தமிழரிடையே இனி எந்த காலத்திலும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை – ச.வி. கிருபாகரன்.

342

 

 

kirupakaran( நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பின் செயல்பாடுகள் பற்றி பிரான்சை தலைமையகமாக கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுசெயலாளர் ச.வி.கிருபாகரன் வழங்கிய விசேட செவ்வி. )

கேள்வி : ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக 34.1 இலக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத் தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கையில் உள்ள சில தமிழ் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் கூறியிருக்கின்றன. இதற்கு அவர்கள் கூறியிருக்கும் காரணம் இத்தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கென வழங்கப்பட்டிருக்கும் இரண்டு வருடகால அவகாசத்தில் சாட்சிகளை அழித்துவிடுவார்கள் என்பதாகும். இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

பதில் : தமிழீழ விடுதலை போராட்டம் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுற்றதை தொடர்ந்து, எம்மிடையே பல புதிய நவீன தமிழ் தலைவர்கள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் அரசியல் வேலை திட்டம் என்பது ஒரு சாம்பறாக உள்ளது. அவர்களுக்கு விளங்கங்கள் கொடுப்பதற்கு மீண்டும் ‘தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு’ தான் களம் இறங்க வேண்டும்.

தமிழர் தரபில் யாரும், சிறிலங்கா அரசிற்கு மேலும் இரு வருடங்கள் கொடுப்பதை ஏற்கவில்லை. இது பற்றி சகலரும் வெளிப்படையாக எமது கருத்துக்களை வெளியிட்டிருந்தோம்.

ஆனால் நாம் யாரும் இவ் முடிவை ஏற்றமோ இல்லையோ, ஐ.நா.மனித உரிமை சபை இன்னும் இரு வருடங்களை கொடுப்பதை யாராலும் மாற்ற முடியாது போயிருந்தது. காரணம் இவ் முடிவு என்பது – வல்லரசு நாடான அமெரிக்கா, பிரித்தானியா போன்று மிகவும் பல மிக்க நாடுகளின் முடிவு.

இந்த இரு வருடங்களை ஏற்பதற்கு மேலாக, பாதிக்கப்பட்டவர்களிற்கு நன்மை கொடுக்க கூடிய வேறு வழிகள் இருந்தால் அதை யார் கூறினாலும் நாம் அதை ஆராய்ந்து அவர்களுடன் இணைந்து வேலை செய்யலாம். இதற்காக வேறு ஓர் புதிய ஐக்கிய நாடுகள் சபையை நிறுவி ஈழத்தமிழர்களிற்கு நீதி காண்போம் என்று யாரும் கூறினால் அதை போல் பைத்தியகாரத் தனம் வேற ஒன்றும் இருக்க முடியாது.

தொடர்ந்து ஐ.நா.வையும் சர்வதேச சமூதாயத்தை குறை சொல்வதை தவிர்த்து, அவர்களுடன் நெருங்கி வேலை செய்து எமக்கு வேண்டியவற்றை சாதிக்க முடியும்.

இப்படியாக 2012ம் ஆண்டு முதல் குறை சொல்பவர்கள் கடந்து ஐந்து வருடத்தில் எந்தனை நாடுகளை தங்கள் கருத்தை பிரதிபலிக்க கூடியவர்களாக மாற்றியுள்ளார்கள்?

ஐ.நா.விற்கு வருடத்தில் மூன்று தடவை வந்து ‘அரட்டை அரங்கம்’ வைப்பதை தவிர்த்து, நாடுகளுடன் ஐக்கியமாக வேலை செய்ய வேண்டும்.

கேள்வி :34.1 இலக்கதீர்மானம் நிறைவேற்றப்படாதிருந்தால் சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் அழுத்தமும், ஐ.நாவின் கண்காணிப்பும் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில் :இது தான் உண்மை.
இரண்டு வருடம் கால அவகாசம் கொடுத்து, சிறிலங்காவை தமது கண்காணிப்பில் வைப்பதாக ஐ.நா.அங்கத்துவ நாடுகள் கூறினார்கள். இது நிறைவேறாத கட்டத்தில், ஐ.நா.வின் பிடியிலிருந்து சிறிலங்கா நாளுவியிருக்கும் என்பதே யதார்த்தம்.

கேள்வி :தமிழர் தரப்பில் சிலர் 2014ஆம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தையும் எதிர்த்தார்கள், 2015ஆம் ஆண்டு 30.1 இலக்க தீர்மானத்தையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அதனை எதிர்த்தார்கள். 34.1 தீர்மானத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள், இத் தீர்மானங்களால் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு எந்த பிரயோசனமும் கிடைத்ததில்லையா?

kiruபதில்: ஐ.நா.வின் செயற்பாடு என்பது 193 அங்கத்துவ நாடுகளையும், 2 பார்வையாளர் நாடுகளையும் இணைத்து எல்லாமாக 195 நாடுகளை அடிப்படையாக கொண்டவை. அவர்களது வேலை திட்டங்கள் என்பது நத்தை வேகம் என்பதில் ஐயமில்லை. ஆனால் எம்மால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிற்கு வால் பிடிக்க முடியுமானால் நாம் வேண்டியவற்றை காலப்போக்கில் பெற்று கொள்ளலாம். அமெரிக்காவின் தயவிலேயே – ஏரித்தரியா, கிழக்கு தீமூர், கோசவா, தென் சூடன் போன்ற புதிய நாடுகள் உதயமாகியது. இந்தியாவின் தயவினாலேயே பங்காளதேஸ் என்ற நாடு உருவாகியது. இவற்றை எமது உணர்ச்சிவச செயற்பாட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

ஐ.நா.வும் கூடாது, சர்வதேச நாடுகளும் கூடாது, இந்தியாவும் கூடாது, கொழும்விலிருந்து வந்து எங்கள் விடயத்தில் ஏதோ தங்களால் முடிந்தவற்றை செய்யும் நிமல்கா பெர்ணாண்டோ, பாக்கிசோதி சரவணமுத்து போன்றவர்களும் கூடாது என அரட்டை அரங்கம் நடத்துபவர்களை இறுதியில் யார் ஆதரிக்க போகிறார்கள்?
கொழும்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் திருமதி நிமல்கா பெர்ணாண்டோ வீட்டிற்கு முன்பாக சிங்கள தீவிரவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எதற்காக? இவற்றை எமது நவீன தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி :2014ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்து அவர்களின் அறிக்கையின் படி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 260 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைதான் இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்தது என கூறக் கூடிய ஐ.நா.வின் உத்தியோகபூர்வ ஆவணமாக கருதப்படுகிறது. 2014 தீர்மானத்தை எதிர்த்து அதன் நகலை எரித்தவர்கள் அதனூடாக வந்த ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றிருந்தார்கள். இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் :நீங்கள் அலசி ஆராய்வது போல் எமது உணர்ச்சிவச சந்தர்ப்பவாதிகள் ஆராய்வதில்லை. ஐ.நா.விலும், சர்வதேசத்திலும் நம்பிக்கை அற்றவர்கள் எதற்காக தமது காலங்களை ஐ.நா. அமர்வுகளில் செலவிடுகிறார்கள் என்பது புரியாத புதிராகவுள்ளது. அரட்டை அரங்கங்களை தாம் வாழும் இடங்களிலேயே நடத்தலாமே!

கேள்வி :இவர்கள் தமது அரசியல் இலாப நோக்கம் கருதித்தான் செயல்படுகிறார்கள் எனசொல்லமுடியுமா?

பதில் சிலர் சிறிலங்காவின் அடுத்த பொது தேர்தலை மனதில் கொண்டே செயற்படுகின்றனர். அவர்களுடன் கை கோர்த்து நிற்பவர்களிற்கு இவை விளங்கபோவதில்லை!
கேள்வி 30.1 இலக்க தீர்மானத்தில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்கு மேலும் இரு வருடங்களை வழங்கும் 34.1 இலக்க தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஐ.நா.வின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில் :ஐ.நா.வும் அதனது அங்கத்துவ நாடுகளும் தமிழர்களிற்கு கையை விரித்திருப்பார்கள். நாங்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருந்தால், இவ் 34வது கூட்டத் தொடரில் சிறிலங்காவை ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் தீர்மானங்களை நிறைவேறியிருக்கலாம்.

ஆகையால் தான் சொல்லுகிறேன், வாழ்க்கை முழுவதும் ஐ.நா.வையும், அங்கத்துவ நாடுகளையும் குறை சொல்வதை நிறுத்தி, முடியுமானால் மனித உரிமை சபையின் 47 நாடுகளில் குறைந்தது 24 நாடுகளையாவது எமக்கு ஆதரவாக மாற்றுங்கள். இதன் பின்னர் எல்லாம் சுலபமாகும்.

கேள்வி :இந்தவிடயத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு கொண்டு செல்வதற்கும், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை சர்வதேசபோர்க்குற்ற நீதிமன்றில் விசாரிப்பதற்கும் வழிகள் உண்டா?

பதில் :நிட்சயம் உண்டு.   இதற்கு நாங்கள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு சபை ஆகியவற்றுடன் வேலை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் இவற்றுடன் யாரும் வேலை செய்வதில்லை. பெரும்பாலனவர்கள் ஜெனிவாவில் ‘அரட்டை அரங்கம்’ வைப்பதையே விரும்புகிறார்கள்.

கேள்வி :றோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத ஓரு நாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த முடியுமா?

பதில் :நிட்சயம் முடியும். இதற்கு நல்ல உதரணமாக சூடான் விளங்குகிறது. பாதுகாப்பு சபையில் சீனாவும் ரஷ்யாவும் சிறிலங்கா மீதான நடவடிக்கைகளை முடக்குவார்கள் என கூறுபவர்கள், எப்படியாக பாதுகாப்பு சபை சீனா, ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சூடான் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை படிக்க வேண்டும், ஆராய வேண்டும்.

கேள்வி :ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் சரி, ஐ.நா. பொதுச்சபையிலும் சரி பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் :இதற்காக தான் நாங்கள் ஜெனிவாவில் அரட்டை அரங்கம் வைப்பதை தவிர்ந்து இரவு பகலாக நியூயோர்க்கில் வேலை செய்ய வேண்டும்.

ஜெனிவாவிற்கு தனவந்தர்களின் பணத்தில் வருபவர்கள், எதற்காக நியூயோர்க் சென்று வேலை செய்ய முடியாது இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அங்கு தான் தமிழீழ மக்களின் சுயநிர்ணயம் பற்றியும் கதைக்க முடியும்.

கேள்வி :இலங்கை அரசுக்கு சாதகமாகவே ஐ.நா.சபையில் நாடுகள் செயல்படும் நிலையில் தமிழ் மக்கள் அங்கு நீதியை எதிர்பார்க்க முடியுமா?

பதில் :பெரும்பான்மையானவர்கள் ஐ. நா. மனித உரிமை சபையின் வீரங்கணைகளாக விளங்க விரும்புகிறார்கள். இங்கு 47 நாடுகளிற்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. ஐ.நா. பொதுச் சபையில் 193 அங்கத்துவ நாடுகளிற்கும் வாக்குரிமை உண்டு. நீச்சல் தடாகத்தில் இறங்காமல் யாரும் நீந்துவது கடினமென கூற முடியாது.

கேள்வி :ஐ.நா. மனித உரிமை பேரவையில் இம் முறை தமிழர் தரப்பு பல பிரிவுகளாக நின்று மோதிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. அகில இலங்கை தமிழ்காங்கிரஷ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில தமிழ் அமைப்புக்களையும் நபர்களையும் துரோகி என குற்றம் சாட்டினார், இவ்வாறு தமிழர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் :மற்றவர்களிற்கு துரோகி பட்டம் சூட்டுபவர்கள் யாராக இருந்தாலும், அந்நபர் இயலாமை என்ற கட்டத்திற்கு சென்றுவிட்டார் என்பதே உண்மை. மற்றவர்களுக்கு துரோகி பட்டம் சூட்ட நாம் யார்? எமது அரசியல் அனுபவம், தகமை, ஆளுமை, திறமை போன்றவை என்ன என்பதை நாமே அறிந்திருக்க வேண்டும். இவற்றை கற்பனையாகவோ, பொய்கள் கூறுவதன் மூலம் பெற முடியாது.

என்னை பொறுத்த வரையில் உண்மைகள் யதார்த்தங்களை மக்கள் முன் வைத்து, மற்றவர்களின் கள்ளம் கபடங்களை வெளிப்படுத்த வேண்டும். இதன் பின்னர் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதனால் சில கஸ்டங்கள் சிலவேளைகளில் ஏற்படலாம். ஆனால் உண்மை என்றும் நிலைக்கும்.

உண்மையை பேசுவதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது சுயநலத்திற்காக உடைத்தவர்கள் அத்தனை பேரும் துரோகிகளேன பலர் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். வெளிநாடுகளில் காற்றுள்ளது அதனால் தாராளமாக தூற்றி கொள்கிறார்கள்! அடுத்த தேர்தல் யாவற்றுக்கும் பதில் கூறும். அவ் வேளையில் தமிழர் தாயகம் கூறு போடப்பட்டிருக்கும்.

காலப் போக்கில் தமிழர்களது தாயாக பூமி சிங்களமயமாவதற்கு சகல தமிழ் அரசியல்வாதிகளும் நன்றாக உழைக்கின்றார்கள். அத்தனை தமிழ் அரசியல்வாதிகளும் அப்பாவி தமிழ்மக்கள் மீது நன்றாக சவாரி செய்கிறார்கள் என்பதே உண்மை.

கேள்வி :தமிழ்நாட்டில் இருந்தும் சிலர் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வந்து ஈழத்தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசினார்கள், இவர்களின் செயல்பாடுகள் பற்றி உங்கள் அவதானிப்பு என்ன?

பதில் :தமிழ் நாட்டிலிருந்து வந்த டாக்டர் அன்புமணியின் உரை மிகவும் நல்ல வரவேற்பை மனித உரிமை சபையில் பெற்றிருந்தது. டாக்டர் ராமதாஸின் அமைப்பு ஈழத் தமிழர்களிற்காக பல உதவிகளை ஐ.நா.மனித உரிமை சபையில் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து வந்த வேறு சிலர் மட்டுமல்லாது, யாழ்பாணத்திலிருந்து வந்த ஒருவரும் நல்ல நகைசுவை நடிகர்கள் போல் காணப்பட்டனர். அவர்களது செவ்விகளை கேட்டவர்கள்; நீண்ட காலத்திற்கு பின்னர் நல்ல நகைசுவை படம்பார்த்தாக கூறினார்கள்.

சிலர் வேட்டி, குருத்தா போன்றவற்றுடன் ஐ.நா.வில் காணப்பட்டார்கள். தாம் அறிந்தவை தான் உண்மை சரித்திரம் என எண்ணுபவர், ‘ஐ.நா.வில் வேட்டியுடன் வந்த முதல் தமிழன் என்ற பெருமையையும் கொடுத்தார்’;

ஐ.நா.மனித உரிமை சபைக்கு வேட்டியுடன் வருகை தந்த முதல் தமிழன் என்றால் உண்மையில் அது டக்ளஸ் தேவனந்தா. இவரது கைஆள் ஐ.நா.மனித உரிமை சபையில் இன்று பலர் படைசூழ வேலை செய்கிறார். என்று ராஜபக்சா மீண்டும் பிரதமராகிறரோ, அன்று டக்ளசும், கருணாவும் அமைச்சர்கள் ஆவார்கள். இதன் பின்னர் தான் சில உண்மைகள் வெளியாகும். அன்று சிலர் ஓடி ஒழிப்பார்கள்.

வேட்டிக்கும், குருத்தாவிற்கும் தமிழீழ விடுதலையின் மூச்சாக விளங்கிய கிட்டு கூறிய ஓர் பழைய கதையை இங்கு கூறவேண்டும். கிட்டு வெளிநாடுகளில் இருந்த காலத்தில், யாரும் வெளிநாட்டவர்களை சந்திப்பதனால், நல்ல கோட் சூட் அணிந்து, நல்ல வாசனைகளையும் அடித்து தான் செல்ல வேண்டும் என்பார். காரணம், வெளிநாட்டவர்கள் சும்மாவே எங்களை மதிப்பதில்லை, அதுவும் தாறு மாறாக உடையாணிந்து போனால், வெளிநாட்டவர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள் என்பார்.

யாழ்பாணத்திலிருந்து வந்த ஒருவர் தன்னை அழைத்தவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் தன்னை வரவேற்கவில்லையென கவலையாக கூறியதாக அறிந்தேன். இவர் ஜெனிவா வருவது ஏற்கனவே தெரிந்திருந்தால், நாதஸ்வரம் மேள தாளங்களுடன் சென்று, மாலை அணிவித்து விமான நிலையத்திலேயே அவரை வரவேற்பிருப்போம். இவர் அடுத்த முறை ஜெனிவா வருவாரானால் நிட்சயம் அவருக்கு நல்ல விருந்து உபசாரம் செய்து அனுப்புவோம். ‘அர்ப்ப மனிதர்களிற்கு அர்ப்ப எண்ணங்களும் சிந்தனைகளும் தான் உதயமாகும்’! சிலர் பகற் கனவு காண்கிறார்கள்.

கேள்வி ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்களில் இந்தியா மௌனம் சாதிப்பதற்கான காரணம் என்ன?

பதில் :சீனாவும், பாகிஸ்தானும் தற்போதைய சிறிலங்கா அரசுடனும் மிக நன்றாக கால் பதித்துள்ளன. இதனால் இந்தியா பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இவ் மோடி அரசிடமிருந்து நாம் எதையும் பிரயோசனமாக பெற முடியாவிடில், காங்கிரசிடமிருந்து எதை பெற போகிறோம்? காங்கிரசினருக்கு ஈழத்தமிழர்களை கண்ணில் காட்ட முடியாது.

தமிழ் நாட்டிலிருந்து எழச்சிக்காக ஜெனிவா வரும் திரைபட இயங்குனர்களால் இந்தியாவின் மௌனத்தையே கலைக்க முடியாதுள்ள வேளையில், இவர்களால் ஐ.நா.மனித உரிமை சபையில் என்ன செய்ய முடியும்?

கேள்வி :இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இவர்களின் வருகை எவ்வளவு தூரம் சர்வதேச நாடுகளை இலங்கை தமிழர் பக்கம் திருப்ப உதவியிருக்கிறது?

பதில் :இலங்கையிலிருந்து வந்தவர்கள் சிலரின் அர்பணிப்பை மதிக்கிறோம். சர்வதேச நாடுகளுடன் உரையாடி அவர்களை எமது கருத்திற்கு உடன்பட வைப்பவர்களாக இருந்தால், வருபவர்களிடம் விசேட தகமைகள் இருக்க வேண்டும். முன்பு விடுதலை போராட்ட காலத்தில் பொன்னம்பலம், கலாநிதி சச்சிதானந்தன், ஆயர் டானியல் தியாகராஜா, போன்றவர்களே வருகை தந்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது எமது நவீன தலைவர்கள் தங்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே அழைக்கிறார்கள். இவை யாவும் வீண் விரயம், இதனால் மனித உரிமை சபையில் எந்த மாற்றங்களும் நடைபெற போவதில்லை.

விமானச்சீட்டு பெற்று ஜெனிவா வந்த சிலரை, சில காலம் மற்றவர்களுடன் கதை பேச்சு இருக்கபடாது என பயணக்கைதிகளாக வைக்கப்பட்டார்கள். சிலர் நக்குண்டார், நாவிழந்தார் போல் விளங்கினார்கள். சிலர் இங்கு வந்த பின்னர் தான் உண்மைகளை தெரிந்து கொண்டோம். தமிழர்கள் தமிழர்களிற்கு கூட்டம் வைப்பதற்கு நாம் ஊரிலிருந்து ஐ.நா. வர வேண்டுமா என வின எழுப்பினார்கள்;.

மனித உரிமை சபை கூட்ட வேளையில், சிறிலங்காவிலிருந்து வருகை தந்த இருவர் வீட்டிற்கு, ஊரில் சிறிலங்காவின் புலனாய்வு சென்று, தொல்லைகள் கொடுத்துள்ளது. இங்கு தான் பாரீய சந்தேசங்கள் எழுகிறது. இவர்கள் இருவரது விபரங்களையும் அழைத்தவர்களில் ஒரு சிலரிடமே உள்ளது. அப்படியானால்……..? இவர்கள் இருவரையும் இச் சர்ச்சையிலிருந்து காப்பாற்றுவதற்காக, எனக்கு நன்கு தெரிந்த செல்வாக்கு பெற்ற தமிழர் அல்லாத இருவர் மிகவும் கடுமையாக உழைத்தனர்.

இவ்வேளையில் எனது அனுபவம் ஒன்றை இங்கு பகீர்ந்து கொள்ள விரும்புகிறேன். விடுதலை போராட்ட காலத்தில், ஐ.நா.வில் எமது வேலைகளை குழப்புவதற்கும், எம்மை புகைப்படம் எடுத்து சிறிலங்காவில் அரச பத்திரிகையில் எழுதுவதற்கும் சிறிலங்காவின் புலனாய்வினரும், அரசின் கையாட்களும் வேலை செய்தனர். ஆனால் கடந்த சில வருடங்காள இவர்கள் ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தருவதில்லை. அப்படியானால், இவ் வேலைகளை தற்பொழுது யார். செய்கிறார்கள்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி :தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?

பதில் :தமிழரிடையே இனி எந்த காலத்திலும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. காரணங்கள் பல.
தமிழர்கள் ஒற்றுமைப்படுவதானால் முள்ளிவாய்காலுடன் ஒற்றுமை பட்டிருப்பார்கள்.
முக்கிய விடயம் என்னவெனில், ஒற்றுமையை குழப்புபவர்கள் சிலர் ஒற்றுமையை பற்றி கதைக்கிறார்கள். ஒற்றுமையை பற்றி கதைப்பவன் யாராக இருந்தாலும் பக்கம் சாராதவர்களாக இருக்க வேண்டும்.
சிலர் தங்களை அண்ணை, தலைவர் என்று மதிக்காதவர்களை ஒதுக்க வேண்டுமென விரும்புகிறார்கள். இவ் அடிப்படையில் என்னை ஐ.நா.செயற்பாட்டிலிருந்து ஒதுக்க வேண்டுமென சில நவீன தலைவர்கள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். இதற்கு ஏற்ற ஆட்களை தேடமுடியாத காரணத்தினால், தற்பொழுது டக்ளஸ் தேவனாந்தவின் ஆளிடம் சரணடைந்துள்ளார்கள். இவையாவற்றிற்கு காலம் பதில் சொல்லும்.

( இரா.துரைரத்தினம் )

SHARE