தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதாக நினைத்து தமிழினத்திற்கு துரோகம் செய்யும் ஆயுதக்கட்சிகளின் அரசியல் முட்டாள்தனமானது

289

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது தென்னிலங்கை அரசியலுக்கு பாரிய சவாலாக இருக்கிறது என்பதே உண்மையான விடயமாகும். அரசியல் நீரோட்டத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்ட வகையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலிலும், ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் ஆலோசனையினாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோவொரு வகையில் இல்லாதொழித்துவிட்டால் விடுதலைப்புலிகளது போராட்டத்திற்கும், அரசியல் முன்னெடுப்பிற்கும் தொடர்புகள் அற்றுப்போகும் ஒரு நிலைமை உருவாக்கப்பட்டு, விடுதலைப்புலிகளது அமைப்பு பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தப்பட்டு, பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என உலக நாடுகளுக்குச் சித்தரிக்கும் வகையில் அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வரசாங்கத்திற்கு துணைபோகும் நடவடிக்கையாக ஏனைய ஆயுதக்கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகள் தீவிரமாக இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போது 2009 வரை அப்போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி அதன் பிறகு கருணா, பிள்ளையான் அணியினர், அதனைவிட முஸ்லீம் அமைப்புக்கள் இவையணைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளது போராட்டமும், அதனது அரசியல் கட்டமைப்பும் வளர்ந்துவந்துவிட்டால் தங்களுடைய இருப்பு இல்லாதொழிக்கப்படும் என்கிற காரணத்தால் அரசின் கைக்கூலிகளாக அன்று செயற்பட்டார்கள். இன்று புனிதர்களைப்போன்று அனைத்து ஆயுதக்கட்சிகளும் ஒன்றாக செயற்படுகிறோம் என்றும், மீண்டும் விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற மாட்டார்கள் என்றும் இவர்களுடைய பிரச்சாரங்கள் தற்போது அமையப் பெற்றுள்ளது.

இவர்களின் தற்போதைய வங்குரோத்து அரசியல் என்பது விடுதலைப்புலிகளது போராட்டத்தையும், அவர்களது அர்ப்பணிப்புக்களையும், அவர்களுடைய நினைவு தினங்களையும் முன்வைத்தே நகர்த்தப்படுகிறது. அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட ஆயுதக்கட்சிகள் போராட்டங்களில் கலந்துகொள்வது என்பது துரோகத்தின் மேல் துரோகமாகும். கடந்த காலத்தில் இவர்கள் அரச தரப்புடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் தற்போது அரசியல்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு ஈ.பி.டி.பி கட்சியினரையும் தம்வசம் இணைத்துள்ளனர். மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து ஆயுதக்கட்சிகளதும் கொலைப் பட்டியல் விபரங்கள் ஆதாரபூர்வமாக இருக்கிறது. அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஷ்மன் கதிர்காமர் வரை பல புத்திஜீவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதைவிட பலநூறு போராளிகளும் இருக்கிறார்கள். இந்தப் புத்திஜீவிகள் பரஸ்பரம் விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நேரடியாக இராணுவத்தினரின் கைக்கூலிகளாக செயற்பட்டவர்களை விடுதலைப்புலிகள் இனங்கண்டு சுட்டுக்கொன்றனர் என்பது உண்மை. மாற்று இயக்கங்களை வகைதொகையின்றி சுட்டுக்கொன்றுள்ளனர். தற்போதைய சூழலில் மக்கள் ஒரு நிரந்தரமான அரசியல் சூழ்நிலையை எதிர்பார்க்கிறார்கள். இதில் மிக முக்கியமாக வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆயுதக்கட்சிகள் தற்போது நிகழ்வுகளைக் கொண்டாடுகின்ற ஒரு தரப்பினராக, தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஏமாற்று அரசியலைச் செய்து வருகிறார்கள். தமது இயக்கங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே தமது இயக்கங்களை வைத்து அரசியல் செய்துவருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்டமைப்பை உடைத்துவிட்டால் ஒவ்வொரு கட்சிகளும் சிதறும் ஒரு அபாயம் ஏற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சின்னா பின்னமாக்குவதற்கு பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களது மேடைப்பேச்சுக்கள் இதனையே பறைசாற்றி நிற்கின்றது. இவர்கள் அரச புலனாய்வாளர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முதலில் களமிறங்கியது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரே. இவ்வணியினர் ஈரோசில் இருந்து பிளவுபட்டவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி. ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி. ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி. ஈ.பி.டி.பி டக்ளஸ் அணி. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் கூட பாரிய வெற்றிகளை வட-கிழக்குப் பகுதிகளில் பெறமுடியும். இவர்கள் தமக்குள்ளேயே ஒற்றுமை, கொள்கைகள் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றது என்று கூறி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்கியிருக்குமாக விருந்தால் இன்று அரசின் எலும்புத்துண்டங்களைக் அவர் கௌவியிருக்கமாட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும் குழப்பி, தற்போது தானும் குழம்பி ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினர் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினருடைய பின்னடைவு என்பது மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தனக்கு த.தே.கூட்டமைப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக 10 வருடங்களாக கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அப்போது வாய் திறந்து கூட்டமைப்பை விமர்சிக்காத இவர் தற்போது விமர்சித்து வருகின்றார் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. த.தே.கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் 22 ஆசனங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை பெறுவதற்கு ஏன் இக்கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. வட-கிழக்கில் மாத்திரம் 35 கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைவிட ஆயிரக்கணக்கான அமைப்புக்கள். இவையணைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ் மக்களையும் இலக்குவைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது.

2009க்கு முற்பட்ட காலப்பகுதிகளில் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது வெளிநாடுகளிலும், தென்னிலங்கையிலும் ஒளிந்து இருந்து அரசியல் செய்த அரசியல் பிரதிநிதிகள், அவர்களது புதல்வர்கள் அனைவரும் தற்போது தாம் தேசியவாதிகள் என்று மக்கள் முன்னே முகத்தைக் காட்ட முனைகின்றார்கள். துணிவிருக்கக்கூடிய எந்தவொரு ஆயுதக்கட்சியும் தமக்கானதொரு தனி பாதையில் இன்னமும் பயணிக்கத் தயாராகவில்லை. அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளாது தமது சொந்தப் பணத்தில் ஏதாவதொன்றை மக்களுக்காக செய்கின்றார்களா? இல்லை. எல்லாவற்றையும் அரசிடம் பெற்றுவிட்டு அவர்களுக்கு எதிராக இவர்கள் தேசியம் பேசுவது என்பது நகைப்புக்குரியது. இதைவிட பெரிய நாடகம் ஒன்றுமில்லை.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் ஒரு வருடங்களைக் கடந்தும் போராட்டங்கள் தொடர்கின்றது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளியையேனும் வைக்கவில்லை. பல வழிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்த ஏனைய ஆயுதக்கட்சிகள் தற்போது ஏன் ஆயுதம் ஏந்தி சிங்கள இனவாத சக்திகளுக்கு எதிராகப் போராட முடியாது. ஒவ்வொரு ஆயுதக் கட்சிகளுக்குமான பின்னணி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்துகொண்டு தேசியம் என்று கூச்சலிடுகிறீர்கள். அது உங்களது சுயலாபத்திற்காக. த.தே.கூட்டமைப்பை விமர்சிப்ப வர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்வதற்கு புலிக்கொடியினை ஏந்தி போராட்டம் நடத்துகிறீர்கள்.

கருணா-பிள்ளையான் அணியைச் சேர்ந்த பலரும் இன்று நாற்பதாயிரம் சம்பளத்துடன் இராணுவப் புலனாய்வாளர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் தேசிய வாதிகளாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுகிறார்கள். அரசியல் கைதிகளைக் காட்டிக்கொடுத்த இவர்களும் இன்று போராட்டங்களில் கலந்துகொண்டு தாம் ஏதோ தமிழினத்தை இரட்சிக்கவந்த இறைதூதர்கள் எனக் காட்ட முனைகின்றார்கள். தமிழரசுக் கட்சியை பலவீனப் படுத்துவதாலேயோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாலோ பயனடையப்போவது அரசே. எமது கண்ணை நாமே குத்துவதைப்போன்ற நிலைப்பாட்டை இன்று தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படவேண்டும். ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் எமக்கான தீர்வுகளைப் பெறவேண்டும். போராட்ட காலத்தில் வீட்டுக்குள் முடங்கிப்போயிருந்த இவர்கள் அனைவரும் பிரதான தொழிலாக காட்டிக்கொடுப்பையே அக்காலத்தில் மேற்கொண்டனர். அனைத்து ஆயுதக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் போராட வாருங்கள் என தேசியத் தலைவர் அழைத்தபோது, தம்மைப் போராளிகள் எனக் கூறிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராட வந்தனர். இதனால் சகோதரப் படுகொலைகள் அதிகரித்தது. இதனை அரசு வேடிக்கை பார்த்தது. பல சாதனைப் போராளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறுதியில் கருணா – பிரபா பிளவு ஏற்பட்டபோது பல ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராடிய ஒவ்வொரு போராட்ட இயக்கங்களும் மழுங்கடிக்கப்பட்ட வரலாற்றைப் பார்க்கும் போது தமது கட்சிகளை வலுப்படுத்தவேண்டும், தாம் புகழடையவேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டதன் விளைவே தமிழ் மக்களுக்கான ஈழக்கனவு சாத்தியமற்றுப்போனது. மீண்டும் அவ்வாறான ஒரு நிலையை செய்யப்போகின்றீர்களா?

தமிழ் மக்களுக்கான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள உங்களுக்குத் தகுதியில்லை எனில் தகுதியானவர்களை முன்னிலைப்படுத்துங்கள். ஏமாற்று அரசியலைச் செய்யவேண்டாம். தென்னிலங்கை அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக உங்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம். வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை எனில், பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உறுதிப்படுத்தப்படவில்லை எனில், தமிழ் மக்களுக்கான தனி அலகு வழங்கப்படவில்லை எனில் பூச்சியத்தில் இருந்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை அனைத்து ஆயுதக்கட்சிகளும், புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயற்படவேண்டியது அவசியம் அல்லது தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமைதான் எமது இலக்கு என்ற கோட்பாட்டின் கீழ் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அரசுக்கு எதிராக செயற்பட்டு, சரியான தலைமை பலத்துடன் உருவாக்கப்படவேண்டும். இதுவும் இயலவில்லை எனில் தற்போதைய த.தே.கூட்டமைப்பின் தலைமையைத் தான் பலப்படுத்தவேண்டிய கடப்பாட்டுக்குள் நாம் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். காட்டிக்கொடுத்தலை பரம்பரைத் தொழிலாகச் செய்துவந்த அனைத்து ஆயுதக் கட்சிகளும் இன்றிலிருந்தாவது சிந்தித்துச் செயற்படவேண்டிய கட்டாயத் தருணத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இரணியன்

SHARE