
• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்??
• யூலை 25ம் திகதி அதிகாலை கருணாவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் ராணுவத்தின் பாதகாப்பான வீட்டில் இருந்த வேளை படுக்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
• கருணா இன் சகோதரர் கேணல் றெஜி செப்டெம்பர் 22ம் திகதி கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையே பேச்சுவார்த்தைகளைத் தொடர நோர்வேயின் முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்தன.
புலிகள் தமது இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளை மையமாக வைத்தே ஆரம்பிக்க வேண்டும் என வற்புறுத்த அரச தரப்பினர் நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தொடரவேண்டும் என வற்புறுத்தினர்.
ஆனால் புலிகள் தரப்பினர் அரசாங்கம் தொங்கு நிலையில் இருக்கும்போது அந்த அரசாங்கத்துடன் நிரந்தர தீர்வு குறித்து பேசுவதில் அரத்தமில்லை எனக் கூறி நிலமைகள் இழுபறியில் காணப்பட்டன.
எரிக் சோல்கெய்ம் இலங்கை சென்று நிலமைகளை ஆராய்ந்த பின், இந்தியாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.
(US Deputy Secretary of State Richard Armitage (L), Japanese special envoy Yasushi Akashi (C) and Sri Lankan Enterprise Development Industrial Policy and Investiment Promotion and Constitution Affairs Minister Gamini Peiris listen to a…Mehr)
பிரசல்ஸ் நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போது ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ், யசூசி அக்காசி, கிறிஸ் பற்றன் ஆகியோர் உடனிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை எழுப்பியிருந்தன.
பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடையாவிடில் நன்கொடை வழங்குவோரின் கவனம் வேறு பக்கம் திரும்பலாம் என எச்சரித்தனர்.
இப் பின்னணியில் நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சந்திரிகா அவர்களை 2004ம் ஆண்டு யூன் 15 ம் திகதி சந்தித்து தமது அபிப்பிராயங்களை வெளியிட்டார்.
குறிப்பாக இரு சாராரும் குறிப்பிடத்தக்க அளவில் பேச்சுவார்த்தைகளை நகர்த்த உதவவில்லை எனவும், அரசில் பங்காளியாக உள்ள ஜே வி பி இனர் இப் பேச்சுவார்த்தைகளில் அரசிற்கு உதவியாக இல்லை என புலிகள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தில் கருணா குழுவினர் கிழக்கில் செயற்படும் முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறுவதாக உள்ளதாக புலிகள் முறையிடத் தொடங்கினர். இச் சந்தர்ப்பத்தில் கருணா தலைமறைவாகியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
(L-R) Theenthamil, Lavanya, Premini and Nilavini
ஆனால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ராணுவ கமாண்டரும், கருணாவின் ஆதரவாளருமான நிலாவினி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அச் சந்திப்பின் போது கிழக்கில் புலிகளின் தாக்குதல் அதிகரித்த வேளையில் தானும் கருணாவின் ஆதரவாளர்கள் சிலரும் ராணுவத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
இவர்களை கொழும்பிற்கு எடுத்துச் செல்வதற்கு அப்போதைய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷகிர் மௌலானா உதவியதாகவும், கருணா தான் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதாக கூறிச் சென்றார் எனவும் தெரிவித்தார்.
கருணா வெளியேறியதைத் தொடர்ந்து அப் பெண் போராளி நிலாவினி உட்பட பலர் மட்டக்களப்பிற்குத் திரும்பினர். பின்னர் நிலாவினி புலிகளோடு மீண்டும் இணைந்தார். இச் சம்பவங்கள் 2004ம் ஆண்டு யூன் 13ம் திகதி இடம்பெற்றன.
Colonel Karuna and Senior Commander of the women’s wing S. Nilavini
அதனைத் தொடர்ந்து அம் மாத இறுதியில் சோல்கெய்ம் கிளிநொச்சி சென்றார். அங்கு அரசாங்கம் கருணாவிற்கு உதவுவதை நிறுத்தவேண்டும் எனக் கூறியிருந்தார்.
கிளிநொச்சியைத் தொடர்ந்து லண்டன் சென்று பாலசிங்கத்தைச் சந்தித்தார். கருணாவின் பிரச்சனை தீர்க்கப்படும் வரை வேறு எதுவும் பேச முடியாது எனக் கையை விரித்த அவர் ஏனைய தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என வற்புறுத்தினார்.
இரண்டு தரப்பினரும் இறுக்கமான போக்குகளை எடுத்த போது கிழக்கில் கொலைகள் தொடர்ந்தன.
கிழக்கில் கறுப்பு புலிகள் தினம் யூலை 3ம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட போது கிழக்கின் அரசியல் பொறுப்பாளர் சேனாதிராஜா தாக்கப்பட்டு இன்னொருவர் கொல்லப்பட்டார்.
இச் சம்பவத்தின் பின்னணியில் கருணா தரப்பினர் இருந்ததாக செய்திகள் கசிந்தன.
இச் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களில் கருணா தரப்பினைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் ஜாதிக கெல உறுமய இற்கு ஆதரவான பௌத்த பிக்குவின் விகாரையிலிருந்து கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட குண்டர்கள் என புலிகள் கூறினர்.
இதற்கு அடுத்த தினம் இன்னொரு சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தில் கொழும்பு பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் இறந்ததோடு 10பேர் படுகாயமடைந்தனர்.
கருணாவைத் தனிக் கட்சி அமைத்துச் செயற்படுமாறு டக்ளஸ் தேவானந்தா அவ்வேளையில் ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்த கொழும்பில் அதுவும் ஜனாதிபதியின் வாசஸ்தலம், அமெரிக்க, பிரித்தானிய, இந்திய தூதுவராலயம் அமைந்த அப் பகுதியில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
இச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்த புலிகள் சமாதான முயற்சிகளைக் குலைக்கும் சக்திகளின் நாச வேலை எனத் தெரிவித்தனர்.
ஆனால் புலிகளே அச் செயலை மேற்கொண்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.
கறுப்பு புலிகள் தினத்தில் நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் கருணா தரப்பைச் சேர்ந்த இருவர் யூலை நடுப்பகுதியில் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து யூலை 25ம் திகதி அதிகாலை கருணாவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் ராணுவத்தின் பாதகாப்பான வீட்டில் இருந்த வேளை படுக்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
அது கருணாவிலிருந்து வெளியேறியவர்களின் செயல் என புலிகள் கூறினர். அடுத்த ஒரு வாரத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான மோகன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் ராணுவத்திற்கு உளவாளியாக செயற்பட்டதாக பின்னைய செய்திகள் தெரிவித்தன.
இவை யாவும் கறுப்பு யூலை தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் நடந்தேறின.
இக் காலவேளையில் ஜனாதிபதி சந்திரிகா 83ம் ஆண்டு யூலை இனக் கலவரம் குறித்து நாட்டின் தலைவர் என்ற வகையில் தனது வருத்தத்தைத் தெரிவித்த போதும் அவை உரிய மக்களின் கவனத்திற்குச் செல்லவில்லை.
கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னால் மறைமுகமான சக்திகள் செயற்படுவதாக கருணா குற்றம் சாட்டினார்.
தாய்லாந்திலிருந்து வெளிவரும் ‘ஆசியன் ரிபுயூன்’ என்ற ஆங்கில இணையப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியில் அதாவது ராணுவ பாதுகாப்பு வீட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்த கருணா பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டார்.
தனது வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாம் எனத் தாம் கருதியதாகவும், அதன் காரணமாக ராணுவம் தமக்கு உதவுவதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
“மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு வந்தது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் எனவும், இவர்கள் அவ்வாறு எப்படி கடற்படையின் உதவியில்லாமல் வர முடிந்தது? என்ற கேள்வியை எழுப்பிய அவர் கடற்படை மிகப் பெருந் தொகையான பணத்தைப் புலிகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.
கருணாவின் இத் தகவல் குறித்து பிரபல பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ் தெரிவிக்கையில் கருணா இரண்டு தகவல்களை முழுத் தமிழருக்கும் வழங்கியுள்ளார்.
அதாவது வடக்கில் புலிகளை நம்பாதீர்கள். அதே போலவே தெற்கில் அரசை நம்பாதீர்கள் என்பதுதான்.
இவ்வாறு பழிக்குப் பழி என்ற வகையில் படுகொலைகள் தொடர்ந்தன. கொழும்புத் தெருவீதிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மட்டக்களப்பிலிருந்து தப்பி கொழும்பில் தங்கியிருந்த கருணா தரப்பினைச் சேர்ந்த சுரேஷ் கொழும்பில் ஆகஸ்ட் 28ம் திகதி கொல்லப்பட்டார்.
எரிக் சோல்கெய்ம் இனது முயற்சிகள் பெரும் தடைகளை நோக்கிச் சென்றது.
புலிகள் தரப்பினர் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளை மிகவும் இறுக்கமாக வற்புறுத்தத் தொடங்கினர்.
அரச தரப்பினர் இப் பிரச்சனை குறித்து ஒரே குரலில் பேசாவிடில் தம்மால் தொடர முடியாது என நிபந்தனைகளைப் போடத் தொடங்கினர்.
ஆனால் கிழக்கில் மேலும் கொலைகள் தொடர்ந்தன. கருணா இன் சகோதரர் கேணல்றெஜி செப்டெம்பர் 22ம் திகதி கொல்லப்பட்டார்.
கிழக்கு மாகாண நிலமைகள் குறித்து நோர்வே கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த சுசனா ரிங்கார்ட பிடர்சன் ( Sussane Ringgaard Pedersen) 2004ம் ஆண்டு முழுவதும் கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டவர்.
அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 2004ம் ஆண்டு கோடை காலத்தின் போது விடுதலைப்புலிகள் 5 போட்டோ பிரதிகளை அதன் பின்புறத்தில் பெயர்கள் இருந்தவாறு என்னிடம் தந்து கருணா குழுவிலுள்ள மிக முக்கியமானவர்கள், அக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும், ராணுவத்தின் உதவி இல்லாமல் அவர்கள் செயற்பட்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
படுகொலைகள் மே மாதமே ஆரம்பித்திருந்தன. ஆனால் அதற்கு முன்னரே கருணா அப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்த ஐவரும் ராணுவ முகாமில்தான் தங்கியுள்ளனர். புலிகளின் அரசியல் வேலைகளைச் செய்தவர்கள் இவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை நான் அறிவேன். அவர் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவர்.
அவருக்கு சில ஜெனரல்களைத் தெரியும். அவர்களது கருத்துப்படி சில அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது? என்பது குறித்து எதுவுமே தெரியாது.
ஆனால் வேறு சிலருக்கு முழுவதும் தெரிந்திருந்தது. அவர்களில் சிலரே கருணாவுக்கு உதவினர்.
எமது கவனம் வேறு ஏதாவது ராணுவப் பிரிவு உதவியாக இருந்ததா? என்பதை அறிவதுதான். உதாரணமாக விஷேஷ அதிரடிப் பிரிவு போன்றவையாகும்.
2004ம் ஆண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து பல தூதுக்குழுக்கள் கிழக்கிற்கு வந்தன.அவர்களில் சிலர் ராணுவ தூதுவர்களாக இருந்தனர்.
அவர்களுக்கு உள்நாட்டு தகவல்களை வழங்குவது கடமையாக இருந்தது. அங்கு இடம்பெற்ற படுகொலைகள் யாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களாகவே அவர்களால் பார்க்கப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத் திற்கமிடையே பேச்சுவார்த் தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத பின் பகுதியில் அமெரிக்கா சென்றார்.
இச் சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட அறிக்கையில் புலிகள் வன்முறையை முற்றாக கைவிடவேண்டுமெனவும், ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டுமெனவும் கோரப்பட்டது.
இக் காலப் பகுதியில் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் சுவிற்சலாந்தில் இருந்த வேளை அதே மாதிரியான வேண்டுகோளை சுவிற்சலாந்து வெளியுறவு அமைச்சரும் தமிழ்ச்செல்வனை நோக்கி விடுத்திருந்தார்.
ஓஸ்லோ பிரகடனம் அவ் வேளையில் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது என்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அரச தரப்பும் இதே விதத்தில் பேசத் தொடங்கியிருந்தது. குறிப்பாக அரசினால் முன்வைக்கப்பட்ட சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான ஆலோசனைச் சபை என்பது இறுதித் தீர்வை நோக்கிய இடைக்கால ஏற்பாடு எனவும், இறுதித் தீர்வு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வு எனவும் கூறியது.
ஒரு வாரத்தின் பின்னர் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்லோ திரும்பிய புலிகள் குழு நோர்வே வெளியுறவு அமைச்சர், எரிக் சோல்கெய்ம் ஆகியோரைச் சந்தித்தது.
அப்போது தாம் பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுப்பதற்கான வழிவகைகளை ஆராய விரும்புவதாக தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் புலிகள் அமைப்பு தமது நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும் புலிகளைப் பங்காளியாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இச் சமாதான முயற்சிகளுக்கு தமது ஆதரவு உண்டு எனத் தெரிவித்ததாக கூறினார்.
நோர்வே வெளிநாட்டமைச்சர் நவம்பர் மாத நடுப்பகுதியில் பிரபாகரனை கிளிநொச்சியில் சந்தித்தார்.
இச் சந்திப்பில் பாலசிங்கம் லண்டனிலிருந்து அங்கு சென்று கலந்துகொண்டார். பேச்சுவார்த்தைகளில் பெரும் நெகிழ்ச்சியை சந்திரிகா காட்டியுள்ளதாக நோர்வே அமைச்சர் அங்கு விளக்கினார்.
ஆனாலும் குறிப்பிடத்தக்க செய்தி எதையும் அவரால் எடுத்தச் செல்ல முடியவில்லை. தென் பகுதியிலிருந்து இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளுக்கான ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை தான் எதிர்பார்ப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.
இச் சந்திப்பினைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது 2002 இல் ஒஸ்லோ பிரகடனம் என ஒன்று ஏற்பட்டதாக கூறுவதை பாலசிங்கம் நிராகரித்தார்.
பல சுற்று பேச்சுவார்த்தைகளின் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளைப் பின்புலமாகக் கொண்டு அனுசரணையாளர்களால் அவ்வாறு கூறப்பட்டது என விளக்கம் அளித்தார்.
அவ்வப்போது வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சமஷ்டி அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே அது புலிகளால் ஏற்கப்பட்ட பிரகடனம் அல்ல எனத் தெரிவித்த பிரபாகரன் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளின் ஒவ்வொரு சொல்லையும் தாம் வற்புறுத்தப்போவதில்லை, தேவைப்படின் மாற்றங்களை ஏற்படுத்த தாம் தயார் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அரசில் இணைந்துள்ள சகல தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகிரங்க அறிக்கை ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கோரினார்.
இவை தொடர்பாக சந்திரிகா, அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது நோர்வே தரப்பினர் தான் நெகிழ்வாக நடந்துகொள்ளவில்லை என அழுத்தம் தருவதாகவும் அதே அளவு அழுத்தத்தை புலிகளுக்குப் போடவில்லை எனவும் முறையிட்டார்.
தற்போது நவம்பர் மாத இறுதிப் பகுதி என்பதால் மாவீரர் தின உரை பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஆரம்பமாகின.
நாட்டின் தேசிய இனப் பிரச்சனையில் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து அரசின் உத்தியோகபூர்வ கொள்கைகள் என்ன? என்பதை அரசு வெளியிடவேண்டும் என அவ் உரையில் கோரியதோடு தம்மால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் குறித்து தாமதிக்காமல் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்த அவர் ஜே வி பி இனை இனவாத, மத அடிப்படைவாத, மாக்ஸிச அடிப்படைவாத கட்சி என விமர்ச்சித்தார்.
2004ம் ஆண்டுத் தேர்தல் சிங்கள பௌத்த மதவாத சக்திகளுக்கு வழிகளைத் திறந்து விட்டுள்ளதாகவும்,ஜனாதிபதி இனவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் எனவும், தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து ஒன்றிற்கு ஒன்று முரணான கொள்கைகளைக் கொண்டுள்ள கட்சிகள் அரசில் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் விமர்ச்சித்தார்.
பிரபாகரனின் இந்த உரை அரசிற்கு மறைமுகமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது என அரச தரப்பில் உணரப்பட்டது.
நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு எச்சரிக்கும் மொழிப் பிரயோகத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாவும், நல்லெண்ணத்துடன் ஆரம்பித்துள்ள இப் பேச்சுவார்த்தைகள் நிபந்தனை அற்றதாக அமைவது அவசியம் என அரச தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பாருக்குமிடையே காணப்படும் இழுபறி நிலமைகள், ஜே வி பி இன் சமாதான முயறிசிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், நோர்வே இற்கு எதிரான ஆரப்பாட்டங்கள் என்பன நோர்வே தரப்பினருக்கு கவலை தரும் விடயங்களாக மாறின.
இவை தொடர்பாக அமெரிக் தூதுவர் தெரிவிக்கையில் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனம் செல்வதால் பேச்சுவார்த்தைகளிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை எனத் தான் கருதுவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின் 2004ம் ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் கிளிநோச்சி சென்ற சோல்கெய்ம் அங்கு பேச்சுவார்த்தைகளை விட வேறு விடயங்களில் அவர்களின் கவனம் சென்றிருப்பதை அவதானித்தார். தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ள அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாக தமிழ்ச்செல்வன் விளக்கியிருந்தார்.
இவை யாவற்றையும் ஆராய்ந்த சொல்கெய்ம் கவலையடையத் தொடங்கினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் சமாதான முயற்சிகள் தற்போது மிகவும் கீழ் நிலைக்குச் சென்றிருப்பதை உணர்ந்தார்.
இரு தரப்பாரும் தாம் பயனுள்ள விதத்தில் அனுசரணையாளராக செயற்படுவதாக உணரும் வரை அதில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தில் அரச தரப்பின் தனபால அவர்கள் இடைக்கால ஏற்பாடாக புதிய முன்மொழிவுகளை சோல்கெய்மிடம் கையளித்தார். அதனைப் படித்த பாலசிங்கம் தாம் புலிகளின் தலைமையுடன் பேசிய பின் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இக் காலப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவும் வந்தது. இச் சந்தர்ப்பத்தில் தனபால அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய முன்மொழிவுகள் குறித்து புலிகளின் அறிக்கை வெளியாகியது.அதில் உள்ளடக்கம், நிர்மாணம் எனபவை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
இவை குறித்து இதுவரை மௌனமாக இருந்து வந்த கூட்டமைப்பின் தலைமை தற்போது இரு தரப்பாரும் மூலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன் மொழிவுகளை அரசாங்கம் நிராகரித்ததும், அதனைத் தொடர்ந்து ஜே வி பி அரசில் இணைந்து கொண்டதும் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக அமைந்ததாக இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
புலிகள் தரப்பினர் கருணாவின் பிரச்சனையை அரசியல் ரீதியாக ஓரம் கட்டியதும், இணக்கத்தைக் காண்பதைக் கைவிட்டு தாக்குதலைத் தொடுத்ததும், இக் காலத்தில் புலிகளின் போக்கு கடுமை அடைந்திருப்பதும் 30 மாத கால விளைபொருளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று வருடகால போர் நிறுத்த ஒப்பந்தம் மக்களின் வாழ்க்கையில் அல்லது சமாதான முயற்சிகளில் எந்தவித மாற்றங்களையும் தராத நிலையில் அவலங்கள் தொடர்ந்தன.
இப் பின்னணியில் எண்ணெய்ச் சட்டிக்குள் வெந்துகொண்டிருந்த மக்கள் நெருப்பிற்குள் விழுந்தது போல சுனாமி என்ற இயற்கை அரக்கன் அம் மக்களை மீண்டும் கொடுமைக்குள் தள்ளியது.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை 9.30 மணிக்கு இவ் அவலம் அரங்கேறியது. முல்லைத்தீவின் கரையோரத்தில் ஆரம்பித்து கொழும்பை அண்டிய அதாவது கடற்கரை ஒரத்தில் அமைந்திருந்த புகையிரதப்பாதை ஈறாக கொடுமை தாண்டவமாடியது.
கொழும்பு – காலி புகையிரதப் பாதை கடல் அலையால் தாக்கப்பட்டது. புகையிரதத்தின் எட்டுப் பெட்டிகள், அருகிலிருந்த கட்டிடங்கள், மரங்கள் அழிந்தன. சுமார் 2000 மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
நாடு முழுவதிலும் சுமார் 35,000 இலிருந்து 39,000 மக்கள் மடிந்தார்கள். 5 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
இவ் இயற்கை அனர்த்தம் சகல மக்களையும் வேறுபாடுகளுக்கு அப்பால் இணைத்திருந்தது. மனித உணர்வு வெளிப்பட்டது.
இக் கொடுமைகள் நிகழ்ந்த நான்கு நாட்களுக்குள்ளாகவே அரசு மக்களுக்கான உதவிகளை வழங்கும் பொருட்டு விசேட குழுவொன்றை அமைத்து அதில் விடுதலைப்புலிகளையும் இணைந்து கொள்ளுமாறு கோரியது.
இவ் அழைப்பும் வீணாகியது.
சுனாமி அனர்த்தங்களை நேரில் பார்க்கும் பொருட்டு அம்போதைய ஐ நா சபைச் செயலாளர் கோபி அனன் அவர்கள் 2005ம் ஆண்டு ஜனவரி மத்தியில் இலங்கை வந்தார்.
அவர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட அரசு மறுத்தது. அரசின் இப் போக்கு புலிகள் மத்தியிலே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக சகல நிவாரண உதவிகளும் தம்மால் நடத்தப்படும் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினூடாகவே வழங்கப்படவேண்டும் என அவர்களும் பதிலுக்கு வற்புறுத்தினர்.
மக்களின் துன்பத்திலும் தொடர்ந்து அரசியல் விளையாடியது. பல நாடுகள் உதவின. நோர்வேயும் தனது பங்கினைச் செலுத்தியது. இவ் உதவிகளுக்குத் தலைமை தாங்கிய அந் நாட்டின் வெளிநாட்டமைச்சர் ஜனவரி 19ம் திகதி கொழும்பு வந்தார்.
அத் தருணத்தில் சுனாமியில் விடுதலைப் புலிகளின் தலைமை இறந்து விட்டதாக செய்திகள் பரவியதால் பிரபாகரன் தலைமையில் பலர் சுனாமிக்குப் பின்னர் முதற் தடவையாக மக்கள் முன் தோன்றினர்.
நோர்வே வெளிநாட்டமைச்சர் சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கு உதவும் வழி வகைகளை பிரபாகரனுடன் பேசினார்.
அரசாங்கமும், புலிகளும் இவ் உதவித் திட்டத்தில் இணைந்து செயற்பட்டால் அது சமாதான முயற்சிகளுக்கு உதவியாக அமையும் என வற்புறுத்தினார்.
இந் நிலமைகள் குறித்து எரிக் சோல்கெய்ம் இனது அபிப்பிராயம் என்னவெனில் சுனாமியால் ஏற்பட்ட அழிவு பிரபாகரனை கவலைப்படுத்தியிருந்ததை தம்மால் அவதானிக்கக்கூடிதாக இருந்ததாகவம், ஆனால் அரசாங்கம் இந் நிலமைகளைப் பயன்படுத்தி அரசியலை நடத்துவதே நோக்கமாக காணப்பட்டது.
இருப்பினும் சந்திரிகா இப் பிரச்சனையில் தேசத்தின் உண்மையான தலைவராகவே செயற்பட்டதை கண்டதாக குறிப்பிட்டார்.
நோர்வே இன் தூதுவர் குறிப்பிடுகையில் தாம் கிளிநோச்சி சென்று தமிழர் புனர்வாழ்வுக் கழக உத்தியோகஸ்தர்களைச் சந்தித்தாகவும், மக்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தே அவர்களது கவலை காணப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இது பற்றி கொழும்பில் மிகச் சிறிய அளவிலேயே பேசப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
பிரபாகரன் கொடுமை நிறைந்தவராக காணப்பட்ட போதிலும் மக்களையும், தனது போராளிகளையும் நேசித்தார் எனவும், மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதில் கரிசனை காட்டினார் எனவும், சந்திரிகாவும் அதே அளவு கரிசனை காட்டினாலும் தேசிய அளவில் கலந்து பேசவேண்டுமெனக் கருதியதாக அவர் குறிப்பிடுகிறார்.
சுனாமியின் கொடுமைகளால் சிதைந்துள்ள மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதில் இரு சாராரும் திறந்த மனதோடு செயற்படாதது அரசியலில் மனிதத் தன்மை செத்துவிட்டதை உணர்த்துவதாக இருந்தது.
தமது கையில் பணத்தைத் தரும்படி புலிகள் வற்புறுத்தியதும், அரசாங்கம் மறுப்பதம் கோர விளைவுகளாக அமைந்தன. இப் பின்னணியில் புலிகளின் முக்கியஸ்தர் கருணா தரப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச அரசு முயற்சித்தது.
ஆனால் ஒப்பந்தத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஒப்பந்தம் சுமுகமாக செயற்படும் என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப் பிரச்சனை பேசப்பட்டிருக்கும் தருணத்தில் வெளியுறவு அமைச்சரும், இலங்கை அமைச்சரவையில் மிக முக்கியமான உயர் பதவியை வகித்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி இரவு 11 மணிக்கு புலிகளால் மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது படுகொலை சர்வதேச அளவில் மிகவும் கவனத்தை ஈர்த்திருந்ததை அவரது மரணச் சடங்கில் கலந்துகொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொகை சாட்சியமாக அமைந்தது.
இவரது படுகொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த புலிகள் அது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தெற்கிலுள்ள சக்திகளின் செயல் என விளக்கமும் அளித்திருந்தனர்.
ஆனால் அங்கு காணப்பட்ட தடயங்கள் வேறு விதமாக அமைந்திருந்தன.
அமைச்சரின் இல்லத்திற்கு 100 யார் தூரத்தில் அமைந்த வீடு ஒன்றில் ஓர் அறை மிகவும் திட்டமிட்டே அமைக்கப்பட்டது போல் அமைச்சரின் உள்வீட்டு சம்பவங்களை மிக நிதானமாக அறியும் வகையில் யன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன.
துப்பாக்கி பொருத்துவதற்கான முக்காலி அந்த யன்னல் அருகில் விடப்பட்டிருந்தது.
அத்துடன் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களும் அங்கு கிடந்தன. மிக நீண்ட நாட்களாக திட்டமிட்டு அக் கொலை நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்தன.
இப் படுகொலை தொடர்பாக அன்றைய மந்திரி சபை பேச்சாளரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் புலிகளின் மறுப்பை தம்மால் ஏற்றுக் கொள்வது கஸ்டமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகா இன்னும் ஒரு படி மேலே போய் விடுதலைப்புலிகளே அப் படுகொலையை மேற்கொண்டனர் என தொலைக் காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி அமைச்சரின் மரணச் சடங்கு 12 நாடுகள் தமது உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்பியதோடு மிக அதிகமான ராஜ தந்திரிகளும் கலந்துகொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தில் நோர்வே தூதுவர் இரு சாராரும் போர்நிறுத்த ஒப்பந்தம் செவ்வனே செயற்பட தமது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கதிர்காமரின் படுகொலை நிலமைகளை மேலும் துரிதப்படுத்த உதவியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது தொடர்பாக நோர்வேயினர் பாலசிங்கத்துடன் பேசியபோது….
உருப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்ளவேண்டுமென நோர்வே வெளியுறவு அமைச்சர் வற்புறுத்தினார்.
இவற்றைத் தொடர்ந்து இரு சாராரும் சந்திப்பதற்கு இணங்கினர்.
ஆனால் எங்கு சந்தித்துப் பேசுவது? என்பதில் இழுபறிகள் ஆரம்பித்தன.
ஒஸ்லோவில் சந்திப்பதை இரு சாராரும் விரும்பாத நிலையில் கிளிநொச்சியில் அல்லது கொழும்பில் சந்திக்கவும் தயங்கினார்கள். இறுதியில் நோர்வே தூதுவரின் ஆலோசனையின் அடிப்படையில் இரு சாராராருக்கும் பொதுவான ஓமந்தையில் சந்திக்கலாமா? என வினவினார்.
இவ் இழுபறிகளுக்கு மத்தியில் தேர்தல் நிலமைகள் கவனத்தை ஈர்த்ததால் அவை சாத்தியமாகாமல் போயின.
சகல பிரச்சனைகளுக்கும் ராணுவ அடிப்படையிலான தீர்வை பிரபாகரன் நம்பியதாக பல கதைகளைக் கூற முடியும் என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.
கதிர்காமரின் படுகொலை சமாதான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்ததாகவும், கதிர்காமர் இருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் தமக்குச் சாதகமாக அமையப் போவதில்லை என்பதை புலிகள் உணர்ந்து கொண்டனர்.
ஏனெனில் அவரே பல நாடுகளின் மேல் புலிகளைத் தடை செய்யுமாறு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். அதனால் அவரை இலக்கு வைத்திருந்தனர்.
ஆனால் நோர்வே தூதுவரின் கருத்துப்படி தாம் மகிந்தவுடன் பேசியபோது தாம் ஜனாதிபதியாக வந்தால் சமஷ்டித் தீர்வை பிரபாகரன் முன்னிலையில் வைக்கப்போவதாகவும், 6 மாதங்களுக்குள் புலிகளுடன் ஓர் உடன்பாட்டிற்குச் செல்லப்போவதாகவும் அச் செய்தியைப் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மகிந்த தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் தூதுவர் கூறுகிறார்.
மகிந்தவின் திட்டங்களை அவதானித்த போது அவர் பிரபாகரனுடன் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தேர்தலைப் பகிஷ்கரித்த நிகழ்வுகளும் முடிவுகளை ஆராய்வதில் சிக்கலாகவே இருந்தன என்கிறார்.
சந்திரிகா தனது பதவியை இன்னும் ஒரு வருடம் நீடிக்க எடுத்த முயற்சிகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
ஆனால் மகிந்த எவ்வாறு செயற்பட்டார்? என்பது இங்கு முக்கியமானது.
ஜே வி பி உடன் ஒப்பந்தத்திற்குச் சென்றார். அவர்கள் சமஷ்டியை எதிர்த்து ஒற்றை ஆட்சியில் நிர்வாகப் பரவலாக்கம் என்றனர்.
2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றனர். ஜாதிக கெல உறுமய இனர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எதிர்த்தனர்.
இந் நிலையில் மகிந்த அமெரிக்கர்களுக்கு கூறியது என்ன? என்பது அமெரிக்க தூதரகம் 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அனுப்பிய தகவலில் வெளியானது.
ஜனாதிபதி வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியால் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவிற்கு அமெரிக்க தூதுவரிடமிருந்து கொளரவிக்கும் தொலைபேசி அழைப்புச் சென்றது.
அவ் அழைப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜே வி பி உடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அவ் ஒப்பந்தம் சமாதான முயற்சிகளுக்கு எதிராக காணப்படுவதாகவும், அவ் ஒப்பந்தம் சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒன்று என்பதைத் தெரிவித்தார்.
இதற்கு அதைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும், தேர்தலுக்கு அவர்கள் ஆதரவு தேவை எனவும், அவர்களைக் கையாள்வதில் தனக்கு அனுபவம் உண்டு எனவும் அதனால் அவர்களுக்கு எது தேவையோ அதற்கு தான் ஆதரிப்பதாக தெரிவித்தாகவும் கூறினார்.
அப்போது அவ் ஒப்பந்தம் நோர்வேயினரை அதிலிருந்து நீக்குவதாக கூறுகிறதே? எனக் கேட்டபோது அம் முயற்சியை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என மகிந்த கூறினார்.
அவ்வாறானால் பிரதமர் அது தொடர்பாக பகிரங்க அறிக்கையை வெளியிட்டாலென்ன? என தூதுவர் வினவியுள்ளார்.
தான் அவ்வாறு செய்தால் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் எனவும், 98 சதவீதமான தெற்கிலுள்ள சிங்கள மக்கள் நோர்வேஜியர்கள் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நம்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இப் பின்னணியில் நோர்வேயில் இடம்பெற்ற தேர்தலில் சோல்கெய்ம் சார்ந்திருந்த இடதுசாரிக் கட்சியான தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதன் காரணமாக சோல்கெய்ம் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இலங்கைத் தேர்தலும் சூடு பிடித்த நிலையில் கூட்டுத் தலைமை நாடுகள் அமெரிக்காவில் சந்தித்தன.
கதிர்காமரின் படுகொலையைக் கண்டித்த இந் நாடுகள் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு மிகவும் அமைதியோடு செயற்பட்டதைப் பாராட்டினர்.
விடுதலைப்புலிகள் தாம் சமாதான முயற்சிகளில் அக்கறை இருப்பதை உடனடியாக தமது செயற்பாடுகளில் காட்டவேண்டுமெனவும், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமே நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தனர்.
இவ் அறிக்கை வெளியாகிய 10 நாட்களில் புலிகள் மீதான பிரயாணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது.
கதிர்காமரின் படுகொலையைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக காணப்பட்டது. அத்துடன் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகியது.
இச் செய்தி புலிகள் தரப்பினர் மத்தியில் பெரும் கலக்கத்தை அளித்தது.
இவ் உத்தரவு சமாதான முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் எனவும், சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குலைந்துள்ளதாகவும் தமிழ்ச் செல்வன் அறிக்கை விடுத்தார்.
ஒக்டோபர் 6ம் திகதி நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வனைச் சந்த்தித்தபோது தடை தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் அச் சந்திப்பில் மிகவும் கடுமையான தொனியில் புலிகளின் நடவடிக்கைகளை தாம் விமர்ச்சித்ததாக தூதுவர் பின்னர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்தும் வைத்திருக்கும் போக்கைக் கைவிடுமாறும், பி ரொம் கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்துமாறும் சந்திரிகா தனது கட்சி மூலமாக மகிந்தவிற்கு வேண்டுகோள் விடுத்தும் அவை சாத்தியமாகவில்லை.
பதிலாக தாம் பிரபாகரனுடன் நேரடியாக பேசப் போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் தேசிய உடன்பாட்டை எட்டப் போவதாகவும் மகிந்த தெரிவித்தார்.
ஆனால் நிலமைகள் தலைகீழாக மாறின. 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் என்ற பெயரில் மக்கள் திரட்டப்பட்டனர்.
சுமார் 2 லட்சம் மக்கள் திரண்டனர். தமிழர் தாயகத்திலிருந்து ராணுவமே வெளியேறு என்ற கோஷங்கள் ஒலித்தன. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. சிங்களப் பகுதிகளிலும் அரசியல் போக்குகள் புதிய வடிவமெடுத்தன.
தேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார்!!

வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள் புலிகளால் எழுப்பப்பட்டது.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த நிலையில் அவ் அழுத்தங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஓர் அணுகுமுறையாக சந்திரிகா அரசில் காணப்பட்ட உள்முரண்பாடுகளை தமக்குச் சாதகமாக புலிகள் பாவிக்கத் தொடங்கினர்.
ஜனாதிபதித் தேர்தலும் அண்மித்துள்ளதால் புலிகள் அரசிற்குப் புதிய அழுத்தங்களைப் போட அவ் வாய்ப்பைப் பயன்படுத்த தயாராகினர்.
தென்பகுதியிலும் அரசியல் அணிச் சேர்க்கைகள் ஆரம்பித்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன நாட்டின் சனத் தொகையில் சுமார் 10 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இக் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
2005ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களின் இறுதி தினமாகும்.
அன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜே வி பி உடனும், ஜாதிக கெல உறுமயவுடனும் மகிந்த ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து ரணில் மிகவும் கடுமையாக விமர்ச்சித்தார்.
நாட்டைப் பிரிப்பதற்கான ஓர் ஏற்பாடே அதுவெனவும், போர் மீண்டும் தொடர்வதற்கு ஆதரிப்பவர்கள் மகிந்தவிற்கு வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் இவ் ஒப்பந்தம் குறித்து விமர்சனங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஜாதிக கெல உறுமய இனர் நாட்டினை ஒற்றை ஆட்சிமுறையிலிருந்து மாற்ற முடியாது என எடுத்த நிலைப்பாட்டினை விமர்ச்சித்தனர்.
சமஷ்டி ஆட்சிமுறையைப் பின்பற்றும் இந்தியா இன்று உடைந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பி சிறீலங்கா சுதந்திரக்கட்சி இம் மாதிரியான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளவர்களோடு உறவை வைத்திருக்குமாயின் அக் கட்சி இனவாத அரசியலிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது.
அத்துடன் இனப் பிரச்சனை என்ற புண் ஒருபோதும் மாறப்போவதில்லை என்ற கருத்தும் நிலவியது.
மகிந்த குறித்த தனது மதிப்பீட்டினை எரிக் சோல்கெய்ம் வெளிப்படுத்துகையில்…. “2002ம் ஆண்டளவில் ஓர் துணை அமைச்சராக காணப்பட்ட அவர் தனது கடுமையான உழைப்பால் பிரதமராக வர முடிந்தது எனவும், சந்திரிகா பதவியில் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் எவரும் இருக்கவில்லை.
ஏனெனில் அவ்வாறான தகுதியில் யாரும் இருக்கவில்லை”.
ஆனால் காலப்போக்கில் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
சமாதான முயற்சிகளில் எந்த வாய்ப்பையும் பயன்படுத்த அவர் தயாராக இருந்தார்.
அவரிடம் திட்டமிட்ட எந்த தீர்வும் இருக்கவில்லை.
தனது அதிகாரத்தை நிலைப்படுத்துவதே நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் 2006ம் ஆண்டு ஜனவரியில் அவரைச் சந்தித்தபோது எந்தத் தேர்தல் எதுவும் இல்லாமலேயே பிரிவினையைத் தவிர்க்க வட மாகாண நிர்வாகத்தினை பிரபாகரனிடம் கையளிக்க தாம் தயார் என மகிந்த தெரிவித்தார்.
அவர் இதற்காக பின்கதவுப் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாரானார்.
அவ்வாறானால் அவர் எதை எதிர்க்கிறார்? எனக் கேட்டபோது புலிகள் விரும்புவது போல இழுபட்ட பேச்சுவார்த்தைகளை தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அது தனது தனிச் சிங்கள அரசியலுக்கு உதவாது என்பதைத் தெரிந்திருந்தார்.
அதுமட்டுமல்ல சமஷ்டி அரசியல் தீர்வு வழிமுறை மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் தரப்படுமானால் பின்கதவு வழியாக அதனை கொண்டுசெல்லவும் தயாராக இருந்தார்.
மிகவும் ஆழமான தென்பகுதியிலிருந்து மக்களின் நாடியோட்டத்தினை நன்கு புரிந்திருந்த, வழமையான அதிகார வட்டத்திற்கு அப்பாலிருந்து கட்சி அரசியல் வழியாக வந்த ஒருவர் அவர்.
வழமையான குடும்ப கட்சி அரசியல் வலைப் பின்னலுக்கு அப்பால் புதிய குடும்ப வழிமுறையை அவர் ஏற்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மகிந்த பற்றிய தனது பார்வையைத் தெரிவித்த சோல்கெய்ம் பௌத்த மக்கள் செறிந்த கிராமப் புறத்தில் அதிக நிலவுடமையைப் பெற்றிருந்த அவரது குடும்பம் மிகவும் திட்டமிட்ட விதத்தில் அம் மக்களின் எண்ணங்களில் வேர்விட்டிருந்தனர்.
அவரது குடும்பம் படிப்படியாக தமது பலத்தை அதிகரித்தனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மகிந்தவின் சகோதரர் சமல் ராஷபக்ஸ அக் குடும்பத்தின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரானார்.
22 ஆண்டுகள் கடந்தபோது அவரது குடும்பத்தின் நிருபாமா, பசில், நமல் என்போர் பாராளுமன்றம் சென்றனர். கூடவே இன்னொரு சகோதரர் கோட்டபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாளரானார்.
இப் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், மகிந்த ஆகியோர் சமாதான முயற்சிகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை அமெரிக்க தூதுவராலய செய்திக் குறிப்பு இவ்வாறு தெரிவித்திருந்தது.
மகிந்தவின் பிரச்சாரங்கள் நாட்டின் சமூகங்களிடையே ஆழமான பிளவுகளை ஏற்படுத்துவதாக உள்ளன. இவை இன்னும் வன்முறையைத் தூண்டுவதற்கே உதவும்.
ஏற்கெனவே குழப்ப நிலையில் உள்ள கிழக்குப் பிராந்தியம் மேலும் வன்முறையை நோக்கிச் செல்லும். இவை புலிகள் சமாதான முயற்சிகளிலிருந்து விலகிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்.
அரசியல் தீர்வு பற்றி மகிந்தவின் முக்கிய ஆலோசகர்களோடு உரையாடுகையில்….. “தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றை ஆட்சி முறை வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அவர் சமஷ்டி முறையையோ அல்லது வடக்கு, கிழக்கு மாகாண மட்டத்தில் கணிசமான அதிகார பரவலாக்கத்தினையோ எதிர்க்கவில்லை எனவும், மகிந்தவிற்கு நல்ல எண்ணம் இருந்த போதிலும் சமாதான முயற்சிகளில் அவ்வளவு உற்சாகம் அற்றவராக உள்ளதாக அச் செய்தி ஆய்வு தெரிவித்திருந்தது.”
இவ் ஆய்வில் அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்தாலும் புலிகளைக் கையாள்வதில் காணப்படும் அனுபவமின்மையும், ஜே வி பி இன் கடுமையான தேசியவாதப் போக்கும் அதற்கு இடமளிக்குமா? என்பது சந்தேகமே எனத் தெரிவித்திருந்தது.
ரணிலின் தேர்தல் பிரச்சார உத்திகள் குறித்த ஆய்வில்… “அவர் பதவிக்கு வந்தால் தான் விட்ட இடத்திலிருந்து புதிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறார்.
புதிய பிரச்சனைகள் என அவர்கள் எதிர்பார்ப்பது கருணா தரப்பினர் பிரச்சனை, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாளாந்தம் எழும் பிரச்சனைகள், பி ரொம் தொடர்பாக அரசு நடந்துகொண்ட முறைகளால் புலிகள் தரப்பில் எழுந்தள்ள சந்தேகங்கள், கதிர்காமர் படுகொலை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை என்பன போன்றனவாகும்.
ரணில் கடந்த காலங்களில் புலிகளுடன் தான் ஏற்படுத்திக்கொண்ட உறவுகள் பலனளிக்கலாம் என நம்புகிறார்.
இருப்பினும் கருணா தொடர்பாக தெற்கு நடந்துகொள்ளும் முறை பெரும் சந்தேகத்தை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ள அவ் ஆய்வு தனது முடிவுரையில் ரணில் எதிர்பார்ப்பது போல விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு புலிகள் அந்த இடத்தில் தற்போது இல்லை எனவும், சந்திரிகா அரசு காலத்தில் அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளார்கள் எனவும், பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகலாம் ஆனால் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா? என்பதே கேள்வி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புலிகள் தரப்பினர் நீண்ட மௌனத்தின் பின்னர் பேசத் தொடங்கினர்.
2005ம் ஆண்டு அக்டோபர் மத்தியில் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் ஞாயிறு பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில்…
தாம் இரு தரப்பாரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இதில் தாம் பேசுவதற்கு எதுவுமில்லை எனவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வர்க்களிக்கலாம் எனவும், எக் காரணம் கொண்டும் அவர்களைத் தாம் பலவந்தப்படுத்தி வாக்களிக்கச் செய்யவோ அல்லது தடுக்கவோ போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
புலிகளின் முடிவு தெளிவாக காணப்பட்ட போதிலும் அம் முடிவு பல சந்தேகங்களை எழுப்பியது.
சில நாட்களில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தின் உண்மை வெளியாகியது.
யாழ். மாவட்டத்தின் உயர் பாடசாலைகளின் அமைப்பு என்ற பெயரில் இயங்கிய புலிகளுக்கு ஆதரவாக இயங்குவதாக கருதப்பட்ட நிறுவனம் வடபகுதி வாக்களரை தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரியது.
ஆனால் அது புலிகளின் உத்தியோகபூர்வ முடிவு அல்ல என தயா மாஸ்டர் மறுத்தார்.
இக் கோரிக்கை வெளியான மறு வாரம் “மக்கள் படை” என்ற பெயரில் குடாநாடு முழுவதும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இவை புலிகளின் நிலைப்பாடு குறித்து மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.
இந் நிலமை மக்கள் மனம் திறந்து தமது அரசியல் விருப்பை வெளிப்படுத்துவதைத் தடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த 23 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாம் சந்திக்கப்போவதாக தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் புலிகள் அறிவித்தனர்.
அரசாங்கம் தேர்தல் வாக்களிப்பிற்கான ஆயத்தங்களை புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆரம்பித்தது.
யாழ் மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் வாக்காளர்களும், கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 10000 வாக்காளர்களும் உள்ளதாக கருதப்பட்டது.
இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ சூனியப் பகுதிகளிற்குச் சென்று வாக்களிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன.
தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம் ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே!:

மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வார்த்தையில் கூறுவதானால் அது இலங்கையின் இரண்டாவது சுதந்திரப் போராட்ட காலமாகும்.
சிங்கள மக்கள் தமிழ் மக்கள் தரப்பினரால் நடத்தப்பட்ட ஆயுதப் பேராட்டத்தினை வெற்றி கொள்வது என்பது தமது இழந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதாக கருதுவார்களாயின் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் நடத்திய மிகக் கடினமான போராட்டம் அது என்றே நாம் கொள்ளவேண்டும்.
இக் கடின போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து ஆராய்வதற்கு தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், பணக் கொடுக்கல் வாங்கல்கள், பொய்ப் பிரச்சாரங்கள் என்பன பிரதான சாட்சியமாக அமைகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? என்பது குறித்து காணப்பட்ட சந்தேகங்களும், அதில் விடுதலைப் புலிகளும், தமிழர் தேசியக் கூட்டமைப்பும் நடந்துகொண்ட விதம் உங்கள் கவனத்திற்குரியது.
சிங்கள அரசியல் தலைமைகள் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்பதை சிறு குழந்தையும் அறியும்.
ஆனால் தமது அதிகார இருப்பைப் பாதுகாக்க தமிழ் மக்களை விலை கொடுக்க தமிழ்த் தலைமைகள் எவ்வாறு தயாரானார்கள்?
மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள்? தமிழ் மக்கள் மத்தியிலே காணப்பட்ட அறிவு ஜீவிகள் மௌனமாக்கப்பட்டார்களா? அல்லது அவர்களும் விலைபோனார்களா? இன்று தமிழ் மக்களைக் காப்பாற்ற மேலும் பல அரசியல்வாதிகள் முன்வந்துள்ளார்கள்.
இவர்கள் போராட்ட காலத்தில் எங்கு ஒழிந்துகொண்டார்கள்? தமிழ் மக்கள் பட்ட அவலங்களில் அவர்கள் தம்மை எந்த அளவிற்கு இணைத்திருந்தார்கள்? என்பன குறித்து இவ் வாரம் நாம் பார்க்கலாம்.
தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது குறித்து வெவ்வேறு பெயரில் சுவரொட்டிகள் வழிகாட்டிக்கொண்டிருந்த வேளை தமிழர் தேசிக் கூட்டமைப்பினர் புலிகளைச் சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் கூடிப் பேசினர்.
பலத்த விவாதங்களுக்குப் பின்னர் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவை எதிர்ப்பது என தீர்மானித்தனர்.
இம் முடிவு சர்வதேச அளவில் புலிகளுக்குப் பாதிப்பைத் தரலாம் எனக் கருதி அதனை லண்டனில் பாலசிங்கத்திற்குத் தெரிவித்தனர். ஏனெனில் அவரே அச் செய்தியை பிரபாகரனுக்குத் தெரிவிக்கும் நிலையில் இருந்தார்.
அதே வேளை புலிகளின் தலைமையை கிளிநொச்சியில் 2005ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கூட்டமைப்பினர் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் பின்னர் தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையை உணர்த்தியது.
விடுதலைப்புலிகள் பகிஷ்கரிப்பைத் தாம் கோரவில்லை எனவும், அத்துடன் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் கூட்டமைப்பின் பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினை புலிகள் பிரதிபலித்ததாக ஒரு செய்தி விளக்கம் அளித்திருந்தது.
புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய ஆங்கில இணையத்தளமாகிய தமிழ் நெற் இரு தரப்பினரில் எவரை ஆதரித்தும் பயனில்லை, தமிழ் மக்களுக்குத் தேர்தலில் ஆர்வமும் இல்லை என தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாக எழுதியிருந்தது.
இக் குழப்ப அரசியல் நிலை குறித்து பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ் தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தார்.
புலிகளும், கூட்டமைப்பினரும் தேர்தலைப் பகிஷ்கரிப்தை ஆதரிப்பதாகவும், தமிழ் மக்களும் இதர சிறுபான்மை இன, மத சக்திகள் ஒன்றாக இணைந்து சிங்கள பௌத்த சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமெனவும் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இவ் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு இழைத்த பெரும் காட்டிக்கொடுப்பு என அவர் எழுதியிருந்தார்.
இலங்கையில் இடம்பெற்றுவரும் சமீபகால அரசியல் நிலமைகளைக் கவனத்தில் கொண்டும், அனுபவங்களின் அடிப்படையிலும் மீண்டும் மீண்டும் உணர்த்தும் சங்கதி என்னவெனில் ரணிலில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அவர் ஜனாதிபதியானால் போருக்கான சாத்தியங்கள் ராஜபக்ஸவை விட குறைவானதே என்பதுதான்.
போரின் அவலங்களுக்கு முகம் கொடுப்பவர்கள் தமிழ் மக்களே. தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் அவர்களே போரை தம்மீது சுமத்த விழைகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் திணைக்களம் அறிவித்த அதேவேளை, அம் மக்கள் தேர்தலில் கலந்து கொள்ளமலிருக்க நீதிமன்ற தீர்ப்பு இன்னொரு தடையாக மாறியது.
அதாவது உத்தியோகபூர்வ வாக்களிப்பு நிலையங்களுக்கு வருபவர்களின் அடையாள அட்டைகள் குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்கள் பொலீசாரால் விசாரிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச் செய்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த சுமார் 250,000 மக்களின் வாக்களிப்பை நிச்சயமற்றதாக மாற்றியது.
யாழ் குடா நாட்டிற்குள் சுமார் 700,000 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
புலிகள் அவர்களையும் தடுத்தால் அவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். எனவே நீதிமன்றத் தீர்ப்பும் தேர்தலில் வாக்களிப்பதைக் கணிசமான விதத்தில் தடுத்திருந்தது.
புலிகள், கூட்டமைப்பினர் தேர்தலைப் பகிஷ்கரித்தபோது ஐ தே கட்சியிலிருந்த சில முக்கியஸ்தர்களின் அணுகுமுறை மேலும் நிலமைகளை உக்கிரப்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் காமினி திஸநாயகா இன் மகன் நளீன் செனநாயக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபாகரன் போரைத் தெரிவு செய்தால் அமெரிக்க- இந்திய படைகள் அதற்கு எதிராக போரிடுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கருணாவின் பிளவின்போது அதன் பின்னால் ரணிலின் ஆதரவு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இச் செய்தியைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.
இதே காலப் பகுதியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மிலிந்த மொறகொட கருணாவின் விலகல் என்பது சமாதான முயற்சிகளின் ஒரு விளைவு எனவும், அதன் பின்னால் ஐ தே கட்சி செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவைகள் அரசாங்கத்தின் போக்குக் குறித்துச் சந்தேகத்திலிருந்த புலிகளை மேலும் சந்தேகத்திற்குள் தள்ளியது.
புலிகள் மத்தியில் இரண்டு விதமான வாதங்கள் எழுந்தன.
தென்னிலங்கை அரசியல் பிரதான கட்சிகள் தற்போது சமஷ்டி வழிமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை மேலும் பலப்படுத்தவேண்டுமென ஒரு சாராரும், இன்னொரு சாரார் ராஜபக்ஸ இன் வெற்றி ஆயுதப் போரின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும், அது தமிழீழத்தை அடைவதற்கான போரைத் தொடர மேலும் வாய்ப்பாக அமையும் எனவும் வாதங்கள் எழுந்தன.
2005ம் ஆண்டு நவம்பர் 17த் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
நாட்டின் ஒட்டுமொத்த 13.5 மில்லியன் வாக்காளர்களில் சுமார் 75 சதவீமானோர் வாக்களித்தனர்.
யாழ். மாவட்டத்தில் ஒரு சதவீதத்திகுச் சற்று அதிகமானோரே வாக்களித்திருந்தனர். வாக்களிப்பைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் சுயமாக மேற்கொண்டனர் என புலிகளின் விளக்கம் காணப்பட்டது.
ஆனால் தேர்தலில் 50.2 சதவீத வாக்குகளை ராஜபக்ஸ பெற்றார். ரணில் 48.3 சதவீத வாக்குளைப் பெற்றார்.
வாக்குத் தொகையில் 180,000 வாக்குகளே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தன.
நாட்டின் எதிர்காலத்தின் போக்கை பிரபாகரனே தீர்மானித்ததாக பத்திரிகைகள் எழுதின. அதுமட்டுமல்ல நாட்டின் வரலாற்றில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவில்லாமலேயே ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும் என்பதையும் அத் தேர்தல் உணர்த்தியது.
தேர்தலுக்கு முதல்நாள் இரவு வடக்கிலும், கிழக்கிலும் வெடிகுண்டுகள் வெடித்திருந்தன. இக் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்ன? எச் செய்தியை இவை மக்களுக்கு வழங்கின?
தமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள்? மிகவும் பலவீமான ஒருவர் பதவிக்கு வந்தால் ராஜபக்ஸ அரசியல் தீர்வா?அல்லது போரா? எனத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்.
போரைத் தேர்ந்தெடுத்தால் சர்வதேச ஆதரவுடன் ஈழத்தை அடைவது சுலபமாகும்.
ரணில் பதவிக்கு வந்தால் சமாதானம் என்பதைப் பொறியாக பயன்படுத்துகிறார். அவர் நடத்தை சந்தேகத்திற்குரியது.
இவ்வாறு ரணிலா? ராஜபக்ஸவா? என்ற கேள்விகளுக்குப் பின்னணியில் வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்கும் முடிவு வெறுமனே அரசியல் காரணங்களுக்காக அதாவது தமிழீழத்தினை அடைவதற்கு வாய்ப்பான அரசியல் தலைவர் யார்? ஏன்ற முடிவில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு பின்னணிகள் இருந்ததா? என்ற கேள்விக்கான பதில்கள் தேர்தலின் பின்னர் வெளிவரத் தொடங்கின.
ராஜபக்ஸ புலிகளுடன் பின் கதவு வழியாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.
அமெரிக்க தூதுவர் அனுப்பிய செய்திகளின்படி உள்ளுர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று பிரதமருக்கும், புலிகளுக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பிரகாரம் மாகாணசபை நிர்வாகத்தினை 5 வருடங்களுக்கு வழங்கவும், பொலீஸ், காணி அதிகாரங்களுடன் நீதித்துறை அதிகாரங்கள் பலவற்றை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் முடிவு இன்னமும் தெரியவில்லை எனவும், ஆனால் ராஜபக்ஸ இன் அணுகுமுறை நடைமுறையானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏரிக் சோல்கெய்ம் இன் கருத்துப்படி தமிழ் மக்கள் மத்தியில் ரணிலுக்கு உள்ள செல்வாக்கைக் குறைக்க மகிந்த முயற்சித்திருந்தார் எனவும், மகிந்த இன் வார்த்தைகள் வார்த்தைகளாக இருந்ததில்லை எனவும் கூறுகிறார்.
ஆனால் தேர்தலின் பின்னர் வெளிவந்த செய்திகளில் தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் விசேட பிரதிநிதிக்குமிடையே தேர்தலுக்கு முன்பதாகவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாகவும், இந்த விசேட பிரதிநிதியான டிரான் அலஸ் செயற்பட்டார் எனவும் இவர் மகிந்தவின் பிரச்சாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த தற்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் நெருங்கிய நண்பராகும்.
டிரான் அலஸ் புலிகளின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், தமிழ்ச்செல்வன், நடேசன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வாசகர்களே!
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் என்ற பெயரால் தமிழ் மக்கள் விலைபேசப்படுவது இன்னமும் தொடர்கிறது.
தமிழ்த் தேசியவாதம் என்ற முகத்திரையைப் போர்த்தி இந் நாடகம் அரங்கேறுகிறது.
மக்களின் ஜனநாயக உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டு இடைத்தரகர்களின் மூலம் பணம் பட்டுவாடாச் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்போராட்டம் எவ்வாறு விலைபோனது?

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.
•புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்? பஸில் ஏன் கைதாகவில்லை?
• புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.
• பிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம்
விடுதலைப்புலிகளுக்கும், மகிந்த தரகர்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வும், பணக் கொடுக்கல் வாங்கல்களும் தேர்தல் முடிந்த சில வாரங்களில் வெளிவரத் தொடங்கின.
தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் பிரதிநிதிக்குமிடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
இவ் விசேட பிரதிநிதியாக ரிரன் அலஸ் செயற்பட்டார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தேர்தலின் பின்னர் இவருக்கு மகிந்த வழங்கிய கௌரவமும், பரிசுகளும் அவற்றை உறுதிப்படுத்தின.
தேர்தல் பகிஷ்கரிப்பு முடிவு தொடர்பாக பிரபாகரன் அறிந்திருந்தாரா? அல்லது அவர் அறியாமலேயே தமிழ்ச்செல்வன் அம் முடிவுகளை எடுத்தாரா? என்பது பலத்த சந்தேகத்தை அளித்திருந்தது.
தேர்தல் காலத்தில் இப் பணக் கொடுப்பனவு தொடர்பாக பேசப்பட்ட போதிலும் பின்னர் சிறிது காலம் அச் செய்திகள் முக்கியத்துவம் பெறவில்லை.
2007ம் ஆண்டு இச் செய்திகள் மீண்டும் கவனத்திற்கு வந்தது. ஏனெனில் நண்பர்களாக இருந்த ரிரன் அலஸ், மங்கள சமரவீர ஆகியோருக்கிடையே பிரச்சனைகள் எழுந்தன.
அத்துடன் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பலத்த கருத்து வேறுபாடுகள் மகிந்தவிற்கும், சமரவீரவிற்குமிடையே எழுந்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதனால் அவர் இச் செய்திகளை அம்பலப்படுத்தினார். ரிரன் அலஸ் புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார்.
இத் தருணத்தில் அவர் பொலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 2005ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பஸில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் ஜயசுந்தர ஆகியோர் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் பேசியதாகவும், அரசாங்கம் புலிகளுக்குப் பணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ரிரன் அலஸ் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இச் செய்தி வெளியானதும் ரணில் மகிந்த அரசின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்தார்.
புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்?
பஸில் ஏன் கைதாகவில்லை? என்ற கேள்விகளை எழுப்பினார்.
அமெரிக்க தூதுவரால் 2007ம் ஆண்டு யூன் மாத நடுப்பகுதியில் அனுப்பப்பட்ட செய்தி மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியது.
ஐ தே கட்சியின் உள் தகவல்களின்படி புலிகளின் முக்கிய பிரதிநிதியாக அவர்களது உளவுப் பிரிவில் செயற்பட்ட வர்த்தகரான எமில் காந்தன் செயற்பட்டார் எனவும், இச் சந்திப்பினை ரிரன் அலஸ் தனது தொலைபேசியில் வீடியோ வடிவில் பதிவிட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியது.
அப் பதிவினை அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் அச் செய்தி கூறியது.
அத்துடன் அமெரிக்க தூதுவர் மகிந்தவுடன் தேர்தலுக்கு முன்னர் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது அவ்வாறான தொடர்பு இருந்ததை அவர் ஏற்றிருந்தார் எனவும் அக் குறிப்பு கூறியது.
ரிரன் அலஸின் சாட்சியம் வெளியானதைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு தனது விசாரணைகளை ஆரம்பித்தது.
வாசகர்களே!
இத் தருணத்தில் சமீபத்திய செய்தி ஒன்றினை உங்கள் கவனத்தில் தருவது பொருத்தமானது.
முன்னாள் அமைச்சரான மகிந்தானந்த அழுத்கமகே பல கோடி மோசடிக் குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரது குற்றச்சாட்டு வெளியில் வந்த செய்தியும், ரிரன் அலஸ் புலிகளுக்குப் பணம் கொடுத்த செய்தியும் எதிர்பாராத விதமாக எவ்வாறு சிக்கிக்கொண்டன?
அதாவது கடந்த காலத்தில் காப்புறுதி முகவராக மாதம் 1500 ருபா சம்பளம் பெற்ற அந்த அமைச்சர் தற்போது பல கோடி பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியான செய்தி அவரது முன்னாள் மனைவி 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரி அவர் மேல் வழக்குத் தொடர்ந்த செய்தியால் வெளியானது.
இது பொலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதன் விளைவாக அமைச்சர் அழுத்கமகே இன் ஊழல் அம்பலமாகியது.
பயங்கரவாத விசாரணைக் குழு ரிரன் அலஸின் சாட்சியத்தையும், அவரால் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் மையமாக வைத்து விசாரணைகளைத் தொடர்ந்தபோது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விபரங்கள் மேலும் தெரிந்தது.
புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.
இப் பணம் அமெரிக்க நாணயத்தில் சுமார் 1.3 மில்லியன் டொலர்களாகும். தாம் தேர்தலில் வென்றால் அதைவிட பெரும் பரிசுத் தொகை தருவதாக வாக்களிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் பெயரால் பாரிய வீடமைப்புத் திட்டத்திற்கென பெரும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், கருணா தரப்பினரின் ஆயுதங்கள் பறிக்கப்படும் எனவும், புலிகளால் குறிப்பிடப்படும் பிரமுகர்கள் முக்கிய அரசியல் பதவிகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்த மூன்று மாதங்களில் ராஸபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.
அப் பணம் புலிகளால் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(நாமல் ராஜபக்சவுடன் எமில் காந்தன்)
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன. அதற்கு முன்பதாகவே எமில் காந்தனால் வழங்கப்பட்ட பொய் கம்பனி வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் ருபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டது பின்னர் நடத்திய விசாரணைகளில் அது தெரியவந்தது.
இவ் ஊழல் நடவடிக்கைகளை சட்டரீதியானதாக மற்றவர்கள் கணிக்கும் வகையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட பி ரொம் அமைப்பிற்குப் பதிலாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அப் புதிய அமைப்பிற்கு ரிரன் அலஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இச் செய்திகள் மக்களைச் சென்றடைய நிலமைகள் மேலும் சிக்கலாகின.
பாராளுமன்றத்தில் கேள்விகள் எழும்பின.
பஸில் ராஜபக்ஸ புலிகளுடன் தாம் உறவு வைத்திருக்கவில்லை என பாராளுமன்றத்தில் மறுத்தார்.
2010ம் ஆண்டு ஜனவரியில் ரிரன் அலஸ் வீட்டிற்குக் கைக்குண்டு வீசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்.. “பஸில் ராஜபக்ஸ தாமே எமில் காந்தனிடம் 180 மில்லியன் ருபாய் பணத்தை வழங்கினார்” எனக் குற்றம் சாட்டினார். ஆனால் இன்றுவரை விசாரணைகள் இல்லை.
தேர்தல் பகிஷ்கரிப்பிற்காக பணம் வழங்கியமை குறித்து எரிக் சோல்கெய்ம் இன் கருத்து இவ்வாறாக இருந்தது.
இச் செய்தி தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும், இது குறித்து பாலசிங்கத்திடம் வினவியபோது அவர் அதனை ஏற்கவில்லை எனவும், பதிலாக ரணில் ஏற்படுத்திய சர்வதேச வலைப்பின்னல் குறித்து பிரபாகரன் அச்சமடைந்திருந்ததாகவும், தேர்தலைப் பகிஷ்கரிப்பதைத் தாம் ஏற்கவில்லை எனவும், ஏனெனில் ரணிலின்மேல் தாம் அதிக மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாக தெரிவித்தார் எனவும் குறிப்பிடுகிறார்.
தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான நியாயங்கள் பொருத்தமற்றதாக இருந்ததாகவும், பல நம்பிக்கையானவர்கள் புலிகள் மகிந்தவுடன் ஏதோவகையான இணக்கத்திற்கு சென்றுள்ளதாக நம்பிய போதிலும் தாம் அதனைப் பாலசிங்கத்திடம் பேசிய வேளையில் அவ்வாறான முயற்சி நடப்பதாக குறிப்பிடவில்லை எனவும்..,
பிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பணம் தேவை என்பது மறுப்பதற்கு இல்லை.
அவருக்கு வெளி நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லை.
போரில் ஈடுபட்டுள்ள அவர் நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நியாயமில்லை.
ஆனால் ராஜபக்ஸ சகோதரர்கள் புலிகளை ஊழலுக்குள் தள்ளுவதில் கில்லாடிகள். அதிகாரத்தை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்.
மகிந்த பதவிக்கு வந்தால் அவரது அனுபவமின்மையும், சர்வதேச தொடர்பு குறைந்த நிலமைகளும் புலிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அவர்கள் நம்பியிருக்கலாம்.
ஆனால் ரணில், சந்திரிகா ஆகியோர் மிகவும் வித்தியாசமான லிபரல் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
மகிந்தவிற்கு பண்பாட்டு வழிகாட்டி மிகவும் மட்டமானது.
புலிகள் பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.
தேர்தலில் புலிகளின் தந்திரங்களால், தமிழ்த் தேசியவாதம் பணத்திற்குச் சோரம் போன நிலையில் மகிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரபாகரனின் மாவீரர் உரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மகிந்த நீண்ட, நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல சமஷ்டி, சுயாட்சி, பி ரொம் பற்றியும் கேள்வி எழுப்பினார்.
அவரைப் பொறுத்த மட்டில் இதுவரை நடந்ததெல்லாம் மிக மோசமான தவறுகள் என்பதால் தாம் புதிய விதத்தில் அணுக எண்ணினார். தனிநாடு தவிர்ந்த எதனையும் வழங்கத் தாம் தயார் என்றார்.
பிரபாகரனோடு நேரடியாக ஒப்பந்தம் போடுவதே அவரது அணுகுமுறையாக இருந்தது.
ஆனால் பிரபாகரனின் 2005ம் ஆண்டு மாவீரர் தின உரை சிங்கள ஆட்சியாளர் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.
சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.
ராஜபக்ஸ தனது அணுகுமுறை முற்றிலும் புதியது என குறிப்பிட்டமையால், புதிய ஆட்சியளரின் போக்கு என்ன? என்பதை அறிய சிறிது காலம் காத்திருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் காத்திருப்பு பலிக்கவில்லை.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் அணுகுமுறை எதுவும் வெளிப்படவில்லை. இறுதியில் மீண்டும் சுயநிர்ணய உரிமை, தமது தாயகங்களில் சுயாட்சி என்பதாக ஆரம்பித்தது. இவை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மிகவும் சொற்பமே என்பதை தெளிவாக உணர்த்தியது.
மாவீரர் தின உரையின் சாராம்சம் சில வாரங்களில் படிப்படியாக தெரிய ஆரம்பித்தது.
வடக்கு, கிழக்கில் காணப்பட்ட ராணுவ சோதனைச் சாவடிகளில் தாக்குதல்கள் ஆரம்பமாயின.
2005ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதி ராணுவ வாகனம் கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது. 7 ராணுவத்தினர் மரணமாகினர்.
2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற பாரிய சம்பவமாக அது அமைந்தது. கிழக்கில் முஸ்லீம்- தமிழ் மோதல்கள் ஆரம்பமாகின.
ராஜபக்ஸ மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நோர்வேயை நாடினார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய எரிக் சோல்கெயம் இரு சாராரும் தமது ஈடுபாட்டினை ஏற்பதாக பகிரங்கமாக தெரிவித்தால் மாத்திரமே தம்மால் பங்களிக்க முடியும் என்றார்.
நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் நிலவிய நிலமையில் பகிரங்கமாக அறிவிப்பது அரசிற்குப் பெரும் சங்கடமாக இருந்தது.
அதே போலவே புலிகள் இதுவரை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களைக் கௌரவிக்க வேண்டுமெனவும், பிரபாகரனுடன் வேண்டிய நேரங்களில் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் தரவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர்.
நோர்வே தூதுக் குழுவிலிருந்து எரிக் சோல்கெய்ம் நீக்கப்படவேண்டுமெனவும், புலிகளுடன் நேரடியாகப் பேசுவதை எதிர்த்தும் பேசிவரும் மகிந்த அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளான ஜே வி பி, ஜாதிக கெல உறுமய ஆகியனவற்றை மகிந்த எவ்வாறு சமாளித்தார்?
பின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த!! : நிராகரித்த பிரபாகரன்!!

• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார்.
• பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த.
• ஒரு புறத்தில் சந்திப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்கையில் மறு புறத்தில் குறிப்பாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் 22ம் திகதிக்குள் ராணுவத்தின் மீது குறைந்த பட்சம் 9 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து….
கிழக்கு மாகாணம் கொலைக் களமாக மாறிக் கொண்டிருந்த போது புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நோர்வே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ராஜபக்ஸ அரசு நோர்வேயின் ஈடுபாட்டினை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆதரித்தது. எரிக் சோல்கெய்ம் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சராக அவ் வேளையில் நியமிக்கப்பட்டிருந்தமை அவரது பங்களிப்பை மேலும் வலுவாக்கியிருந்தது.
இப் பின்னணியில் 2005ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ம் திகதி பிரசல்ஸ் இல் கூட்டுத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இச் சந்திப்பு வழமையை விட மிக உயர்மட்ட சந்திப்பாக அமைந்தது.
அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரீனா றோக்கா, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பெரேரோ வோல்ட்னர் ( Ferero Waldner) யப்பான் விசேட பிரதிநிதி அகாசி அதில் கலந்துகொண்டனர்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற இவ் உயர் மட்ட சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக அமைந்தது.
இச் சந்திப்பின்போது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு மிகவும் ஊக்குவிக்கப்பட்டதோடு, அதன் முயற்சிகளில் நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யவேண்டுமென இலங்கை வற்புறுத்தியபோதும், அதற்குப் பதிலாக அவ் ஒப்பந்த விபரங்களை முழமையாக அமுல்படுத்துவதே பொருத்தமானது என அங்கு தீர்மானிக்கப்பட்டது.
இத் தருணத்தில் இன்னொரு ஆசிய நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த தாம் தயார் என இலங்கை அறிவித்தது. ஆனால் நோர்வேயில் நடத்தப்படவேண்டுமென தமிழ்ச்செல்வன் இறுக்கமாக தெரிவித்தார்.
சோல்கெய்ம் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டபோது நோர்வே அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றிலே சந்திப்பது இல்லையேல் சந்திப்பு நடைபெறாது என அவரும் தெரிவித்தார்.
ஒரு புறத்தில் சந்திப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்கையில் மறு புறத்தில் குறிப்பாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் 22ம் திகதிக்குள் ராணுவத்தின் மீது குறைந்த பட்சம் 9 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன.
அதில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்தனர்.
டிசம்பர் 22ம் திகதி கடற்புலிகள் மன்னார் கடலில் தாக்கி 3 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரசாங்கம் மிகவும் கடுமையான செய்தி ஒன்றினை கூட்டுத் தலைமை நாடுகளின் மூலம் கிளிநொச்சிக்கு அனுப்பியிருந்தது.
இச் செய்தி புலிகளின் போக்கை மாற்ற உதவவில்லை. பேச்சுவார்த்தைக்கான இடத் தெரிவே தமது பிரச்சனை எனவும், வன்முறைகளைத் தடுக்க தாமும் முயற்சிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர் மீது ராணுவம் தாக்கியதால் மக்கள் கோபம் கொண்டிருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இத் தருணத்தில் கிறிஸ்மஸ் தினத்தின்று நள்ளிரவுப் பூஜைக்குச் சென்றிருந்த புலி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இப் படுகொலை அப் போராட்டத்தின் கொடூர முகத்தினை மீண்டும் உணர்த்தியது.
(ஜோசப் பரராஜசிங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அஞ்சலி)
2006ம் ஆண்டின் ஆரம்பம் மீண்டும் போருக்கான புறச் சூழலை உணர்த்தியது எனத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், சமாதான முயற்சிகளைப் பலப்படுத்த ஏதாவது முயற்சிகள் எடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்தார்.
புலிகள் சமாதானத்தில் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்த போதிலும் போர் ஒன்று ஏற்படப்போகிறது என்பதை மக்கள் உணர்ந்தனர்.
கிழக்கில் கொலைகள் தொடர்ந்தன. ஜனவரி 2ம் திகதி மாணவர்கள் சிலர் அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே மாதம் 7ம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைப் படகு தாக்கப்பட்டு 12 கடற்படையினர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள கண்காணிப்பக் குழு அலுவலகத்திற்கு முன்னால் வாகன குண்டு வெடிப்பு, ராணுவ வண்டி மீது புலிகளின் தாக்குதல் என நிலமைகள் தொடர்ந்த நிலையில் தமது பணிகளை நிறுத்துவதாக 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி கண்காணிப்புக் குழு அறிவித்தது.
இச் சிக்கலான பின்னணியில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான இடத் தெரிவு குறித்து சோல்கெய்ம் முயற்சித்தார்.
ஜனவரி 25ம் திகதி கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் இடம்பெறுமென தமிழ்ச்செல்வனிடம் சோல்கெய்ம் தெரிவித்தார்.
படுகொலைகள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து சென்ற நிலையில் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்திய சோல்கெய்ம் இன் பணி வெகுவாக பேசப்பட்டது. வழமையாக அவரது கொடும்பாவியை எரிக்கும் பௌத்த பிக்குகள் அமைதியானார்கள்.
ஜெனீவா சந்திப்பிற்கு முன்பதான நிகழ்வுகளை எரிக் சோல்கெய்ம் இவ்வாறு நினைவு கூருகிறார்.
ஒருநாள் தானும், மகிந்தவும் தனியாக பேசிக்கொண்டிருந்த வேளையில் பிரபாகரனுடன் ஏதாவது ஒரு வகையில் பின்கதவு வழியாக ஒரேயடியான உடன்பாட்டிற்குச் செல்ல விரும்புவதை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் ஜனநாயகம் மலர்வது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த அவர் தயாராக இருந்தார்.
பிரிவினைக்குச் செல்லாத எந்த தீர்வையும் மேற்கொள்ள தயாராக இருந்த அவர் அதற்கான திட்டம் பற்றிய எந்த கவலையும் அவருக்கு இருக்கவில்லை.
அதே வேளை காலத்தை நீடிக்கும் பேச்சுவார்த்தையை அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைச் சரித்துவிடும் எனக் கருதினார்.
இச் சந்திப்பிற்குப் பின்னர் இச் செய்திகளை பிரபாகரனிடம் தெரிவித்த போது மகிந்தவின் இவ் யோசனைகள் எதுவும் அவரை ஈர்ப்பதாக இருக்கவில்லை. பின்கதவு வழிகளை பிரபாகரன் நிராகரித்தார்.
அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் நடைபெற்ற போதிலும், ராணுவ நிலமைகள் வேறுவிதமாக இருந்தன.
ராணுவ துணைக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படும் வரை சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்திமில்லை என மட்டக்களப்பு புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.
புலிகள் கருணா குழுவினரைக் குறியாக வைத்து இவ்வாறான நிபந்தனைகளைப் போட, அரசாங்கமோ இப் பிரச்சனைக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை என நிராகரித்தது.
இவ் இழுபறிகளுடன் 2006ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை எவ்வாறு ஆரம்பிப்பது? என்பது நோர்வே தரப்பினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
இச் சந்திப்பின்போது அரச தரப்பில் கலந்துகொண்டு அமைச்சர் சிறீபால டி சில்வா பேசுகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் சட்ட விரோதமானது எனவும், பிரதமருக்குப் பதிலாக ஜனாதிபதியே அதில் ஒப்பமிட வேண்டும் எனவும், அவ் ஒப்பந்தத்தின் சில பகுதிகள் அரசியல் அமைப்பு விதிகளுக்கு முரணாக உள்ளது எனவும், அதனால் அவற்றில் திருத்தம் தேவை என வாதிட்டார்.
இருப்பினும் ஒப்பந்தம் சில நன்மைகளைத் தந்திருப்பதாகவும், அவ் ஒப்பந்தம் பேசித் தீர்ப்பதற்கான ஆரம்பத்தினைத் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இவ் உரை அரசின் முரண்பட்ட நிலையைப் புலப்படுத்தியது. இருப்பினும் இரு சாராரும் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர்.
ராணுவ துணைக் குழுக்கள் தொடர்பாக புலிகள் எழுப்பிய பிரச்சனைகளின் போது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் துணைக்குழுக்கள் செயற்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும், கருணா தரப்பினரின் பிரச்சனை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இக் கருத்து கருணா தரப்பினர் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனுமதியாக காணப்பட்டது. புலிகளும் தாம் பொலீஸ், ராணுவத்திற்கு எதிராக தாக்குவதில்லை எனத் தெரிவித்தனர்.
இம் மாநாட்டினைத் தொடர்ந்து ஜெனீவாவில் ஏப்ரல் 19ம் திகதி முதல் 21 வரை சந்திப்பது எனவும், அச் சந்திப்பில் சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் இணைப்பது தொடர்பாக பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இச் சந்திப்பு தொடர்பாக சோல்கெய்ம் தனது நினைவுகளை மீட்கும்போது அச் சந்திப்பில் மிக அதிக அளவிலான பிரதிநிதிகள் அரச தரப்பில் கலந்துகொண்டார்கள் எனவும், அக் குழுவில் மிக மோசமான சிங்கள தேசியவாத பேராசிரியர் ஒருவர் கலந்துகொண்டார் எனவும், அவர் தனது முழ நேரத்தையும் புலிகளை அவமானப்படுத்துவதிலேயே செலவிட்டார் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் சிறிபால டி சில்வா இலங்கை அரசியல்வாதிகளிடையே மிகவும் நேர்மையானவர் எனவும், 1999 இல் புலிகளால் அவரும் தாக்கப்பட்டார் எனவும் கூறுகிறார்.
இத் தருணத்தில் அமைச்சரான பஸில் ராஜபக்ஸ அங்கிருந்தார். அவ்வப்போது தாம் அவருடன் உரையாடியதாகவும், அவரே பேச்சுவார்த்தைகளை வழி நடத்தியதாகவும் கூறுகிறார்.
மகிந்தவினால் அனுப்பப்பட்ட குழுவினரின் தன்மை அவரின் நோக்கத்தை வெளிப்படுத்தியது. பிரச்சனை குறித்து அவருக்கு தெளிவான கருத்து இருக்கவில்லை.
அக் குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தனியான கருத்தைக் கொண்டிருந்ததால் சிறீபால டி சில்வா இனால் ஒரே குரலில் பேச முடியவில்லை என்கிறார்.
இத் தூதுக் குழுவில் வந்திருந்த ஒருவரின் மகிந்த பற்றிய பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்த ஒரு கிராமிய தலைவர். அவர் ஓர் அறையின் மத்தியில் உட்கார்ந்திருப்பார். ஏனையோர் அவரைச் சுற்றி இருப்பர். ஓவ்வொருவரும் தமது குறைகளைக் கூறுவார்கள். அவர் அதனைத் தீர்ப்பதாக உறுதியளிப்பார்.
அவரிடம் ஒட்டு மொத்தமான திட்டம் ஒன்று இருக்காது. அவர் இன்று உங்களோடு ஒரு உடன்பாட்டிற்கு வருவார். அடுத்த நாள் அதற்கு எதிரான ஒன்றுக்கு இன்னொருவருடன் உடன்படுவார்.
கிராமம் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவரைப் பெரும் தலைவராக கருதலாம். அவர் எல்லோரிடமும் இரக்கமுள்ளவராக எண்ணலாம். அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவராக தெரியலாம்.
இதன் வெளிப்பாடே அரச தரப்பின் ஜெனிவா பிரதிநிதிகளின் உள்ளார்ந்த வெளிப்பாடு என்கிறார் அப் பிரதிநிதி.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் விளைவு என்ன?
நோர்வே தூதுவர் ‘கோத்தபாய ராஜபக்ஷ’வினால் அவமதிக்கப்பட்டார்!:

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க தரப்பில் கலந்துகொண்டர் H L De Silva சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது எனத் தெரிவித்த கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியிருந்தன.
பாலசிங்கம் அவரது கருத்தினை அர்த்தமற்றது என்றார். அதனைத் தொடர்ந்து அரச தரப்பினர் அக் கருத்திலிருந்து தம்மைத் தூர வைத்திருந்தனர்.
2006ம் ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் புலிகள் தரப்பினர் கண்காணிப்புக்குழு மூலமாக தகவல் ஒன்றினை அரசிற்கு அனுப்பினர்.
அதில் அரச கட்டுப் பகுதிகளில் அரசியல் காரியாலயங்களை மீண்டும் திறக்க விரும்புவதாக தெரிவித்தனர். இவை 2005ம் ஆண்டில் காணப்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக மூடப்பட்டன.
இருப்பினும் கிழக்கில் நிலமைகள் மிக மோசமாகக் காணப்பட்டன. கருணா தரப்பினர் மிகவும் சுதந்திரமாகவே வன்முறையை கட்டவிழ்த்தனர்.
அத்துடன் தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கென காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இதற்குப் பதிலாக புலிகள் கர்த்தால் அனுஷ்டிக்கும்படி மக்களைக் கோரினர்.
கடைச் சொந்தக்காரர்கள் தம்மை நோக்கி யார் வருகிறார்கள்? எனக் கண்காணித்து அதற்கு ஏற்றவாறு திறப்பதும், பூட்டுவதுமாக இருந்தனர்.
ஏரிக் சோல்கெய்ம் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டமையால் நோர்வே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கென ஜொன் கன்சன் போவர் (Jon Hanssen-Bauer) அவர்களை விஷேட தூதுவராக நோர்வே நியமித்தது.
இவர் சோல்கெய்ம் உடன் லண்டனுக்குச் சென்று பாலசிங்கத்தைச் சந்தித்தார். இச் சந்திப்பின்போது பாலசிங்கத்தின் கவனம் துணைப்படைகள் குறித்ததாக இருந்தது.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக துணைப்படைகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டுமெனவும் அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் பேச்சுவார்த்தைகள் இவை பற்றியதாக மட்டுமே அமையுமென வற்புறுத்தினார்.
அக் கால இடைவெளியில் 8 கடற்படையினர், 5 கடற் புலிகள் கொல்லப்பட்டிருந்தனர். இதனைக் காரணமாக வைத்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவதற்கு கொழும்பு மூலமாக செல்வதற்கான பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளை புலிகள் எழுப்பினர்.
இத் தருணத்தில் பஸில் ராஜபக்ஸ லண்டனில் இருந்ததால் அவருடனும் புதிய தூதுவர் பேசினார்.
அதனைத் தொடந்து முதன் முதலாக இலங்கை சென்றிருந்த புதிய விஷேட தூதுவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி புலிகளை கிளிநொச்சியில் சந்தித்த பின் வெளியிட்ட கருத்தில் புலிகள் ஜெனீவாவிற்கு வருவதற்கு முழுமையாக ஆதரவாக இல்லை எனவும், பதிலாக அரச தரப்பினர் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அப்பால் ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமை பற்றியும் பேசத் தயாராக இருந்தனர் எனவும், ஆனால் அப் புள்ளியை நோக்கி எவ்வாறு செல்லவுள்ளனர்? என்பது தெளிவற்றதாக இருந்தது என்றார்.
நோர்வே தரப்பினர் இலங்கையை விட்டு வெளியேறியதும் மீண்டும் பழிக்குப் பழி என நிலமைகள் மாறின.
தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்படவிருந்த புலி ஆதரவாளர் விக்னேஸ்வரன் 2006ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 5 நாட்களில் மட்டும் 30 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் கண்காணிப்புக் குழுவினருக்கும் பாதுகாப்பு அமைச்சிற்குமிடையே காரசாரமான வாதங்கள் ஏற்பட்டன.
இரு தரப்பாரும் போர் நிறுத்த ஒப்பந்த்தினைச் செயற்படுத்த விசுவாசத்துடன் செயற்படவில்லை எனவும், இரு தரப்பாரும் ஒத்துழைத்தால் மாத்திரமே பிரச்சனைகளைத் தீர்க்க வாய்ப்பு ஏற்படும் எனவும், தற்போதுள்ள சூழலில் மாற்றங்கள் ஏற்படாத வரை நோர்வேயினால் மிகச் சிறிய அளவே பங்களிக்க முடியும் என கடித மூலம் சோல்கெய்ம் தெரிவித்தார்.
வன்முறைகள் மேலும் அதிகரித்தன. 10 நாட்களில் 70 கொலைகள் இடம்பெற்றன. திருகோணமலையிலுள்ள மரக்கறிச் சந்தையில் பொது மக்களைக் குறி வைத்து 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
இரு சாராருமே உரிமை கோரவில்லை. ஆனால் புலி ஆதரவு ‘தமிழ் நெற்’ என்ற இணையத் தளம் இத் தாக்குதல்களைப் புலிகள் நடத்தியதாக கூறுவது தவறு எனவும், புலிகளுடன் சம்பந்தப்படாத ‘மக்கள் படை’ இனர் உணர்ச்சி வசப்பட்டு நிகழ்த்தினர் எனவும் விளக்கம் அளித்தது.
அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தமிழ்ச்செல்வன் நோர்வே தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் தமது போக்குவரத்து பாதுகாப்பு திருப்தியாக இல்லை என்பதால் தம்மால் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
கண்காணிப்புக் குழுவினர் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். இரு சாராருமே பொது மக்களின் நலனுக்காக செயற்படவில்லை.
இந் நிலையில் இணைந்து பொது நோக்கத்தில் எவ்வாறு செயற்பட வைப்பது? என எண்ணினர். நோர்வேயின் புதிய விஷேச தூதுவர் இரு தரப்புடனும் பேசிய போதிலும் நிலமைகள் சாதகமாக இல்லை.
மறு பக்கத்தில் வன்முறைகள் தொடர்ந்தன. கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஜெனரல் பொன்சேகாவைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குலை நடத்தினார்.
மிகவும் பாதுகாப்பு நிறைந்த ராணுவ உயர் காரியாலயத்தில் இது நடந்தது. ஜெனரல் படுகாயமடைந்தார். பாதுகாப்பாளர்கள் படுகாயமடைந்ததோடு, அருகிலிருந்த பொதுமக்கள் 9 பேர் மரணமடைந்தனர்.
நோர்வே தரப்பைச் சார்ந்த கண்காணிப்புக் குழுவின் உல்வ் கென்றிஸன் (Ulf Henricsson) கோதபய ராஜபக்ஸவுடனான தனது அனுபவங்களை இவ்வாறு தெரிவிக்கிறார்.
ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தைகள் ஏன் நடைபெறாமல் போயின? ஏன்பதற்கு கோதபய பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. அவருக்குப் பொருத்தமில்லாத தருணங்களில் கட்டுக்கடங்காத கடும் கோபம் எழுகிறது.
ஒருமுறை கண்காணிப்புக் குழு சட்ட விரோத கொலைகளுக்கு அரச தரப்பே காரணம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அவர் என்னைத் தனது வீட்டிற்கு அழைத்து அவ் அறிக்கையை வாபஸ் வாங்கும்படி கோரினார்.
எனது அபிப்பிராயப்படி அவை சரியானவை என்பதால் என்னால் வாபஸ் வாங்க முடியாது என உறுதியுடன் தெரிவித்தேன்.
தனது கடுமையான தொனியில் சத்தம் வைத்தார். தனது வீட்டிலிருந்து என்னை வெளியேறுமாறு கோரினார். சிறிது நேரத்தின் பின்னர் அவரது உதவியாளர்கள் அவரைச் சாந்தப்படுத்தினர்.
பின்னர் ஒரு மூலையிலிருந்து தனது கைத் தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தார். ஏனையோர் என்னுடன் பேச்சுக்களைத் தொடர்ந்தனர்.
என்னைப் பொறுத்த வரையில் இவரே பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைவதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்கள் எதிர் விளைவுகளைத் தரத் தவறவில்லை. திருகோணமலையிலுள்ள புலிகளின் முகாம் விமானப் படையால் தாக்கப்பட்டது.
தாக்குதல்களைத் தடுப்பதற்கான உபாயம் இது என அரச தரப்பு நியாயப்படுத்தியது. பொது மக்கள் மரணமடைவது தவிர்க்க முடியாதது எனவும் விளக்கம் அளித்தது. இத் தருணத்தில் நோர்வே விஷேட தூதுவர் கொழும்பில் இருந்தார். சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்கான பதிலடி என அரசு கூறியது.
இச் சம்பவம் தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளர் தெரிவிக்கையில் ராஜபக்ஸவை விட சரத் பொன்சேகா மூன்று மடங்கான தேசியவாதியாகும்.
அதனால்தான் அவர் மீது இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பயன்படுத்தும் அளவிற்கு செல்வது நிலமைகளின் மோசமான தரத்தை உணர்த்தியது.
இதனை அரசாங்கம் மிக இலகுவாக பயன்படுத்தி மக்கள் மனதில் விஷத்தைப் பரப்ப வாய்ப்பு ஏற்பட்டது. 2006ம் ஆண்டு வரை ராணுவத்திலிருந்து வெளியேறுவோர் தொகை மிக அதிகமாக இருந்தது.
அவ்வளவுக்கு ராணுவத்தில் உற்சாகம் குறைந்திருந்தது. புலிகளோடு மோத யாரும் தயாராக இல்லை. 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொலனறுவ பகுதிக்கு அண்மையிலிருந்த கருணா தரப்பினரின் முகாம் தாக்கப்பட்டு அங்கிருந்த 10 உறுப்பினர்கள் மரணமாகினர்.
(Sri Lankan government official Palitha Kohona, (R) speaks with Norwegian Special envoy Jon Hanssen-Bauer at the Peace Secretariat in Colombo, 02 October 2006, during talks on the troubled peace process.)
இச் சம்பவங்களைத் தொடர்ந்து அடுத்த 10 தினங்களில் நோர்வே விஷேட தூதுவர் கன்சன் போவர் (Hanssen-Bauer), அரச தரப்பைச் சார்ந்த பாலித கோகன ஆகியோர் ஸ்பெயினிலுள்ள பாஸிலோன என்ற இடத்தில் சமாதானப் பேசச்சுவார்ததைகளின் நீண்ட கால வேலைத் திட்டம் பற்றி விவாதித்தனர்.
புதிய நோர்வே விஷேட தூதுவர் அரச தரப்புடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தியிருந்தார்.
அதன் காரணமாகவே இவர்கள் ஸ்பெயினில் சந்திக்கும் அளவிற்கு நிலமைகள் மாறியிருந்தன. இருப்பினும் இது நீடிக்கவில்லை.
நாடு திரும்பிய பாலித கோகன இன் போக்குகள் மிகவும் கடின நிலைக்குச் சென்றன. இச் சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தமது சந்திப்பை தரம் தாழ்த்துவதாக அமைந்ததாக விஷேட தூதுவர் தெரித்தார்.
சமாதான முயற்சிகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ இன் அணுகுமுறைகள் குறித்து அமெரிக்க தூதுவரின் அபிப்பிராயம் இவ்வாறு இருந்தது.
அதாவது சமாதானம் தேவை என்பதில் அவர் விசுவாசமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதனை அடைவது எப்படி? என்பதில் தெளிவற்று உள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஆழமான உணர்வுகளை அவர் புரிந்துகொண்டுள்ளதாக காணவில்லை. ஆழமான மாற்றங்களின் அவசியத்தை அவர் குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறது.
மகிந்த ராஜபக்ஸ என்ற சிங்களவரால் மட்டுமே பேரினவாத சிந்தனையுள்ள சிங்கள மக்களைக் கையாள முடியும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
முன்னைய தலைவர்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் மக்கள் நல்லெண்ணத்தைப் பெற முடியாமல் போனதற்கான காரணங்களையும் அவர் அறிவார்.
நல்லெண்ணம் என்பது முழமையான நல்லெண்ணம் அல்ல. ஜே வி பி இனரை தனது பக்கம் திருப்புவதில் அவர் எடுத்துள்ள முயற்சிகள் யாவும் வியர்த்தமாகிப் போயிருந்தன என தூதுவர் அபிப்பிராயம் இருந்தது.
நோர்வே விஷேட தூதுவருக்கும், பாலித கோகனவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த மறு நாளே அதாவது 2006ம் ஆண்டு மே 11ம் திகதி விடுமுறைக்குச் சென்றிருந்த 700 ராணுவத்தினரை ஏற்றி வந்த கப்பலை தற்கொலைக் கடற்புலிகளின் வெடிமருந்துகள் நிரம்பிய கப்பல் மோதுவதற்குத் தயாராக இருந்தது.
கடற்படைக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்திருந்த தாக்குதல் விசைப்படகினர் நடத்திய பல மணித் தாக்குதலின் பின்னர் பெரும் மரணம் தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானப்படையினர் இரணைமடுக் குளத்திற்கு அருகாமையிலிருந்த புலிகளின் விமான ஓடு பாதையைத் தகர்த்தனர்.
விடுமுறையிலிருந்து கடமைக்குக் கொண்டு செல்லப்பட்ட கப்பல் கண்காணிப்புக் குழுவின் கொடியுடன் சென்றது.
புலிகளின் தாக்குதலைத் தவிர்க்கவே இம் முடிவு எடுக்கப்பட்டது. புலிகள் முன்னரும் இக் கொடிக்கு மதிப்பு அளித்து தாக்குதலைத் தவிர்த்திருந்தனர்.
இத் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முற்றாக மீறுவதாகவும், அத்துடன் அரசு அல்லாத புலிகள் அமைப்பு கடலில் செயற்பட எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்தது.
இச் செய்தி காரணமாக புலிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் கிளம்பியது. போர் நிறுத்த ஒப்பந்தம் அரசு அல்லாத தரப்பினருக்கும் அரசுக்குமிடையேயான ஒப்பந்தம் எனக் கூறுவது தவறு எனவும், அது இரு சமமான தரப்பாருக்கு இடையேயான ஒப்பந்தம் என தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்திருந்தார்.
இரு தரப்பாரும் சமமானவர்கள் என்பது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டது?