இலங்கை அரசியலில் மட்டுமல்ல இன்று சர்வதேச அரசி யலிலும் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் முக்கிய கவனிப்பை பெற்றிருக்கிறது. மனித உரிமை விவகாரங்களில் அதிகள வில் கரிசனை காட்டாத பல நாடுக ளின் அரசியல் விவகாரங்கள் இதில் கலந்தாலோசிக்கப்படும். அந்நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவ காரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயம்தான்.
1987 முதல் 2009 வரையிலான 22வருடகால விடுதலைப் போராட்ட வரலாறாக இருந்தாலும் சரி, அல்லது 1948ஆம் ஆண்டுக்கு பின்னரான 55 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் சார்ந்த அரசியல் வரலாறாக இருந்தாலும் சரி இலங்கையின் பௌத்த மத அரசியலாளர்கள் தமிழ்மக்கள் தொடர்பிலான சாதக கொள்கைகளை எப்போதுமே கொண்டிருக்கவில்லை. இங்கு பெரும்பான்மை அரசியல் பலத்தை கொண்டிருக்கும் சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது கொள்கைகள், சுயநிர்ணய உரி மைகள் தொடர்பில் அரசுக்கு எதிரான எதிர்ப்பு மனப்பான்மையையே இது வரை கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்.
பலநேரங்களில் அமைதியான அணுகுமுறை கோரிக்கைகள் பலனற்ற சூழலில் அவை எதிர்ப்பு குர லாக ஓங்கி ஒலிக்கப்பட்ட நிலையில் அத்தகையவர்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டமையை வரலாறு கூறும். இந்நிலையில் பெரும்பான்மை அரசாங்கத்திடமிருந்து தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முஸ்லிம் சமூகம் முயற்சிகள் எடுத்திருந்த போதும் அவை கைகூடாத நிலையில் மென்போக்கான அணுகுமுறையை இப்போது பின்பற்றி வருகின்றனர். அரசியல்வாதிகளாயினும் சரி, மக்களாயினும் சரி முஸ்லிம் சமூகத்தவர்கள் தமது அரசியல் இறைமை தொடர்பில் இப்போது பெருமளவில் அக்கறை கொள்வதில்லை. மாறாக ஏதோ முரண்படாமல் வாழ்ந்தால் சரி என்ற நிலைப்பாட்டுக்குள் வாழப்பழகிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் வரலாற்றில் பல துரோகங்களை எதிர்கொண்டவர்களாகவும், போரி யல் சுமைகளை சுமந்துகொண்டு வாழத்திராணியற்றவர்களாகவும் இருப்பவர்கள் தமிழ்மக்கள் என்பது உண்மையே. இதனால் தான் தமிழ் மக்களது பிரச்சினைகள் இன்று சர்வதேச ரீதியில் கவனிப்பை பெற்றிருக்கிறது. சர்வதேச அரசி யல் அரங்குக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இதனால் சர்வதேச சமூகத்தால் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கைகூட இப்போது எழுந்துள்ளது. ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கான தலைமைகளாக இன்று இருப்பது த.தே.கூட்டமைப்பு ஒன்றே. ஆகவே தமிழ்மக்களின் தன்மானம் தொடர்பில் முழுப்பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இவர்களே.
எமது நாட்டில் தமிழ் மக்கள் அதி கமாக வாழும் பகுதியாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் காணப்படுகிறது. இதில் தமிழ் மக்கள் பலம் அதிகமாக இருப்பது வடகிழக்கு மாகாணங்கள் மட்டுமே. கிழக்கில் மாகாணசபை அதிகாரம் தமிழர்களிடம் இல்லாத நிலையில் வடமாகாணசபை தமிழர்களின் பலத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா மாநாட்டின் தீர்மானத்தில் வடமாகாணசபையின் பொறுப்பும் அடங்கியுள்ளது.
ஜெனீவா தீர்மானமானது இனப்படுகொலை தொடர்பிலானதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானதுமாகும். சர்வதேச விசாரணை அல்லது உள்நாட்டிலேயே தீர்வைப் பெற்றுக்கொள்வது என்ற ஏதோ ஒரு அணுகுமுறை தான் தீர்வாக அமையப்போகிறது. பிரேரிக்கப்படப் போகிறது. மேலும் இதில் அமெரிக்கா கூடிய ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் இலங்கை மீதான தீர்வுத்திட்டத்தில் முக்கிய நாடாக பங்குவகிக்கும் என்றும் நம்பவேண்டியுள்ளது.
இப்படியான சூழலில் தமிழ்மக்களின் தன்மானத்தை காப்பாற்றுபவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக அமெரிக்காவோ, இந்தியாவோ தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுக்க மாட்டாது. ஆனபடியால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இப்பாரிய பொறுப்பை சிரமேற்கவேண்டும்.
ஜெனீவா பிரேரணை வடக்கு மாகாணம் பற்றியே கூறுகிறது. கிழக்கு மாகாணம் பற்றியோ மலையகம் பற்றியோ கூறவில்லை. நில ஆக்கிரமிப்பு, தொழில் வழங்கலில் சமவாய்ப்பின்மை, இன விகிதாசாரத்தை கட்டுப்படுத்தல், சலுகைகள், உரிமைகள் வழங்குவதில் பாராபட்சம் என்று வடக்கில் நிலவக்கூடிய பிரச்சினைகள் யாவும் ஏனைய இடங்களில் வாழும் தமிழ்மக்களிடமும் காணப்படுகிறது. ஆனால் உரிமைக்கான எதிர்ப்புக்குரல் வடகிழக்கிலிருந்து மாத்திரமே ஓங்கி ஒலிக்கின்றது. இதன்மூலம் த.தே.கூட்டமைப்பின் பணி யும் உணர்த்தப்படுகின்றது.
இங்குள்ள அரசியல் நிலமை களைப் பார்த்தால் தமிழ் மக்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க த.தே.கூட்டமைப்பு முயன்று வருகி றது என்றுதான் கூறவேண்டும். வடமா காணசபையில் தமக்கான அரசியல் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ள பலப்படுத்த பெரும்பாலான மக்களும் தமது பங்களிப்பை மிகச்சரியாகச் செய்திருந்தனர். இதனால்தான் ஆயுதம் ஏந்திப் போராடிய உறுப்பினர்களைக்கூட ஒரே தலைமையில் இணைய ஆதரவு வழங்கியிருந்தனர். இதன்படியாக உருவாகிய வடமாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை எதிர்காலத்திலும் தொடர்ந்து பலப்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாடுகள்தான் இலங்கைத் தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கவேண்டும். சர்வதேச விசாரணை மூலமாகவே இனப்படுகொலை நில அபகரிப்பு போன்ற விடயங்கள் ஆராயப்படும் என்ற கோணத்தில் சர்வதேச சமூகத்தை நாம் தொடர்ந்தும் நம்பியிருப்பது மடமை என்றே கூறவேண்டும்.
சர்வதேச சமூகத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நாடும் தனது எல்லைக்குட்பட்ட அரசியலில் அதிகாரத்தையே முதன்மையாகக் கொள்ளும். தமது பாதுகாப்பில் நின்றுகொண்டுதான் எந்த பிரச்சினையையும் அணுகும். இலங்கை விவகாரத்திலும் அதுவே நடைபெறப்போகிறது. ஏனென்றால் சர்வதேச விசாரணை என்று வந்தால் போருக்கு உதவிய நாடுகள் பற்றிய விசார ணையும் முக்கியம் பெறும். அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா போன்ற நாடுகள் விசாரணைக்கு முகங்கொடுக்கும். இதனால் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரத்துடிக்கும் நாடுகளான இவை தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போடும் செயலை ஒருபோதும் செய்ய எத்தணிக்காது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியாக இருக்கும் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தமது சுயகௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட எந்த நாடும் ஆசைப்படாது.
மற்றும் அமெரிக்கா ஆசியக்கடற்பரப்பில் தனது பாதுகாப்பு தேவை, பொருளாதாரத்தேவை போன்றவற்றுக்கு இலங்கையை மையமாகக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரேடியாக இலங்கையை தூக்கி எறிய முடியாது. அதுபோல இந்தியாவும் சர்வதேச நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிட்டு தீர்வை வழங்குவதை பார்த்துக்கொண்டிருக்காது.ஆசியா வில் தன்னை வல்லரசாக நிலைநிறுத்த முயலும் இந்தியா தன்னை விட பலம்பொருந்திய இன்னொரு நாடு தனது அண்டைநாட்டில் தலையிட்டு தீர்வு வழங்குவதை வேடிக்கை பார்க்காது. எனினும் உள்நாட்டு தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் எல்லா பக்க நன்மை தீமைகளையும் ஆராய்ந்தே முடிவு களை எடுக்க முற்படும். ஆகவே இலங்கை மீதான தீர்மான விடயத்தில் நெகிழ்வுத்தன்மையைத்தான் இந்தியா கடைப்பிடிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமிழ்மக்களது விவகாரம் தொடர்பில் இந்தியா தனது சாதகமான பங்களிப்பை வழங்கவேண்டும். இந்தியாவுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையிலான அரசி யல் உறவு நீண்டநெடியது. அவர்களுக்கு இதுதொடர்பிலான கடப்பாடு உள்ளது என்றெல்லாம் பேசிவருவது வழமை. ஆனால் தனது நலனுக்கு பங்கம் ஏற்படாத வகையில் தான் இந்தியா இதுவரையிலும் தமிழர் விவகாரத்தில் அணுகுமுறைகளைக் கடைப்படித்து வந்திருக்கிறது. ஆகவே இந்திய அரசும் தமிழ்மக்களின் தன்மானத்தை காப்பாற்ற மாட்டார்கள்.
இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலையைப் பார்த்தால் இங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அரசு மீதான அழுத்தம் உள்நாட்டு அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. இப்பொழுதே உள்நாட்டில் சர்வதேச விசாரணைக்கு எதிரான சிங்களமக்களின் எதிர்ப்புக்குரல் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச ரீதி யில் எடுக்கப்படும் தீர்மானமானது இலங்கையின் சுயகௌரவத்தை பாதிக்கும். இதனை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். விரும்பமாட்டார்கள். இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்த வரையில் சுயகௌரவத்தை மிகவும் அதிகமாக நேசிப்பவரும் கூட. இதனால் சர்வதேச அளவில் எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் ரீதி யாக மட்டுமல்ல பலவகையிலான அச்சுறுத்தல்களையும் காலப்போக்கில் உருவாக்கும்.
சர்வதேச நாடுகள் இலங்கையில் வந்து நின்றுகொண்டு தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. தீர்மானங்களை பரிந்துரை செய்யலாம். அரசுக்கு அறிவுரைகளை வழங்கலாம் அல்லது சிறியளவிலான அச்சுறுத்தலை வழங்கலாம். ஆனால் ஒருநாட்டின் அரசியல் சாசனத்தை மற்றொரு நாடு மதிக்கவேண்டியது அவசியம். பெருமெடுப்பிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒருநாளும் வாய்ப்புக்கள் ஏற்படாது என்றுதான் கூறவேண்டும். மேலும் தமிழ்மக்களை பலிக்கடாக்களாக்குகிற நிலமை இத்தீர்மானங்கள் மூலம் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் இலங்கைக்குள் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலமை கவலைக்குரியதாகவே மாறும். அவர்களது எதிர்காலம், அடுத்த தலைமுறைகளின் இருப்பு, அற்ப சொற்ப உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் எம்முடன் கூடவேதான் பயணிக்கும்.
ஆகவே எதிர்காலத்தில் இலங்கைமீது நிறைவேற்றப்படும் தீர்மானமாக இருந்தாலும் சரி, அல்லது பரிந்துரையாக இருந்தாலும் சரி அது தமிழ்மக்களுக்கு பாதகமாக அமையாத தாக இருந்தால் நல்லது. இலங்கையில் அரசியல்வாதிகள் மட்டுஸ்ரீஸ்ரீமல்ல மக்களும் இனவாதம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
அப்படியானவர்களின் ஆட்சியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் தலைவிதி சர்வதேசத்தால் மாற்றி எழுதப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆகவே தமிழ்மக்களின் தன்மானத்தை காப்பவர்களாக என்றும் இருக்கக்கூடிவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மாத்திரமே.
TPN NEWS