கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்ர கட்சிக்கு அள்ளிப் போடுங்கோ என்று களம் இறங்கியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய்விட்டால் காணும் அதுக்குப் பிறகு இரண்டில ஒண்டு பாக்கஇறதாச் சொல்லுறார். வெளியில இருந்து ரண்டில ஒண்டை எடுக்கேலாதோ என்று மக்கள் கேட்டாலும் உள்ளை இருந்து கேக்கிறமாதிரி வருமோ என்று அண்ணை அள்ளி வீசியிருக்கிறார்.
மக்களின் தீர்வை பெற்றுக் கொடுக்க ஏன் பாராளுமன்றம் போகவேண்டும்? தமிழ் மக்களது எந்த உரிமை பாராளுமன்றத்தில பேசியதால கிடைச்சது? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம், சம்பந்தன் இவை எல்லாரும் பாராளுமன்றத்தில பாய் விரிச்சுப் படுத்தோ கிடந்தவை? அவை உரிமை வேணும் எண்டு கேட்டு ஒண்டுமே பேசவே இல்லையோ? அப்பிடிப் பேசியிருந்தால், கேட்டும் குடுக்கேல்லை எண்டா, கஜேந்திரன் எப்புடி ரண்டில ஒண்ட வாங்குவார்?
பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் “தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும், பாராளுமன்றத்தில போய் உழவேண்டியதில்லை “என்று.
இன்னொருவரிடம் கேட்டேன் விலை போகாத தலமை , தூய்மையிலும் தூய்மை என்றெல்லாம் சொல்லுறாங்களே அவங்களை ஏன் நீங்கள் நம்பிப் புள்ளடி போடக்கூடாது என்று. அதுக்கு அந்த மனுசன் சொன்னபதில் எனக்கு கன்னத்தில விளாசினது போல இருந்திது. ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டிறது அவன் விடுற விடுகையில இல்லைத் தம்பி அவன்ர வரலாறைப் பாருங்கோ எண்டார். அதுக்குப் பிறகு சொன்னார், அடி ஆமணக்கு நுனி நொச்சி மரம் எண்டு சொன்னா நம்புறதுக்கு நான் என்ன தம்பி அடி முட்டாளோ என்று.
விலை போகாத தலைமை ஏன் அமெரிக்காவின்ர நிதி நிறுவனத்தோட நிக்குது? விலை போகாத தலைமை ஏன் அமெரிக்கன் உயர்ஸ்தானியத்துக்கு அடிக்கடி போட்டு வருது.
இரண்டு தேசம் ஒரு நாடு. சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா எப்பிடி இதை எடுப்பியள் எண்டு சொல்ல வேணும் தானே. பாராளுமன்றத்தில பறந்து பறந்து சுப்பர் மான் போல அடிச்சுக் கேப்பியளோ இல்லை, நல்லூர் கோயில் வாசலில நிண்டு நாதஸ்வரத்தில ஊதிக் கேப்பியளோ இல்லை, இரணமடுக் குளத்தில குதிச்சு செத்திடுவன் ஒரு தேசத்தை தா எண்டு கேப்பியளோ இல்லை, வடமாகாண சபைக்கு முன்னாலை அவித்துப் போட்டு ஆடுவம் தீர்வு வைக்கேல்லை எண்டா எண்டு மிரட்டுவியளோ அல்லது வடிவேல் பாணியில் அமெரிக்காவுக்கு போய் கடுப்பேத்திறார் மை லோட் என்று முழங்கிக் கேப்பியளோ? எப்பிடி எடுப்பியள். சொல்லத்தானே வேணும். அக்காக்கு பிடிச்சது ஆலமரப் பேய் எண்டு சொல்லுறமாதிரி தீர்வு சொல்லுறதே? பேய் பிடிச்சா ஒரு கட்டு வேப்பிலை. குறுக்கால போவாரே நீங்கள் சொல்லுறதுக்கு பலி குடுக்க வன்னில இனிச் சனம் இல்லை.
தாத்தன் பிரசா உரிமை பறிச்சு மிஞ்சிப்போன சனத்தில கொஞ்சம் வன்னியில இருக்கு அங்கை போய் எப்பிடி ராசா வாக்குக் கேட்பியள். உங்களை நாயை விரட்டிறமாதிரி நாட்டை விட்டு விரட்டின கட்சி அள்ளிப் போடுங்கோ என்று கேப்பியளோ?
வன்னியில சனம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அலையுதுகள். இவங்கள் அங்கை போய் வீரம் பற்றிக் கதைக்கிறாங்கள். முல்லைத்தீவுக்குப் போன் போட்டு கேட்டேன் ஒரே கஜேந்திரன் அலை போலகிடக்கு உண்மையோ என்று. அந்தாளுக்கு கோவம் வந்திட்டுப் போல. சொல்லிச்சு அப்பன் கிடந்தானாம் கோவணத்தோட மகன் சொன்னானாம் இழுத்துப் போத்துவிடப்பா என்று. நாங்கள் பட்ட காயம் ஆறேல்லை கொழும்பில சொகுசாப் படுத்துக் கிடந்திட்டு இரண்டு கொட்டை ஒரு பழம் எண்டு வாறாங்கள் என்று.
உண்மையாய் சொல்லுங்கோ. அம்மாவாணை இரண்டு தேசம் ஒரு நாடு எண்டா என்ன? கோதாரி விழ கூட்டமைப்பை விட இவங்கள் பெரும் கில்லாடிகளாய் எல்லோ கிடக்கு. வெளிநாட்டுக் காசு. அமெரிக்காவில இருந்து அட்வைசு, எலக்சன் கேட்க முன்னாள் போராளியள். உண்ணாணை சொல்லுங்கோ இந்த முன்னால் பின்னால் போராளியள் யாரவை? மகிந்தவுக்குப் பின்னால போனவையா, சனத்துக்கு முன்னாலை போய் சரண்டைந்தவையா? அமெரிக்காவோட நிண்டு காட்டிக் குடுத்தவையா, கேபியோட போனவையா, விமான நிலையத்தில பாப்போவோட நிண்டு தப்பிப் போகாமல் கோத்தாவுக்கு காக்கா பிடிச்சவையா? யார் ராசா இந்த முன்னாள் போராளியள்?
உது என்ன விளையாட்டு? மக்கள் உயிரை வைச்சு என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு? பகிடி விட உங்களுக்கு இரண்டு தேசம் ஒரு நாடு தான் கிடைச்சுதோ? விளையாடுங்கோ. கொழும்பில இருந்து வந்து எவ்வளவு காலத்துக்குத்தான் ஆடுறியள் எண்டு பாப்பம்.
புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்
அமெரிக்க அரசு போராட்டங்களை அழிப்பதற்கும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளில் (counterinsurgency) ஈடுபடுவதற்கும் பணம் வழங்குவதற்கான அரச அமைப்பின் பெயர் யூஸ்எயிட்(USAID). இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய அழிவுகள் புதியவை அல்ல. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 1972 ஆம் ஆண்டிலேயே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது.
இலங்கையின் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மார்கா என்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கியது. இந்த நிறுவனத்தின் ஊடாக பல்வேறு உள்ளகத் தகவல்களி அமெரிக்க அரசு ஆவணப்படுத்திக்கொண்டது.
2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி USAID ஐ பொலீவிய அரசாங்கம் வெளியேற்றியது.
பொலீவியாவில் மட்டுமல்ல வெனிசூலா உட்பட ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இன் அழிவு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டன. வெனிசூலாவில் அமெரிக்க சார்பு அரசைத் தோற்றுவித்து அங்குள்ள எண்ணைவளத்தை அபகரிப்பதற்காக இந்த அமைப்பு மேற்கொண்ட சதி நடவடிக்கைகள் விக்கிலிக்ஸ் கேபிள்களில் வெளியாகின.
வியட்னாமியப் போராட்டம், நேபாளப் புரட்சி, சண்டினிஸ்டா போராட்டம் உட்பட உலகின் அனைத்து எழுச்சிகளையும் போராட்டங்களையும் அழிப்பதில் USADI இன் பங்கு பிரதானமானது. போராட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் போர் முடிந்த பின்னரும் உளவு வேலைகளில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பைத் இலகுபடுத்துவதற்கு USADI பயன்படுகிறது.
USAID இன் அண்மைக் கால நடவடிக்கைகள் சில:
– 2009 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 16ஆம் திகதி, தலிபான்கள் USAID இன் அலுவலகம் ஒன்றைக் குண்டுவைத்துத் தகர்த்தனர். அதன் பின்னர் உயர் மட்ட USAID அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள் கவனத்திற்குரியவை. அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ, USAID இன் பெயரைப் பயன்படுத்தியே ஆப்கானிஸ்தானில் தலைமறைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
– 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி USAD இன் நிதியில் இயங்கும் Development Alternatives Inc என்ற அமைப்பு மோபைல் தொலைத்தொடர்பு வலையமைப்பை ஊடுருவியதாகவும், கொம்யூட்டர் வலையமைப்பை ஊடறுத்ததாகவும் கியூபாவில் ஆதாரபூர்வமாகக் குற்றம் சுமத்தப்பட்டது. Development Alternatives Inc இன் ஊழியர் ஒருவரே இவ்வாறான குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டு அமெரிக்க அரச காங்கிரஸ் 40 மில்லியன் டொலர்களை கியூபாவில் செயலாற்றும் USAID இற்கு ஒதுக்கீடு செய்தது.
– மனிதப் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, போரின் பின்னர் USAID ஐ அங்கு களமிறக்கியது. ஆய்வு வேலைகள் என்ற கோதாவில் USAID உளவு வேலைகளில் ஈடுபட்டது.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்காகவும் சுதந்திரமான சந்தை எனப்படும் பல்தேசிய நிறுவனங்களின் ஊடுருவலுக்காகவுமே USAID செயற்படுவதாக தனது நோக்கங்களைக் வெளிப்படுத்தும் USAID இன் அழிவு வேலைகள் அண்மையில் ஹெயிட்டி உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வெளிவந்துள்ளது.
USAID இன் முதலாவது நடவடிக்கை வியட்னாமியப் போராட்டத்தை அழிப்பதற்கே பயன்பட்டது. 1962 ஆம் ஆண்டு வியற்னாமிய கம்யூனிஸ்டுக்கள் தலைமை தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்காக USAID இன் திட்டம் கிராம மட்டத்திலான உள்ளூர் அரசியல்வாதிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. இற்காக 10 மில்லியன் டொலர்களை அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கியது.
இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய (2004) காலப்பகுதியில் நேரடியான அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த நிறுவனம் பல்வேறு உளவு வேலைகளில் ஈடுபட்டது. புலிகளுடன் இறுதிக் காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பலர் USAID இன் ஊடாகவும் நேரடியாகவும் அமெரிக்க அரசினால் உள்வாங்கப்பட்டவர்களே.
இவர்கள் பொதுவாக அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகவே செயற்பட்டு புலிகளை மிகத் தந்திரமாக அழித்தனர். அதன் பின்னரான ஆறு வருடங்களில் மீண்டும் எழுச்சி ஒன்று ஏற்படாதவாறு திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.
தமிழ்ப் பேசும் மக்களைப் பிரித்து மேய்ந்து, சிதைத்துச் சீரழித்து அமெரிக்க அரசின் தீயில் சாம்பல் மேடுகளை மட்டுமே எச்சமாக விட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
நோர்வேயின் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சூல்கையிம் Development Co-operation Directorate (DCD-DAC) என்ற அமைப்பின் தலைவராகச் செயற்படுகிறார். இந்த நிறுவனத்திற்குப் பிரதானமாக நிதியுதவி வழங்கிவருவது USAID ஆகும். அண்மையில் உலகத் தமிழர் பேரவை மற்றும் இலங்கை அரசிற்கும் இடையேயான பேச்சுவாத்தையின் போது எரிக் சொல்கையிமும் கலந்துகொண்டார்.
இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்ட போராளிகளின் புனர்வாழ்வு மையத்தின் பிரதான நிதி வழங்குனர் USAID நிறுவனமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான சந்திர நேரு, 2009 ஆம் ஆண்டு இனியொருவிற்கு வழங்கிய பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் அமெரிக்க அரசின் பாதுகாப்பிலேயே புலிகளுடனான பேச்சுக்களுக்கு இடைத் தரகர்களாகச் செயற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேச்சுவார்த்தைக்கு இடைத் தரகராகச் செயற்பட்டவர்களில் ஒருவர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் பில் கிளிங்டன், ஜோர்ஜ் புஷ் உட்பட்ட குழுவொன்று இலங்கைக்குப் பயணம் செய்தது. அக்காலப்பகுதியிலேயே USAID இன் நடவடிக்கைகள் அதிகரித்தன. 2004 ஆம் ஆண்டு இன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதும் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்த முனைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமிக் காலத்தில் தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த பன் கீ மூன் ஊடாக ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கப்பட்டது. ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் வட-கிழக்கில் தேர்தலைப் பகிஷ்கரிகுமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதில் USAID முகவர்களின் பங்கு இருந்திருக்கலாம். மகிந்த ஆட்சிக்கு வந்ததும், இனவழிப்பிற்கான திட்டங்கள் அமெரிக்க இந்திய அரசுகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் அனைத்தும் தயாரான நிலையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டில் இனவழிப்பு நிறைவிற்கு வந்தது.
இனப்படுகொலையின் பின்னர், அதற்கு எதிராக உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் ராஜபக்ச அரசால் அழிக்கப்பட அமெரிக்க அரசுடன் இணைந்து அழிவிற்குத் துணை சென்றவர்கள் எஞ்சியிருந்தனர். அவர்கள் அமெரிக்கவின் பங்கை மூடி மறைத்து உலக மக்கள் மத்தியில் தமிழர்கள் அமெரிக்காவின் அடியாட்கள் என்ற பொது அபிபிராயத்கை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இறங்கினர். அமெரிக்கா போர்க்குற்ற விசாரணை செய்து இனக்கொலையாளிகளைத் தண்டிக்கும் என மக்களைச் சமாதானப்படுத்தி தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனfர். அழித்தவர்கள் தலைமையை கையகப்படுத்தினர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்கா விரும்பிய சுரண்டலுக்கான சூழல் தோன்றியது. அதற்கு எதிராகவும் ஆட்சி மாற்றத்திற்கு எதிராகவும் குரல்கள் எழும் என்பது வெளிப்படையானதே, இந்த நிலையில் எதிர்த்தரப்பினரையும் அமெரிக்க அடியாள் படைகளாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியும் அமெரிக்க ஏகாதிபத்திய அணியைப் பிடித்தே மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம் எனக் கூறுவது இதனால்தான். போராட்டத்தை அழிக்கத் துணை சென்ற முகவர்கள் மட்டுமே இன்றைய தமிழ் அரசியலைத் தலைமை தாங்குகின்றனர்.
இனப்படுகொலையின் போது, புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடும் நபர்கள், தொடர்பாளர்கள், இடைத்தரகர்கள் போன்ற அனைவருமே அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டவர்களும் அமெரிக்க அரசுடன் தொடர்பிலிருந்தவர்களுமே.
பொதுவாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு மேலும் அழிவுகளை ஏற்படுத்த முயல்பவர்களை இலகுவாக அடையாளம் காணலாம். அமெரிக்க அரசிற்கு எதிராகவும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர்கள் செயற்பட மாட்டார்கள். சுன்னாகத்தில் நடைபெற்ற அழிப்பின் பின்னணியில் செயற்பட்ட எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் காரணத்தின் பின்புலம் இதுவே. அமெரிக்க அரசின் தலைமையிலான சர்வதேசம் தொடர்ந்தும் அழிவுகளை ஏற்படுத்த முனைந்தாலும் அதன் பிரச்சார முகவர்கள் போன்றே செயற்படுவார்கள்.
வன்னியில் புலிகள் அழிக்கப்பட்ட போது USAID இன் பங்கை பலர் அறிந்திருக்கவில்லை. இன்று தகவல்கள் வெளிப்படையான பின்னரும் அதே நடவடிக்கைகள் தொடர்கின்றன. அமெரிக்காவின் சர்வதேச விசாரணை என்ற நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து வடக்குக் கிழக்கில் தனக்கு வாக்களிக்கக் கோரும் கஜேந்திரகுமார், 2005 ஆம் ஆண்டு துரிதமான உதவி வினியோகத்தைச் செயற்படுத்துமாறு USAID இன் கரங்களைப் பிடித்து அழைத்துவந்தார்.
வாஷிங்டனில் கஜேந்திரகுமார் USAID உட்பட்ட நிறுவனங்களை அழைத்துவருவதற்கு நடத்திய கூட்டத்தில் IOM . போன்ற அமைப்புக்கள் கலந்துகொண்டன.
2009 ஆம் ஆண்டில் வன்னிப் படுகொலைகளுக்கும் அதன் பின்னரான சீர்குலைவுகளுக்கும் USAID, IOM போன்ற நிறுவனங்கள் காரணமாகின.
1951 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்பட்ட IOM அமெரிக்க அரசின் தேவைகளுக்கு ஏற்ப அகதிகளைக் கையாளும் நிறுவனமாகும். 91 உறுப்பு நாடுகளைக் கொண்ட IOM அகதிகளைத் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்ற பலர் போர்க்குற்றம் சுமத்தப்படுகின்றனர். இவர்களை இலங்கை அரசிடம் திருப்பி ஒப்படைக்க IOM பயன்படுத்தப்படலாம். அரசியல் அறீவீனம் காரணமாகவே கஜேந்திரகுமார் அமெரிக்க அரசிடம் சரணாகதி அடைந்தார் என அவர்களின் தரப்பில் சிலரால் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையானால் கஜேந்திரகுமாரும் குழுவினரும் சுய விமர்சனம் செய்துகொண்டு மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கலாம்.
அமெரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளைச் சர்வதேசம் என அழைத்து அவைகளை நம்புமாறு மக்களைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்று கஜேந்திரகுமாரின் அரசியல் சுலோகங்கள் அமெரிக்க அரசின் நலன்களுக்கானவையே தவிர தமிழ்ப் பேசும் மக்களுக்கானவை அல்ல.
இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டும் கஜேந்திரகுமார் குழுவை முன்னிறுத்தி அரசியல் நடத்தும் முகநூல் விசிறிகள் தமிழ் மக்களின் அழிவை விரும்புகின்றனரா? அவர்களில் எத்தனைபேர் அமெரிக்க உளவாளிகள்??
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கஜேந்திரகுமாரின் அழிவு அரசியலுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு இணையான அமெரிக்க்அரசின் அடியாள் எம்.ஏ.சுமந்திரன் என்பதில் யாருக்கும் சந்தேகங்கள் இல்லை.
இலங்கைப் பாசிச பாராளுமன்ற அரசியல் ஊடாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை மக்கள் மிக நீண்ட காலத்தின் முன் உணர்ந்துள்ளனர். மக்கள் பாராளுமன்ற ஆட்சியில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்த வேண்டுமாயின் வாக்களிப்பு நிலையங்க்ளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பதே இன்று அவர்கள் முன்னால் உள்ள தெரிவு.
இல்லையெனில் தமிழ்ப் பேசும் மக்களை அழித்த உளவு நிறுவனங்களின் முகவர் கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களிக்கவேண்டிய அவல நிலைக்கு உள்ளாகிவிடுவார்கள். பாராளுமன்றத் தேர்தல் ஊடாக பிச்சையெடுக்கும் அவலமான சமூகம் ஒன்றை உருவாக்கத் துணை செல்வதற்குப் பதிலாக உரிமைக்காகப் போராடுவதற்காக மக்களை அணிதிரட்டுவதே இன்று ஒவ்வொருவர் முன்னாலும் உள்ள கடமை.
‘தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் ‘ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.
கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமற்ற வெற்று முழக்கங்களின் பின்புலத்திலுள்ள ஆபத்துக்கள் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நோக்கமாகக் கொண்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் போல இவை தோன்றினலும், இவற்றின் பின் விளைவுகள் ஆபத்தானவை. இவர்கள் தெரிந்துகொண்டே திட்டமிட்டு இவ்வாறான சுலோகங்களை முன்வைத்திருந்தால் இவற்றை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த மாட்டார்கள்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்தைப் பிழைப்பாக நடத்தும் மக்கள் விரோதிகளுக்கு இரண்டு தேவைகள் உண்டு. முதலாவதாக தமது முகவர் போலச் செயற்படும் கட்சி ஒன்றின் தேவை. இரண்டாவதாக மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதியின் இருப்பு. இதில் முதலாவது தேவையைக் கஜேந்திரகுமார் நிறைவு செய்கிறார். ஆக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் முழக்கங்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளின் தேவையை ஒட்டியே முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவோடு ஓடிப்பிடித்து விளையாடுவோம் என்றும், ராஜபக்சவைப் பிடித்துத் தூக்கில் போட்டு வெடிகொழுத்துவோம் என்றும் கேலிகூத்தான வாக்குறுதிகள் மட்டுமே புலம்பெயர் குழுக்களின் அரசியல்.
அமெரிக்கா போன்ற நாடுகள், மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போராட்டத்தையும், போர்குணமும் சமூகப்பற்றுமுள்ள போராளிகளையும் அழித்துக்கொண்டிருப்பதைக் குறித்து இவர்கள் மூச்சுவிடுவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று கஜேந்திரகுமார் குழு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது. மக்களுக்குத் தேர்தல் ஊடாகப் போலி நம்பிக்கைகளை வழங்கும் அமைப்பு முறையை நிராகரித்து தேர்தலைப் புறக்கணிக்குமாறு பல்வேறு அரசியல் சக்திகள் கருத்தை முன்வைத்தன. தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறும் கஜேந்திரகுமார் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் என்ன?
தமிழ்ப் பேசும் மக்கள் கஜேந்திரகுமார் கேட்டுகொண்டதன் அடிப்படையில் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் மகிந்த மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பார் என்பது உறுதி.
மொத்தத் தமிழ்ப் பேசும் மக்களும் மகிந்தவை எதிர்த்து வரலாறு காணத அளவில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்த போது தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் தெளிவற்றது. மகிந்தவின் இருப்பிற்கான புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் தேவைக்கான குரலாகவும் இதனைக் கருதலாம்.
சரி, அப்போது மகிந்தவை ஆட்டம்காண வைத்த தேர்தலைப் புறக்கணித்தது ஏதோ ஒரு வகையில் நியாயமானால் ஏன் இப்போது பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து ஒற்றையாட்சி மீது மக்களின் வெறுப்பை உணர்த்துமாறு கோரக்கூடாது.
புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை என்பது அவர்களுக்கே தெரிந்திருந்தது, இன்று அவை சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலை இலங்கையின் ஒற்றையாட்சிப் பாசிசப் பாராளுமன்றத்திற்குச் செல்வதை ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற மற்றொரு கோமாளித்தனத்தை புலம்பெயர் குழுக்கள் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டன.
இதற்கு மிகப் பொருத்தமான தெரிவாக கஜேந்திரகுமாரைத் தவிர வேறு யாரையும் கண்டுபிடித்திருக்க முடியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் மலையளவு வேறுபாடிருப்பதாக இணையங்களில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. வேறுபாடு என்பது அவர்கள் முன்வைக்கும் சுலோகங்களின் மட்டுமே காணப்படுகின்றது, நடைமுறையில் இரண்டு கட்சிகளுமே ஒரே விடையத்தைத்தான் கூறுகின்றன.
வேறுபாடுகளை விட ஒற்றுமையே இவர்கள் மத்தியில் அதிகம்:
– அழிக்கும் சர்வதேசத்தைப் பிடித்து வேண்டியத்தைப் பெற்றுத்தருவோம் என மக்களை ஏமாற்றுதல்.
– ஏனைய தேசிய இனங்களிலிருந்தும் உலகின் ஜனநாயக சக்த்திகளிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்துதல்.
– இலங்கை அரசின் பாசிசப் பாராளுமன்ற அமைப்பு முறையை நம்பக் கோருவது.
– மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளாது தேர்தல் காலத்திற்காக மட்டும் வெற்று முழக்கங்களைத் தயார்படுத்திக் கொள்வது.(இரண்டு கட்சிகளும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுன்னாகத்தில் அழிப்பு நடைபெற்றது.)
– அழிவுகளையும் பின்விளைவுகளையும் சிந்திக்காமல் வெற்று முழக்கங்களால் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்க முனைவது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:
இவர்கள் தமது பெயரை தமிழ்த் தேசியச் சாம்பார் என மாற்றிக்கொள்ளலாம். உப்புப் புளியற்ற இந்தச் சாம்பாரில் சுவையற்ற அத்தனை அம்சங்களும் கலந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இருப்பதால் அதிலிருந்து விலகிச் செல்லப் போவதில்லை என்று வட மாகண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் லண்டனில் முழங்கினார். இனக் கொலையாளிகள், போர்க்குற்றவாளிகள் போன்றவர்களிலிருந்து கடை நிலைத் திருடர்கள் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூண்கள். இவர்கள் அனைவரும் சுயாதீனமாகச் செயற்பட வசதியளிக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயலம் என்று கூறிக்கொள்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழி நடத்துபவர் எம்.ஏ.சுமந்திரன். சுமந்திரன் சம்பந்தன் இணைந்து உருவாக்கும் திட்டங்களுக்கு நேரடியாக முரண்படாமல் ஒவ்வொருவரும் தாம் வேண்டியதைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆக, அதுவே ஜனநாயகம் என அந்த அமைப்பில் அழைக்கப்படுகின்றது.
a) மாறும் சுலோகங்களின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க இணக்க அரசியல்: சம்பந்தன் சிங்கக் கொடியோடு தோன்றி தமிழ்த் தேசியத்தை நல்லிணக்கத்திற்கு விற்றுவிட விக்னேஸ்வரன் நெற்றிப் பொட்டும் திருநீறுமாக ஒரு நாடும் இரு தேசமும் என்பார். அதே விக்னேஸ்வரன் இனப்படுகொலை நடந்தபின்னரே நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாகக் கூறிவிட்டு பின்னர் இனப்படுகொலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார். கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கிறது என்பார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சியின் முழக்கங்களைக் கூட எப்போதும் உறுதியாக முன்வைத்ததில்லை.
தமது வசதிக்கேற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். இவை எல்லாவற்றின் பின்னாலும், இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசுடன் இணைந்தே தமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
b)சுயநிர்ணைய உரிமையத் தேடித்தேடி நிராகரித்தவர்கள்:
இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடைசெய்கிறது. பிரிந்து செல்லும் உரிமையை அது தடைசெய்யவில்லை. தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவது சட்டப்படி இலங்கையில் குற்றமல்ல. நிலைமை இவ்வாறிருந்த போதிலும் தாம் சுயநிர்ணைய உரிமை கோரப்போவதில்லை எனத் தமிழ்த் தேசியத்தின் தலையில் அடித்து சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமது கட்சியின் பெயரில் தேசியம் என்று பெயரை வைத்துக்கொண்டுள்ள கூட்டமைப்பு விதேசிகளின் அசைக்க முடியாத கூட்டு என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
c) சுயநிர்ணைய உரிமை விற்பனை செய்யப்பட்டுவிட்டது: இரண்டு முக்கியமான அழிவு நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலாவதாக இலங்கைப் பாசிச அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டே தாம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது. இரண்டாவதாக அவ்வாறு உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்தியாவுடனும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தயவை நாடவேண்டும் என்கிறது. இவற்றையெல்லாம் அவர்கள் மூடிமறைக்கவில்லை. வெளிப்படையாகவே மேற்கொள்கிறார்கள். இவர்கள் கேட்கும் உரிமைகளில் சுயநிர்ணையம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமை உள்ளடங்கவில்லை.ஆக, சில்லரை உரிமைகளுக்காக சுயநிர்ணைய உரிமையையும் நான்கு தசாப்தப் போராட்டத்தையும் அன்னியர்களிடமும் இலங்கை அரசிடமும் மொத்த விற்பனை செய்துவிட்டனர்.
தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள்
நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர்.
கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால சமூகத்தை இருண்டதாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
பேரினவாதிகளுக்கு வர்ணம் பூசி தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களாக அறிமுகப்படுத்தும் டக்ளஸ் தேவாந்தா, சசிகலா மகேஸ்வரனில் ஆரம்பித்து கஜேந்திரகுமார் சம்பந்தன் வரைக்கும் மக்களின் தலைவிதியைத் தாம் தீர்மானிக்கப் போவதாகக் கிளம்பியிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் மூலையில் லட்சக்கணக்கில் மக்கள் அழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் முழுவதும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் எச்சசொச்சங்களைத் துடைதெறிந்து அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வன்னியில் நடந்தவை மனிதப் படுகொலைகள். இன்று நடந்துகொண்டிருப்பதோ அதைவிட ஆபத்தான சுத்திகரிப்பு. இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட நேர்மையான மனிதர்கள் இல்லாத வெற்றிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெற்றிடத்தை நிரப்ப முனைகின்ற ஒவ்வொரு அரசியலும் பிழைப்புவாதிகளால் அழித்துத் சிதைக்கப்படுகின்றன.
இந்த இருண்ட சூழலில் ஆங்காங்கே நம்பிக்கைதரும் மக்கள் பற்றுள்ள மனிதர்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகின்றது.
மக்கள் மத்தியில் சரியான கருத்தை எடுத்துச் செல்வதும் நடந்துகொண்டிருக்கும் அழிவிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இன்று ஒவ்வொருவரதும் கடமையாகும்.
மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்வைதை விட போராடுவதே மேல் என்ற உணர்விற்கு மறுபடி வந்து சேரவேண்டும். பாராளுமன்றப் பதவிக்காக அருவருக்கத்தக்க பொய்களை மக்களிடம் அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிட ஊடகங்கள் அவற்றை அப்படியே உமிழ்கின்றன.
புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’ இன் இரு புறங்களிலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
நான்கு தசாப்தப் போராட்டத்தின் விளைபலனா இது, என துயரத்தில் புலம்பும் சமூகப்பற்றுள்ளவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இன்றைய காலத்தின் அவசியம்.
தேர்தலில் மக்களை எப்படியெல்லாம் ஏமற்றுகிறார்கள்?
1. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
இன்றை உலகமாமான காலத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் எமது நாடுகளில் தேசியம் என்பது ஜனநாயகத்தை மீட்பதற்கான ஆரம்பப் பாத்திரத்தை வகிக்கவல்லது. ஆனால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தேசியம் என்பது அயோக்கியர்கள் பிழைப்பு நடத்துவதற்கான ஆயுதமாக மாறியுள்ளது.
a) தொடரும் சர்வதேச விசாரணை: எதற்கெடுத்தாலும் சர்வதேசம் விசாராணை செய்யும், சர்வதேசம் விசாரிக்கும், இனப்படுகொலை நடந்தது, நடக்கிறது, என்று கஜேந்திரகுமார் கூறுகின்ற அழகான வார்த்தைகளின் பின்னால் மக்களை ஏமாற்றும் வெற்றுச் சுலோகங்களே உள்ளன.
இவர்கள் சர்வதேசம் என்று இவர்கள் கூச்சலிடும் நாடுகள் மைத்திரிபாலவையும், ராஜபக்ச இல்லாத அரசை நம்புங்கள் என்று கூறுகின்றது. இலங்கை அரசோடு இணைந்து அபிவிருத்தி செய்யுங்கள் இனப்படுகொலை என்று பேசாதிர்கள் என்றெல்லாம் இவர்கள் கூறும் சர்வதேசம் ஆணையிட, இவர்களோ சர்வதேசத்தை நம்புங்கள் என்கின்றனர்.
ஆக, சர்வதேச விசாரணை நடத்துவோம் என்றும் சர்வதேசத்தைப் பிடித்து இனப்படுகொலை என்று கூறுவோம் என்றும் இக் குழுவினர் கூறுவது அப்பட்டமான பொய். மக்களை அழகான உணர்ச்சியூட்டும் வார்த்தைகளால் தேர்தலுக்காக ஏமாற்றும் வழிமுறை இது!
b) ஏமாற்றத்திற்கான குரல்: ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற முழக்கத்தோடு அரசியல் கடைவிரித்திருக்கும் கஜேந்திரகுமார் இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பேரினவாதிகள் மத்தியில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார். காலனியத்திற்குப் பின்னான காலம் முழுவதும் பாராளுமன்றம் ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் என்பது குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட உத்தவாதம் செய்யவில்லை என்பதால் தானே போராட்டமே ஆரம்பித்தது?
ஆக, கஜேந்திரகுமார் மட்டும் பகலில் விளக்குப் பிடித்து தேசியத்தின் பெயரால் பாராளுமன்ற வளாகத்திற்குள் ஜனநாயகத்தை எப்படித் தேடுவார்? ஆக,, கஜேந்திரகுமாரின் குரல் மாற்றத்திற்கான ஏமாற்றத்திற்கானதா?
c) விடுதலைப் புலிகள் மீதான விசாரணை: கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு உணர்ச்சி முழக்கம் ‘விடுதலைப் புலிப் போராளிகள் விசாரிக்கப்படக்கூடாது’ என்பதாகும். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் ஏற்கனவே இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள், தண்டனை அனுபவித்தவர்கள் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்பதாகும். எவ்வளவு அபத்தமான காட்டிக்கொடுப்பு இது.
இதன்படி தண்டனை அனுபவிக்காமல் அகதிகளாக வேற்றுநாடுகளில் இருப்பவர்கள் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்படலாம் என்பது தானே இதன் உள்ளர்த்தம்?
புலம்பெயர்ந்து புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் போர்க் குற்றமிழைத்தவர்கள் என மேலை நாடுகளால் குற்றம் சுமத்தப்பட்டு தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. இவர்கள் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் நாளை தண்டிக்கப்படலாம். இதற்கும் கஜேந்திரகுமாரின் கூற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக எழக் கூடிய எதிர்ப்பைத் தணிப்பதற்கான அடியாளாக கஜேந்திரகுமார் பயன்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
d)சுயநிர்ணைய உரிமையை நிராகரித்தல்: சமஷ்டித் தீர்வுஇடையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு தேவை என்கிறார்கள். சுயனிர்ணைய உரிமைக்கும் சமஷ்டிக்கும் என்ன தொடர்பு? சுயநிர்ணைய உரிமை என்பதே பிர்ந்து செல்வதற்கான உரிமை. மக்கள் இதற்காகத்தானே இதுவரை தமது குடித்தொகையின் ஒரு பகுதியை இழந்துபோனார்கள்? இதற்காகத்தானே உலகமெங்கும் சிதறுண்டு போனார்கள்?
சமஷ்டி என்பதே அடிப்படையில் சுயநிர்ணையத்தை நிராகரிப்பதாகும். ‘நான் கடவுள் சத்தியமா கடவுள் நம்பிக்கை இல்லாதவன்’ என்று கூறிவது போன்ற ஏமாற்று இது.
e) யார் அழித்தாலும் அசையமாட்டோம்: எந்த நாட்டுடனும் பகையுறவு இல்லை என்கிறது இவர்களின் மற்றோரு சுலோகம். கடந்த 35 வருடங்களாக இந்தியா ஈழத்தமிழர்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு அழித்துவருகிறது. அமெரிக்காவும் அதன் அணியும் இனப்படுகொலை நடத்தி ஈழப் போராட்டத்தை அழித்த பின்னர் மைத்திரி அரசோடு இணைந்து ‘கைவீசம்மா கைவீசு’ என பாப்பாப் பாட்டுப் பாடச்சொல்லி மிரட்டுகின்றன. புலிகளில் செயற்பாடு புலம்பெயர்ந்த அப்பாவிப் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்துகின்றன. இந்தச் சூழலில் எந்தக் கூச்சமும் இல்லாமால் எல்லா நாட்டின் அதிகாரவர்க்கங்களுடனும் பகையின்றி உறவு வைத்துக்கொள்வோம் என்கிறார் கஜேந்திரகுமார்.
அப்படியானால் பேரினவாத இலங்கை அரசோடும் மேற்குறித்த நாடுகளைப் பகைத்துக்கொள்ளமல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
f) ஒரு நாடு இரு தேசம் : இவ்வளவிற்கும் மேல் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தையும் முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார்கள்.
சுயநிர்ணைய உரிமை கோருவதாகக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு நாடு என்று கூறி சுயநிர்ணைய உரிமையைக் கொச்சப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது?
சுய நிர்ணைய உரிமை என்பது பிரிந்துசெல்வதற்கான உரிமை. பிரிந்து செல்லும் உரிமையை பெற்றுக்கொண்ட பின்னர் ஒரு நாடாக இணைந்திருப்பதா அன்றிப் பிரிந்து இரண்டு நாடுகள் ஆவதா என்பது மக்களைப் பொறுத்தது. இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடை செய்வதால் இதற்கு மேல் பேச முடியாது என்கிறனர். சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான உரிமை தடைசெய்யப்பட முடியாத ஒன்று. ஆக, ஆறாவது திருத்தச்சட்டம் பிரிந்து செல்லும் உரிமை கோருவதைத் தடைசெய்ய முடியாது.
நிலமை இவ்வாறிருக்க கஜேந்திரகுமார் சுயநிர்ணைய உரிமை வேண்டாம் என்கிறார். அதேவேளை சுய நிர்ணைய உரிமைக்குப் போராடுவோம் என்கிறார்.
தவிர, வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சுயநிர்ணைய உரிமைக்கான தமது போராட்டத்தை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே மலையக மக்கள் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய மலையக் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பு சந்திரசேகரின் தலைமையில் மலையக மக்கள் முன்னணியாக மாற்றமெடுத்து சீரழிந்து போனது.
எழுபதுகளிலேயே மலையக மக்கள் தனியான தேசிய இனம் என்ற தத்துவார்த்த அடிப்படையிலானா ஆய்வுகள் மலையகத்தவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதனை முன்வைத்துப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ற நூல் பீ.ஏ.காதர் இன் முதலாவது நூலாக வெளிவந்தது.
ஒரு நாடு இரு தேசம் என்ற முழக்கத்தின் கீழ் கஜேந்திரகுமார் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் சுய நிர்ணைய உரிமையை மறுக்கிறார். வட கிழக்குத் தமிழர்கள் ஒரு தேசம் என்றும் ஏனைய அனைத்து மக்களும் மற்றொரு தேசம் என்ற தொனிப்பட இரண்டு தேசம் ஒரு நாடு என்கிறார்.
ஆக, மலையக் முஸ்லீம் மக்களை சிங்களப் பேரினவாத்த்தோடு இணைந்திருக்கச் சொல்கிறார். ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமையை மறுத்துவிட்டு வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் எப்படி சுயநிர்ணைய உரிமை கோரலாம் என்பது எப்படிச் சரியாகும்.?
முழுமையான பொய்களை அடித்தளமாகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல்கால சுலோகங்கள் மக்களை மந்தைகளாக்குகிறது.
இவை தவிர, இன்று கஜேந்திரகுமார் குறுக்கும்மறுக்குமாக நடந்துதிரியும் மண்ணில் அவரது காலடியில் நடக்கும் இனவழிப்புக் குறித்து மூச்சுகூட விடவில்லை. முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் சதிதான் ‘சுன்னாகம் இனச்சுத்திகரிப்பு’. வலிகாமம் பகுதி மண்ணும், நீரும் மக்களின் பாவனைக்கு ஒவ்வாத இடமாக மாற்றப்பட்டுள்ளது. அரச பயங்காவாதி சம்பிக ரணவக்க என்ற இலங்கை மின்வலு அமைச்சரும் சிங்கள பௌத்த பேரினவாதியும் சுன்னாகம் பகுதி முழுவதும் கழிவு நீரை வெளியேற்றி மக்களை கொடிய நஞ்சின் மீது வாழ்கை நடத்த நிர்பந்தித்துள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் யாழ்பாணம் சென்ற சம்பிக்க ரணவக்க விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கிருமிநாசினிகளே அழிவிற்குக் காரணம் என அப்பட்டமாகப் பொய்கூறும் போது கஜேந்திரகுமார் குழு வாக்குப்பொறுக்க அலைந்துகொண்டிருந்தது.
அழிக்கும் சர்வதேசத்தை நம்புங்கள், பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் மாற்றம் எற்படும் என நம்புங்கள், சுயநிர்ணய உரிமையைத் தலைகீழாக்கி அழித்துவிடுங்கள், தண்டிக்கப்படாத போராளிகளைப் போர்க்குற்ற்வாளிகள் ஆக்குங்கள், மலையக மற்றும் முஸ்லீம் மக்களை பேரினவாத அரசுடன் இணைத்துவிடுங்கள் என்பனவே கஜேந்திரகுமாரின் தேர்தல்கால முழக்கத்தின் மறுபக்கம்.
ஏனைய கட்சிகள் தொடர்பாகவும் முடிவுரையும் நாளை பதியப்படும்…