தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை ஆதரிப்பதோடு, அதற்கான போராட்டங்களில்  இஸ்லாமியர்கள் இறங்கவேண்டும்  இல்லைலே; ஆபத்து

386

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் – இதுதான் ‘தமிழர்’ என்பதற்கான வரையறை (Definition). இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை ஆதரிப்பதோடு, அதற்கான போராட்டங்களில்  இஸ்லாமியர்கள் இறங்கவேண்டும்  இல்லைலே; ஆபத்து 

 

Buddhist monks with weapons
ஆயுதம் ஏந்திய பௌத்தர்கள்

புத்தன் நிறுவிய சமயம் (religion) மீண்டும் இரத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது!

இலங்கையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள இன, பௌத்த சமய வெறி! வழக்கம் போலவே, பச்சைக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் சிங்களர்கள் நிகழ்த்தியிருக்கும் இந்தக் கொடூர வெறியாட்டம் பார்க்கவே பதைபதைக்க வைக்கிறது!

Bloodshed by Buddhists in Srilanka
நடந்த கலவரத்தில் பௌத்தர்களால் சிந்திய குருதி!!

இலங்கை மண் இஸ்லாமியத் தமிழர்களின் குருதி சுவைப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் 1915ஆம் ஆண்டு இதே போலொரு சூன் மாதத்தில் முசுலீம் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (தகவல் நன்றி: சேவ் தமிழ்சு இயக்கம்).

இலங்கையில் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராக ஆக்குவதற்காக அதன் ஆட்சியாளர்களும் பௌத்தத் துறவிகளும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை.

முதலில், தமிழ்நாட்டிலிருந்து அங்கே குடியேறித் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த, அந்த மண்ணை வளம் கொழிக்கும் பகுதியாக ஆக்கிய மலையகத் தமிழர்களை, அவர்களின் தாய்நிலம் அது இல்லை என்று கூறித் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

பிறகு, வழிபடும் கடவுள் வெவ்வேறாக இருந்தாலும் மொழிபடும் தமிழ் ஒன்றே என்ற உணர்வோடு ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த தமிழர்களைச் சமயத்தின் பேரால் பிளவுபடுத்தி, இஸ்லாமியர்களையும் மற்ற சமயங்களைச் சேர்ந்த தமிழர்களையும் பிரித்தார்கள். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவும் வைத்தார்கள்.

இப்பொழுது, எதற்காக இந்தப் பிரிவினைகளையெல்லாம் செய்தார்களோ, அந்த நோக்கத்தின் ஒரு பகுதி நிறைவேறி விட்டது. பல்வேறு வழிகளில் முயன்று, கடைசியில் இனப்படுகொலைத் தாண்டவம் ஒன்றையே நடத்தி இஸ்லாமியரல்லாத தமிழர்கள் அனைவரையும் அழித்து ஒழித்தாகி விட்டது. இப்பொழுது மிச்சம் இருப்பது இஸ்லாமியத் தமிழர்கள் மட்டும்தான். இனி அவர்கள் மட்டும் சிங்களர்களுக்கு எதற்காக? ஆகவே, அவர்களையும் தீர்த்துக்கட்டி விட்டு முழுக்க முழுக்க சிங்கள இன, பௌத்த சமயத் தனிப்பெரும் நாடாக இலங்கையைத் திகழச் (!) செய்வதற்கான அடுத்தக்கட்ட முயற்சியாகவே இந்தத் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது! இறுதியில் இதுவும் ஒரு பெரிய இனப்படுகொலையில் முடிந்தாலும் வியப்படைய எதுவுமே இல்லை.

மேலும், இஸ்லாமியரல்லாத தமிழர்களின் மீதான இலங்கையின் தாக்குதல்கள் இந்துக்கள் மீதான வன்முறை என அண்மைக்காலமாக முன்வைக்கப்படுவதாலும், இந்தியாவில் இந்து சமயக் கட்சியின் ஆட்சி நடப்பதாலும் இப்பொழுதுக்கு இந்துத் தமிழர்களின் மீதான தாக்குதலைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, வெகுகாலமாக ஏறுமுகத்திலேயே இருக்கிற இஸ்லாமியத் தமிழர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைக்கலாமே என்கிற எண்ணமாகவும் இது தென்படுகிறது.

எது எப்படியிருந்தாலும், இலங்கையின் இன, சமய வெறியானது சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறு யாரையும் அந்த மண்ணில் வாழ விடாது என்பதே இந்தத் தாக்குதல் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை! இதை உணர்த்த வேண்டியதும், இந்தக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த இன-சமய வெறித் தீயைச் சிங்களர்களுக்கு எதிராகவே திருப்பிவிடுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் தமிழினத் தலைவர்களின், தமிழீழ ஆதரவு அமைப்புகளின் முதற்பெரும் கடமை!

தமிழினத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன?



இந்துத் தமிழர்கள் மட்டும்தான் தங்கள் பகைவர்கள் என்பது போலவும், இசுலாமியத் தமிழர்கள் தங்கள் நண்பர்கள் என்றும் இலங்கை இத்தனை ஆண்டுகளாக நடத்தி வந்த உலகின் மிக நீளமான நாடகம், இதோ முடிவுக்கு வந்து விட்டது. இந்துக்களோ, கிறித்தவர்களோ, இசுலாமியர்களோ, தமிழ் பேசும் யாராக இருந்தாலும் சிங்களர்கள் கண்ணுக்கு அவர்கள் தமிழர்கள்தாம் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது! இந்த நேரத்தில், இஸ்லாமியத் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இது பற்றிப் பேச வேண்டியது தமிழீழ ஆதரவுத் தலைவர்களின் – அமைப்புகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமை!

இனியாவது சமயக் கண்ணோட்டத்தில் பிரிந்து நிற்காமல், இன அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரே சமூகமாகத் தமிழர்கள் திரள வேண்டும் எனவும், அப்படி ஒற்றுமையாக நின்றால்தான் சிங்கள பௌத்தத்துக்கு எதிராக அந்த மண்ணில் மற்ற சமய, இன மக்கள் வாழ முடியும் என்பதையும் ஈழ உணர்வுத் தலைவர்களும் அமைப்பினரும் இஸ்லாமியத் தமிழினத் தலைவர்களையும் அமைப்பினரையும் சந்தித்து எடுத்துரைக்க வேண்டும்!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் – இதுதான் ‘தமிழர்’ என்பதற்கான வரையறை (Definition). இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை. எனவே, ‘தனித் தமிழீழம்’ என்பது இந்துத் தமிழர்கள் என்னும் குறிப்பிட்ட சில மக்களுக்கோ, விடுதலைப்புலிகள் என்கிற ஓர் அமைப்புக்கோ, பிரபாகரன் என்கிற தனியொரு மனிதருக்கோ உரித்தானதில்லை. அது தமிழர்கள் அனைவருக்குமானது! தமிழர் அனைவரின் பாதுகாப்புக்கானது! எனவே, இஸ்லாமியத் தமிழர்களும் இனி தனி ஈழத்தை ஆதரிப்பதோடு, அதற்கான போராட்டங்களில் இறங்குவதோடு, அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்ளவும், தனித் தமிழீழத்துக்கு ஆதரவளிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் முன் வரவேண்டும்” என ஈழ ஆதரவாளர்கள் இஸ்லாமியத் தமிழ்த் தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும்! 

இது மட்டுமில்லை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் முதலான முன்னாள் தமிழினத் தலைவர்கள் செய்யத் தவறிய கடமை ஒன்றும் இருக்கிறது. அதைக் கையிலெடுக்கவும் இதுவே சரியான நேரம்!

சிங்கள பௌத்தர்களைப் புத்த மதத்திலிருந்தே வெளியேற்றச் செய்வோம்! 

ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் அனைத்துக்கும் –ஆம் அனைத்துக்கும்– மூல காரணமாக இருப்பவர்கள் அந்நாட்டு புத்த குருமார்கள். இலங்கை ஆட்சியாளர்களைப் பின்னின்று இயக்குபவர்களும் அவர்கள்தாம். ஆக, அவர்கள் கொட்டத்தை அடக்கினாலே தமிழர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் ஓயும்; தனி ஈழமும் கிடைக்கும்.

அதற்கு ஒரே வழி! இலங்கை பௌத்த குருமார்களும், துறவிகளும் புத்த சமயத்திலிருந்தே விலக்கப்பட வேண்டும்! 

இது நடக்குமா? கண்டிப்பாக நடக்கும்!

‘ஊறு செய்யாமை’ (non-violence) என்பதுதான் புத்தச் சமயத்தின் அடிப்படைக் கொள்கையே. ஆனால், இலங்கையில் உள்ள புத்த குருமார்களுக்கும் இதற்கும் அணுவளவாவது தொடர்பு இருக்கிறதா?

சிங்களர்களின் கதாநாயகனாகவும், அந்நாட்டு பௌத்த சமயத்தின் புதிய தலைமுறைக் காவலனாகவும் இன்று வரை போற்றப்படுகிற அனகாரிக தர்மபால “தமிழ் மக்களைக் கடலுக்குள் தள்ளிக் கொல்ல வேண்டும்” என்று கூசாமல் சொன்னவன். இதோ, இப்பொழுது நடந்த தமிழர்களுக்கு எதிரான இந்த இரத்த வெறியாட்டத்தைத் தூண்டி விட்டவனும் இலங்கையின் புத்தத் துறவி ஒருவன்தான். வெளிப்படையாகவே அவர்கள் தமிழ் மக்களைக் கொல்லச் சிங்களர்களைத் தூண்டுகிறார்கள். தூண்டுவது மட்டுமா? தாங்களே களத்தில் இறங்கி மக்களைக் கொலை செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. அவ்வளவு ஏன், இலங்கையின் முன்னாள் அதிபன் பண்டாரநாயகவைக் கொன்றவனே புத்தத் துறவி ஒருவன்தானே?

Gnanasara Thera - The Buddhist priest who stroke the massacre against muslims in srilanka!
நடந்த கலவரத்தைத் தூண்டிய பௌத்த குரு ஞானசார தேரன்

காலம் காலமாக, இப்படிக் கொல்வதையும் கொலை செய்யத் தூண்டுவதையுமே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் இலங்கையின் புத்த குருமார்கள் எப்படிப் பௌத்தர்களாக இருக்க முடியும்? புத்தச் சமயம் இவர்களை எப்படி பௌத்தர்களாக ஏற்கலாம்?

எனவே, இலங்கையின் பௌத்த குருமார்களையும், இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் சிங்கள பௌத்த முறையையும் புத்தச் சமயத்திலிருந்தே விலக்குவதாக அறிவிக்குமாறு தமிழ்த் தலைவர்களும் அமைப்பினரும் தலாய் லாமாவைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!

ஆடு மாடு போன்ற உயிரினங்களைக் கொல்வதையே பெரும் பாவம் எனக் கூறும் புத்தச் சமயம் இனப்படுகொலைகளைத் தூண்டும் சிங்கள பௌத்தர்களை எப்படிப் பௌத்தர்களாக ஏற்கலாம் எனத் தலாய் லாமாவிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும்!

“ஊறு செய்யாமை எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புத்தச் சமயத்தைச் சார்ந்த நீங்கள், இப்படித் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவது நியாயமா” என்று கேட்டதற்கு, “பௌத்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற முறையில் அது தவறுதான். ஆனால், சிங்களர்கள் எனும் முறையில் நாங்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்” என்று பௌத்தத் துறவி ஒருவர் பன்னாட்டு ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருப்பதைத் தமிழர் தலைவர்கள் தலாய் லாமாவுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையிலுள்ள பௌத்த குருமார்கள் ஒருபொழுதும் பௌத்தர்களே இல்லை. முழுக்க முழுக்க அவர்கள் வெறும் சிங்களர்களாகத்தான் இருக்கிறார்கள், அந்த அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும் என்று தலாய் லாமாவிடம் கேட்க வேண்டும்!

Sibi - The ancient Tamil king who give his own muscle to save a dove!
புறாவுக்குப் பதில் தன் சதை தரும் சிபி

தமிழர்களுக்கும் புத்தச் சமயத்துக்கும் இடையிலான உறவு சிங்களத்துக்கும் புத்தச் சமயத்துக்குமான உறவை விடப் பன்மடங்கு நெருக்கமானது, பழமையானது. சோழ அரசர்களுள் ஒருவரான சிபிச் சக்கரவர்த்தி புத்தபிரானின் திருப்பிறவிகளுள் (அவதாரம்) ஒருவராகப் போற்றப்படுகிறார். புத்தச் சமயத்தின் இருபெரும் பிரிவுகளுள் ஒன்றான ‘மகாயான பௌத்த’த்தை நிறுவியவரே பல்லவ அரசத் தலைமுறையைச் சேர்ந்த தமிழரான போதிதர்மர்தான் என்பது வரலாறு. புத்தச் சமயத்தின் ஈடு இணையற்ற புனிதத் தலமாகக் கருதப்படும் ‘ஷாவலின் கோயிலை’ (shaolin) நிறுவியரே அவர்தான். இராஜராஜ சோழர், அவர் தந்தை சுந்தர சோழர் ஆகியோர் முறையே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் புத்தச் சமயம் வளரப் பெரும் செல்வங்களை வாரி இறைத்திருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. தமிழினத் தலைவர்கள் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி, இந்த அளவுக்குப் புத்தச் சமயத்துக்குத் தன்னிகரற்ற சேவைகளை புரிந்திருக்கும் தமிழர்களை அதே புத்தச் சமயத்தின் பெயரால் சிங்களர்கள் அழித்தொழிப்பதும், அதை புத்தச் சமயத் தலைமையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் நியாயமா என்று தலாய் லாமா நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படியாகக் கேட்க வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, “பிற உயிர்களுக்குச் சிறு துன்பம் கூட விளைவிக்கக் கூடாது” என்று கூறிய புத்தரின் பெயராலேயே கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று குவிக்கிற, புத்தச் சமயத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களைக் கொல்லும்படி புத்தச் சமயத்தின் பெயராலேயே மக்களைத் தூண்டுகிற, புத்த குருமார்களுக்கே உரிய புனித ஆடையை அணிந்துகொண்டே உயிர்க்கொலை நிகழ்த்துகிற அந்தக் குருதிக்கறை படிந்த சிங்கள பௌத்த குருமார்களுக்கு புத்தபெருமானின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் அருகதை இன்னும் இருக்கிறதா என்றும் தலாய் லாமாவிடம் நம் தமிழ்த் தலைவர்கள் வலுவாகக் கேள்வி எழுப்ப வேண்டும்!

ஆகவே, இந்த அளவுக்குப் புத்தச் சமயத்துக்கும் புத்தருக்கும் நெடுங்காலமாகத் தொடர்ந்து இழுக்கு ஏற்படுத்தி வருகிற இலங்கைப் புத்த குருமார்களையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் புத்தச் சமயத்திலிருந்தே விலக்குவதாகவும், இவை அனைத்துக்கும் ஒத்துழைக்கிற இலங்கை பௌத்த நாடே இல்லை – புத்தச் சமயத்துக்கும் கொள்கைக்கும் எதிரான நாடு எனவும், அந்நாட்டில் இனியும் புத்தபிரானின் புனிதப் பல் இருப்பது அந்தப் பெருமானுக்கு இழுக்கு எனவும், அதைத் திபெத் போன்ற வேறு ஏதாவது நாட்டுக்கு இடமாற்ற வேண்டும் எனவும் அறிவிக்குமாறு தலாய் லாமாவிடம் தமிழர் தலைவர்களும் அமைப்பினரும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்!

உண்மையில், இதை நாம் எப்பொழுதோ செய்திருக்க வேண்டும்! தான் பௌத்தத் துறவி என்பதை முற்றிலும் மறந்து அனகாரிக தர்மபால அவ்வளவு வன்மையான வார்த்தைகளைத் தமிழர்களுக்கு எதிராக உமிழ்ந்தபொழுதே, பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக முதன்முதலில் ஆயுதத்தைக் கையிலெடுத்தபொழுதே செய்திருக்க வேண்டியது இது. நம் முன் தலைமுறைத் தலைவர்கள் அதைச் செய்திருந்தால் ஒன்றரை இலட்சம் தமிழ்ச் சொந்தங்களை நாம் இழந்திராமல் கூடப் போயிருக்கலாம். நடந்த இனப்படுகொலைக்குப் பின்னாவது, அதன் பின்னிருந்த பௌத்தக் கரங்களை, அதையொட்டிய பௌத்தமய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி நாம் தலாய் லாமாவிடம் பேசியிருந்தால், தமிழர்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தைக் கூட நாம் தடுக்க முடிந்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். எனவே, இந்தக் கலவரத்தையொட்டியாவது, இப்பொழுது புதிதாகப் புறப்பட்டிருக்கும் அடுத்த தலைமுறைத் தமிழ்த் தலைவர்களாவது இந்தக் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்!

ஒருவேளை, தலாய் லாமா இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் சட்டம் மூலமாக அவரை நீதிமன்றத்துக்கு இழுத்தோ, அரசியல்ரீதியாகப் பன்னாட்டு அவைகளில் அவரை நேர்நிறுத்தியோ இதைச் சாதிக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும்!

இதனால் என்ன பலன்? 

இஸ்லாமியத் தமிழர் தலைவர்களையும், தலாய் லாமாவையும் சந்தித்து மேற்கண்டவாறு வலியுறுத்துவதன் மூலம் நாம் சாதிக்கக்கூடியவை கொஞ்சநஞ்சமல்ல!

  • முன்பே கூறியது போல், இலங்கை நாட்டை வழிநடத்துபவர்களே அங்குள்ள புத்த குருமார்கள்தாம். அவர்கள்தாம் தமிழர்களுக்கு எதிராக அந்த ஆட்சியாளர்களையும் மக்களையும் தொடர்ந்து தூண்டி விடுகிறார்கள். அப்படித் தூண்டுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் முதன்மையான ஆயுதமே புத்தச் சமயம்தான். அவர்களையே பௌத்தச் சமயத்திலிருந்து வெளியேற்றி விட்டால், தமிழர்களுக்கு எதிரான அவர்களின் முதன்மையான ஆயுதம் ஒன்றையே முறியடித்ததாகும்.
  • ஈழத் தமிழினப் படுகொலையின்பொழுது சீனா இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து உதவியது. அதற்குக் காரணம் கேட்டபொழுது, இலங்கையும் பௌத்த நாடு எனும் முறையில் தாங்கள் அந்த உதவியைச் செய்வதாகச் சீன ஆட்சியாளர்கள் கூறினார்கள். இலங்கை பௌத்த நாடே இல்லை; பௌத்தச் சமயத்துக்கு எதிரான நாடு என அறிவிக்கச் செய்தால் இப்படிச் சமய அடிப்படையிலான உதவிகள், ஆதரவுகள் இலங்கைக்கு கிடைப்பதைத் தடுக்க முடியலாம்.
  • ஏற்கெனவே, மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக இருக்கின்றன. இப்பொழுது இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலைச் சுட்டிக்காட்டி இலங்கையின் சிங்கள-பௌத்த இன-சமய வெறி எந்த அளவுக்கு அங்குள்ள இஸ்லாமியச் சமூகத்துக்கு ஆபத்தானது என்பதை நாம் இஸ்லாமியத் தமிழர்கள் மூலம் இஸ்லாமிய நாடுகளுக்குப் புரிய வைத்தால் இலங்கைக்கு எதிராக அந்த நாடுகளும் அணி திரளும்.

ஆக, தமிழர்கள் மீது சிங்கள பௌத்தர்கள் நடத்தியுள்ள இந்த அண்மைத் தாக்குதலைப் பற்றி இஸ்லாமியத் தமிழினத் தலைவர்களுடனும் தலாய் லாமாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான மேலைநாடுகளின் தீவிரவாத ஒழிப்புப் போக்கைப் பயன்படுத்தி இலங்கை எப்படி ஒட்டுமொத்த உலகச் சமுதாயத்தையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பியதோ, அதே போல அதே இஸ்லாமிய நாடுகளையும், அதே மேற்கத்திய நாடுகளையும் நாம் இலங்கைக்கு எதிராகத் திருப்புவதோடு, நம் இன அடையாளங்களை அழிக்க முயல்கிற அவர்களின் சமய அடையாளத்தை இடம் தெரியாமல் போகச் செய்ய முடியும்.

தமிழினத் தலைவர்கள் நினைத்தால் இதைக் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்! தலைவர்கள் வை.கோ, சீமான், பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், தியாகு எனத் தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவுத் தலைவர்களும், மே பதினேழு, சேவ் தமிழ்சு, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போன்ற தமிழீழ இயக்கங்களும் இலங்கையின் தமிழ்த் தலைவர்களான சிவாஜிலிங்கம் முதலானோரோடும் இலங்கையின் தமிழீழ ஆதரவுக் கட்சிகளோடும் கைகோக்க வேண்டும்! இலங்கையிலுள்ள இஸ்லாமியர் அமைப்புகளின் தலைவர்களையும், தமிழ்நாட்டிலுள்ள த.மு.மு.க முதலான இஸ்லாமியத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இக்குழு சந்திக்க வேண்டும்! பின்னர், இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தலாய் லாமாவைச் சந்திக்க வேண்டும்!

நடந்தது துக்ககரமான நிகழ்ச்சிதான். ஆனால், மீண்டும் அப்படியொரு கொடுமை நடக்காமலிருப்பதற்காக அதையொட்டி இப்படிச் சில அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது தவறில்லை! , அது நம் கடமை!
ERANIYAN

 

SHARE