தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உரிமைகளையும் சிதைக்கும் நோக்கில் இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

293

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழிப்பதற்கே சிங்கள அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் இன விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்துச்சென்றார். அவருடைய போராட்ட வடிவம் இன்று பரிணாமம் பெற்று சர்வதேச மட்டத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கும் அதேநேரம், இன்று சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற ரீதியில் விடுதலைப் போராட்டம் பாரிய வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

samanthan-1

இப்போராட்ட வளர்ச்சியினையும், தமிழ் மக்களினுடைய உரிமைகளையும் சிதைக்கும் நோக்கில் இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழினம் சிங்கள அரசால் ஒடுக்கப்பட்டு வந்தாலும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிற்காகப் போராடி இன்று அந்தப் போராட்டத்திற்கு மகத்தான வெற்றியும் கிடைத்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தான். இன்று அந்தக் கோட்பாட்டினையே மாற்றியமைப்பும் செயற்பாடுகளை U.N.P அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அது எவ்வாறெனில் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, சர்வதேச பேச்சுவார்த்தைகளின் பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் பலரை வெவ்வேறு வேறு ரீதியான கருத்துக்களுடன் மோதவிட்டு, அவர்கள் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்கின்றார்கள் என்ற ரீதியில் வெளியுலகத்திற்குக்காட்டி தமிழினத்தினாலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சிலர் துரோகிகள் என்ற பட்டம் வழங்கும் அளவிற்கு நிலைமைகளை மாற்றியமைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.

ஆகவே இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் துரோகிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுடைய அனைத்து இரகசியங்களையும் வெளியிட்டு அரசுக்கு முன்னால் நின்று பேச முடியாது. அவர்கள் பொய்யுரைப்பது போன்றே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பொய்களையும், உண்மைகளையும் மாறிமாறிக் கூறவேண்டிய தேவையுள்ளது. எதிரியிடம் எமது இரகசியங்கள் தெரியப்படாத அளவிற்கு எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதுவே அரசியலின் இராஜதந்திர அணுகுமுறையாகும். சிங்களத் தலைவர்களின் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதவிகளை வழங்குவதனாலும், அதிகாரங்களை வழங்குவதனாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியும் என்பதே ஆகும்.

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையில் இவர்கள் அக்கறை காட்டவில்லை. மாறாக தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையிலேயே அதிதீவிரம் காட்டி வருகின்றனர். இன்றும் கூட சர்வதேச விசாரணை என்ற போர்வையில் அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை அரசின் முக்கியஸ்தர்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் காப்பாற்றும் திட்டத்தினையே அவர்கள் சர்வதேசத்துடன் இணைந்து முன்னெடுக்கிறார்களே தவிர வேறு எந்தக் காரணங்களும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து பண்டாரநாயக்காவின் குடும்பத்தை உள்நுழைப்பதே சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் திட்டமாக இருந்ததே தவிர வேறு எந்தக் காரணங்களும் இல்லை. அதே சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க 2000ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் செம்மணி புதைகுழியை செம்மையாக முன்னின்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போர் பொறிமுறைக்குள் தமிழினத்தைக்கொண்டு சென்று அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதே தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் திட்டமாகுமே தவிர, தமிழ் மக்களுக்கான தீர்வினை கொடுக்கின்றோம், போர்க்குற்ற விசாரணைக்கென கலப்பு நீதிமன்றத்தை அமைத்து அதனூடாக தீர்வுகளைக் கொடுக்கின்றோம் என்று கூறிக்கொள்வதெல்லாம் காலத்தையும், நேரத்தையும் இழுத்தடிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை அவர்கள் கூறியது போன்று இந்தியா நினைத்திருந்தால் இறுதிப்போரில் நான்கு லட்சம் மக்களையும் காப்பாற்றியிருக்கலாம். எல்லாம் நடந்து முடிந்த பிறகு குறிப்பாக கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று இந்தியா செயற்படுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை, அதனுடைய வலிமையை கருணா மூலம் பிரித்தாண்ட ரணில் விக்கிரமசிங்க இந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் மக்களையும், ஏனைய புத்தி ஜீவிகளையும் குழப்பிவிட்டு, அதில் குளிர்காய்ந்துகொண்டு தமது அரசியலை மிகவும் புத்திசாலித்தனமாக காய்நகர்த்தி வருகின்றது. இவ்வாறு ஒரு நிலைமையை சிங்கள அரசு உருவாக்கியதன் நோக்கம் தமிழினத்திற்காக உள்ளுரிலும், வெளியூரிலும் குரல் கொடுக்கக்கூடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பிரிவு படுத்துவதன் மூலம் காலப்போக்கில் தமது அரசியலை செவ்வனவே நெறிப்படுத்தமுடியும் என்பதுதான். காலத்துக்குக்காலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் தமிழ் இனத்திற்குள் எட்டப்பர் கூட்டங்களை உருவாக்கி சுகம் அனுபவித்தவர்கள் தான் இந்த சிங்களவர்கள். அதனையே அவர்கள் மீண்டும் கையாண்டு வருகின்றார்கள். தமிழ் மக்களாகிய நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துவதன் தேவை இன்று கட்டாயமாகின்றது. வணக்கத்துக்குரிய மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் கூறியது போன்று தமிழினத்தை அன்றிலிருந்து இன்று வரையும் அவர்கள் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்துள்ளனர். இறுதிக்கட்ட போரின்பொழுது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்களை அரசாங்கம் விசவாயுவினைப் பயன்படுத்திக்கொன்றது. அதுவே இனப்படுகொலைதான் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. இன்று சர்வதேச விசாரணையிலிருந்தும், மின்சாரக் கதிரையில் இருந்தும் மஹிந்த ராஜபக்ஷவைக் காப்பாற்றிவிட்டோம் என்று UNP அரசாங்கம் கூறுவதற்கான காரணம் என்னவென்றால் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது ஆகவே அதிலிருந்து மஹிந்தவையும், கோத்தபாய ராஜபக்ஷவையும் காப்பாற்றிவிட்டோம் என்பதே அவர்களின் மறைமுக கருத்தாகும்.
இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு போதியளவு ஆதாரம் இருக்கின்றது. வடமாகாண சபையிலும் கூட தமிழினத்திற்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலைதான் என்ற தீர்மானம் ஏகமனதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாகாணசபையில் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதைவிடவும் இறுதிப்போரில் கொடூரங்களை விளைவித்து பாலியல் துஷ்பிரயோகங்களை விளைவித்த இராணுவத்தினரின் வீடியோக் காட்சிகளும் இன்று சர்வதேசத்திடம் சிக்கியுள்ளது. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளினுடைய பெண் பேராளிகளை கறிப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் நிர்வாணமாக மரத்தில் கட்டி அவர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவங்களும் வீடியோவாக அமெரிக்க அரசிடம் சிக்கியுள்ளது. இதைவிடவும் பகிரங்கமாக திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சமாதான செயலக புலித்தேவன், நடேசன், தளபதி ரமேஷ், பாலச்சந்திரன், இசைப்பிரியா போன்றவர்களுடைய வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. நிலைமைகள் இவ்வாறிருக்க இலங்கையரசு இனப்படுகொலையையே மேற்கொண்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் கையிலிருக்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாயினாலேயே இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையென்று சர்வதேச சமூகத்திடம் கூறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய மூவரும் இணைந்து சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகிய மூவரையும் தம்பக்கம் இழுத்துக்கொண்டு எதிர்க்கட்சிப் பதவியையும் வழங்கி, அவைக்குழுத் தலைவர் பதவியையும் வழங்கி, உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிகளையும் வழங்கி இன்னும் பல சலுகைகளை வழங்கி, தமது இராஜதந்திர வலைக்குள் அகப்பட அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. பெறுவதையெல்லாம் பெற்றுக்கொண்டு எவ்வாறு சிங்களவர்களுக்கு ஆப்பு வைக்கப்போகின்றார்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுடைய போராட்ட வலியினை உணராதவர்கள் அல்லாவிட்டாலும், வரலாறுகளில் படித்திருப்பார்கள். இவர்களுடைய மனதை மாற்றி மாறுபட்டக் கருத்துக்களை தோற்றுவித்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய கட்டமைப்பினைச் சீர்குழைத்து அதில் வெற்றி காண்பதே ரணில் அவர்களின் இரகசியத்திட்டமாகும். இதனைக் கவனத்திற்கொண்டு எமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவேண்டும் என்பதே தமிழ் மக்களுடையதும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தலையாய கடமையாகும்.

SHARE