தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும்

527

 

யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே! ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. தமிழரசு கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி இவர்கள் பேசியதெல்லாம் என்ன – இனவாதம்தானே என்று சாதாணரமாக கூறிச் செல்லுபவர்கள் இருக்கின்றனர்.

தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது என்ன? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தியை காண முடிந்தது. புதிய அரசியல் யாப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறியிருக்கின்றார். குணரட்ன இவ்வாறு கூறுகின்ற போது அந்தச் சபையில் அமர்ந்திருந்த பௌத்த பிக்குகள் உட்பட எவருமே அதனை கண்டித்துப் பேசவில்லை. அவ்வாறாயின் இதன் பொருள் என்ன?

இலங்கை சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற காலத்திலிருந்து தமிழ்த் தலைவர்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஜம்பதிற்கு ஜம்பது கோரிக்கை தொடக்கம் தமிழ் மக்களின் சார்பிலான அரசியல் கோரிக்கைகள் காலத்திற்கு காலம் மேலெழுந்திருக்கின்றன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காலத்தில் அது, பண்டா – செல்வா என்றும் பின்னர் டட்லி – செல்வா என்பதாகவும் நீண்டு சென்றது. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஜம்பதுக்கு ஜம்பது என்னும் கோரிக்கையுடன் ஒப்பிட்டால் அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட செல்வாவின் கோரிக்கைகள் அதிகார நோக்கில் குறைந்தவையே! ஆனால் ஆகக் குறைந்த கோரிக்கைகள் கூட சிங்கள வெறியால் கிழித்து வீசப்பட்ட போதுதான் வேறு தெரிவுகளின்றி தனிநாடு என்னும் நிலைப்பாட்டை நோக்கி தமிழ்த் தேசிய அரசியல் நகர நேர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கூட ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோரும் தமிழ்த் தரப்பொன்றும் இருந்தது.

விடுதலைப் புலிகள் ஒரு பக்கத்தில் போராடிக் கொண்டிருந்தாலும் கூட மகாண சபையை முறைமையை ஏற்றுக் கொண்டு, அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையுடன் ஒரு தரப்பு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தரப்பினர் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் இணைந்தும் செயற்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தன் போது கொழும்புடன் கைகோர்த்திருந்த தமிழ் தரப்பொன்றும் இருந்தது. ஆனால் அந்த தரப்பிடமாவது ஒரு கணிசமான அளவு அதிகாரங்களை ஒப்படைத்திருக்க முடியும் ஆனால் அதற்கும் சிங்கள ஆளும் வர்க்கம் தயாராக இருக்கவில்லை. அவர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியது. இதில் சந்திரிக்கா குமாரதுங்க விதிவிலக்கானவராக காண்பிக்கப்பட்ட போதிலும் கூட, அவரது முயற்சியை அப்போது ரணில் தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதுவும் கூட சிங்கள இன மேலாத்திக்கத்தின் இனனொரு முகம்தான். ஒரு சிங்கள தரப்பு தங்களை தாரளமானவர்களாக காண்பிக்க முயற்சிக்கும் போது, பிறிதொரு சிங்களத் தரப்பு அதனை குழப்பி தோற்கடிக்கும். இதுவே கடந்த எழுபது வருடங்களாக இத்தீவில் அரங்கேறிவரும் சிங்கள அரசியலாகும். இதில் சதாரண சிங்கள மக்கள் நாம் குற்றவாளிகளாக காணமுடியாது. ஆனால் அவர்கள் இவ்வாறானதொரு அரசியல் பாதையில்தான் கடந்த எழுபது வருடங்களாக வழிடத்தப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அநீதிகளும் அவர்களின் பெயராலேயே நடந்தேறியிருக்கின்றன.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கோரிக்கையும் மேலாதிக்க நோக்கம் கொண்டதல்ல. ஆனால் தமிழ் மக்களின் ஆகக் குறைந்த கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்ட போதுதான் தனிநாடு ஒன்றை நோக்கிச் சிந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழ் தலைவர்கள் தள்ளப்பட்டனர். இன்று தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சம்பந்தர் அந்தத் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத ஒருவர். ஆனால் அப்படியான ஒருவரது கோரிக்கையைக் கூட இன்று சிங்களம் ஒருமித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையிலிருக்கிறதா? சம்பந்தன் அளவிற்கு இணங்கிச் செல்லக் கூடிய ஒரு தலைவர் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இனிக் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவ்வாறான ஒருவருடன் கூட, இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பதிலாக எவ்வாறு அவரை மேலும் பலவீனப்படுத்தலாம் என்பதிலேயே சிங்கள ஆளும் வர்க்கம் தொழிற்பட்டுவருகிறது. ஒரு புறம் அரசியல் தீர்வில் நாட்டம் உள்ளவர்கள் போல் காண்பித்துக் கொண்டு, இன்னொரு புறமாக பௌத்த மதபீடத்தை களத்தில் இறக்கி நிலைமைகளை மேலும் தங்களுக்குச் சாதகமாக கையாள முற்படுகின்றனர். சிங்கள பௌத்த மதபீடத்தை, சிங்கள கடும் போக்கு வாதிகள் ஆகியோரை புறக்கணித்து, ஏன் சிங்கள தலைவர்களால் தற்துனிபுடன் செயற்பட முடியாமல் இருக்கிறது? ஏனென்றால் தமிழ் மக்களை, சிங்கள மக்களுக்கு சமதையான ஒரு மக்கள் கூட்டமாக கருதுவதற்கான உளப்பாங்கு அடிப்படையிலேயே சிங்கள தலைவர்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் தங்களின் ஆளுகையின் கீழ் இருக்க வேண்டியவர்கள் என்பதே அவர்களது அப்படையான புரிதலாகும்.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை இனவாதமாக பார்ப்பவர்கள் முதலில் அந்த இனவாதத்திற்கான வேர் எங்குள்ளது என்பதை உற்று நோக்க வேண்டும். இன்று வடக்கு முலமைச்சர் விக்கினேஸ்வரனை சிலர் இனவாதியாக காண்பிக்க முற்படுகின்றனர். அப்படியென்ன விக்கினேஸ்வரன் கூறிவிட்டார்? தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கூறினார். தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் அவர்களுக்கென்று ஒரு தனியான வரலாற்று வாழ்விடம் உண்டு. அங்கு அவர்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அரசியல் தீர்வு முயற்சிகள் அமைந்திருக்க வேண்டும். இதனைக் கூறுவதால் அவர் இனவாதியா? தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவது இனவாதம் என்றால் அந்த இனவாதத்தில் ஒரு தவறும் இல்லை. தவிர இப்பத்தியாளரின் பார்வையில் இனவாதம் தவறான ஒன்றல்ல மாறாக இன வெறிதான் தவறானது. அந்த வகையில் இப்பத்தி சிங்கள இனவாதத்தையும் தவறான ஒன்றாக காணவில்லை. ஒவ்வொரு இனத்திற்கும் தனது இனத்தின் சார்பில் சிந்திக்கும், அதற்காக செயற்படும் உரிமையுண்டு. அந்த கோணத்தில் நோக்கினால் இனவாத அரசியல் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அது இனவெறியாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பத்தி தமிழ் இனவாதத்தை சரியான ஒன்றாகவே கருதுகிறது. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. நாங்கள் இனவாதத்தை கடந்து சிந்திக்கின்றோம் என்று சொல்லுபவுர்கள்தான் சிக்கலானவர்கள். இன்று இலங்கையில் இனவாதத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை. மக்களும் இல்லை. சாதி ரீதியாக, மத ர்Pதியாக பிளவுகள் இருக்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் தேர்தல்களின் போது, தமிழ் இனமாகவே சிந்திக்கின்றனர். அதே போன்றுதான் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சிந்திக்கின்றனர். ஆனால் இந்தப் போக்கை உடைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. விடுதலைப் புலிகள் என்னும் காப்பரன் இல்லாமல் போன பின்னர், தமிழ் சமூகத்தில் சாதிய உரிமை பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. வன்னியில் வாழும் மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றவாறான குரல்களை கேட்க முடிகின்றது. இவ்வாறானவர்கள் எல்லாம் இதற்கு முன்னர் எங்கிருந்தனர்? அதே போன்று யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்க கட்சிகளை நோக்கித் தள்ளுகின்ற முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவற்றை தடுப்பதற்கு தமிழ் தலைவர்களிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் தமிழ் இனவாதம்தான். தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கும் ஓரணியாக சிந்திக்க வைப்பதற்கும் தமிழ் இனவாதம் கட்டாயமானது ஆனால் அது ஏனைய இனங்களுக்கு எதிரான வெறியாக மாறிவிடக் கூடாது. ஏனெனில் இனவாhதம் சரியானது – இனவெறிதான் தவறானது. சிங்களவர்களிடம் இருப்பது இனவெறி. அதன் காரணமாகவே இந்தத் தீவின் தேசிய முரண்பாட்டை இன்றுவரை ஒரு தீர்வை நோக்கி கொண்டு செல்ல முடியாமலிருக்கிறது.

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும்.

உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் அண்மையில் நடந்திருக்கும் அசம்பாவிதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நமது நமது இஸ்லாமிய சகோதரர்கள்.

நல்லெண்ணம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் இந்த அசாதாரண நெருக்கடியை கண்டித்திருக்கிறார்கள். இவ்வேளையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு குறைந்த பட்சம ஆறுதல் வார்த்தைகளாவது கூறவேண்டும்.

அதனைவிடுத்து முன்னைய கலவரங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவேளையில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஒப்பிட்டு, அவர்கள் மீது முகநூல்களில் தவறான புரிதல்களை உருவாக்கும் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் கண்டிக்கத்தக்கதே. பாதிப்புக்கள் எவருக்கும் எந்நேரத்திலும் எந்த ரூபத்திலும் வரலாம். இனவாதப்பாம்பு தலைதூக்குவதுபோன்று இயற்கை அநர்த்தங்களும் வரலாம். அதனால் எவரும் பாதிக்கப்படலாம். அத்தகைய தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே நியாயமானது. அத்துடன் பாதிப்புகளின் தோற்றுவாய் என்ன என்பதை கண்டறிந்து எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாதிருக்கவும் விழிப்புடன் இருக்கவேண்டியதும் சமுதாயக்கடமையாகும்.

முக்கியமாக நவீன தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் தவாறான பரப்புரைகளும் அதன்ஊடாக மேலும் மேலும் இனமுறுகளுக்கு தூபம்போடும் செயல்களும் விரும்பத்தக்கது அல்ல. முன்னர் இலங்கையில் நடந்த கலவரங்களில் வதந்திகள் விஷமாக பரவி மேலும் நெருக்கடிகளை உக்கிரப்படுத்தியிருந்ததை அறிவோம். சமகாலத்தில் அத்தகைய வதந்திகள் வாய்மொழியாக பரவாமல், நவீன ஊடகங்களின் வாயிலாக மின்னல் வேகத்தில் பரப்புரை செய்யப்படுகிறது.

இலங்கையில் கடந்த காலங்களில் கலவரம் நடந்தவேளைகளில் குறிப்பாக 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கையை சிக்கலுக்குண்டாக்கிய காலங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் பாதுகப்பு வழங்கியுள்ளனர். அதனால் பலரதும் உயிர்கள் காக்கப்பட்டன.

இனவாத சக்திகளை தூண்டுவதற்கென்று இயங்கும் மிலேச்சர்கள் எங்கும் இருக்கிறார்கள். மதம், இனம், மொழி என்று உணர்ச்சியூட்டி அதில் குளிர் காயும் தீயவர்கள் அரசியல் அரங்கிலும் சமூகத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு நாட்டில் இனரீதியான கலவரங்கள் தோன்றினால், அது ஒரு குறிப்பிட்ட இனத்தை மாத்திரம் பாதிக்கமாட்டாது, முழுநாட்டினதும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும். அதனால் வாழ்க்கை செலவீனங்கள உயரும். பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படவேண்டிய நட்ட ஈட்டை அரசு வேறு வழிகளில் மக்களிடமே விலை உயர்வுகளை திணித்து பொருளாதார நெருக்கடிகளை சுமத்திவிடும்.

அதனால் எந்தவொரு கலவரமும் அனைத்து சமூகங்களையும்தான் பாதிக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் பார்க்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் மக்களிடம் வாக்குப்பெற்று அரசு அதிகாரத்திற்குச்செல்லும் தலைவர்களுக்கும் பதவிக்கு வரும் அரசுகளுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதையும் சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.

இலங்கைத்திருநாடு மூவின மக்களினதும் தேசம். இதில் பெரும்பான்மை ? சிறுபான்மை வித்தியாசங்கள் இருந்தபோதிலும் அவரவர் வாழும் உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் பிரஜைகள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. அத்துடன் பாதுகாப்புத்துறையானது பக்கச்சார்பின்றி இன, மொழி, மத கண்ணோட்டமின்றி இயங்கவேண்டும்.

பிரதேசங்களில் மூவின மக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் பிரஜைகள் குழுக்களுக்கும் பாதுகாப்புத்துறையில் திணைக்களமாக இயங்கும் பொலிஸாருக்கும் இடையில் காலத்துக்காலம் சமாதானப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும். இனமுறுகலை ஏற்படுத்தும் பொதுச்சொத்துக்களையும் தனியார் உடமைகளையும் பாரிய சேதத்திற்குள்ளாக்கும், மனித உயிர்களை அழிக்கும் சக்திகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் அமுல்படுத்தப்படல்வேண்டும்.

SHARE