தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது தென்னிலங்கை தேசியவாதம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த அடையாளத்தை அழித்து விடும் நோக்கிலேயே தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் செயற்படுகின்றது.
டட்லி சேனநாயக்க தொடங்கி மைத்திரிபால சிறிசேன வரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஒருவரேனும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தரும் நோக்கில் செயற்படவில்லை.
மாறாக சிங்கள பேரினவாத கொள்கைகளை வகுப்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். சிங்கள பேரினவாத அரசியலமைப்பும் சிறுபான்மை இனத்துக்கு நன்மை பயக்கும் வகையில் எழுதப்படவில்லை.
தமிழ் இன விடிவிற்காய் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் விடுதலை போராட்டத்தை தொடர்ந்து அரசியல் ரீதியாக எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழீழ விடுதலை புலிகள் தமக்கான அரசியல் கட்டமைப்பை சர்வதேசம் ஏற்கும் வகையில் புத்திஜீவிகளை உள்ளடக்கி தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளரும், ஆய்வாளருமாகிய டி.சிவராம் இணைந்து உருவாக்கினர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ரெலோ, தமிழ் அரசுக்கட்சி, EPRLF போன்ற கட்சிகள் இக் கூட்டமைப்பில் ஒன்று சேர்க்கப்பட்டது. அக்காலத்தில் புளொட் இணைக்கப்படவில்லை. பிற்பாலத்தில் புளொட் கட்சி இணைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் போனஸ் ஆசனத்துடன் 25 ஆசனங்களை பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.
இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாகத் திகழ்ந்தது.
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் காலத்தில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க முடியாத சூழல் இருந்தது. யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை அடிப்படையில் தவறிழைக்கிறது எனக் கூறி வெளியேறியது. இது 1வது கட்சி உடைப்பாகும்.
2வது உடைப்பானது, முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச காலத்தில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் EPRLF கட்சி தனியாகப் போட்டியிட்டது. ஆனால் அவர்களால் வடக்கிலும் கிழக்கிலும் கணிசமான வெற்றியைக் கூடப் பெற முடியவில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தேசிய பட்டியலில் இடம் கொடுக்குமாறு ஏனைய கட்சிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதற்காக தேசிய பட்டியலின் மூலம்; சாந்தி ஸ்ரீஸ்காந்தராஐh அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் EPRLFக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்தது. EPLRF தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் பல யுக்திகளை கையாண்டது.
தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
இந்த விடயத்தை தமிழ் அரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆயுதக்கட்சிகளைப் புறந்தள்ளும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுத கட்சிகள் தான் தமிழ் அரசுச் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் உச்சம் அடைந்தது. சிங்கள பேரினவாதத்தின் உச்சக்கட்ட அடிமைத்தனத்தின் வடிவமே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தக் காரணம்.
தமிழ் அரசியல் கட்சிகளால் தமிழினத்திற்கானத் முழுமையானத் தீர்வுகள் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. மாறாக தமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக்கொண்டு புதிய புதிய கட்சிகளைத் தான் ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த கால சிங்கள பேரினவாத தலைமைகள் தமிழரை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தினர் எனபதற்கு பல சான்றுகள் உள்ளன.
சிங்கள பேரினவாத தலைமைகளுடன் ஒத்துபோனால் மட்டுமே தமிழருக்கு தீர்வு என்று ஒரு சிலர் நினைப்பது தவறானது.
தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உண்டு. அவற்றைத் தீர்க்கும் அளவிற்கு அரசாங்கத்தோடு சம அளவில் நிற்கும் தகுதி எமக்கு வேண்டும். ஆகவே சம பலம் என்பது அஹிம்சை ரீதியாகவும், ஆயுதம் ரீதியாகவும் தான் பெறமுடியும்.
இதில் தற்போது ஆயுத ரீதியான போராட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் நாம் அஹிம்சை ரீதியானப் போராட்டங்களை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுத்துவதன் ஊடாக வெற்றி பெற முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசிற்கு எதிராக தேசியம், சுயநிர்ணய உரிமை கோரி போராட்டம் செய்து கொண்டு இருக்கும் போது முஸ்லீம்கள், புளொட், EPDP, EPRLF போன்ற ஒட்டுக்குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர். ஆனால் இன்று தமிழ் மக்கள் முன் வந்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆகவே இது சமாதான காலம் என நினைத்துவிடாது தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அரசாங்கத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒட்டுக்குழுக்கள் யாவும் பகைமை மறந்து தமிழ் இனத்துக்காக போராட முன் வரவேண்டும்.
(இரணியன்)