தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இரா.சம்பந்தனின் தலைமையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதே சிறந்தது – இரணியன்

374

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் சாத்வீகப் போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்பட்ட வரலாறு கள் இருக்கின்றன. தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் வரையிலான தமிழ்த்தலைவர்கள் பல்வேறு உண்ணாவிரத, சாத்வீகப் போராட் டங்கள் என மேற்கொண்டபோதும் அவை இதுவரையில் பயன் கொடுக்கவில்லை என்பதும் வரலாறு. தமிழினத்தையும், விடுதலைப்புலிகளையும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே இன்றைய வரைக்கும் அரசு பார்த்துவருகின்றது. விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு 06 வருடங்களைக் கடந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் என முத்திரை பொறிக்கப்பட்ட 11000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதொரு விடயம்தான். ஆனால் தற்போதைய மைத்திரி-ரணிலினது கூட்டரசானது பல வருடகாலங்களாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஏன் தாமதிக்கவேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.

நல்லாட்சி எனக்கூறிக்கொண்டிருக்கும் அரசு தமது நிகழ்ச்சி நிரல்களிலிருந்து மாறவில்லை என்பதையே தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை எடுத்துக் காட்டுகின்றது. பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்படுதல் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் என்பது சிறந்த உத்தேசம்தான். பிணையில் விடுதலை செய்தல் என்பது கைதிகளுக்கு ஒரு சாதகமான தன்மையினை ஏற்படுத்தினாலும் மீண்டும் புலனாய்வு விசாரணைகள் மற்றும் காணாமற்போதல், கடத்தப்படும் சம்பவங்கள் இயல்பாக நடக்கக்கூடும்.

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படும் போது அது இலங்கையில் இருக்கக்கூடிய புலனாய்வுப்பிரிவினருக்கு சாதகமான தன்மையினைப் பெற்றுக்கொடுக்கும். அரசாங்கம் ஒன்றினைச் சிந்திக்க வேண்டும். 11,000 அரசியல் கைதி கள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த 200 தமிழ் அரசியல் கைதிகள்தான் வெளியில் வந்து வன்முறைகளைத் தோற்றுவிக்கப்போகின்றார்களா? இவ் வாறு அரசு எண்ணுவது நகைப்புக்குரிய விடயமே.

இராஜதந்திர ரீதியில் அரசு தனது அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச நாடுகள் மீண்டுமொரு யுத்தத்தினையே எதிர்பார்க்கின்றன. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பிரச்சினைகள் இலங்கையில் தீர்க்கப்பட்டுள்ளது எனக்கூறிக்கொண்டிருக்கும் அரசு 65000 பொதுமக்களைக் கொன்றுகுவித்த ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் எனில் ஏன் இந்த 200 தமிழ் அரசியல் கைதி களையும் விடுதலை செய்யக்கூடாது. அப்படியாயின் அவர்களின் கருத்தின்படி தமிழினம் ஒரு தனி இனமாகவே கருதப்படும். வடகிழக்கினைப் பிரித்து தமிழர்களின் கைகளில் கொடுப்பதில் என்ன தவறு? யுத்தம் நிறைவடைந்தாலும் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தொடர்ந்தும் ஏமாற்றத்தைக்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலை மையில் உரிய பாடம் புகட்டவேண்டும். அதுவே இன்றைய அரசியலுக்கு சிறந்த களம் அமைப்பதாக அமை யும். சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கடந்த ஆண்டில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினரும், குழுக்களின் தலை வருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்திருந்தபோதிலும் அவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்த 200 கைதிகளுக்காக நாம் இறப்பதா என்கின்ற கேள்வியும் மனதில் இருக்கலாம். ஓரிரு அரசியல்வாதிகள் தமது உயிரைத் தியாகம் செய்தால் அது வரலாற்றில் எழுதப்படுவதுடன் அவர்களுடைய இறப்பில் தமிழினத்திற்கான விடிவு பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாகும். இதுவரையிலும் தமிழ் அரசியல்வாதிகள் சாகும்வரையான உண்ணாவிரதங்களை மேற்கொள்ளவில்லை என்பதும் கவலைக்குரியதே.

சிறைச்சாலையில் தமிழ் அரசி யல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் தமிழ்த்தரப்புக்கள் பதாதை களை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் என அரசிற்கு எதிராக தமது எதிர்ப்புக்களை எழுப்புகின்றார்களே தவிர, சுமுகமான நிலைமைகள் இருக்கின்றபொழுது அவர்களை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொண்டதாக இதுவரையில் இல்லை. சட்டத்தரணிகள் தாம் பணம் சம்பாதிப்பதற்காக வாதிடுபவர்கள். தமது சுயநலமே அவர்களுடைய நோக்காக இருக்குமிடத்து சட்டத்தரணியான சுமந்திரன் அவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவாரா என்பது கேள்விக்குறியான விடயமே. சட்டத்தரணியாக இருந்துவிட்டு அரசியல்வாதியாக தற்போது வந்திருக்கக்கூடியவர் வடபகுதியில் தமிழினம் அனுபவித்த கஷ்டங்களில் பங்கெடுக்காத ஒருவர். இவ்வாறானவர்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை இல்லை என வெளி நாடுகளில் கூறியதாகவும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் எனக்கூறியதும் பொருத்தமற்ற செயலாகும்.

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்கொள்வாராகவிருந்தால் அவர் தமிழினத்தினால் தூற்றப்படாமல் போற்றப்படுவார் என்பதே உண்மை. அதிகமான அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக ஊடகங்களில் மாத்திரம் தம்மை வெளிக்கொணர்வதே இவர்களது நாளாந்த நடவடிக்கைகளாக அமைகின்றதே தவிர, எந்தவொரு தமிழ் அரசியல்வாதி அரசியல் கைதி களின் விவகாரத்தில் விடுதலை யினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்பட்டார்? தற்போது நடந்துமுடிந்த உண்ணாவிரதப் போராட்டம் கூட கைதிகள் தமக்கிடையே பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு இப்போராட்டத்தினை நிறுத்தி யிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. புனர்வாழ்வு அளித்தாவது எம்மை விடுதலை செய்யுங்கள் என 85பேர் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார்கள். சட்டம் அறிந்த சம்பந்தனும், சுமந்திரனும் நாட்டில் இல்லை. அடுத்த நிலையிலுள்ளவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியா மல் திணறிக்கொண்டிருக்கின்றனர். இன்று எதிர்க்கட்சியாகவிருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பானது சம்பந்தனின் தலைமையில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மேற்கொண்டால் மாத்திரமே இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எட்டிப்பார்க்கும். எவ்வாறாவது தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்தே ஆகவேண்டும்.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு செய்காரியங்கள் மாத்திரம் தீயவைக ளாக அமையப்பெற்றால் அதனை எவ்வாறு நல்லாட்சி எனக்கூறுவது? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகவிருந்து சாதிக்கமுடியாததை எதிர்க் கட்சியாகவிருந்து சாதிக்க இயலும் என முடிவெடுத்த சம்பந்தனின் தலைமை இதுவரையிலும் தமிழ் மக்களின் நலன்சார்ந்து சாதித்தது என்ன? பாராளுமன்றில் இவர்கள் எதைக்கூறினாலும் அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அவ்வாறெனில் எதிர்க்கட்சிப் பதவி என்ன தேவைக்காக என்கின்றக் கேள்வியும் எழுகின்றது.

த.தே.கூட்டமைப்பு மற்றும் வடமா காணசபையின் உறுப்பினர்கள் என அனை வரும் இணைந்து உண்ணாவிரதத்தினை மேற்கொள்வதன் ஊடாக தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்தில் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இயலும். இவர்கள் தமது ஆடம்பர வாழ்க்கையினை அனுபவிக்கவேண்டும் என்பதற்காக கைதி கள் சாகும்வரையில் உண்ணாவிரதம் என போராட்டங்களை ஆரம்பிக்கும் நேரத்தில் மாத்திரம் தான் இந்த அரசியல்வாதிகள் வாய்திறக்கின்றார்கள். நேர்த்தியாக கைதி கள் விடயத்தைக் கையாண்டுவருகின்ற வடக்கு முதல்வர் அவர்களுக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அவதூறாகக் கூறுவதும் தன்னால் செய்ய இயலா ததை எவரும் செய்யக்கூடாது என்பதையே இவ்விடயங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் விடுதலைக்காக 30000இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டுள்ளனர். இவர்களுடைய சாவுக்குக் காரணம் அன்று இருந்த அரசியல்வாதிகளால் ஆயுத மேந்திப்போராடுமாறு தூண்டப்பட்டனர். இந்தப் பின்னணியில் இவர்கள் இருந்தார்ள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றது. விடுதலைப்புலிகளை அன்று ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட இரா.சம்பந்தன் அவர்கள் இன்று அவர்கள் ஏகபிரதிநிதிகள் அல்ல எனக் கூறிவருகின்றார். இவ்விடயம் அவரது இயலாமையையே வெளிக்காட்டுகின்றது எனலாம். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எந்தவொரு விடயத்திற்கும் மேற்கொள்ளவில்லை. இனியும் மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவ்வாறு அவர்கள் மேற்கொண்டால் அது ஒரு உலக சாதனையாகக்கூட அமையலாம். ஒற்றுமையே எமது பலம். அந்தப் பலத்தினை சீர்குலைப்பதற்காக சிங்கள பேரினவாத சக்திகள் அவர்களது நிகழ்ச்சிநிரலை செவ்வனவே மேற்கொள்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படவில்லை. ஒவ் வொரு காலகட்டத்திலும் தோன்றிய ஆட்சியாளர்கள் தமது சுயநல நோக்கத்தோடு செயற்பட்டார்களே தவிர, தமிழ் மக்களது பிரச்சினையில் தீவிர அக்கறையினைக்காட்டவில்லை என்பதுதான் உண்மை. 1,2,3,4ஆம் கட்டங்கள் என ஆரம்பித்த ஈழப்போர் தற்போது நிறைவடைந்துள்ளது. 5ம் கட்ட ஈழப்போரை அரசு எதிர்பார்க்கிறதா? அதற்கு அடி வருடிகளாக த.தே.கூட்டமைப்பு செயற்படப்போகின்றதா? வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டின்போது மாவை சேனாதிராஜா உட்பட்ட பலரும் 2016இற்குள் தீர்வுகள் எட்டப்படாதுவிடின் அஹிம்சை ரீதியிலா னப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என உரத்துக்கூறியபோது கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்களே தவிர, நடைமுறையில் இதுவரை எதுவும் இடம்பெறவில்லை.

சாத்வீகப்போராட்டங்கள் என்று கூறினால் மாத்திரம் போதாது. அதற்கான ஒரு அணியை த.தே.கூட்டமைப்பு தயார்படுத்தவேண்டும். அவ்வாறு செயற்படும்போதுதான் தமிழினம் தொடர்பில் இலங்கை அரசுக்கு ஒரு அச்சுறுத்தலான நிலைமை தோன்றும். விடுதலைப்புலிகளது போராட்டத்தில் குளிர்காய்ந்துகொண்டு அரசியல் நடாத்தும் தமிழ் அரசியல்வாதிகள் சற்றுச் சிந்திக்கவேண்டும். தமிழினத்தின் விடிவுக்காக குரல் கொடுப்பதற்காகவே தமிழ் மக்களால் நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டீர்கள். ஆனால் இன்று உங்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் வெளிநாடுகளில் சுகபோக வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்க, தமிழினத்தின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் இன்று அனைத்தையும் இழந்தவர்களாய் பல ஆண்டுகாலங்களாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அன்று விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் உங்களது அரசியலை சுதந்திரமாக செயற்படுத்த முடியவில்லை எனக் கூறினீர்கள். இன்று நல்லாட்சியில் நாம் எதனையும் பேச முடியும் என்கிறீர்கள். அவ்வாறெனில் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலையில் பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன? தொடர்ந்தும் சிங்களவர்கள் எம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதற்கு வழி களை ஏற்படுத்திக்கொடுக்கின்றீர்களா?

த.தே.கூட்டமைப்பின் தலை வரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு, தமிழ் மக்களுக்கான உரிமைகளையும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினையும் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தரப்பாகிய நீங்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொள்வதில் எவ்விதமான தவறும் இல்லை. நீங்களும், தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம் என இருக்கின்றபோது அதற்கான தீர்வுகளை அரசு உடன் வழங்கியே ஆகவேண்டும். இனியாவது சிந்தித்துச் செயற்படுவது சிறந்தது. இல்லையேல் தமிழினம் மீண்டும் ஒரு யுத்த சூழலை நோக்கித் தள்ளப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

SHARE