“தமிழீழ போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன”

335

 

சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்ட பின்புலத்தைப் பற்றி கண்டோம். இணைப்பு “சி” என்கிற டெல்லி யோசனையை மாற்றி ஜே.ஆர். “இணைப்பு பி” (Annexure B) என்கிற 14 அம்சங்களைக் கொண்ட திட்டமே மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. (பார்க்க அட்டவணை)
இந்த சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்டதன் பின்னால் இருந்த இனவாத சக்திகளையும் இந்த இடத்தில் பதிவு செய்தாகவேண்டும்.
சர்வ கட்சி மாநாடு நடந்த 83-84 காலப்பகுதியில் வரலாற்றில் எப்போதும் போலவே சிங்களத் தரப்பு மிகவும் சூட்சுமமாகவும், பல முனைகளிலும், பல சக்திகளாக இயங்கின. இதனைத் தோற்கடிக்க போதிய அளவு தந்திரோபாயங்களைக் கையாண்டன. ஒரு புறம் சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க போன்ற அரசுக்குள் இருக்கும் தீவிர இனவாத சக்திகள். மறுபுறம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்காக எடுத்த முயற்சி இனவாத நிலைப்பாட்டை எடுக்கப்பண்ணின. பிரதமர் பிரேமதாச கூட இந்தியாவின் தலையீட்டை அதிருப்தியுடன் எதிர்கொண்டார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன மாநாட்டில் இருந்து பின்னர் விலகிக்கொண்டார். “வேறோர் இடத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் இணங்கவில்லை. எமது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் நாம் விளகிக்கொள்வதெனத் தீர்மானித்தோம்” என்றார் அவர்.

இவையெல்லாவற்றையும் விட பௌத்த மகா சங்கத்தினரின் தலைமையில் அணிதிரண்டது பிக்குமார்களின் அணி. இந்த இனவாத பிக்கு அணி சிங்கள மக்களை மாத்திரம் அணிதிரட்டவில்லை. பிரதான அரசியல் சக்திகளை இனவாத போக்கில் வழிநடத்தும் சக்திகளாக இருந்தன. இனவாத அழுத்தக் குழுக்களான இவை சிங்கள பௌத்த சித்தாந்தமயப்படுத்தும் கருத்துருவாக்கச் செயற்பாட்டில் அதிக பங்களிப்பை செலுத்தின. இவை அனைத்து சக்திகளதும் முயற்சியின் திரட்சி தான் சர்வ கட்சி மாநாட்டை தோற்கடித்தன.

சிங்களத் பௌத்த பேரினவாத தரப்பில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியவர் மடிகே பஞ்ஞாசீல தேரர். 90 வயதுக்கும் மேல் வாழ்ந்த அவரது வாழ் நாள் காலத்தில் பௌத்த மத விவகாரங்களில் மாத்திரமல்ல சிங்கள பௌத்தமயமாக்களில் பாரிய வகிபாகத்தை அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிய பிக்கு என்று உறுதியாகக் கூறலாம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை பெற்ற காலப்பகுதியில் அவர் வாழ்நாள் காலம் அமைந்திருந்ததால் அந்த முக்கிய காலப்பகுதியிலெல்லாம் அவரது வகிபாகம் என்னவென்று ஆராய்வது முக்கியம். அது தனியாக ஆராயப்படவேண்டியது.
மடிகே பஞ்ஞாசீல தேரர்
மடிகே பஞ்ஞாசீல தேரர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அமரபுர நிகாயவின் அதிமாநாயக்க தேரராக அவர் இருந்தார். ஜே.ஆர். ஆட்சி காலத்தில் அவர் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முக்கிய பிரமுகராக இருந்தார். 77 கலவரம் பற்றி சன்சோனி ஆணைக்குழுவிலும் சாட்சியம் வழங்கியவர். குறிப்பாக தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக அவர் பல விடயங்களை ஆணைக்குழுவில் தெரிவித்துவிட்டு ஜே.ஆருக்கு ஒரு நீண்ட கடிதத்தையும் தமிழர்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது பற்றிய 5 யோசனைகளையும் முன்வைத்தார். வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும், ஆனையிறவிலும் சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்கிற பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டவர்.
சர்வகட்சி மாநாட்டில் ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமே கலந்துகொள்வது என்று கூறப்பட்டிருந்தாலும் பின்னர் நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இயல்பாகவே பௌத்த தரப்பின் கையோங்கியிருந்தது. அங்கு சிங்கள பௌத்த மகா சங்கத் தரப்பில் தலைமை தாங்கிய மடிகே பஞ்ஞாசீல தேரர், பலியான ஸ்ரீ சந்திரானந்த மகாநாயக்க தேரர், வல்பொல ராகுல தேரர் ஆகியோர் மிகவும் தயாரிப்புடனும், திட்டமிடலுடனும் பணியாற்றினார்கள். நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்தினார்கள். பல்வேறு கட்டுரைகளை எழுதி சிங்கள மக்களுக்கு உசாற்படுத்தினார்கள். அரசியல் தலைமைகளை பகிரங்கமாக எச்சரித்தார்கள். மடிகே பஞ்ஞாசீல தேரர் தமிழர்களுக்கு எதிராக பல பெரிய கட்டுரைகளை எழுதினார். அவரது ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நூல்களாக மட்டுமல்லாது இப்போது அவருக்கென்று உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்திலும் கிடைக்கிறன. உதாரணத்திற்காக சில இனவெறிக் கட்டுரைகளின் தலைப்புகளும், வெளிவந்த பத்திரிகைகளும், நாளும்.
  • “ஐயோ! சிங்களவர்களே! ஐக்கியப்படுங்கள்! ஐக்கியப்படுங்கள்!” 1982.12.26 “ரிவிரெச”
  • “ஐக்கிய தேசம் என்கிற ஒன்றிணைக்கப்பட்ட சிங்களத் தேசம்” – 1983
  • “கணம் ஜனாதிபதி அவர்களுக்கு ஓர் கடிதம் “- 1983
  • “சிங்களவர்கள் ஐக்கியபடாவிட்டால் எதிர்காலம் பயங்கரம்” – 1983.05.22 “ரிவிரெச”
  • “இலங்கை மனநோயாளிகளின் நாடாகின்றதா?’ – 1983.12.04 “ரிவிரெச”
  • “அனுமதியற்ற குடியேற்றத் தடைகள் சிங்களவர்களுக்கு மட்டுமா?” – 1983.10.23 “ரிவிரெச”
  • “பயங்கரவாத முறியடிப்பை உறுதிசெய்யும் வழிகள்.” – 1984.05.02 “தவச”
  • சிங்களவர் அற்றுப் போகும் காலத்தில் பௌத்தத்தின் கதி?” – 1984.05.14 “தவச”
  • “சிங்கள இனத்தை சுய அபாயத்திலிருந்து மீட்பது” – 1984.05.19 “தவச”
  • “புத்தர் கொண்டுவந்த பௌத்தத்தை பாதுகாக்க மகாசங்கத்தை முன்னோக்கி நகர்த்துதல்” – 1984.06.13 “தவச”
  • “ஈழத்தைக் கோரும் உரிமை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கிடையாது” – 1984.09.15 “தவச”

 

இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளின் ஒன்றான 1956 அரசியல் நிலைமைகளின் போது தான் மடிகே பஞ்ஞாசீல தேரர் இனவாத அரசியல் களத்தில் முன்னிலைக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் அவரது வகிபாகத்தை காண முடியும்.
1955ஆம் ஆண்டே அவர் அமரபுர நிகாயவின் (ஸ்ரீ தர்மரக்ஷித நிக்காய) தலைமை மகாநாயக்கராக தெரிவாகிறார். 1985 காலப்பகுதியில் அனைத்து நிக்காயக்களின் மகா சங்கசபையின் மகாநாயக்கராக ஆனார். சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக இருந்தார். 1984சர்வ கட்சி மாநாட்டின் போது “இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை” என்றும், “தமிழர்களின் தாயகப் பிரதேச கருத்தாக்கம் புனைவு” என்றும், “அபிவிருத்தி தான் பிரச்சினைஎன்றால் அதனை கிராமிய மட்டங்களில் சில தீர்வு அலகுகளை உருவாக்கி தீர்த்துவைக்கலாம்” என்றும் எப்போதும் எழுதியும் பேசியும் வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் காலத்தில் அதை எதிர்த்து இயங்கிய சக்திகளை ஐக்கியப்படுத்தி முன்னோக்கி நகர்த்தியதில் மடிகே பஞ்ஞாசீல தேரரின் பங்கு முக்கியமானது.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. அதாவது பிரபல இனவாதியாக அறியப்பட்ட அன்றைய தொழிற்துறை மற்றும் விஞ்ஞானதுத்துறை அமைச்சர் சிறில் மெத்தியுவை டிசம்பர் 27அன்று அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதற்கான நடவடிக்கையை ஆளுங்கட்சி எடுத்தது. சர்வகட்சி மாநாட்டுக்கு எதிரான கடும் பிரச்சாரம் செய்து வந்ததற்காகவே அந்த நீக்குதல் நடந்தததாக அரசாங்கம் கூறியது. அதுவரை சிறில் மெத்தியுவின் இனவாத போக்குக்கு அனுசரணை செய்துவந்த அரசாங்கத்துக்கே பொறுக்கமுடியாத அளவுக்கு சிறில் மெத்தியுவின் நடவடிக்கைகள் எல்லை கடந்திருந்தன என்று தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆக இவர்களின் முயற்சிக்கு வலு சேர்ப்பதைப் போல இந்திரா காந்தியின் மீதான படுகொலை நிகழ்வும், அதைத் தொடர்ந்து சர்வகட்சி மாநாட்டை ஜே.ஆர். முடிவுக்கு கொண்டுவந்த நிகழ்வும் நிகழ்ந்தது. பௌத்த பிக்குகளும் கூட “பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவர்களுக்கு அவசியமில்லை” இரு கர்ஜித்தார்கள்.
தமிழர் தரப்புக்கு நிகழ்ந்த இந்தத் தோல்வி நம்பிக்கைத் துரோக வரலாற்றின் இன்னொரு அத்தியாயமாகத் தான் முடிந்தது.
தென்னிலங்கையின் இந்தப் போக்கு தமிழ் இயக்கங்களின் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்த்தன. இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளின் ஆதரவு பெறுகிறது என்றே கூற வேண்டும். தமிழ் இயக்கங்கள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உறுதியான சமிக்ஞை கிடைதத்தாகவே கொண்டார்கள்.
1985 தை மாதம் 14ஆம் திகதி வடக்கில் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தைச் செய்யப் போகிறார்கள் என்கிற வதந்தி தென்னிலங்கையில் பரப்பப்பட்டது. இதை முறியடிப்பதற்கு சிங்களவர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஒன்றுபட்ட இயக்கங்கள்
பிளவுபட்டிருக்கும் இயக்ககங்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கையும், அவாவும் பரவலாக வெளிப்பட்டன. மக்கள் மத்தியில் இருந்தும், தமிழ் நாட்டு ஆதரவு சக்திகளிடமிருந்தும் வலுவாக இந்த விருப்பம் இருந்தது. அப்போது சிறியதும், பெரியதுமாக 37 ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக அரசு கணித்திருந்தது. ஆனாலும் முக்கிய பெரிய இயக்கங்களாக எல்.டி.டி.ஈ, டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களே கருதப்பட்டன.
அருளர் என்று அழைக்கப்பட்ட அருட்பிரகாசம் 1982 ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஐந்து இயக்கங்களையும் சேர்த்து ஈழ விடுதலைக்கான குழு (CEL – Committee for Eelam Liberation) என்கிற பேரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போது வேலைத்திட்டம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அந்த ஈழ விடுதலைக்கான குழுவும் காணாமல் போனது.
அதன் பின்னர் பத்மநாபா அப்படியொரு ஒற்றுமைக்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் விளைவாக ஈழத் தேசிய முன்னணி (Eelam National Front – ENF) தோற்றம் பெற்றது. அதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்துகொண்டன. அவர்கள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் தமது இணைவை உறுதிப்படுத்திக்கொண்டு போட்டக்களையும் எடுத்துக்கொண்டனர். இந்த ஒற்றுமை வலுப்பெறத் தொடங்கியது. 1985 ஏப்ரல் 10 விடுதலைப் புலிகளும் இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இந்த இந்த அமைப்பின் பெயர் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front – ENLF) என்று பெயர் மாற்றம் பெற்றது.
அதே நாள் இந்த இயக்கங்கள் கூடி ஒரு அறிக்கையை வெளியிட்டன. “ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தமிழ் தேசிய விடுதலை முன்னணி முடிவெடுத்திருக்கிறது “என்று அறிவிக்கப்பட்டது. அறிக்கைக்கு போடப்பட்ட தலைப்பு
“தமிழீழ போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன”
ஜே.ஆரால் திரிக்கப்பட்டு 10.01.1984 அன்று வெளியிடப்பட்ட இணைப்பு “B” ஆவணம்
அதுநாள்வரை “அனைத்துக் கட்சி மாநாடு என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, வட்டமேசை மாநாடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, இந்த 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் தான் விவாதம் நடைபெறும் என திடீர் என அறிவிக்கப்பட்டது.
1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட ‘ஆ’ இணைப்பு  (Annexure-B) ஒரு 14 அம்சதிட்டம் ஆகும்.

1. “தனிநாடு” கோரிக்கையை கைவிடுதல்.
2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப் பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது.
3. மேலே கூறியபடி அமைக்கப்ப டும் பிரதேச சபைகள் ஒவ்வொன் றிலும் பெரும்பான்மையை பெறு கிற கட்சியின் தலைவர், அந்த பிர தேசத்திற்கு முதலமைச்சராக, குடி யரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதல மைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச்செய்வது.
4. “பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத” விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பி லும், பாராளுமன்ற தலைவரது பொறுப்பிலும் இருக்கும்.
5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படு கின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெற வும் சபைக்கு அதிகாரம் உண்டு.
6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல்.
7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதி காரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும்.
8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.
9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங் களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக்
10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம்பெறும்.
11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்
12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும்.
13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசிய லமைப்பு ஷரத்துகளும் சட்டங்க ளும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்க ளும் அப்படியே.
14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கையாளப்படுவது எதிர்க்கப்ப டும் என்பதில் ஒற்றுமை காணப்படும்.

SHARE