தமிழ் படங்களில் நடிக்க எனக்கென்ன பயம்? நடிகை அஞ்சலி பேட்டி 

585




தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை என்று நடிகை அஞ்சலி கூறினார். நடிகை அஞ்சலி, அவர் சித்தி பாரதிதேவியிடமிருந்து பிரிந்து சென்றார். அதோடு சித்தி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் பரபரப்பான கொலை மிரட்டல் புகார் தெரிவித்தார். பின்னர் ஆந்திராவுக்குச் சென்றார். அங்கிருந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.

 

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அப்போது நடிகை அஞ்சலி நிருபர்களிடம் கூறியதாவது: என் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விட்டது. நான் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இடைவெளி எதுவும் விடவில்லை. சில பிரச்னைகள் காரணமாக தமிழில் நடிக்கவில்லை. நல்ல படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க காத்திருந்தபோது, இயக்குனர் சுராஜ் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். என்னை யாரும் தமிழ் படத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்லவும் இல்லை, மிரட்டவும் இல்லை.

 

நான் தைரியமாகத்தான் நடிக்க வந்திருக்கிறேன். தற்போது இந்த படம் தவிர வேறு இரண்டு படங்களில் நடிக்க பேசி வருகிறேன். களஞ்சியம் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதானே பிரச்னை. அது இப்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் அது பற்றி பேச மாட்டேன். நான் சித்தியிடமிருந்து விலகி வந்துவிட்டதால் என்னை பற்றி தவறான செய்திகள் பரவியுள்ளது. குடும்பத்திலிருந்து தனியாக வந்த பெண்ணை பற்றி தவறாகப் பேசுவது வழக்கமான ஒன்றுதான். எனக்கு யார் யாரோ அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள், பாதுகாக்கிறார்கள், எனக்கு திருமணம் நடந்து விட்டது, எனக்கு சரும பிரச்னை இருக்கிறது, சித்தியுடன் சமரசமாகிவிட்டேன் என்று எத்தனையோ வதந்திகள் வந்திருக்கிறது.

 

அவை எல்லாமே அப்பட்டமான பொய். ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள்.தமிழ் சினிமா, நான் வளர்ந்த இடம். அந்த இடத்தின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். நான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பேன். ரசிகர்கள் எப்போதும் போல் என்னையும், என் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இவ்வாறு அஞ்சலி கூறினார். பேட்டியின் போது ஜெயம்ரவி, இயக்குனர் சுராஜ், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சாமிநாதன், ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் உடன் இருந்தனர்.

 

SHARE