தமிழர் தேசியக் கூட்டமைப்பு நடுத் தெருவில் கைவிடப்படுமா? 

282

 

sivalingamசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ( மைத்திரி பிரிவு ) அரசியல் அமைப்பு யோசனைகளின் பின்னணியில்…

சர்வதேச அவதானிப்பு

கட்சிகளின் இவ்வாறான இறுக்கமான நிலைப்பாடுகள் காரணமாகவே புதிய அரசியல் அமைப்பு தற்போது தேவையில்லை என்பதாகக் கூறப்படுகிறது. தனிச் சிங்கள  மக்களின் ஆதரவோடு மட்டும் இலங்கையில் எந்த அரசும் நிம்மதியாக ஆட்சி செய்யமுடியாது அதேபோல தேசிய அமைதியைத் தோற்றுவிக்காமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். இதற்கு எதிரான நிலமைகளை இலங்கையின் நட்பு நாடுகள் உட்பட எந்த நாடும் ஏற்கப்போவதும் இல்லை. அதே போல 13வது திருத்தத்தினை நீக்குவது அல்லது மாற்றி அமைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்கிறார் தயான் ஜெயதிலக.

அரசாங்கம் இவற்றிற்கு மாறாக செயற்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர் பட்டியலிட்டிருப்பதைத் தருவது அவசியம் எனக் கருதுகிறேன். ஏனெனில் சர்வதேசம் இதில் எவ்வாறு நடந்துகொள்ளும்? என்ற எச்சரிக்கை அவர் மகிந்த தரப்பாக இருப்பினும் புரிந்துள்ளார் என்பதோடு, சமீபத்தில் பிறேசில் நாட்டில் ஜகத் ஜெயசூரிய எதிர்நோக்கிய பிரச்சனைகளின் பின்னணியில்  உலக நிலவரத்தின் மாற்றங்களை சிங்கள மக்களுக்கு அல்லது அவரது எஜமானர்களுக்கு அவர் உணர்த்தியுள்ளதாகவே கருதுகிறேன்.

சமீபத்தில் பிறேசில் நாட்டின் இலங்கைத் தூதுவராக இருந்த ஜகத் ஜெயசூரிய அவர்கள் மீது ஐ நா சபை சார்பில் வெளியான தர்ஸ்மன் ஆணைக்குழு அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா தற்போது  சர்வதேச நிறுவனம் ஒன்றின் சார்பில் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த தர்ஸ்மன் ஆணைக்குழு அறிக்கையைத் தயாரித்த மற்றொருவர் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் திட்டமிடல் அதிகாரியும், சர்வதேச சட்ட நிபுணருமான ஸ்ரீபன் ரட்னர் ( Stephen Ratner) என்பவராகும். இவர் புதிதாகப் பிரிந்த நாடுகளின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவராகும். ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லேவிய குடியரசின் சேர்பியா நாட்டிலிருந்து கொசவோ பிரிந்தபோது அதற்கான எல்லையை வகுத்தவராகும். அவரது கருத்துப்படி ஓர் தாய் அரசிலிருந்து புதிய சுயாதீன அரசு அல்லது பிரதேசம் விடுவிக்கப்பட்டு,பிரிந்து புதிய அரசு தோற்றுவிக்கப்படுமாயின் அப் புதிய அரசின் எல்லைகள் என்பது ஆரம்பத்தில் அதன் எல்லைகள் எவ்வாறு மாகாணமாக அல்லது பிரதேசமெனக் கருதப்பட்டதோ அதுவே எல்லைகளாகும் என வரையறுக்கிறார்.

தயானின் விளக்கத்தின்படி 13வது திருத்தத்தை மாற்றி அமைக்க எண்ணினால், அது தவறுகள் நிறைந்த ஒன்றாக இருப்பினும் இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் விளைபொருள் அது என்பதை மறுக்க முடியாது. எனவே உலகம் அவ்வாறான பாதையை நோக்கியே செல்லும். கிளேமோர் எனப்படும் கண்ணி வெடியை விட மோசமாக அது அமையும் என்கிறார். அது மட்டுமல்ல இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை இரு தரப்பாரும் இணைந்து மாற்றலாமே தவிர ஒருதலைப்பட்சமாக மாற்ற முடியாது. அது சமச் சீரற்ற பலம்கொண்ட நாடுகளுக்கிடையேயானதாக இருப்பினும் மாற்ற முடியாது எனக் கூறும் அவர் எதிர் காலத்தில் இந்தியா மீண்டும் இலங்கைக்குள் வருமாக இருந்தால் அது திரும்பிச் செல்லாது என்பதையும் எச்சரிக்கிறார்.

எதிர்காலம்

தேசிய இனப் பிரச்னையைத் தொடர்ந்தும் ஜனநாயகமற்ற அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து மாற்றம் ஏற்படும் எனக் காத்திருப்பது சாத்தியமா? தேசிய அரசு என்ற பெயரில் இணைந்துள்ள இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் அமைப்பு மாற்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல்,தேசிய இனப் பிரச்னைக்கு தீர்வு காணுதல், ஊழலற்ற நல்லாட்சி போன்றவற்றைத் தருவார்கள் என இன்னமும் நம்பிச் செயற்படுவதா? தேர்தல் அரசியல் இதனை மாற்ற உதவப்போவதில்லை. இருப்பினும் தற்போதுள்ள பொறிமுறையை ( தமிழ் அரசியல் உட்பட ) ஜனநாயகப்படுத்துவது என்பதிலேயே எமது கவனம் செலுத்தப்படவேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் மக்களின் எதிர்காலம் கருதி நாம் தீவிர அரசியல் மாற்றங்களை நோக்கிச் செல்லவேண்டியுள்ளது. ஜெனிவா சடங்குகள் தற்போது ஆரம்பித்துள்ளதால் அரசும் அரசியல் அமைப்பு விடயங்களில் தீவிரமாக ஈடுபடுவதாக காட்ட விழைகிறது. சிங்கள எதிர்க்கட்சிகள் மனமாற்றம் அடைந்துள்ளன என்ற செய்தியை சர்வதேசங்களுக்கு அளிக்கவே தயான் போன்றவர்கள் சற்று மென்மையான மொழிகளில் பேசுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னாள் ராணுவ அதிகாரி ஜகத் ஜெயசூரியா போர்க்குற்றம் இழைத்துள்ளார் என அரசில் அமைச்சராக இருந்துகொண்டே சரத் பொன்சேகா அவர்கள் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்திருப்பது அரசிற்குள் காணப்படும் நெருக்கடிகளை உணர்த்துகின்றன. சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள் அவரைப் பதவியிலிருந்து அகற்றும்படி கோருகின்றனர். அது அவரது தனிப்பட்ட கருத்து என அரசைச் சார்ந்த சிலர் கூற, ராணுவத்தினரைப் பாதுகாப்பது தனது பணி என்கிறார் ஜனாதிபதி. இவை ஜெனிவா வெளிப்பாடுகளாகும்.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் எச்சரிக்கை

சமீபத்தில் ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் ஆணைக்குழுவின் தலைவரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தை மட்டுமல்ல, மகிந்த தரப்பினரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அரசாங்கத்தை எதுவுமே செய்ய முடியாத நிலையில் தள்ளி, சர்வதேச அரசுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்க வைக்கும் அரசியல் கட்சிகளின் முயற்சி நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. ஆணையாளரின் உரைகள் அவற்றையே உணர்த்துவதாக உள்ளன.

இலங்கை அரசு காணாமல் போனோரின் அலுவலகத்தைத் திறந்துஅதன் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு கால நேர அட்டவணை அடிப்படையில் செயற்படுத்த வேண்டும். மனித உரிமைப் பேரவையைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டாம் என தனது ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

இவ் அச்சுறுத்தல்கள் அதிகார வர்க்கத்தின் சகல தரப்பாரையும் விழிப்படைய வைத்துள்ளது. தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆரம்பித்துள்ள போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் மேலும் பல நாடுகளுக்கு விஸ்தரிக்கப்படலாம். பலர் நாட்டிற்குள்ளேயே சுருண்டு வாழும் நிலை ஏற்படலாம். தற்போதைய 19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு  எதிராக வழக்குத் தொடர முடியாது என்ற அம்சம் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் மகிந்தவிற்கு எதிராக உள்நாட்டிலும் வழக்குகள் தொடரப்படலாம். இதன் காரணமாக திரும்பவும் உள்நாட்டில் போர்க்குற்றம் தொடர்பாக பெரும் நெருக்கடி இருப்பதாக காட்டும் ஓர் முயற்சியே இதுவாகும்.

இதுதான் நிலமை எனில் மாற்று வழி என்ன? தற்போதைய யோசனைகள் குறித்து எமது கவனத்தைச் செலுத்தி மாற்றங்களை நோக்கிச் செல்வதா? அல்லது கிடைத்தால் முழுமையான தீர்வு இல்லையேல் போராட்டம் என விக்னேஸ்வரன் கூறும் வழியில் எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதா? நடைபெற்றுவரும் நிகழ்வுகள் மைத்திரி – ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அதாவது புதிய அரசியல் அமைப்பினைப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதோடு, மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும். இவ் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறவேண்டும். இது சாத்தியமா? இல்லையா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.இது சாத்தியமே என சிலர் நம்புகின்றனர். இதற்கென முன்வைக்கும் ஆதாரங்களை நாம் பார்க்கலாம்.

மக்கள் ஒப்புதலைப் பெறும் வாக்கெடுப்பும், 50 சதவீத எல்லையும்

அதாவது தற்போதைய அரசு ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் என இனிமேல் எதிர்பார்க்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகள் மத்தியில் காணப்படும் ஊழல்களும் ஓயப்போவதில்லை. எனவே அரச கட்டுமானத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சியைப் பலப்படுத்துவதே சாத்திமான ஒன்றாக உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் அதாவது சர்வாதிகார வழிக்கு நாடு வழுக்கிச் செல்வதைத் தடுப்பது,  ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, புதிய அரசியல் அமைப்பை நிறுவுவது என வாக்குறுதி வழங்கப்பட்டது. இதில் அரசியல் அமைப்பின் 19வது திருத்தம்முதலாவது இலக்கை ஓரளவு உறுதி செய்துள்ளது. ஏனைய இரண்டிலும் இனி நம்பிக்கை கொள்ள முடியாது. எனவே புதிய அரசியலமைப்பை நோக்கிப் பயணிப்பதே எஞ்சியுள்ளது. அரசாங்கம் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பில் 50 சதவீதத்தினை எட்ட முடியாது என்ற அவ நம்பிக்கையில் உள்ளது. ஆனால் நிலமை அவ்வாறில்லை.

இதற்காக மக்களைத் திரட்டுதல் அவசியமானது. தற்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் காத்திருக்கும் கோதபய ராஜபக்ஸ அரசியல் அமைப்பு மக்கள் ஒப்புதல் வாக்கெடுப்பில் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராகி வருகிறார். இவர் சமீபத்தில் ‘வெளிச்சம்’ என்ற பெயரில்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன் பின்னணியில் முன்னாள் 53 வது படைப் பிரிவின் தளபதி கமால் குணரத்ன, தயான் ஜயதிலக போன்றோர் செயற்பட்டனர். இவை மகிந்தவைப் பின் கதவு வழியாக ஆட்சிக்குக் கொண்டு வரும் முயற்சியாகும். இவரது பிரச்சாரத்தின் மூலம் அவர் 2015ம் ஆண்டில் மகிந்த பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற முடியாது. அத் தேர்தலில் ஒட்டு மொத்த சிங்கள பௌத்த 60 சதவீத வாக்குகளில் தேசிய அளவில் 42 சதவீதத்தையே பெற்றார். அவர் அந்த வாக்குகளைமுழுமையான அரச யந்திரங்களின் உதவியுடனும், மிகப் பெரும் தொகையான பணச் செலவாலுமே பெற முடிந்தது. அவ்வாறானால் கோதபய அதற்குமேல் பெற முடியுமா? அவ்வாறு 42 சதவீதத்தை அவர் பெற்றால் மீதி 8 சதவீதத்தை அதாவது 50 சதவீதத்தை அடைவதற்கு எங்கிருந்து பெறுவது? இதே நிலைதான் மைத்திரி தரப்பினருக்கும் உள்ளது. ஆனால்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரே வழியே தற்போது உள்ளதாக இந்த வாதம் செல்கிறது. மைத்திரி – ரணில் தரப்பினருக்கே வாய்ப்பு இருப்பதாக வாதிக்கின்றனர்.

மாற்று வழிமுறை அவசியம்

ஐ தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களை மாற்றவேண்டும் என்ற விவாதம் தற்போது காணப்படுகிறது. அவரால் இனிமேல் பிரச்சனைகளை இறுக்கமாகக் கையாள முடியாது என்ற உணர்வு கட்சியின் இளைய தலைமுறையினரிடையே பலமாக காணப்படுகிறது. பதவிக்கு வந்த சில மாதங்களுக்குள்ளாகவே ரணிலின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மகேந்திரன், அமைச்சர் ரவி கருணாநாயக்கா போன்றோரின் ஊழல்கள் குறித்து நடந்துகொண்ட முறைகள் அவரது ஆளுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மகிந்த, ரணில் ஆகியோர் ஊழல்வாதிகளைப் பாதுகாக்க விழைவதை மக்கள் தெளிவாக காண்கின்றனர். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது தேர்தலைச் சந்திக்கவோ தயங்கியதில்லை. அந்த நிலை தற்போது இல்லை. மகிந்த தனது ஊழல் பெருச்சாளிககளுடன் கைகோர்த்து எந்தவித கிலேசமும் இல்லாமல் அரசியல் வலம் வருகிறார். இதற்கு இன்னொரு பிரதான காரணம் கட்சிகளில் காணப்படும் ஜனநாயகமற்ற போக்காகும். இதுவே தமிழ் அரசியலில் உள்ள புற்று நோயுமாகும். எவ்வளவு காலம் தலைமைப் பதவியில் குந்தி இருப்பார்கள்? பாராளுமன்றக் கதிரையை வைத்திருப்பார்கள்? எப்போ புதியவருக்கு இடமளிப்பார்கள்? இறந்த பின்னரா?

வாசகர்களே!

மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையலாம் என்பதால் புதிய அரசியலமைப்பு முயற்சிகளைக் கைவிடுவதெனில் அது ஊழல் சக்திகளின் சவாலுக்கு விட்டுக் கொடுப்பதாக அமையும். இடதுசாரிகள் காட்டும் தயக்கம் குறித்தும் பேசப்படுகிறது. அதாவது இந்த அரசும் ஊழல் நிறைந்த நிலையில் இதனை  ஆதரித்தும் என்ன பயன்?என்ற கேள்வி எழுகிறது. இந்த அரசு தோற்குமெனில் மாற்று அரசு எவ்வாறானது? என்பதை மனதில் கொள்ளவேண்டும். இந்த அரசின் மூலம் சோசலிசத்தைக் கட்டி எழுப்பலாம் என நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. பதிலாக குறைந்த பட்சம் ஜனநாயகத்தைப் பலப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய அரசியல் அமைப்பின் மூலம் பாராளுமன்ற ஜனநாயத்தைப் பலப்படுத்த முடியுமெனில், நிறைவேற்று  அதிகார ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியுமெனில், ஊழலைத் தடுக்க முடியுமெனில், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை மீள அழைக்க முடியுமெனில், மந்திரிகள், அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் நாம் ஏன் அதனை ஆதரிக்க முடியாது? ஜனநாயக வலுப்படுத்தலே காலத்தின் தேவையாக உள்ளது.

இவை யாவற்றையும் ஒருசேரப் பார்க்கும்போது தமிழ் அரசியல் இவற்றிற்கு முகம் கொடுக்கத் தயாராக உள்ளதா? என்ற கேள்வியே எழுகிறது. இருப்பினும் சமீபத்தில் இதே இணையத்தளத்தில் அடிக்கடி எழுதி வரும் கருணாகரன் என்ற பத்தி எழுத்தாளர் ‘மாற்று சக்திக்கான தேவை உணரப்படுகிறதா?’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிட்ட தகவல்கள் மிகவும் நம்பிக்கையையும், உந்து சக்தியையும் தருவதாக அமைந்தன. சமூக இயக்கம் என்பது எப்போதும் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அவை நாம் எதிர்பார்த்த அளவிற்கு வேகமாக இல்லையெனும்போது சோர்வும் ஏற்படுகிறது. ஆனால் அக் கருத்துக்கள் பல வாசகர்களைச் சென்றடையவேண்டும். நம்பிக்கையைத் தூண்டவேண்டும்  என்ற எதிர்பார்ப்பே தற்போது மேலோங்கியுள்ளது.

SHARE