தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தத் தவறினால் வட கிழக்கில் தமிழினம் நிர்க்கதியாக்கப்படும் நிலைமை உருவாக்கப்படும்

534

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காலப் பகுதிகளிலும், யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதிகளிலும் தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் சர்வதேச மற்றும் நாடளாவிய ரீதியில் ஓங்கி ஒலித்தது எனலாம்.
கடந்த கால அரசாங்கங்களும் தற்போதைய அரசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வந்தன ஃ வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை எவ்வாறு பிளவடையச் செய்ததோ அதே இராஜதந்திர நகர்வை தற்போதும் அரசு செய்து வருகின்றது. அதில் மாற்றுக் கருத்தில்லை.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் சோரம் போகின்றது, அரசிற்கு முன்டுகொடுக்கின்றது என்கிற வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் த.தே.கூட்டமைப்பில் இருந்து நன்மைகளை அனுபவித்துவிட்டு, த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நிலையில் தெரிவிக்கிறார்கள். இவர்களுடைய பாராளுமன்ற, மாகாண சபை வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக த.தே.கூ ஆரம்பத்தில் இருந்ததை இவர்கள் மறந்துவிட்டார்கள். குறித்த வேட்பாளர்கள் ஏன் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. ஆக ஏறிப்போன ஏணியை தூக்கியெறிந்துவிட்டு தற்போது அரசியல் இலாபம் கருதி செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாமாக விலகிச் சென்றவர்களும், விலக்கப்பட்டவர்களும், பிரிந்து சென்றவர்களும் இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. முன்னணி வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றதிலிருந்து அவர்களை மக்கள் துரோகிகள் எனத் தான் கருதுகிறார்கள். தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் சிதைக்க முற்பட்டாலும் அவர்களை தமிழ் மக்கள் துரோகிகளாகவே பார்க்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இவர்கள் அரச கைக்கூலிகளாக செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 இற்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களும், 21 கட்சிகளும் இம்முறை வடகிழக்கில் களமிறங்கியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்றும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மூலோபாயமாக செயற்பட்டு வருகின்றனர். த.தே.கூட்டமைப்பில் ஒரு சில உறுப்பினர்கள் பிழை விடுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈரோஸ் போன்ற ஆயுதக்கட்சிகள் எத்தனைக் கட்சிகளாக பிரிந்திருக்கின்றது. உங்களுக்குள் ஒற்றுமையின்றி ஏன் பிரிந்தீர்கள் என்று கேட்டதுண்டா. ஈபிஆர்எல்எப் கட்சியை எடுத்துக்கொண்டால் பத்மநாபாவின் தலைமையில் சுரேஸ் என்றொரு அணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான மற்றொரு அணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான இன்னொரு அணி என பிரிந்து செயற்படுகின்றனர்.

அதுபோன்று ரெலோ சிறீகாந்தா தலைமையில் ஒரு அணி, சிறீ ரெலோ உதயராசா தலைமையில் ஒரு அணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மற்றொரு அணி. ஈரோஸ் கட்சியானது பிரபா, துஷ்யந்தன் இவர்கள் போன்று பலரும் உரிமை கோருகின்றனர்.
புளோட் கட்சியினைப் பொறுத்தவரை சித்தார்த்தன் தலைமையாக இருந்தாலும் வன்னி, யாழ்ப்பாணம் என்ற ஒரு நிலைப்பாடு உள்ளது. அவர்களும் பிரிந்தே செயற்படுகின்றார்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் விடுதலைப்புலிகளிலும் நான்கைந்து அணிகள் பிரிந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது சமாந்தரமாக அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே தேசியத் தலைவர் பிரபாகரனால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அந்த கூட்டமைப்பு மக்கள் ஆணையைப் பெற்று பாராளுமன்றில் முக்கிய வகிபாகம் வகித்தார்கள். ஆகவே இவர்கள் வந்த வழியை சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆயுத பலம் தமிழ் மக்களுடைய கையில் இருக்கும் வரை இலங்கை அரசு யுத்தத்தை ஒரு முனையில் துண்டித்தாலும் அதே உத்வேகத்தில் அரசியல் நடவடிக்கைகள் சிற்பபாக நடைபெற்றது. ஒரு கட்டத்தில் த.தே.கூவை இலங்கை அரசு புலிகளின் பினாமி என்றே கூறி வந்தனர்.
கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்படலாம். ஆனால் அதனை சரிசெய்வதற்கு தமிழ் மக்கள் ஆகிய நாம் அமைப்பு மற்றும் கட்சி ரீதியாக குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும். அவ்வாறு செல்வதன் ஊடாகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகறியச் செய்து தமிழினத்திற்கான வெற்றியை சுவீகரித்துக்கொள்ள முடியும்.

சிங்கள அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கமே அவர்களுக்கு இல்லை. இந்த நூற்றாண்டில் இலங்கையின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கியிருக்கிறது. அபிவிருத்தியடைந்த நாடுகள் இலங்கை முன்னேறுவதை தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் போரைக் காரணம் காட்டிய அரசு ஏன் இந்த பத்து ஆண்டுகளில் முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய ஆயுதக்கட்சிகள் எமது அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறார்கள். ஆனால் மிக வலுவாகக் காணப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் அதற்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மாற்றுத் தலைமை பற்றிச் சிந்திக்கும் இவர்கள், ஏன் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைந்து சிந்திக்கக்கூடாது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்பது அரச பயங்கரவாதம் என்றே கூறவேண்டும். இதனால் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு தேர்தலிலும் கையாண்டு வருகின்றார்கள். பாராளுமன்றத் தேர்தல் என்பது ஒரு இனத்தின் அடையாளம். தொடர்ந்தும் நாம் அரச கைக்கூலிகளாக செயற்படுவோமாகவிருந்தால் வரலாற்றில் விட்ட தவறையே மீண்டும் செய்கின்றோம் என்று அர்த்தப்படும். எமக்கான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பது அற்றுப்போகும் நிலை உருவாகும்.

காலத்தின் தேவை கருதி அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலைப்பாடு த.தே.கூவிற்கு இருக்கிறது. அத்தகையதொரு செயற்பாட்டையே த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செய்தும் வந்திருக்கிறது. குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். இனப்படு கொலை தான் இந்நாட்டில் இடம்பெற்றது எனப் பிரேரனை கொண்டுவரப்பட்டு வடமாகாண சபையில் அன்று த.தே.கூவில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பதவியில் இருந்தபோது அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்குச் சாத்தியமற்றுப்போனது.

தேர்தல் என்று வந்துவிட்டால் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற முடியாது. ஆகவே தமிழ் பிரதேசத்தில் இருக்கும் கட்சிகள் தமிழ் பிரதிநிதிகளை மேற்கொள்ள அரசுடன் இணைந்து சதி செய்கின்றார்கள். தமிழ் பேசும் மக்களின் இலக்கு தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதாகும். ஆனால் அரசாங்கமோ இவற்றை வழங்கத் தயாராக இல்லை.

தற்போதைய அரசும் கூட தமிழினத்தை மீண்டும் ஒரு போராட்டச் சூழ்நிலைக்குள் கொண்டுசென்றுவிடும் என்கிற நிலைப்பாடும் தற்போது காணப்படுகின்றது. மாற்றம் ஒன்று தேவை. அதற்காக இனத்தின் அடையாளத்தை மாற்ற முடியாது. தமிழர் தமிழருக்கும், சிங்களவர் சிங்களவர்களுக்கும், முஸ்லீம் முஸ்லீம்களுக்கும் வாக்களிப்பதன் ஊடாக தமது உரிமை சார்ந்த, இனம் சார்ந்த வெற்றிகளை சுவீகரித்துக்கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக எமது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாமே தவிர வேறெந்த வழிகளிலும் அதனை அணுக முடியாது. ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டியது எமது இனம் சார்ந்த வெற்றியைத் தீர்மானிப்பதற்கு எமது தமிழ் தரப்பில் யார் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறாரோ அவரை ஆதரிப்பது பொருத்தமாக அமையும். இல்லையேல் சிறுசிறு கட்சிகளாக உடைந்து தமிழ் மக்களுக்கான ஓர் கட்சியின் பலம் அற்றுப்போகும் சூழல் உருவாக்கப்படும். எனவே சிந்தித்து வாக்களிப்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

(இரணியன்)

SHARE