தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் இரட்டைவேடம் போடும் மைத்திரியும், ரணிலும்

341

அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் என்கிற ஒன்று அவர்களிடத்தில் இல்லை என்றே கூறவேண்டும். 30ஆண்டுகால போராட்டத்தில் தமிழ் மக்களின் உரி மைகளை வென்றெடுப்பதற்கான யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும் அரசு, யுத்தம் முடிவுற்று 07வருடங்களாகியுள்ளபோதிலும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வழங்க முன்வரவில்லை. வெளிநாட்டவர்களின் பேச்சுக்களும் ராஜதந்திர ரீதியில் என்றே தொடர்கிறது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது சுயநல அரசியலுக்காக செயற்பட்டு வந்தது. தொடர்ந்தும் செயற்படுகின்றது. தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என அப்போதிருந்த எதிர்க்கட்சியும் கூச்சலிட்டது. ஆனால் இந்த எதிர்க்கட்சியானது ஆட்சி மாற்றம் என்ற ஒன்று ஏற்படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கூச்சலிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400

மாவிலாறில் ஆரம்பித்த இன வழிப்புக்கான யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெறும் வரையிலும் சிங்கள பேரினவாதிகள் அனை வரும் ஒன்றிணைந்து தமிழினத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கை அரசாங்கம் சர்வதேச, உள்நாட்டு முழுப்பலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டத்திற்கு எதிராக கட்டவீழ்த்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக புனர்வாழ்வு முகாம்களில் இருப்பவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என முதலாவது கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு யுத்த முடிவிற்கு பின்னர் நான்கு வருடங்கள் இலங்கை அரசிற்குத் தேவைப்பட்டது. ஆனால் இன்னமும் மக்கள் குடிசைக ளிலும், தகரப் பந்தல்களிலுமே தமது சொந்தக் காணிகளில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களை உதவிகள் சென்றடையவில்லை.

இவ்வாறிருக்கின்றபொழுது வட மாகாண சபையினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தென்னிலங்கை அரசியல்வாதிகள் கிளர்ந்தெழுந்தனர். ஆனால் இன்று அவ்வாறு ஒரு இனப்படுகொலை நடைபெறவில்லை என்று மூடிமறைக்க, ஜனாதிபதித்தேர்தலின் மூலம் கூட்டரசாங்கத்தினை அமைத்த ரணில் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டாரே தவிர, தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அவர் தீவிரம் காட்டாது தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து அவர் கவனம் கொள்ளவில்லை. சர்வதேசப் பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபை தீர்மானம், மனித உரிமை ஆணைக்குழு, போர்;க்குற்ற விசாரணை என அனைத்துமே குறிப்பிட்ட வருட எல்லைக்குள் நடந்துமுடிந்துவிட்டது. இதில் எவ்விதப் பயனும் இல்லை.
தொடர்ந்தும் சர்வதேச விசார ணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனத் தமிழ்த்தரப்பால் வலியுறுத்தப் படுகின்றது. இதற்காக த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் என அனை வரும் ஒன்றிணைந்து 17.06.2016 அன்று வவுனியாவில் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என்பது எந்தளவில் சாத்தியம். காரணம் என்னவெனில் இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதைவிடவும் புதிய தீர்மானங்களை எடுப்பது என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் என அரசி யல் அவதானிகளால் கூறப்படுகின்றது.

இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ் மக்களுக்குரிய தீர்வுத் திட்டத்தினை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு இவர்களுக்கு இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ள இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் இரட்டைவேடம் காட்டுவதை யாவரும் அறிந்ததே. இனப்படுகொலை இந்நாட்டில் இடம்பெறவில்லை. இடம்பெற்றது யுத்தக்குற்றம் என்று கூறிவருகிறது இந்த அரசாங்கம். இவ்வாறான நிலையில் வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமற்போனோர், கொலை செய்யப்பட்டோர் தொடர்பிலான விடயங்களை எவ்வாறு கூறுவது. வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தின்படி, இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல என்பதேயாகும். இதற்காக சர்வதேச விடுதலைப்புலிகள் சார்ந்த அமைப்புக்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார். விசேடமாக நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவரான உருத்திரகுமரனுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும். அவரையும் இதற்குள் உள்வாங்க வேண்டும் என்கிற கருத்துப்பட அவரு டைய பேச்சுக்கள் அமையப்பெற்றுள்ளது. இது எந்தளவில் சாத்தியம். அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்தினைக் குழப்பும்நோக்கில் அரசாங்கம் செயற்படுகிறது. மங்கள சமரவீர அவர்கள் குறிப்பிட்ட விடயங்களை பார்க்கின்றபோது, விடுதலைப்புலிகளது சர்வதேச அமைப்புக்களை சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாக அவர்களையும் ஜனநாயக வழிக்குள் உள்வாங்கி பின்னர் ஒவ்வொன்றாக பிரித்தெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் ஒரு சதித்திட்டமாகவே இதனைக் கருதமுடிகி றது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறை யில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டபோதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை.
குறிப்பாக கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதி லாக மேலும் விரிசல்களை மேற்கொள்ளும் விஷமத்தனமான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாகவே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்தோடி விட்ட நிலையிலும் எம்மால் இதுவரை தேசிய நல்லிணக்கத்தை அடைய முடியா மல் உள்ளது.
இவ்வாறு யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் என்று வரும்போது யுத்த காலத்தில் சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போன தமிழ் மக்களுடன் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் மிக்கதான ஒரு விடயமாக காணப்படுகிறது.
அதாவது இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு, உதவிகளை செய்வதற்கு தயார் என புலம்பெயர் மக்கள் அறிவித்துள்ள நிலையிலும் அதனை சரியான முறையில் ஒருங்கிணைத்து அவர்களின் உதவிகளை பெறுவதற்குகூட ஒருபொறிமுறை இதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.

இவ்வாறு புலம்பெயர் மக்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு அவர்களையும் இணைத்துக்கொள்வதும் யுத்தத்திற்கு பின்னரான தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒருவிடயமாக அனைவராலும் கருதப்படுகிறது.

ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடைவிதிக்கப்பட்ட வர லாறும் காணப்பட்டது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர் மக்களுடனான அணுகுமுறையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையானது புதிய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட தயார் என்றும் புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நேரடியாக பார்வையிட வேண்டுமென்றும் நல்லாட்சி அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எனும் தலைப்பின்கீழ் விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி.சில்வா, புலம்பெயர் மக்களுடன் ஏற்படுத்தப்படவேண்டிய வலுவான தொடர்புகள் குறித்து முக்கியமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதாவது உள்நாட்டு மக்களை இன மத மொழி ரீதியில் ஒன்றிணைக்க முடியுமானாலும் புலம்பெயர் மக்களை குறித்த எந்தவொரு காரணிகளாலும் ஒன்றிணைக்க முடியாமலுள்ளமையே தற்போது காணப்படும் பெரும் சவாலாக உள்ளது.

புலம்பெயர் மக்களின் அபிலாஷைகள் எவற்றில் தங்கியுள்ளது என்பது அறியப்படாமலுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி.சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நல்லிணக்க செயற்பாடுகளிலும், அபிவிருத்தி செயற்பாடுகளிலும் புலம்பெயர் மற்றும் கடல்கடந்த மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமான தேவையாக உள்ளது.
அதனை காத்திரமான அரசி யல் நகர்வுகளில் எவ்வாறு பயன் படுத்திக்கொள்வது என்பதிலேயே பெரும் சவால் தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் போது இரு தரப்புகளிடையேயும் ஏராளமான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அந்தவகையில் தற்போது மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள வடு மற்றும் சமூக அடையாளங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் போன்றன தீர்க்கப்படவேண்டிய முக்கியமான தேவையாகவுள்ளன.

ஆனாலும் கடல் கடந்த மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள உணர்ச்சி பூர்வமான பிரதிபலிப்புக்கள் மற்றும் அபி லாஷைகள் என்பன இலங்கையின் உள்நாட்டு மக்களின் தேவைகளில் பிரதிபலித்துள்ளனவா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கமானது புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மற்றும் யுத்தத்துக்கு பின்னரான நாட்டை கட்டியெழுப்புவதில் பெற்றுக் கொள்ளப்படவேண்டிய அவர்களின் பங்களிப்பு தொடர்பில் ஆர்வத்துடன் இருக்கின்றமை தெளிவாகின்றது.

ஆனால், அதற்கேற்ற உரிய ஒருங்கிணைப்பு பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இங்கு பரவலாக எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

அதாவது இலங்கையை சேர்ந்த சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் மக்களாக வாழ்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான இலங்கை தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி அந்நாடுகளில் புலம்பெயர் மக்கள் மிக வும் செல்வாக்கான மட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, புதிய அரசாங்கம் நல்லிணக்க வேலைத்திட்டங்களில் மிக முக்கியமான கண்ணோட்டத்தை செலுத்தியுள்ள நிலையில் அந்த செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களை இணைத்துக் கொள்ளவேண்டியது கட்டாயமானதாக காணப்படுகிறது. விசேடமாக வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் மக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யின் 32வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இடம்பெற்ற உப குழுக்கூட்டங்களில் பங்கேற்று புலம்பெயர் அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

உலக தமிழர் பேரவையின் தலை வர் இம்மானுவேல் அடிகளாருடன் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் அவரை இலங்கைக்கு விஜயம் செய்து புதிய மாற்றத்தை பார்வையிடுமாறும் கோரியிருந்தார்.
அத்துடன் புலம்பெயர் அமைப்புக்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வமாக இருப்பதையும் இம்மானு வேல் அடிகளாரிடம் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவை அனைத்தும் குறிப்பிட்டு கூறக்கூடிய மற்றும் வரவேற்கத்தக்க அம்சங்களாக காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரு நல்லவிதமான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கமானது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தவிடயத்தில் விரைந்து அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களுடன் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தவேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் அமைப்புக்களின் உதவி களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒரு ஒருங்கிணைப்பு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கவேண்டும்.

எவ்வாறான வேலைத்திட்டங்கள் இடம்பெறவேண்டும் என்பன தொடர்பில் அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்படவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உணர்வுகள் பிரதிபலிப்புக்கள் என்ன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு செய்வதனூடாகவே இலங்கை அரசாங்கத்திற்கும், புலம்பெயர் மக்களுக்குமிடையில் ஒரு நம்பிக்கையான புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளில் வெற்றியைநோக்கி முன்னேற முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம் எனக் கூறியிருக்கும் மங்கள சமரவீர இதற்குள்ளும் ஒரு தந்திரோபாய பொறிமுறை ஒன்றினை முன்வைத்தே செயற்படுகின்றார். பிரபா-கருணா பிளவினை ஏற்படுத்திய அதே ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒரு பிள வினை ஏற்படுத்துவதற்குத் தயாராக விருக்கின்றார். இதற்குத் தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இந்த தந்திரவலைக்குள் சிக்கிக் கொள்வார்களாகவிருந்தால் அது தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பதே வெளிப்படையான உண்மை.
நெற்றிப்பொறியன்

 

SHARE