தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் கட்சிகள் தமிழினத்தின் வரலாற்றுத் துரோகிகள்

259

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் திம்பு முதல் டோக்கியோ வரையிலான போராட்ட நகர்வுகளை எடுத்துக்கொண்டால் தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கின்றது என்பதே வரலாறு. டட்லி சேனாநாயக்கா – மைத்திரிபால சிறிசேன வரை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கும் விவகாரத்தில் சரியான ஒரு இறுதி முடிவுக்கு வரவில்லை. இதுவரையி லும் பல சிங்கள நபர்கள் இலங்கையை ஆட்சி புரிந்துள்ளனர். அக்கால கட்டத்தில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பன தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளாக பரி ணாமம் பெற்று விளங்கியபோதிலும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் என்கிற விடயம் பேசப்படுகின்றபோது சிங்களப் பேரினவாதத் தலைமைகளினால் காலத்திற்குக் காலம் குழப்பப்பட்டு வந்ததே வரலாறு.

அந்த வகையில் 10.02.2018அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. நீண்ட யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுமா? என சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் சிந்தித்து செயற்படவேண்டிய தேவை உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் எமது எதிர்காலச் சந்ததியையும் எமது பிரதேசங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். எமது மண்ணுக்கும், எமது சந்ததிக்கும் துரோகம் இழைத்துவிட்டோம் என்று கவலைப்படாமல் தேர்தலில் தமிழினத்தின் விடிவுக்காக நாம் வாக்களிக்கவேண்டும்.

அரசாங்கம் என்பது ஒரு நாட்டை ஆட்சிசெய்பவர்கள். நாட்டின் சகல பகுதிகளுக்கும் மக்களுக்கும் அபிவிருத்தியும் சேவையும் செய்யவேண்டிய கட்டாய பொறுப்பு அவர்களுக்குள்ளது. தங்களுக்கு வாக்களித்தால் தான் செய்வோம் அல்லது செய்யமாட்டோம் என்று கூறமுடியாது. மத்திய அரசாங்கம் மூலம் செய்யப்படுகின்ற வேலைத்திட்டங்களை வடக்கு கிழக்கில் மாகாண சபை ஊடாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அல்லது தென்னிலங்கை கட்சி அமைப்பாளர்கள் ஊடாகவுமே செய்யப்படுகின்றது. எம்மீதுள்ள அக்கறையாலோ விருப்பத்தாலோ அல்ல. எம் மக்களை தம் வசப்படுத்த பயன்படுத்தும் கருவிகளே அவை. இப்படியான செயற்பாடுகள் மூலம் எமது பிரதேசத்திலும் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் ஆதிக்கம் செலுத்த முனைகின்றது. அதற்கும் சிலர் துணைபுரிந்து துரோகம் செய்கின்றார்கள். எமது பிரதேசத்தை முழுமையாக தங்களது பிரதேசமாக மாற்றுவதற்கே அவர்கள் தந்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீசும் வலைகளில் நாம் அகப்பட்டுக் கொள்ளாமல் எமது பிரதேசத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள்.

மேலும் சில தனிநபர்கள் தமிழ் அரசியல் கட்சிகளில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென்றவுடன் கொள்கைகளையெல்லாம் தூக்கி யெறிந்துவிட்டு சுயநல நோக்கங் களுக்காக மாற்றுக் கட்சிகளில் போட்டியிட செல்கின்றார்கள். அவர்களுடன் நாங்களும் போவதா? துணைபோவதா? கூடவே கூடாது. எதிர்காலங்களில் யாருமே இவ்வாறான செயலில் இறங்காமல் இருக்க நாம் பாடம் கற்பிக்கவேண்டும்.

ஒரு கட்சி அல்லது கட்சியில் இருப்பவர்கள் விருப்பமில்லை என்றால் மாற்றுக் கட்சியில் இணைவது, பின்னர் அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு கட்சியைத் தேடுவது. இவை வழக்கமாகிவிட்டது. அப்படி மாறிச்செல்வது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை. சுதந்திரமும் கூட. ஆனால் தான் செல்லும் இடமெல்லாம் மக்களையும் வாருங்கள் என அழைப்பது எந்த விதத்தில் நியாயம். அவர்களது கொள்கைதான் மற்றவர்களிடமும் இருக்கவேண்டுமா? ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கக்கூடாதா? மாறிச் செல்பவர்கள் பின்னால் அனைவரும் செல்லவேண்டுமா? ஏன் எங்களால் ஒரே கொள்கையில் வாழ்நாள் முழுவதும் இருந்து செயற்படமுடியாது. அப்படியானால் சுயநலத்துடன் நாம் எதையோ எதிர்பார்க்கின்றோம். எமக்கு ஒன்றும் தேவையில்லை. எந்த வசதிகளையும் விரும்பவில்லை என்ற சிந்தனையுடன் ஒரே கொள்கையுடன் எமது சமூகம் சார்ந்த உணர்வுடன் வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியுடனும் திருப்தியுடனும் இருப்போமாக.

நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்ன சொன்னாலும் உங்கள் மனச்சாட்சியின் சரியானதை செய்யுங்கள். தெரிவு செய்யுங்கள். நாம் யாரைப்பற்றியும் குறை கூறிப் பழகக்கூடாது. யாரும் என்ன செய்தார்கள் என்று நினைக்கக்கூடாது. நாங்கள் எமது மண்ணுக்கு என்ன செய்தோம் என்று நினைக்கவேண்டும். ஆகையால் அன்பார்ந்தவர்களே! சகலவற்றையும் நன்றாகச் சிந்தித்து எமது மக்களின் எதிர்கால உரிமைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சியின்) வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமையையும், பிரதேசத்தையும் பாதுகாப்போமாக. இல்லையேல் வரப்போகின்ற ஆபத்துக்களில் இருந்து கடவுளாலும் எம்மைக் காப்பாற்ற இயலாமல் போகும்.

யுத்த அழிவுகளை உற்றுநோக்கு வோமாகவிருந்தால் அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகச் செயலாகும். சர்வதேச நாடுக ளின் உதவிகளுடனேயே தமிழினத்தின் விடுதலைக்கானப் போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசி யல் காய்நகர்த்தல்களைச் செவ்வனவே செய்துவருகின்றார்கள். கட்சிக்குள் குழம்பம் என்பது ஒரு சாதாரண விடயம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அப்போதிருந்த தரவுகளின்படி 38 நாடுக ளில் இயங்கிவரும் ஆயுதக்குழுக்களை பயங்கரவாதிகள் என அமெரிக்கா சித்தரித்து அதற்கான சட்டத்தையும் அமுல்படுத்தியது. அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளே முதன்மை தாங்கிய ஆயுத இயக்கமாக உலக நாடுகள் கருதின. இதற்குக் காரணம் கடல், வான், தரை, கரும்புலிகள் என்ற கட்டமைப்புக்களை அவர்கள் கொண்டிருந்ததால் அது அச்சத்தை ஏற்படுத்தும் என்ற ரீதியில் விடுதலைப்புலிகளின் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் திட்டமிடப்பட்டு மழுங்கடிக்கப்பட்டது. ஆனால் பிரபா கரன் அவர்கள் மிக இராஜதந்திர ரீதியாக அரசியல் நடவடிக்கைகளை அணுகிச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஊடகவி யலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய த.சிவராம்(தராகி) அவர்களோடு இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சர்வதேச உள்நாட்டு ரீதியாக பேச்சுக்களை நடாத்திச் செல்வதற்கு ஒரு களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் அளவிற்கு தேசியத் தலைவர் அவர்களின் போராட்டம் சாதனை நிகழ்த்தியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வவுனியாவில் ஜங்ஸ்ரார் மைதானத்தில் 05.02.2018 அன்று பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகைதந்து உரையாற்றுகின்றபோது அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் விடயங்களையும், அபிவிருத்திகளையும் போலியான வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் அள்ளி வீசிச் சென்றிருக்கின்றார்.

வடகிழக்கு இணைப்பு, அதி காரப் பரவலாக்கம் தொடர்பாக அவர் பேசவில்லை. இதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் காணாமற்போன இலட்சக்கணக்கானோர் இருக்கி ன்றனர். இவ்விடயம் தொடர்பில் அவருக்கு அக்கறையில்லை. அவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்னவெனில் இந்த கூட்டரசாங்கத்தை 2020 வரை கொண்டுசெல்வதேயாகும். அதனால் அதற்கான திட்டங்களின் படியே செயற்பாடுகள் காய்நகர்த்தப்படுகின்றது. ஓடுகிற மீனில் நழுவுகிற மீனைப் பிடிப்பவராக பிரதமர் அவர்கள் செயற்படுகின்றார். ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு என்ற ரீதி யில் மைத்திரிபால அவர்கள் இருக்கின்றார். இரு தோணியில் கால்வைப்பதைவிட ஒரு தோணியில் கால்வைப்பது சிறந்தது. தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான் இந்நாட்டை ஆளவேண்டும் என்ற ரீதியில் சந்திரிக்கா அவர்கள் செயற்படுகின்றார். தமது அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்வதற்கும் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் பலியாகக் கூடாது. எந்தத் தேர்தலை எடுத்துக்கொண்டாலும் தமது உரிமைக்காக வாக்களிக்கவேண்டும்.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்தை ஏமாற்றும் நடவடிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கின்றது. இதற்கு தமிழ் மக்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சிங்களவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அதுபோல் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஏன் சிங்கள-முஸ்லீம் மக்களுக்கு வாக்களிக்க வேண்டும். எம்மை அவர்கள் விலைகொடுத்து வாங்குவதாகவே இது அமையப்பெறுகின்றது. ஒரு மனிதனுக்கு தனது உரிமை சார்ந்த விடயத்தில் தீர்வு இல்லையேல் அவன் வாழ்வதில் அர்த்தம் இல்லை. கோடி சுகபோகங்களை அனுபவித்தாலும் கூட நாம் என்ன இனமோ அந்த இனத்திற்கே வாக்களிக்கவேண்டும். வன்னியைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் ஊடாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ளனர்.

வடகிழக்கு இணையக்கூடாது எனக் கூறும் முஸ்லீம்களுக்கு வாக்களித்து பயன் இல்லை. அவர்கள் தமிழ் பேசும் மக்கள். வியாபாரத்திற்காக இங்கு குடியேறியவர்கள். வடகிழக்கில் சிங்களக் கட்சிகளுக்கு ஒருபோதும் நாம் சோரம் போகக் கூடாது. இன்று எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. இவர்களைப் பலப்படுத்தினால் பாரிய வெற்றிபெறலாம். தமது பிழைப்புக்காகவும் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் தமிழினத்தை விற்றுப்பிழைக்கும் அரசி யலை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப் படுத்துவது மட்டுமன்றி சர்வதேசத்திலும் பேச்சுக்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். தமிழ்த் தாயின் பாலைக் குடித்து வளர்;ந்த தன்மானத் தமிழன் எவனும் சிங்கள-முஸ்லீம்களுக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முன்வரமாட்டான். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பிளவு படுத்தும் எம் தமிழின விரோதிகள் அனைவருக்கும் இந்த தேர்தலில்; மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்து இவர்களுக்கு சாவுமணி அடிக்கவேண்டும். எனவே தமிழ் மக்களாகிய நாம் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்பதே எமது கருத்து.

‘பிறந்த நாடு சிறந்த கோவில், பேசும் மொழியே தெய்வம்’ இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை.

நெற்றிப்பொறியன்

SHARE