“தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் அமைதிவழிப் போராட்டம்; அதன் பிறகு தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம்” என்று வரலாறு

1093

 

ஈழத் தலைமை

அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். மீது சில பொய்த் தோற்றங்கள் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி, சௌந்தரராசன் பாடி, எம்.ஜி.ஆர். வாயசைத்த பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். சிந்தனைகள் என்ற பச்சையான பொய்யைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நுழைத்து அதிகாரபூர்வமாக இளைய தலைமுறைக்குப் பதிய வைக்கிறார்கள்.

அதைப் போல, ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரன் மற்றும் ஈழம் குறித்துப் பல கற்பிதங்களும், பொய்த் தோற்றங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. மற்றும் இவற்றின் தோழமை அமைப்புகள் தமிழீழத்தை ஏற்காதவர்கள், தமிழீழத்திற்கு எதிரானவர்கள் என்று இனவாதிகளால் அவதூறு செய்யப்படுவது.

“தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் அமைதிவழிப் போராட்டம்; அதன் பிறகு தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம்” என்று வரலாறு சொல்லுகிறார்கள்.

இந்த 60 ஆண்டுகளிலும் தமிழீழம் என்ற கருத்தாக்கத்திற்கு அதன் மேற்படிக் கர்த்தாக்களுக்கே “தனித் தமிழீழம்தான்” என்ற ஒற்றையான பொருள் இருந்ததே கிடையாது. இதை எம்மால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். பிரபாகரன் கூட, தனித் தமிழீழம் கோரிக்கையைக் கைவிட்டு, “தமிழீழம்” என்பதற்கு வேறுபட்ட பொருள்கள் கூறிய தருணங்கள் உண்டு; இதையும் எம்மால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

திம்பு

1985 திம்புப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் உட்பட ஐந்து போராளி அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளில் “தமிழீழம்” கிடையாது! “இலங்கையில் வாழும் தமிழர்களை ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிப்பது; அவர்களுக்குத் தாய்நாடு ஒன்றை அங்கீகரிப்பது; தமிழ் தேசத் தன்னுரிமையை அங்கீகரிப்பது; இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையையும் அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பது” ஆகிய ஐந்து கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. இந்த ஐந்து கோரிக்கைகளையும் எமது அமைப்புகள் எப்போதும் உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன.

ஆனால், 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் பின்பு வடகிழக்கில் அமையவிருந்த இடைக்கால நிர்வாக சபையில் புலிகளுக்குப் பெரும்பான்மை இடங்களை வழங்கி புலிகளின் பிரதிநிதியை முதல்வராக்கி, புலிகளின் செலவீனங்களுக்காக மாதாமாதம் ஐந்து மில்லியன் ரூபாய்களை வழங்கினால், “தமிழீழ”க் கோரிக்கையைக் கைவிடுவதற்கும் ஒப்புக் கொண்டார்கள். (இதன்படி முதற்கட்டமாக ஐந்து மில்லியன் ரூபாய்களைப் புலிகள் பெற்றுக் கொண்டார்கள்.) சந்திரிகா இலங்கை அதிபராகிய பிறகு நடந்த போர்நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தையின்போது தமிழீழத் தன்னுரிமைக்குப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்ரன் பாலசிங்கம் “மாநில சுயாட்சி” என்ற புதிய வியாக்கியானம் கொடுத்தார்.

தமிழீழ விடுதலைக்கான முதல் 30 ஆண்டுகால அமைதிவழிப் போராட்ட காலத்தில் அதற்குத் தலைமையேற்றதாகக் கூறப்படும் ஈழத் தந்தை செல்வ நாயகத்தின் தமிழரசுக் கட்சியும், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரசுக் கட்சியும் இணைந்து நிறுவிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதை எவ்வாறு வழி நடத்தின? உண்மையில் அது தமிழீழ விடுதலைக்கானதுதானா?

ஈழத் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவகையிலும் தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளைப் போலவே அரசியல் பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடந்தவைதாம். தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளாவது பெரியார், பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை போன்ற முற்போக்குப் பாரம்பரியங்களைக் கொண்டவை. ஆனால், அத்தகைய பாரம்பரியம் இல்லாத அவ்விரு ஈழத்துப் பிற்போக்கு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு ஆளும் சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவைதாம். இவ்விரு கட்சிகளுமே இலண்டன் உயர் கல்வி பயின்ற, வடக்கின் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், கிழக்கின் மக்களையும் கீழானவர்களாகக் கருதும் யாழ் மையவாத, யாழ்ப்பாண ஆதிக்க வேளாள சாதித் தலைமையைக் கொண்ட கட்சிகள்தாம்.

இக்காரணங்களால் இவற்றுக்கு வவுனியாவிற்குத் தெற்கே தமது வர்க்க நலன்களையும் தமது சொந்தத் தொழிலையும் கொழும்பில் குவித்திருந்த தலைமையினரின் செல்வத்தையும் பாதுகாக்க ஒரு அரசியலும், வவுனியாவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலும் தேவைப்பட்டன. அதற்கேற்பவே இவ்விரண்டு கட்சிகளும் தமிழீழச் சிக்கலைக் கையாண்டன.

இந்தியா - இலங்கை ஒப்பந்தம்.

1972-இல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அவர்களை அடிமைகளாக்குவதாக அமைந்ததால், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசுக் கட்சி மற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரசு ஆகிய முக்கிய தமிழர் கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழர் ஐக்கியக் கூட்டணியை ஏற்படுத்தின. அப்போதும்கூட தமிழீழம் கோரிக்கை முன் வைக்கப்படவில்லை. வடக்கு-கிழக்கு மாநிலங்களை ஐக்கியப்படுத்தி ஈழத்தை ஒரே மாநிலமாக்கி ஒரு கூட்டாட்சி முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அக்கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. (செல்வநாயகம் தலைமையிலான கட்சியின் பெயரே ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி (Federal party) தான்; தமிழில்தான் “தமிழரசுக் கட்சி” – என்ன ஒரு மோசடி!)

“1958 முதல் 1977 வரையிலும் ஏறத்தாழ இருபது ஆண்டுகள், தமிழர்கள் இலங்கையில் சிங்களருடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தமது சம உரிமைக்கான கோரிக்கைகளை அமைதிவழியில் வலியுறுத்தி வந்தனர். அமைதிவழியில் போராட்டங்களையும் நடத்தினர். இணைந்து ஒரே நாட்டில் வாழ்வதற்கான தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இடைக்கால சமரச ஒப்பந்தங்களுக்கும் இணைங்கினர்” என்று புலிகள் ஆதரவு குழுக்கள் பலவும் ஒப்புக் கொள்கின்றன.

1976 யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை மாநாட்டில் தான் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் சூட்டிக்கொண்டு, “தமிழீழத் தனியரசு” நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மலையகத் தமிழரின் ஆதரவு பெற்ற இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகியது.) “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்வரும் 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய இனத்தின் திட்டமான முடிவை சிங்கள அரசாங்கத்திற்குப் பிரகடனப்படுத்துவதற்குரியது என்றே கணிக்கிறது” என்று மட்டுமே அத்தீர்மானம் கூறியது. அதற்குமேல், “தமிழீழத் தனியரசை” எவ்வாறு அடைவது என்பதை மாநாட்டிலோ, பிறகோ அக்கூட்டணி அறிவிக்கவேயில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடவுமில்லை.

“வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிதான் ஈழத் தேசிய இயக்கத்தின் அடிப்படை. அதற்கான ஜனநாயகக் கட்டளைதான் 1977 தேர்தல் முடிவு. தமிழீழத்துக்கு ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்” என்று புலி ஆதரவாளர்கள் தொடர்ந்து கதைத்து வருகின்றனர். ஆனால், உண்மையோ வேறுவிதமாக அமைந்தது.

08-captionதமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் கூட்டணி அமைத்து 1977 தேர்தல்களில் போட்டியிட்டபோதும் வடக்கில் 41 விழுக்காடு வாக்குகளும் கிழக்கில் வெறும் 26 விழுக்காடு வாக்குகளுமே கிடைத்தன. மொத்தத்தில் தமிழீழப் பகுதியில் 35 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளையே கூட்டணியினர் பெற்றனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் யாழ் மையவாத, ஆதிக்கசாதி, முற்போக்கு-கம்யூனிச எதிர்ப்புக் கொள்கைகள் காரணமாக கிழக்கு மாகாண மக்கள், சிறுபான்மை இசுலாமிய மக்கள் மற்றும் ஈழத்தில் 30 விழுக்காடுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதரவை இக்கூட்டணி பெறமுடியவில்லை. (இதன் காரணமாகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் முந்தைய தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்). ஆக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிமீழத்துக்குச் சற்று ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஈழத் தமிழர்களே ஒப்புதல் அளித்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தமிழீழத்தை முன்நிறுத்துவதற்கு முன்பேகூட, அவ்விரு கட்சிகளும் இதே அளவு வாக்குகளைத்தான் பெற்றிருந்தன. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமையிலான தமிழீழத்துக்கு ஈழத் தமிழர்கள் ஒப்புதல் அளிக்கும்

ஜனநாயகக் கட்டளைதான் 1977 தேர்தல் முடிவுதான் என்பது தவறு. அதையே பிரபாகரன்-விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழீழத்துக்கான ஈழத் தமிழர்களின் ஒப்புதலாகக் கொள்வதும் தவறு.

1977 தேர்தல்களுக்குப் பிறகு நியமன உறுப்பினர்கள் உட்பட 18 பேர்களோடு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சியாகியது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி. அது தமிழீழத்திற்காக எதுவும் செய்யவில்லை. செல்வநாயகத்தின் மருமகனும் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பேராசிரியரும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருடியுமான ஏ.ஜே.வில்சனைத் தரகராகக் கொண்டு ஜெயவர்த்தனேவுடன் இரண்டாண்டுகள் பேரங்கள் நடத்தியது. முடிவில் தமிழீழத் தனியரசு அமைப்பதாகப் புறப்பட்ட கூட்டணி மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டத்தைப் பெற்றது. அதன்படி 1981-ல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலில் சிங்கள இனவெறி அரசு அப்பட்டமான முறைகேடுகளிலும் அராஜகங்களிலும் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தி அழித்தது. தொடர்ந்துவந்த அவசரநிலைப் பிரகடனம், பயங்கரவாதச் சட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை இந்தியாவுக்கு ஓடிப்போனது. இதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் 30 ஆண்டு கால வரலாறு.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைமையிலான அமைதி வழித் தமிழீழப் போராட்டம் மற்றும் அதன் தெடர்ச்சியாக பிரபாகரன் – விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்ட வழித் தமிழீழம் ஆகிய இரண்டு மட்டுமே ஈழத்தில் நிலவியதாக இங்கே புலி விசுவாசிகள் புளுகி வருகிறார்கள். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அதன் முன்னோடியான தமிழர் ஐக்கியக் கூட்டணி ஆகிய இரண்டுமே முன்னெடுத்த அரசியல் ஈழத் தமிழர் விடுதலைக்கானது அல்ல என்று புரிந்து கொண்ட இளைஞர்களால் வேறொரு வகையான அரசியல் உள்ளடக்கம் கொண்ட தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்

1970-களின் ஆரம்பத்தில் தமிழ் இளைஞர் பேரவையாகத் தொடங்கிய அவர்கள், சோசலிசத் தமிழீழம் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர். வர்க்க ஒடுக்குமுறையற்ற, சாதி-மதமற்ற, ஜனநாயகத் தமிழ் ஈழமே அதன் இலக்காக இருந்தது. உள்ளடக்கத்தில் பல போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டிருந்த போதும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வலதுசாரி பிற்போக்குத் தமிழீழத்தைவிட இது முற்போக்கானது; மாறுபட்டது. அந்த இளைஞர்கள் முன்வைத்த இடதுசாரி-முற்போக்கு முழக்கங்கள்தாம் பெரும்பாலான இளைஞர்கள்களையும் மாணவர்களையும் தேசியக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து விலகித் தமிழீழப் போராட்டத்தை நோக்கி வரவைத்தன.

பிரபாகரனும் விடுதலைப் புலிகளும்கூட “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி” என்றொரு நூலை வெளியிட்டார்கள். ஆனால், அது பிற்காலத்தில் இலண்டனிலிருந்து அன்ரன் பாலசிங்கம் எழுதிக் கொடுக்க, பிரபாகரன் ஒரு உத்திக்காக மட்டும் உச்சரித்ததுதான். தாங்கள் ஒரு உத்தியாகவே சோசலிசக் கருத்தாக்கங்களை உச்சரித்தோம் என்று பின்னாளில் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் தனது ‘த வில் டு ஃபிரீடம்’ (The Will to Freedom) நூலில் ஒப்புக்கொண்டிருக்கிறார். “தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே” என்று பிரபாகரனே வன்னி பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சோழப் பேரரசும் புலிக்கொடியும் கனவாகக் கொண்ட குறுந்தேசிய, வலதுசாரித் தமிழீழம்தான் இலக்காக இருந்தது.

இலங்கையில் 1970-களில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் இரு ஆளும் கட்சிகளும் மாறிமாறி சிங்களப் பேரினவாதத்துக்குத் தீனி போடவும், அவர்களின் ஆதரவை வளைத்துப் போடவும், ஈழ மற்றும் மலையகத் தமிழர் மீதான ஒடுக்கு முறைகளையும் சீண்டல்களையும் தீவிரப்படுத்தின. தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி செய்வதறியாது, மேலும் சமரச பேரங்களில் இறங்கியது. அதன் மீது நம்பிக்கை இழந்த போர்க்குணமிக்க இளைஞர்களும் மாணவர்களும் ஆயுதப் போராட்டங்களில் குதிக்கத் தீர்மானித்தனர். இடதுசாரி சாயலைக் கொண்ட ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் மற்றும் வலதுசாரி அரசியலைக் கொண்ட புலிகள், டெலோ இவை இரண்டிலிருந்தும் மாறுபட்ட பொதுவுடைமை அரசியலைக் கொண்ட என்.எல்.எஃப்.டி. ஆகிய போராளிக் குழுக்கள் தோற்றமெடுத்தன. தமிழீழத்துக்கான இவற்றின் அரசியல் உள்ளடக்கம், ஆயுதப் போராட்ட வழிமுறை வெவ்வேறாக இருந்தன.

என்.எல்.எஃப்.டி. தவிர, பிற போராளிக் குழுக்களை அரவணைத்து இந்திய அரசு ஆயுதங்களும் பணமும் பயிற்சியும் கொடுக்கத் தொடங்கிய பிறகு, தமிழீழக் கருத்தாக்கத்துக்கு இன்னொரு விரும்பத்தகாத பரிமாணம் உருவானது. அதாவது, தமிழீழக் கருத்தாக்கத்தை இப்போது இந்திய உளவு அமைப்பான “ரா” அதிகாரிகள் வரித்துக் கொண்டு, போராளிக் குழுக்களை வழி நடத்தத் தொடங்கினார்கள். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் ஆகிய போராளிக் குழுக்கள் இதுவரை தாம் சொல்லிக் கொண்ட இடதுசாரிச் சித்தாந்தங்களைப் பகிரங்கமாகவே கைவிட்டன. விடுதலைப் புலிகளுக்கு அப்படி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அவர்களுக்கு “தமிழீழ சோழப் பேரரசை” மீண்டும் அமைக்கும் கனவிருந்தது.

இந்திய அரசின் தயவால் போராளிக் குழுக்கள் பணபலம், ஆள்பலம், ஆயுதபலத்தைப் பெருக்கி கொண்டிருந்த அதேவேளையில், அவை தனித்தனி அதிகார மையங்களாகவும் மாறத் தொடங்கின. ஒவ்வொரு தமிழீழப் போராட்டக் குழுவின் தலைவரும் முற்போக்கு அரசியலைத் துறந்து குட்டிக் குட்டி யுத்தப்பிரபுக்களாகக் குறுகிப் போனார்கள். இயக்கங்களுக்குள் ஜனநாயக மறுப்பும் உட்படு கொலைகளும் சகோதரப் படுகொலைகளும் தலைவிரித்தாடின. என்.எல்.எஃப்.டி., பி.எல்.எஃப்.டி., “தீப்பொறி” போன்ற மாறுபட்ட பொதுவுடைமை, ஜனநாயக அரசியலைக் கொண்ட சிறு குழுக்கள் மட்டும் இந்தப் போக்கிற்கு விதிவிலக்காக இருந்தன. அவையும் புலிகளால் தடைசெய்யப்பட்டும், “ரா” வின் தூண்டுதலால் அவற்றின் தலைவர்கள் படுகொலைகள் செய்யப்பட்டும் அழிக்கப்பட்டன.

விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவும் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாகவும் திரண்டிருந்த மக்கள் மீதே இயக்கங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கின. இந்த அராஜகச் செயல்களை எதிர்த்த போராளிகள் இயக்கங்களிலிருந்து வெளியேறி ஜனநாயக வழிபட்ட புதிய தமிழீழப் போராட்டக் குழுக்களை அமைப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அதே வேளையில் நூற்றுக்கணக்கான போராளிகள் இந்த அராஜகத் தலைமைகளுக்கு எதிராக உள்ளிருந்து போராடி மடிந்தார்கள்.

1986-ல் புலிகள் மற்றைய இயக்கங்களைத் தடை செய்து தலைவர்களைக் கொன்றொழித்ததுடன் தமிழீழக் கோரிக்கைக்குப் பாசிசப் பரிமாணத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். உரிமை கோரப்படாத கொலைகளும் இரகசியக் கொலைகளும் ஆயிரக்கணக்கில் புலிகளால் நிகழ்த்தப்பட்டன. தமிழீழம் என்ற முழக்கமானது பாசிசப் புலித் தலைமைகளைப் பாதுகாக்கும் கவசமாகக் கொள்ளப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகவோ, புலிகளின் பாசிச அரசியலின் நீட்டிப்பாகவோ, எஞ்சியுள்ள புலிகளின் விருப்பங்களுக்காகவோ, தமிழ்நாட்டுத் தமிழ்தேசிய இனவாதிகளின் விருப்பங்களுக்காகவோ, அவர்களின் பாணியிலான தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பது ஈழத் தமிழர்களுக்கே துரோகம் செய்வதாகும். ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது எப்படியாவது தனியரசை அமைத்துவிடுவது, ஏதாவது ஒரு இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதல்ல; மாறாக, ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் அது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

எந்தவொரு தேசிய இனமும் வேறொரு இனத்தால், பேரினவாதத்தால், அந்நிய நாட்டால் அல்லது ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் ஒடுக்கப்படக்கூடாது. அதேசமயம், அதை முறியடிப்பது, விடுவிப்பது என்ற பெயரால் சொந்த தேசத்து அல்லது உள்நாட்டு பாசிச சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு கொடுங்கோலாட்சி செலுத்துவதையும் அனுமதிக்க முடியாது. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம்.

ஆஃப்கானின் தாலிபான்கள், ஈராக்கின் பாசிச சதாம் உசைன் அமெரிக்க ஆக்கரமிப்பையும், பஞ்சாபின் காலிஸ்தானிகள் இந்தியாவின் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது “தேசிய உரிமை”க்காகப் போராடினாலும், தம் மக்கள் மீதே பாசிச பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினார்கள்; அவர் தம் ஜனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதித்தார்கள். ஆகவே, எல்லாத் தேசியப் போர்களையும் நிபந்தனையின்றி ஆதரித்துவிட முடியாது. புலிகளின் தமிழீழமும் இவ்வாறான பாசிச உள்ளடக்கத்தையும் வழிமுறையையும் கொண்டது.

தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தேசிய இனத் தன்னுரிமைதான் சரியான, அவசியமான தீர்வு என்றாலும், தனியரசு அமைவது உள்நாட்டு மற்றும் உலக அரசியல் சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது. வெறும் இராணுவவாத நோக்கில் தனியரசுதான் ஒரே தீர்வு என்று கொள்ளவும் முடியாது. தமிழீழத்துக்கும் இது பொருந்தும்.

இத்தகைய புரிதலோடு தமிழீழத்தை ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. முதலிய அமைப்புகள் எப்போதும் சமரசமின்றி, உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன. தமிழீழத்தை ஒருபோதும் ஏற்காத போலிக் கம்யூனிஸ்டு, காங்கிரசு, பா.ஜ.க., போன்றவற்றின் தா.பாண்டியன், இல.கணேசன், குமரி அனந்தன் போன்ற உள்ளூர்த் தலைவர்களையும் கூட ஈழ ஆதரவாளர்களாகக் கொண்டு உறவாடும் தமிழின வாதிகளோ, இதை ஏற்க மறுத்து புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள்.

SHARE