தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் தாயகமான வடகிழக்கு பகுதியில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.
அத்துடன், இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தம் அமுல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் 6 பேர் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினர்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்! இந்திய பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கோரிக்கை
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலங்கை அரசு தட்டிக்கழித்து வருகிறது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றியமைக்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து, இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பு குழுவினர், இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் மோடியைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பிரதமருக்குக் கூட்டமைப்பினர் எடுத்து விளக்கினர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்றபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பூர்வீக நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது காணிகளை அபகரிக்கும் அரசு, அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அதுமட்டுமன்றி அவர்களது பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு, தமிழர் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், அது வெறும் அதிகாரமற்ற சபையாகவே உள்ளது. அதிகாரங்களைத் தன்வசம் வைத்துள்ள மஹிந்த அரசு, வடக்கு மாகாண சபையை சுதந்திரமாகச் செயற்படவிடாது தடுத்துவருகிறது.
இதுபோன்ற நெருக்கடிகளுக்குள்ளேயே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 13ஆவரது திருத்தம் குறித்து இழுத்தடிப்புக்கள் தொடர்கின்றன. எனவே அந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதன் மூலம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றுக்கு செல்ல இலங்கை அரசை இந்தியா கோரவேண்டும்.
இதுவே தமிழ் மக்களது விருப்பமாகும் – இவ்வாறு கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறினர்.
மன்மோகன் சிங், அஜித் டோவல் ஆகியோருடன் தமிழ்க் கூட்டமைப்பினர் சந்திப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை மீறிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
இதேபோல் நேற்று மாலை 6 மணியளவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கூட்டமைப்பினர் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை இன்று காலை 10.30 மணியளவில் இந்தியப் பிரமதர் நரேந்தர மோடியை கூட்டமைப்பினர் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்குபற்றவுள்ளார்.