கடந்த 30 வருட காலமாக தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களுக்கு அஞ்சலியினைச் செலுத்தக்கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்தக் கேள்வியும் எழுப்பப்படுகின்றது. ஜே.வி.பி, ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இந்த நாட்டில் அஞ்சலியினைச் செலுத்த முடியுமாகவிருந்தால் தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரைப் போராடி மடிந்த மாவீரர்களுக்காக மாத்திரம் ஏன் அஞ்சலி செலுத்தக்கூடாது. நவம்பர் மாதம் 27ஆம் திகதி வழமைபோல உலகமெங்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை பிரதிபலித்து தமிழினத்தினால் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். அதன் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாற்றுவார். அந்த உரை சிறப்பாக உள்ளூர் மற்றும் சர்வதேசத்தினர் மத்தியில் எதிர்பார்க்கப்படும். இந்நிலை தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றியது கிடையாது. காரணம் அவருடைய பாதுகாப்பு என்று கருதப்படுகிறது.
அவர் போசாதிருப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் தமிழினம் சிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தான் ஆரம்பமாகியது. படிப்படியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தரை, வான், கடல் என்று பரிணாமம்பெற்று சர்வதேச நாடுகளே திரும்பிப்பார்க்குமளவிற்கு அவர்களுடைய போராட்டம் பாரிய வளர்ச்சியினைக்கண்டது.
அது மட்டுமல்லாது வடகிழக்கில் செறிந்துவாழக்கூடிய தமிழினம் ஒடுக்கப்பட்ட நிலையில் அவர்களது விடுதலைக்காகப் போராடி இந்த மண்ணில் வித்துடலாகிய தமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது அரசினுடைய சதித்திட்டம் என்றே கூறவேண்டும். தமிழினத்தின் மூன்று தசாப்த காலப்போராட்டம் என்பதை ஒரு பயங்கரவாதப் போராட்டமாக இலங்கை அரசாங்கம் சித்தரித்திருப்பது என்பது மாபெரும் தவறாகும். திம்பு முதல் டோக்கியோ வரையானப் பேச்சுக்களை எடுத்துக்கொண்டால் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனக் கருதினால் அரசு ஏன் அவர்களுடனான பேச்சுக்களில் கலந்து கொள்ளவேண்டும்.
பல்வேறு உயர் மட்டக்குழுக்கள் விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து இறுதியாக அனைவரையும் சாக்கடைக்குள் மூழ்க வைத்தது. இவ்வாறிருக்கின்ற நிலை யில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமானது தமது இனத்திற்கான விடுதலைப்போராட்டம் என்பதனை இதுவரை காலமும் இலங்கையரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டு மொருமுறை தமிழினத்தை அடிமையாக்கவே நினைக்கிறது. தமி ழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஆரம்பமாகியது முதல் இன்றையவரை தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. ஆனால் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 06 வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் இன்னமும் விடுதலைப்புலிகள் இந்நாட்டில் இருக்கின்றார்கள் என்பதையே இவ்விடயம் எடுத்துக் காட்டுகின்றது. போராட்ட வரலாறு என்பது அது நீண்ட தூரப் பயணம். அதனது வலியைப் புரிந்துகொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித் துக்கொண்டிருப்பது வேடிக்கையானது. த.தே.கூட்டமைப்பும், வடமாகாண மற்றும் கிழக்கு மாகாண சபைகளும் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற விடயத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கமுடியும். ஆனால் அதனைச் செய்வதற்கு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. இவ்வாறு செயற்படுவதன் மூலம் தாம் பழிவாங்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சமும் அவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முஸ்லீம் மக்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு தாம் வெட்கித் தலைகுனிவதாக தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததன் விளைவாகவே அவர்கள் 24 மணிநேரத்திற்குள் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதே உண்மை. இதனை விடவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததில் முக்கிய பங்கினை வகித்தவர்கள் முஸ்லீம்கள். அரச படைகளுடன் இணைந்து அப்பகுதியின் தமிழர் காணிகளை அத்துமீறி சுவீகரித்த சம்பவங்களும், ஊர்காவற்படையினர் என்ற போர்வையில் தமிழர்கள் சுடப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவை இவ்வாறிருக்க 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் மிக உக்கிரமான யுத்தம் இடம்பெற்றது. இடையில் சமாதானத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தாலும் மீண்டும் யுத்தம் தமிழினத்திற்கெதிராக அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதும், எம் நாட்டை மீட்டெடுத்து எதிர்காலத்தின் எமது சந்ததியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு திடசங்கற்பம் பூண்டு, தாயகக் கோட்பாடுகளான தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதற்காகப் போராடியவர்கள்தான் இந்த விடுதலைப்புலிகள். இவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது தமிழினத்தையே இழிவுபடுத்தும் ஒரு செயலாகவே அமையப்பெறுகின்றது.
மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தாதது ஏன்? அவர்களுடைய பிள்ளைகள் போராட்டத்தில் பங்குகொண்டிருந்தால் அதனது வலி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அரசியலில் ஒரு சொகுசு வாழ்க்கையினை அனுபவித்துக்கொண்டு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை நம்பி இருக்கின்ற தமிழ் மக்களுக்கு அநீதி யையே தோற்றுவித்திருக்கின்றார்கள். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பதற்காகவே பிறந்தி ருக்கின்றார்கள். மேடைப்பேச்சுக்களில் பிரபாகரன் அவர்களுடைய தியாகம் பற்றிப் பேசிக்கொள்கிறார்களே தவிர சரியான நேரத்தில் தமிழ் மக்களுக்கான விடயங்களைச்செய்து கொடுப்பதில் தாமதிப்பது கவலையளிக்கிறது. தேர்தல்கள் என்று வந்தவுடன் விடுதலைப்புலிகளைக்கொண்டு வாக்கு கேட்பது இவர்களது புத்திசாலித்தனம். அதேநேரம் தற்போது மகளிர் விவகார பிரதியமைச்சராக இருக்கக்கூடிய விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கூட முள்ளிவாய்க்காலில் மாவீரர் களுக்கான ஒரு நினைவுத்தூபி யினை அமைக்கவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படுமா? என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.
கடந்த மாவீரர் தின நிகழ்வின்போது இராணுவத்தினரை உசார்ப்படுத்தியதுதான் மிச்சம். அது எவ்வாறெனில் மாவீரர்களுக்கு அந்தந்த இடங்களில் இருந்து அகவணக்கம் செலுத்த முடியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியதன் விளைவால் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. விளக்கினை ஏற்றினாலோ அல்லது மாவீரர்களின் படங்களைக் கொண்டுசென்றாலோ கைதுசெய்யும் நடவடிக்கைகளும், பிரபாகரனின் புகைப்படங்களைத் தாங்கிய பத்திரிகைகளின் ஊழியர்கள் கூட கைதுசெய்யப்பட்டு விசார ணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இது சிங்கள தேசத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
ஆனால் சர்வதேச நாடுகளில் வெளிப்படையாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக் காவின் தலைநகர் நியூயோர்க்கில் உருத்திரகுமாரின் தலைமையில் மாவீரர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்று பரவலாக உலக நாடுகளிலும் மாவீரர் தினங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நாடுக ளில் மனிதநேயம் இருக்கின்றது என்பதை அவர்கள் இதன்மூலம் வெளிப் படுத்தியிருக்கின்றார்கள் என்றே அது பொருள்படும். ஆனால் இலங்கையரசு இவ்விடயத்தில் சர்வாதிகாரப்போக் கினைக் கடைப்பிடிக்கின்றது என்பது வருத்தமளிக்கின்றது.
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதற்கான ஆதா ரங்களை இலங்கையரசே வழங்கிவருகின்றது என்பதுதான் உண்மை. மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலியினைச் செலுத்துவதென்பது தவறாக இருந்தால், விடுதலைப்புலிகளுடன் இவ்வரசாங்கங்கள் பேச்சுவார்த் தைகளுக்குச் சென்றிருக்கக்கூடாது. அரசும், விடுதலைப்புலிகளும் பரஸ்பரம் பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமையானது உல கறிந்த உண்மை. சர்வதேச சதிவலைப்பின்னலே இப் போராட்டத்தினை சீர்குலைப்பதற்கான பின்னணியாக இருந்தது.ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் விடுதலைப்புலிகளை இந்திய அரசிற்கு எதிராகக் களமிறக்கியமையானது, இலங்கைவாழ் தமிழினத்திற்கு அவர் செய்த மாபெரும் துரோகம் என்றே கூறவேண்டும். அதனுடைய வெளிப்பாடுகள் தான் தமிழினத்திற்கான தீர்வுகள் கிடைப்பதற்குத் தடையாக இருந்துவருகின்றது. இதுவரை காலமும் தமிழினத்திற்காக இரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான போரா ளிகளும் தமது உயிரைத் தியாகஞ் செய்திருக்கிறார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டும்.
வெறுமனே தமிழ் மக்களை உசார்ப்படுத்தி பாதாளத்திற்குள் தள்ளி, அவர்களை நேரான பாதை யில் செல்லவிடாது மீண்டும் ஒரு குழப்பத்திற்குள் கொண்டுசெல்லும் நோக்கிலேயே அரசின் செயற்பாடுகள் அமைகின்றது. இந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு மாவீரர்கள் எந்த இலட்சியத்திற்காகப் போராடி னார்களோ அதனை வென்றெடுக்கும் நோக்கில் இவர்களது செயற்பாடுகள் அமையப்பெற்றால் சிறப்பாக அமையும். இதனைவிடுத்து வீராவேசம் பேசுவதில் எவ்வித பயனுமில்லை. போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றினைப் புரட்டிப்பார்க்கின்றவிடத்து தமிழி னத்தின் வெற்றிக்குப் பின்னால் இந்த மாவீரர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை. பிரபாகரன் தனிப்பட்ட விதத்தில் போராட்டத்தினை நடாத்தவில்லை. தமிழினத்திற்கான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என போராட்டத்தினை நடாத்தினார். விடுதலைப்புலிகளின் போராட்டம் அஹிம்சைப் போராட்டமாக உருவெடுத்துப் பின்னர் ஆயுதப்போராட்டமாக மாற்றம் பெற்றது. தொடர்ந்தும் போராட்டத்தை அஹிம்சை வழியாக முன்னெடுத்துச்செல்வதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும் பிரபாகரன் அவர்கள் உருவாக்கி, அதற்கு உரமூட்டி இன்று சர்வதேசம் வரை மாபெரும் விருட்சமாக வளர்த்தெடுத்துள்ளார். ஆகவே இந்த அரசுடன் பேச்சுக்களை நடாத்தி மாவீரர்களுக்கான நினைவுத்தூபியினை அமைத்து அஞ்சலியினை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுப்பது சிறந்ததொன்றாகும்.
நெற்றிப்பொறியன்