தமிழ் மக்களின் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு என்பது ஆபத்தானது

331

தமிழினத்தின் விடுதலைக்காகப் போரா டிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அதிதீவிரம் காட்டியது அமெரிக்கரசு. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 07 ஆண்டுகள் நிறைவடையவுள்ள இந்நிலையில் ஆசியப் பிராந்தியத்தில் தனது தேவை களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக மீண்டும் தமிழ் மக்களது பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டுள்ளது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான இரா.சம்பந்தன் அவர்கள் கூறியிருக்கின்றார்.

biswal-tna

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும், அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதன் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம் பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் 2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், காணாமல் போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம் மற்றும் தமிழ் அரசியல் கைதி கள் விடயம் போன்றவற்றிலும், போரி னால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விடயத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாகவேண்டும் என்பதைக் கேட்டிருக்கின்றோம் என்றார்.

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், ஆகி யோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் த.தே.கூட்டமைப்பின் பிரதி நிதிகள் கலந்துகொண்டமையானது தமிழ் மக்களுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுவிட்டதாக அர்த்தப்படாது. அமெரிக்காவின் சுயநல அரசியலால் இன்று ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் உள்ள பல நாடுகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன. இலங்கையில் உக்கிரமாகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெ ரிக்காவின் ஹிலாரி கிளின்டன் அவர்கள் இந்தியாவுடன் இரகசியமான முறையில் பேச்சுக்களை நடாத்தினார். அதாவது இந்தியாவை வைத்து பிரபா கரனைச் சரணடையச்செய்யும் திட்டமே அது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இடைத்தரகராகச்செயற்பட்ட நோர்வே, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளால் பிரபாகரனது போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவரை யும் அவரது குடும்பத்தினரையும் அழித்துவிடவேண்டும் என்பதே இவர்களின் திட்டமாகவிருந்தது. நடே சன், புலித்தேவன் ஊடாக இந்தியா தொடர்புகளை மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவரை சரணடையுமாறு கேட்டுக்கொள்ள, இச்செய்தியினை பிரபாகரனுக்கு புலித்தேவன் அறிவித்திருந்தார். எனி னும் பிரபாகரன் அதனை மறுத்துவிட்டு தொடர்புகளைத் துண்டித்துவிட்டார்.அதன்பிறகு நடந்தது என்னவென்பது ஒருவருக்கும் தெரியாது. பிரபா கரன் அவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சரண டையுமாறு பணிக்கவில்லை. இதன் போது அமெரிக்கப்படைகள் இந்திய இராணுவத்துடன் இணைந்து மும்முனைகளிலும் விடுதலைப் புலிகளுக்கெதிராகத் தாக்குதல்களைத் தொடுத்தன. கடற்பரப்பில் 250கி.மீ தொலைவில் அமெரிக்காவினது போர்க்கப்பல் தரித்து நின்றது. அதேநேரம் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்;தபோது விடுதலைப்புலிகளுக்கென ஆயு தங்களும், மருத்துவப்பொருட்களும் வந்தபோது அதனை ராடர் கருவி யின் உதவியுடன் அமெரிக்காவே இலங்கையரசிற்குக் காட்டிக்கொடுத்தது. இதனால் விடுதலைப்புலிகளின் எட்டுக்கப்பல்கள் கடலில் வைத்தே மூழ்கடிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் கடல்வழி விநி யோகங்கள் அனைத்தும் முற்றாகவே தடுத்து நிறுத்தப்பட்டது. பலநூற்றுக் கணக்கானப் போராளிகள் மருத்துவ உதவிகள் இன்றி இறக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் எனக்கூறிய அமெரிக்கா மறு புறத்தில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. தமிழ் மக்களது பிரச்சினைகளைவைத்துத் தான் இலங்கைத்தீவில் காலூன்ற வேண்டும் என்பதிலேயே அமெரிக்கா கரிசணைகொண்டிருந்ததேதவிர, தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அல்லது யுத்தத்தை நிறைவுக்குக்கொண்டுவந்து அப்பாவித் தமிழ் மக்கள் அழிந்துபோவதைத் தடுக்க முன்வரத்தவறிவிட்டது. முள்ளிவாய்க்கால், பொக்கனை, புதுமாத்தளன், கரையான் முள்ளிவாய்க்கால், வெல்ல முள்ளிவாய்க்கால், வளைஞர் மடம் போன்ற இடங்களில் விஷ வாயுக் குண்டுகள் வீசப்பட்டபோது அவற்றை நேரடியாகச் சட்லைட் உதவியுடன் படம்பிடித்துக்கொண்டது அமெரிக்கா. இந்தியா, சீனா இரு நாடுகளும் தமது காலனித்துவத்தை இலங்கையில் ஊன்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் எப்படியாவது தனது இருப்பை இலங்கையில் நிலைநிறுத்தவேண்டும் என்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீனாவுடன் அதிக நட்புறவினைப்பேணி வந்தமையின் காரணமாக, திட்டமிட்டு மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை வெளியேற்றும் அளவுக்கு தனது செயற்பாடுகளை இலங்கையில் அமெரிக்கா செயற்படுத்தி அதில் வெற்றியும் கண்டது. இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரணில் அவர்கள் கூட்டாட்சி என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகக்கூறி உலக நாடுகளுக்கு சமாதானப் புறாவாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இதனை நம்பிய சர்வதேசம் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை மைத்திரி-ரணில் தலைமையிலானக் கூட்டாட்சி பெற்றுக்கொடுக்கும் என அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் தவிர பல நாடுகள் எதிர்பார்த்திருக்கின்றன. ஆசிய, ஐரோப்பாவின் 51நாடுகள் விடுதலைப்புலிகளுடனான சமாதா னப் பேச்சுவார்த்தைக்குக் கையெழுத் திட்டிருந்தன. இதில் 22 அரச சார்பற்ற நிறுவனங்களும் அடங்கும். இவ்வாறான நிலையில் தான் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் தீவிரமடைந்தது. தமிழினத்தை நம்பவைத்து கழுத்தறுத்த அமெரிக்கா மீண்டும் தனது உள்நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்ப் பிரதிநிதி கள் விலைபோய்விடக்கூடாது என்பது முக்கியமாகும்.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி நசுக்குவதே அவர்களது வழமையானச் செயற்பாடாகும். இச்செயற்பாட்டையே அமெரிக்கா தொடர்ந்தும் மறைமுக மாகச் செயற்படுத்தி வருகின்றது. விடுதலைப்புலிகளைச் சரண டையுமாறு கோரிய அமெரிக்கா, விடுதலைப்புலிகள் அதற்கிணங்க மறுத்ததன் விளைவாக, தனக்குப் பணி யாத எந்தவொரு ஆயுதக்குழுவும் உலகில் இருக்கக்கூடாது என்பதை முடிவுசெய்து தந்திரமாகத் திட்டந்தீட்டி விடுதலைப்புலிகளின் உரிமைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. தேசியம், சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வெறுமனே வடகிழக்கில் அபிவிருத்திப் பணிகள் மாத்திரமே அரசினால் நடை முறைப்படுத்தப்படும். இந்நாடும் ஒரு உல்லாச விடுதிகள் நிறைந்த நாடாக மாற்றம்பெறும். அதனையே அமெரிக்கா விரும்புகின்றது.

தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் ‘கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனையாக’ அமெரிக்கா செயற்பட்டுவந்தது. ஆகவே மீண்டும் அமெரிக்காவின் பேச்சினை நம்பி, தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை தமிழ்ப் பிரதிநிதிகள் முன்னெடுப்பார்களாகவிருந்தால் தமி ழினம் பாதாளத்திற்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

சுழியோடி

SHARE