தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படாதுவிடின் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு

361

கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல்கைதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்னமும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 1990-2009வரையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அடங்குகின்றனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்; சுவாமிநாதனின் கருத்தின்படி, இன்னமும் 187அரசியல்கைதிகளே சிறைகளில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய வங்கி, கொலன்னாவ, தலதாமாளிகை, கட்டுநாயக்கா விமான நிலையம், பொன்சேகா, கோத்தபாய போன்றோர் மீதான தாக்குதல்கள், இதுபோன்ற பல்வேறான தாக்குதல்களை மேற்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதற்கு ஆதரவாகச் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மத்தியவங்கி தாக்குதலின்போது தாக்குதல் நடாத்தியதாகக் கருதப்படும் பிரபாகரன், பொட்டம்;மான், நவரட்ணம் போன்றோருக்கு 200வருடங்கள் பிரபாகரனுக்கும், 200 வருடங்கள் பொட்டம்மானுக்கும், நவரட்ணம் ஐயாவிற்கு 200வருடங்கள் என மொத்தம் 600வருடங்கள் என்ற ரீதியில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை லக்ஸ்மன் கதிர்காமர், இராணுவப் புலனாய்வினைச் சேர்ந்த 29 உளவுத்துறையினரை கொலை செய்திருந்தமை தொடர்பாகவும் தமிழ் கைதிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்குள் ஒருவருக்கு தலா 05வழக்குகள் இருக்கின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டாலேயொழிய இவர்களை விடுதலை செய்வது என்பது மிகக்கடினமானவிடயம். சட்டத்தரணிகளின் மூலமாக ஒருசிலர் விடுதலை பெற்றுள்ளார்கள். சிலர் பணத்தின் மூலம் விடுதலை பெற்றுள்ளார்கள். இன்னும் சிலர் சட்டத்தரணிகளுக்கும், இராணுவப் புலனாய்வினருக்கும், அமைச்சுக்களுக்கும் பணம் வழங்கி, விடுதலை பெறாது, ஏமாற்றமடைந்தும் இருக்கிறார்கள். இதனைவிட குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அரசியல்கைதிகள் 1000இற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இச்சிறைக்கைதிகள் அநுராதபுரம், பூசா, போஹம்பர, நீர்கொழும்பு, பல்லேகல, மஹர, வெலிக்கட, கொழும்பு ரிமான்ட் பிரிசன், மகசின் போன்ற சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வரசியல் கைதிகளுள் விடுதலைப்புலிகளின் அமைப்பைவிட்டுவிலகி கொலை, கொள்ளை, கப்பம் பெற்றவர்களும் தண்டனைபெற்று அவர்கள் விடுதலையாகும் தறுவாயில் இருக்கிறார்கள்.

இராணுவ அமைப்புக்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களும் இச்சிறைகளுக்குள் இருக்கிறார்கள். இவர்களுள் இனங்காணப்பட்ட உண்மையான அரசியல்கைதிகளின் விபரம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் இல்லாதநிலையில், அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று இவர்கள் மும்முரமாகச் செயற்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் என்பது இச்சிறைக்கைதிகளின் வேண்டுகோள். பலதடவைகள் அவர்கள் உண்ணாவிரதமிருந்தும், கோரிக்கைகளை அனுப்பிவைத்தும், கூட்டமைப்பிடம் வலியுறுத்தியும், அரசிடம் தெரிவித்தும் உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்ற சமயத்தில் மாத்திரம் கவனத்திற்கொள்கிறார்களே தவிர, உண்ணாவிரத்தை கைவிடுமாறு மாத்திரமே இவர்கள் இதுவரை கூறியிருக்கிறார்கள். ஆனால் அதற்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. அதற்காக போலியான வாக்குறுதிகளை வழங்குவதும் வழமை. அதனையே அரச தரப்பினரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் தொடர்ந்தும் முன்னெடுத்துவருவது கவலைக்குரிய விடயம்.

ஆகவே இவையணைத்தையும் கருத்திற்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சரவணபவான், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ், வியாழேந்திரன், சுமந்திரன், ரொபின், யோகேஸ்வரன், சம்பந்தன், துரைராசசிங்கம், உட்பட்ட பலரும் பாராளுமன்றத்திற்கு முன்னால் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவிருப்பதாக அரசிற்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இவ்விடயம் சர்வதேச அரங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

ஆகவே இதனைக்கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் மேற்கொள்வதன் ஊடாக, கைதிகளுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்பதால் தமது இறுதி முயற்சியாக உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். இம்முயற்சியும் தோல்வியுற்றால் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசிற்கு வெளிப்படையாகவே அறிவிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

– நெற்றிப்பொறியன் –

download

 

 

SHARE