள்ளது.
ஆனாலும், ஒட்டுமொத்தமாகக் கட்சியை தூக்கிநிறுத்தும் பொறுப்பு புதிய தலைவர்களிடமே உள்ளது. கட்சியை மட்டுமல்ல, அழிவடையும் மாவை ஐயாவின் பெயரையும் தூக்கி நிறுத்தி அவரை அனைவரும் மதிக்கும் பெருந்தலைவர் என்ற கௌரவத்தையும் – அதற்குரிய தகுதியையும் வழங்கும் பொறுப்பு புதியவர்களிடமே உள்ளது.
தெல்லியூர் சி.ஹரிகரன்