தமிழர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் குள்ளநரி விளையாட்டு

808

சர்வதேச அரசியல் விளையாட்டரங்கில் ஆசியாவின் முக்கிய நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது. இந்துசமுத்திர நாடுக ளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதி யில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் கவனிப்பை பெற்றவை. இவற்றில் ஒட்டுண்ணி நாடாக இல்லாமல் தன்மை ஆசிய பிராந்தியத்தின் வல்லரசாக மாற்றிவரும் இந்தியாவை தமது பகடைக்காயாக பயன்படுத்த முடியாத நிலையில் உலக வல்லரசுகளினதும், தாபனங்களினதும் பெரும் கவனிப்புக்குரியதாக கருதப்படுவது இலங்கை மட்டுமே. இதனால் புவியியல் நன்மைகளால் அரசியல், பொருளியல் ரீதியாக அதிக பயன்கொண்ட தீவகமாக உள்ள இலங்கை பற்றிய பேச்சுக்கள் இன்று முக்கியம் பெற்றிருப்பதில் வியப்புக்களில்லை.

ஆனால் ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் இலங்கை மீது நேரடியாக கைவைக்க முடியாத நிலையில் இலங்கையை அணுகும் வழிமுறையாகவே இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தமும் யுத்தம் நிறைவடைந்து 5 வருட காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான பலவீ னமும் என்ற துருப்;புச்சீட்டின் கீழ் சர்வதேச வல்லரசுகளின் தீர்மானம் எனும் அணுகுமுறை இன்று உருவாகி அதன் நிறைவுக் கட்டத்தையும் நெருங்க உள்ளது. இதன் பிரதிபலன் ஐ.நா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படும் சூழ்நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் நீர்த்துப் போகக்கூடிய ஒரு தீர்மானமாக இது அமையப்போகிறது என்பது அண்மைய நாட்களாக வெளி வரும் கருத்துக்களைக்கொண்டு உணரமுடிகிறது.

உலகளாவிய ரீதியில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தத்தின் கன தியைப் பொறுத்தே இலங்கைக்கு எதிராக வழங்கப்படும் தீர்மானத்தின் கனதியும் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தமிழ்மக்கள் இலக்குவைத்து அழித்தொழிக்கப்பட்டனர். இன அழிப்பு எனும் இலக்கை நோக்கியே அரசாங்கம் கொத்துக்குண்டுப் பிரயோகங்களையும், நச்சுக்குண்டு வீச்சுக்களையும் நடத்தியது என்ற கருத்தும் கருத்துக்கான வாய்மொழி ஆதாரங்களும் பாதிக்கப்பட்ட எஞ்சியுள்ள தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்பட்ட இது பலமான ஒரு ஆதாரமாக உள்ளது.

மற்றொன்று நாடுகடந்து வாழும் தமிழ்மக்களின் எதிர்ப்புக்குரல் மிகப்பெரிய சக்தியாக அமைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப்பிரச்சினை காரண மாக மிகப்பெரியதொரு மக்கள் கூட்டம் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கிறது. நாடுகடந்த தமிழீழம் என்ற அமைப்பாக இன்று செயற்படுமளவுக்கு புலம்பெயர் தமிழ்மக்களின் செல்வாக்கு காணப்படுகிறது. இந்நிலமையில் இலங்கையில் தமிழ்மக்கள் மீதான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் அதிகமாக சர்வதேச அரசுகளின தும் ஊடகங்களினதும் கவனத்துக்கு கொண்டு வந்ததில் இம்மக்களது பங்களிப்பு மிக அதிகமே. இன்று இலங்கையில் உள்ள தமிழ்மக்களின் குரலைவிட புலம்பெயர் தமிழர்களின் குரல் இலங்கை அரசுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கின்றது என்று கூறலாம்.

மூன்றாவது வலிமையான ஆதாரமாக மனித உரிமைகள் ஆணை யாளர் திருமதி நவநீதம்பிள்ளை மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் மனித உரிமையாளர்கள் சர்வதேச ஊடகங்கள் போன்றன இலங்கையில் நேரடியாக விஜயம் செய்து களநிலமைகளின் நேரடியான அனுகூலங்களைப் பெற்றதுடன் தேவையான ஆதாரங்களையும் வைத்திருக்கின்றமை கூடுதல் அழுத்தத்தை தரத்தக்க காரணியா கும். இலங்கைக்கு போரின்பின் வருகை தந்திருக்கும் சர்வதேச நாட்டவர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே கருத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதாவது போரின்போது தமிழ் மக்கள் அதிகளவான மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளனர். போரின் பின்னர் தொடங்கி இன்று வரையிலுமான நாட்களில் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் போதிய திருப்தி இன்மை. ஆகவே சர்வதேச ரீதியாக ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் சூடு பிடித்திருக்க இந்த 3 காரணங்களும் முக்கியமாக உள்ளன. இவற்றைவிட வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இவற்றில் அமெரிக்காவின் தலையீடு இன்று கவனிப்பை பெற்றிருக்கின்றது.

சர்வதேச அரங்கில் தன் வல்லாதிக்கத்தை நிலைநாட்டியுள்ள அமெரிக்காவின் தலையீடா னது இலங்கை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தவிரவும் தமிழ்மக்களின் குர லாக காண்பிக்கப்படும் வடமாகாண சபைக்கும் அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பது போலவேபடுகிறது. காரணம் அமெரிக்காவிலிருந்து அண்மையில் வருகை தந்திருந்த தெற்கு மத்திய ஆசி யப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செலாளரான நிஷா தேசாய் பிஸ்வால் மாகாணசபையின் கருத்துக்களையும் செவிமடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை அதன் குள்ளநரித்தன அரசியலை ஓரளவு நம்பும்படியாகத்தான் செய்கிறது.

அத்துடன் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை பற்றிய நம்பிக்கையும் வலுவடைந்து வருகிறது. இதற்காக தீர்மானம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பிரித்தானியாவும் கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் இத்தீர்மானத்தின் பிரதி பலன் எத்தனை வலிமையாக இருக்கும் என்பதில்தான் சந்தேகமே உள்ளது. ஏனெனில் இதற்கு முதல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களே இதற்கு நல்ல உதாரணங்கள். இதில் இந்தியாவின் பங்களிப்பு விசேடமாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இலங்கைப் பிரச்சினை உள்நாட்டு விவகாரமாக மாறிவிட்டதான நிலையில் மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து எழுந்துள்ள அழுத்தம் தொடர்பில் பெரிதளவில் அலட்டிக்கொள்ளாமல் தான் வந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் தீர்மான நிலைப்பாட்டுக்கு வருவோம். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நாவின் 19வது கூட்டத்தொடரில் இலங்கை மீது 1ஆவது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் 24 நாடுகள் ஆதரவா கவும், 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. 2013 மார்ச்சில் நடந்த 2ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட 2ஆவது கண்டனத் தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவா கவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. மேலும் 2013 டிசம்பரில் சேவைக்காலம் முடிவுற்ற நிலை யில் 14 நாடுகள் வெளியேற 14 நாடுகள் புதிதாக அங்கத்துவம் பெற்றன. இதில் பிரிட்டன் முக்கியமானது. இந்நிலையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீதான ஆதரவான வாக்களிப்பு எண்ணிக்கை அதிகமாகவே அமையும். இது இலங்கைக்கெதிரான தீர்மானத்தை பலப்படுத்துவதாகவே அமையும்.
ஆனால் இப்போது இது பிரச்சினையல்ல. தீர்மானம் நிறை வேறுவது உறுதி. ஆனால் அத்தீர்மானத்தின் வீரியம் எப்படி இருக்கப்போகிறது என்பதுதான் சந்தேகத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. அதாவது கடந்த வருடத்தில் அமெரிக்காவின் தீர்மானமானது கடமைக்காக நிறைவேற்றப்பட்ட ஒன்றாகவே அமைந்திருந்தது நாமறிந்ததே. இந்தியாவின் ஆலோசனையை பெற்ற அமெரிக்கா கடந்த முறை தீர்மானத்தில் 4 முறை திருத்தங்களை செய்திருந்தது. குறிப்பாக அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டிருந்தன. அதனால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதுபற்றி கவலை கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை இம்முறையும் ஏற்பட்டுவிடுமோ என்று கருதப்படுகின்றது. இதனால் தான் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளின் இலங்கை விஜயமும் அதன் பிரதிபலிப்புக்களும் இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு இட்;டுச்செல்லும் என்று அறுதியுடன் கூறமுடியாதுள்ளது.

தவிர அமெரிக்காவின் இன்றுவரையிலுமான நிலைப்பாடு உள்நாட்டுத் தீர்வு யோசனை தொடர்பாகவே அமைந்திருக்கிறது. சர்வதேச விசாரணை தீர்மானம் நடைமுறைச்சாத்தியமானது என்பது அமெரிக்கா உட்பட இலங்கைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும் தெரிந்ததே. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்த்ததுமுதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு உதவியதும் அமெரிக்காவே. தமிழ்மக்களிடமிருந்து தோன்றிய இவ்வமைப்புக்கு எதிரான அமெரிக்காவினால் நிலைப்பாடு தமிழ் மக்கள் மீது எந்தளவுக்கு உண்மையான கரிசனையாக அமையும் என்பதும் சந்தேசத்துக்குரியது.

இவற்றை விட இலங்கை சீனா நட்புறவு உட்பட நாம் முன்னரே குறிப்பிடப்பட்டிருக்கும் பல காரணங்களும், இலங்கையை தமது ஆசியாவின் அபிவிருத்தித்திட்டத் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய அமெரிக்காவின் நோக்கமும் என்ற பல விடயங்களையும் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது தனது குள்ளநரித்தன அரசியலுக்கு இலங்கை விவகாரம் சாதாரணமான ஒரு துருப்புச்சீட்டே. இது தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் என்பதில் நம்பிக்கை இல்லை எனலாம்.

அநாமிக்கா

 

SHARE