நாட்டின் பல்வேறு சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினையையிட்டு அக்கைதிகளில் ஒரு சாராரின் சட்டத்தரணிகள் அவர்களைப் பிணையில் விடுதலை செய்யும்படி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கைதிகளில் ஒரு சாராரைப் பிணையில் விடுதலை செய்வதற்கு முன்வந்தும் இருக்கின்றது.
எனினும் இக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவதைவிடத் தொடர்ந்தும் சிறையில் இருப்பதே மேலா னது எனக்கருதுவதற்கும் பொருத்தமிகு காரணிகள் இருக்கத்தான் செய்கின்றன. சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவதை வரவேற்கும் சகல நல்லெண்ணங்கொண்டோரும் பிணையில் விடுவிக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரியவில்லை.
புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்னும் நிலையில் சிறையிலுள்ள கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படின் அவர்களுடைய இயல்பு வாழ்வை அவர்கள் எதுவித இடையூறுமின்றித் தாம் விரும்பிய இடங்களில் சுயாதீனமாக மேற்கொள்ள முடியும். ஆனால் பிணையில் அவர்கள் விடுவிக்கப்படும்போது பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்னும் நிலையிலேயே சமூகத்தில் கலக்கவிடப்படுவதனால் பல்வேறு நெருக்கடிகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக அரசாங்கத்தின் காவற்றுறையினுடைய புலனாய்வினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் பிணையில் விடுதலை செய்யப்படும் அரசியல் கைதி களை இடையறாது பின்தொடர்ந்து புலிப்பயங்கரவாதச் சந்தேக நபர்கள் தானே நீங்கள். உங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் இடையறாது கண்காணிக்கவேண்டும் என வாய்மொழிந்து அவர்களுக்குப் பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு நிச்சயமாக முன்வருவார்களென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. இதனால் தான் இக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவதை விடத் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டிருப்பதே மேலான தென அரசியல்வாதிகளுக்குஞ் சரி, நடுநிலையாளர்களுக்குள்ளுஞ் சரி ஒரு கருத்து நிலவிவருகின்றது. இவ்வரசியல்வாதிகளும், நடு நிலையாளர்களும் தமிழ் அரசியல் கைதி கள் விடுவிக்கப்படின் பொதுமன்னிப்பின் கீழேயே விடுவிக்கப்படவேண்டும். பிணையில் விடுவிக்கப்படின் அவர்களுடைய நிம்மதியான இயல்பு வாழ்வு மேலும் கேள்விக்குறியாகிவிடும் என்னும் கருத்தை வெளியிட்டுப் பிணையில் விடுவிப்பதைவிடத் தொடர்ந்தும் சிறை யில் வைத்திருப்பது அக்கைதிகளுக்கு அதிகளவு பாதுகாப்பெனக் கருத்து வெளியிட்டிருப்பது அவ்வழியில் இதுவரை யில் சிந்திக்காதவர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.
இவ்விடயந் தொடர்பில் நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை யாதென உடன் தமிழ் அமைச்சர்களிலொருவரான மனோ கணேசன் அவர்கள் அம்பலப்படுத்த வேண்டுமென அவ்வமைச்சரின் கள்ளத்தனத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்னும் தனது ஆழ்மன ஆதங்கத்தையும் புலப்படுத்தியுமுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெஹிவளை-கல்கிசை மாநகர சபையில் கொழும்பு மாநகரப் பகுதியில் கோலோச்சும் மலையகத்தைச்சேர்ந்த அமெரிக்கசார்பு (Pசுழு யுஆநுசுஐஊயு) வலதுசாரி, முதலாளித்துவ அரசியல்வாதியான மனோ கணேசன் அவர்களுடன் இணைந்து அம் மாநகர சபையில் தமிழ் வாக்காளர்களின் அனுசரணையுடன் உறுப்பினருமாகித் தான் கொண்ட இடதுசாரித்துவ அரசி யலை மிகவும் வெட்கங்கெட்ட நிலை யில் இடறவிட்ட கலாநிதி கருணாரத்ன அவர்கள் தற்போதாவது ஓரளவுக்கேனும் விழிப்படைந்திருப்பது, இலங்கைத் தேசந் தழுவியளவில் சிங்கள, தமிழ், இஸ்லாமிய, பறங்கி, மலையாள அனைத்துச் சாமான்ய குடிமக்களின் நிறைவான எதிர்காலத்துக்கும் ஒளி மிகவும் குன்றியிருந்தாலுங் கூடப் பச்சை விளக்கின் பிரகாசத்துக்கே வழிவகுத்திருக்கின்றதெனலாம்.
இச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய வெறியர்கள் இலங்கை இனப்பிரச்சினையைச் சாதகமாக வைத்துச் ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களோடும் தமிழ் அமைச்சர்களோடும் தாம் தமிழர்களுக்குச் சார்பானவர்களென நம்பவைத்தும் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள தமிழர்களையும் நம்பவைத்தும் இந்நாட்டுத் தமிழினத்தை நிரந்தர அடிமைகளாகவும், மலையகப் பெருந்தோட்டப் பாட்டாளிக் கண்ணின் மணிகளை நிரந்தரத் தினக்கூலிகளாகவும் ஆக்கி இலங்கைத் தீவு முழுவதை யுமே தனது நவீன உலகமயமாக்கல் என்னும் கோரப் பசிக்குத் தீனியாக்கும் கயமைத்தனத்தில் மிகவும் உசாரா கவும், உத்வேகத்துடனும் ஈடுபட்டும் வருகின்றனர்.
தமிழ் அரசியல்கைதிகள் விடயத்திலும் இவ்வேகாதிபத்தியவாதிகள் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கத்தான் செய்வார்கள். ஆதலினால் அண்மையில் முன்னிலை சோசலிஷக் கட்சியினர் (குசழவெ ளுழஉயைடளைவ Pயசவல) கொள்ளுப்பிடியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் அத்தேசத்தின் இலங்கைத் தீவுக்கும் அத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கும் எதிரான நரித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்துக்கும் பயனளிக்கத்தான் செய்யும்.
மேலும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர ஆகியோர் சிறைக்கைதிகள் விவகாரம் தொடர்பில் மிகவும் கடும்போக்கான இனவாத எண்ணோட்டங்களைத் தொடர்ந்தும் விதைத்து வருகின்றார்கள். இம்மூவரில் சம்பிக்க ரணவக்க அவர்கள் அரசின் அமைச்சர் என்பது தெரிந்ததே. ஜே.வி.பி அமைப்பிலிருந்து விலகிச்சென்று புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபித்து அக்கட்சியை இயக்கிவருபவர் விமல் வீரவன்ச ஆகும். குணதாச அமரசேகர என்பார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்னும் அமைப்பின் தலைவராக விளங்கிவருகின்றார்.
சம்பிக்க ரணவக்க அவர்கள் அரசின் அமைச்சர் என்னும் உணர்வின் பாற்பட்டு நின்று சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யின் குற்றவாளிகள் என்னும் சந்தேகத்தின் பாற்பட்டு வழக்குகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இரா ணுவ வீரர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமெனக்கோரி தனது பதவிக்கமைவாகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் முற்பட்டதோடு கொலை, பாலியல் வன்முறைகள் போன்ற தனிநபர் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள இராணுவவீரர்களையும், புலிகள் உறுப்பினர்கள் என்னும் உறுதிப்பாடு கூட இல்லாத நிலை யில் சந்தேகத்தின்பாற்பட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி களையும் சமநிலைப்படுத்தியுள்ளமை, அவரைப் பொறுத்தவரையில் திருப்தியளிக்கக்கூடிய வொன்றாக இருந்தபோதுங்கூடப் பொது அவ தானிப்பின்பாற்பட்டுச் சிரிப்புக் கிடமானவொன்றே.
ஜே.வி.பி அமைப்பின் முக்கிய ஸ்தர்களில் ஒருவராக விளங்கிப் பின்னாளில் அக்கட்சியிலிருந்து விலகிப் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அக்கட்சியின் தலைவராக அதை இயக்கிவரும் விமல் வீரவன்ச அவர்கள் ஆரம்பத்திலேயே மஹிந்த அவர்களின் ஆட்சியில் அமைச்சர்ப் பதவி வகித்தமையோடு, மஹிந்த தரப்பினரின் காவலர்களில் தானும் ஒருவராக நின்று கருத்துச் சொல்லிவருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இதனால்தான் அண்மையில் அவர் அமெரிக்கா, பிரித்தானியா, தமிழ் ஈழம் என்னும் தேச வரைபடமொன்றை (ஆயுP) வரைந்து ஏகாதிபத்திய அமெரிக்காவும், மேற்குலகும் மைத்திரி-ரணில் அரசோடு இணைந்து தமிழ் ஈழத்தைப் பிரித்துக்கொடுக்கத் தயாராகிவிட்டதான உண்மைக்கு மாறான மாயத்தோற்றத்தைக் காட்டிப் பூச்சாண்டி பிடித்தும் உள்ளார்.
இதைப்போலவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர அவர்களும் மிகுந்த சிங்கள மேலாதிக்க வெறியின்பாற்பட்ட மன உந்துதலினால் அரசியல் கைதி களின் விவகாரந் தொடர்பில் கருத்து வெளியிடும்போது, கைதிகள் விடுதலை செய்யப்படின் மீண்டும் பிரிவினைக் கோரிக்கை வலுப்பெறுவதோடு, தேசப் பிரிவினைக்கான யுத்தமும் இடம்பெறுவதற்கான ஏதுநிலையுண்டென எகத்தாளமாகக் கருத்து வெளியிட்டுத் தனது தமிழர் விரோத நிலைப்பாட்டுக்கு மேலும் மெருகூட்டியுள்ளார்.
இவர்களை விட, இடதுசாரி அரசியல் கோட்பாட்டிலிருந்து என்றைக்கோ இடறிவிழுந்து தற்போது மஹிந்த ஆட்சியில் இருக்கும்போது அமைச்சர்ப்பதவி சுகங்கண்டுவரும் முப்பெரும் அரசியல் தலைவர்களான லங்கா சமசமாஜக்கட்சியின் திஸ்ஸ விதாரண, இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சியின் டியூ குணசேகர, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் தமிழர் விவகாரங்கள் தொடர்பில் ரணில் ஆட்சி காலத்தின்போது இனவாத எண்ணோட்டங்களையே பரப்பி வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்கள். தற் போதைய அரசியல் கைதிகளுடைய விவ காரந் தொடர்பிலும் அவர்கள் மஹிந்த அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அமைச்சர்ப் பதவிகள் வகிப்பதை மட்டுமே பிரதான குறியீடாகக்கொண்டு முதலாளித்துவ இனவாதிகளின் பாணி யிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருவதோடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் வருகின்றார்கள்.
ஆனால் நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் பிணையில் விடுதலை செய்வது தமிழ் அரசியல் கைதிகளுக்கு நன்மை பயக்காது என்னும் பேருண்மையை அம்பலப்படுத்தியதோடு அமைச்சர் மனோகணேசன் அவர்கள் மைத்திரியினதும், ரணிலினதும் உண்மை நிலை யாதென்பதை அவர்களிடமிருந்து உடன் அறிந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்னும் சாரப்பட வேண்டற்பாலானதான வேண்டுதல் ஒன்றையும் விடுத்துள்ளார்.
எனினும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் தன்னுடைய தற்போதைய தகுநிலைக்குச் சிறிதளவே னும் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் மிகவும் பரந்த, பண்பட்ட மனோபாவத்தின்பாற்பட்டு முதலில் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட்டும் பின்னர் ஏனையவற்றைப் பார்த்துக்கொள்ளலாம் என்னும் குருட்டாம் போக்கான கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளார். எவ்வாறாக வடக்கில் பொதுவுடமைக் கோட்பாடு சார்ந்த இலக்கியவாதியாக மிக முற்பட்ட பொன்.கந்தையா அவர்களது காலந்தொடக்கம் தன்னை இனங்காட்டிப் பின்னர் சாய்மனைக் கதிரை மார்க்சிய இலக்கியவாதியாகக் கொழும்பிலும் புலம்பெயர் கனவான் தர, பிரபுத்துவமட்ட போலி மார்க்சிய இலக்கியப் பின்புலத்திலும் தன்னையும் கனவானாக ஆக்கி ஆத்ம திருப்தியடைந்தமை மட்டுமல்லாமல் பல் லாயிரக்கணக்கான வடக்கின் மாவீரச் செல்வங்களின் குருதி உறைவின் பின்னணியில் யுத்தக் கதாநாயகன் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து சான்றோர் விருது பெற்றுப் பெருமிதங்கொண்டவரும் தற்போது வயது முதிர்வின் காரணமாக மயானத்தை நோக்கிக் கொண்டிருப் பவருமான இலக்கியவாதி ஒருவரின் இயல்பு இருந்ததோ அதுபோலவே கிராமிய வழக்கில் காணாததைக் கண்டுவிட்ட உணர்வில் அமைந்ததாகக் கூறப்படும் உணர்வின்பாற்பட்டு அமைச்சர்ப்பதவிகொடுத்த போதையின் கிறக்கத்தில் முதலில் கைதிகளைப் பிணையிலாவது விடுவித்து நட்டஈடு வழங்கட்டும் என அமைச்சர் கணே சன் அவர்கள் குறிப்பிட்டு அரசின் பெரும்பான்மை இன அமைச்சர்களோடு மோதி வெற்றி முடியாத நிலையில் அமைந்த தனது கையாலாகாத்தனத்தைப் பிரதிபலித்துமுள்ளார். இதைப்போன்றே முன்னாளில் ஐ.தே.க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து அகால மரணத்தை தழுவிக்கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அவர்களும் ஆண்ட ஐ.தே கட்சியின் பின்வரிசை அங்கத்தவர்களிடம் அடிவாங்குமளவுக்குக் கையாலாகாத நபராக விளங்கினார் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமுடையவொன்றாகவிருக்கும்.
ஆனால் தற்போது அமைச்சராக இருக்கும் அன்னாரின் துணைவியார் தமிழ் அரசியல் கைதிகளை உடன் பொது மன்னிப்பின் கீழேயே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு பிணையில் விடுவிப்பதாயின் தான் உடன் பதவி துறக்கவுந் தயாராக இருப்பதாகவும் அவர் ஒருபெண்ணாக இருந்தபோதும் அசாதாரண துணிச்சலோடு கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க வொன்றாகவுள்ளது. அமைச்சர் மனோ கணேசன் அரசியல்கைதிகளைப் பிணையிலாவது விடுதலை செய்து நட்டஈடு வழங்கவும் வேண்டுமெனவும் கூறியிருப்பது பிணையில் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்னும் பெயரிலேயே விடுவிப்பதனால் அவர்களுக்குக் கொடுக் கப்படும் நட்ட ஈட்டினால் யாது பயன் என்பதை அவருக்கு அமைச்சர்ப் பதவி யினால் கிடைத்துக்கொண்டிருக்கும் பயனின் பாற்பட்ட அரிச்சுவடியின் பால் ஆய்ந்தறிந்ததாகக் கொள்ள முடிகின்றது.
திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தற்போது கூறியதை எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிவரையிலும் தனது ஞாபகத்தில் நிலைநிறுத்தி அந்நாளுக்கு முதல் தமிழ் அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யாவிடின், அமைச்சர் கணேசனைப் போன்று பிணையிலாவது விடுதலை செய்து நட்டஈட்டையும் வழங்கவேண்டுமென்னும் கண்மூடித்தனமான கனவான் கருத்தை வெளியிட்டுத் தன்னைத்தானே ஆற்றுப்படுத்துவதை முழுமையாகத் தவிர்த்து உடன் பதவி துறப்பாராயின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர அமர அமர்ந்திருக்கும் இராஜவரோதயம் சம்பந்தன், அமைச்சர் டி.டிம்.சுவாமிநாதன் ஆகியோரும் தமது பதவிகளை உடன் தூக்கிவீசித் தமது மானத்தைக் காத்தாலென்ன எனத் தமிழ் மக்களைப் புதிய பாதையில் சிந்திக்கவும் வைக்கும்.
அமைச்சர் விஜயகலா அவர்கள் இவ்வாறான ஓர் அரசியல் பின்புலத்தில் தனது பதவியைத்தூக்கி வீசுவதோடு அமெரிக்க, மேற்குலக இந்திய மேலாதிக்கவாத தமிழர் விரோத சர்வதேச முகாமிலிருந்தும் முழுமையாக வெளிவருவதோடு ஆனந்தசங்கரி போன்ற பழம்பெரும் இடதுசாரி அரசியல் எண்ணோட்டத்தைக் கொண்டவர்களையும் அரவணைத்துக் கொண்டு முன்செல்வாராக இருந்தால் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்தில் எந்தவொரு பதவியையாவது வகிக்காமல் இருந்தாலுங்கூடத் தமிழ் மக்களின் மனங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் உள்ளங்களில் இராணி அம்மையாராக வீற்றிருப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே அன்னார் இதுகுறித்து ஆழ, அகலமாக எண்ணித் துணிய வேண்டுமென்பதே நல்லோரின் அவாவாக அமைந்திருக்கின்றது.
வீரப்பதி விநோதன்