தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான விவகாரம் நேற்றறைய திருகோணமலை கூட்டத்தில் காரசாரமான விவாதத்தினை தோற்றுவித்திருந்த நிலையில் பதிவு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரனுடன் மாகாணசபை உறுப்பினரான சித்தார்த்தன் ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் மாலை திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டத்தில் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபையினது உள்ளக பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவும் அதே போன்று கூட்டமைப்பின் வெளிவிவவாரக் கொள்கைளைக் கையாள்வதற்கும் குழுக்களை நியமிப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதனிடையே இன்று (30.04.14) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுகிது.
கூட்டமைப்புத் தலைமையின் கட்டளைகளுக்கு உட்படாது ஜெனீவா சென்றவர்கள் மீது விமர்சனம்:-
கூட்டமைப்புத் தலைமையின் கட்டளைகளுக்கு உட்படாது ஜெனீவா சென்றவர்கள் மீது இன்று (30.04.14) கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று திருமலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்திலேயே கட்சி தலைமையின் உத்தரவை தாண்டி சென்றவர்கள் பற்றி சம்பந்தன் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை வெளியேற்றுவது தொடர்பில் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய கூட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர், தமிழர் விடுதலைக் கூட்டணி கலந்துகொள்ளாமை தொடர்பில் கேள்வியயழுப்பினர். இதன்போதே தமிழர் விடுதலைக் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியினால், தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பெயரை, இலங்கை தமிழரசுக் கட்சி பயன்படுத்துவதற்கு உரித்தில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தக் கூடிய உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுக்குமே உண்டு என்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் எழுதிய விடயமும் இதன் போது ஆராயப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே கட்சியைப் பலவீனப்படுத்தும் செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர வேண்டுமா என்பது தொடர்பில் அங்கத்துவக் கட்சிகள் நான்கும் தனித் தனியே கலந்துரையாடி அது தொடர்பிலான முடிவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியிடம் தெரிவிப்பதென்றும் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி அதனை வலுவிழக்கச் செய்ய இலங்கை அரசு பல வழிகளில் சதி செய்துவருகின்றது.
இதற்குக் கூட்டமைப்பில் உள்ள எவரும் துணைபோகக்கூடாது. நாம் ஒற்றுமையாகவும் பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும் தொடர்ந்து செயற்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தக் கூட்டத்தை ஆரம்பித்துவைத்து தலைமை யுரையாற்றும்போதே சம்பந் தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
‘கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. விசாரணையை வலியுறுத்தும் இந்தத் தீர்மா னம் மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர் வைக் காணும் பேச்சுக்கு தென் னாபிரிக்கா எமக்கு விடுத்த அழைப்பு ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இவற்றினூடாக சர்வதேச அங்கீகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். கூட்டமைப்பு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதால்தான் இலங்கை அரச தரப்பையும் எம்மையும் தனித்தனியாக அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளது தென்னாபிரிக்க அரசு.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் வேண்டுகோளுக் கிணங்கவே இனப்பிரச்சினை தீர்வுப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்க ஜனாதிபதியும், அந் நாட்டு அரச தரப்பினரும் முன் வந்துள்ளனர். சர்வதேச மத்தியஸ்தத்துடனான இந்தப் பேச்சுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
ஆனால், இந்தப் பேச்சுக்கு இலங்கை அரசு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமா என்பது தான் சந்தேகம். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே உள்ளனர். அவர்கள் கூட்டமைப்பின் கரங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றனர்.
இந்த மக்களின் அமோக ஆதரவினால் தான் வடக்கு மாகாணசபை நாம் கைபற்றினோம். கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாணசபையில் 30 உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபையில் 11 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவு படுத்தி அதனை வலுவிழக்கச் செய்ய இலங்கை அரசு பல வழிகளில் சதிசெய்து வருகின்றது.
அரசின் இந்தத் திட்டங்களுக்கு கூட்டமைப்பில் உள்ள எவரும் துணை போகக்கூடாது. எம்மை நோக்கி வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழருக்கான தீர்வை சர்வதேச மத்தியஸ்தத்துடன் பெறவேண்டும்” என்று தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராசா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல். எவ்.), சி.சிறிதரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), கிழக்கு மாகாணசபை உறுப் பினர்களான கோவிந்தன் ஜனா (ரெலோ), இரா. துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), பிரசன்னா இந்திரகுமார் (ரெலோ) மற்றும் க.பவன் (புளொட்), யஹன்றி மகேந்திரன் (ரெலோ) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் இன்று காலை திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஒன்றுகூடியுள்ளனர்.