தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

345

தமிழீழக் கோரிக்கையினைக் கைவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் என்கின்றபோது எதனை முன்னெடுக்கப்போகின்றார். தமிழ் மக்களுக்கானப் போராட்டங்கள் திம்பு முதல் டோக்கியோ வரையிலானப் பேச்சுக்களை உள்ளடக்கியதொன்றாகவே காணப்பட்டது. இத்திட்டத்திலிருந்து முழுமையாக மாறுபட்டு தற்போது த.தே.கூட்டமைப்பு அறிக்கைகளை வெளியிடுவதென்பது தமிழ் மக்களது போராட்ட வரலாற்றில் காத்திரமான தீர்வுகளை எட்டமுடியாத நிலைமைகளையே ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது ராஜதந்திர நகர்வில் ஒரு படியாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிப் பதவியினை வழங்கியிருப்பதென்பதாகும்.
அவ்வாறிருக்கின்றபோது சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் கூட்டாட்சியினைத் தோற்றுவித்து, மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சியினைக் கவிழ்த்து தற்போது மைத்திரி தலைமையிலான ஆட்சி சந்திரிக்கா, ரணில் ஆகிய இருவரையும் இணைத்து கூட்டாட்சி என்ற நிலையில் இடம்பெறுகின்றது. இதில் தமிழ் மக்களுக்கானத் தீர்வு என்னவென்று பார்க்கின்றபோது தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினையில் தீர்வுத்திட்டங்கள் என்பது காலத்திற்குக்காலம் வேறுபட்டுக்கொண்டிருக்கின்றது. 1990,1995,2000,2005,2010,2016ஆம் ஆண்டுகள் வரையான மாற்றங்கள் அரசியலில் வௌ;வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமற்றதொன்று. சமஸ்டி ஆட்சியினை வடமாகாணசபை கோரியுள்ள இந்நிலையில் த.தே.கூட்டமைப்புக்கும் வடமாகாணசபைக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க அரசு முயல்கின்றது.

தமிழினத்திற்காகப் போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாகாண சபையின் அதிகாரங்கள் எமக்குத் தேவையில்லை எனக்கூறியிருந்தார். ஆனால் மாகாணசபையினை த.தே.கூட்டமைப்பு வரவேற்று இன்று வடக்கில் ஆட்சியமைத்துள்ளது. இதிலும் குறிப்பாக மாகாணசபைக்கான அதிகாரங்கள் இருட்டடிப்புச்செய்யப்பட்டுள்ளன. காணி, பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணசபைக்கு வழங்கப்படவில்லை. ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்படும் அதிகாரங்கள் இவ்வாறான நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றது. இதனை மாற்றியமைக்கவேண்டும். மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதுதான் தமிழ் மக்களுக்கான தீர்விலும் மாற்றத்தினைக் கொண்டுவர இயலும்.

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் மாத்திரமே அனுபவம் மிக்கவர்களாக இருக்கின்றனர். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகிய நால்வரும் அரசுடன் இணைந்த அரசியலை நகர்த்திச் செல்கின்றனர். எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு பல விடயங்களைச் சாதிக்க இயலும் என்பதே இவர்களது நம்பிக்கை. வர்த்தக ரீதியான அரசியலை மேற்கொள்ளும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அதில் சரவணபவான், வைத்திய கலாநிதி சிவமோகன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின், சாள்ஸ் ஆகியோர் தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது அரசியலைக்கொண்டு செல்கின்றனர். ஏனையோர் தமது கட்சியை வலுப்படுத்துவதிலும், தமது ஆசனத்தை தக்கவைத்துக்கொள்வதிலும் அவ்வப்போது தேசியம், சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களாகவும் செயற்படுகின்றனர். இந்த மூன்று வகையினரும் தேசியம், சுயநிர்ணய உரிமை என எப்போது சிந்திக்கின்றனரோ அன்றுதான் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் சாத்தியமாகும். அதுவரை அரசாங்கம் இவர்களது நிலைப்பாட்டினைப் புரிந்துகொண்டு தமது சுயநல அரசியலையே தொடர்ந்தும் காய்நகர்த்தும்.

ஒரு அரசியல்வாதியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள பணம் ஒருபுறத்தில் உதவியாகவிருந்தாலும் அவரது நன்நடத்தையும் அத்தியாவசியமாகின்றது. த.தே.கூட்டமைப்புக்குள் கருத்து மோதல்களை ஏற்படுத்தி தமிழ் மக்களிடையேயும் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வரசு தீவிரமாய் செயற்பட்டு வருகின்றது. இந்நிலை மாற்றப்படாத வரையிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்கள் சாத்தியமற்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் என்றே தமிழ் மக்கள் நம்புகின்றனர். இந்நம்பிக்கை வீண்போகுமாகவிருந்தால் அமைச்சுப் பதவிகளுக்குப் பின்னால் தமிழ் அரசியல்வாதிகள் செல்ல நேரிடும். இவ்வாறான குழப்பநிலைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் போராட்ட சிந்தனைகளைத் திசைதிருப்பி தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை மழுங்கடிக்கச் செய்வதே இவர்களது திட்டமாகும். தேர்தல் காலங்களில் மாத்திரம் த.தே.கூட்டமைப்பு அதனது செயற்பாடுகளை தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் பார்க்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருசில அரசியல்வாதிகள் பொறுப்போடு செயற்பட்டாலும் அவர்களைத் திசைதிருப்பும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதனைவிடவும் தமிழ்க்குழுக்கள் அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இயலும். இவர்களுக்கிடையில் பிரதேச ரீதியில் பிரிவினைகளைத் தோற்றுவிக்காது செயற்படுவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வெற்றிகொள்ள இயலும்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கருணாவின் பிரிவினைவாதமும், பிரதேச வாதமுமே விடுதலைப்புலிகள் பிளவுபடுவதற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்நிலை மாற்றப்படவேண்டும். யுத்தத்திற்குப் பின்னரான சமாதானத்தை நிரந்தரமானது என நாம் கருதமுடியாது. ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இன்று நடப்பவை என்ன? அவ்வாறான ஒரு சூழலே இலங்கையிலும் மீண்டும் தோற்றுவிக்கப்படும். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தாது தமிழ் மக்களது அரசியல் தீர்வுத்திட்டத்தை நல்லெண்ணத்தின் அடிப்படையில் நகர்த்திச்செல்லவேண்டிய தார்மீகக் கடமை த.தே.கூட்டமைப்பிற்கு உள்ளது. தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற கோட்பாட்டிலிருந்து முற்றாக த.தே.கூட்டமைப்பு விலகிச்செல்லுமாகவிருந்தால், அது தமிழ் மக்களின் தீர்வுக்கான விடயங்களில் பாரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தும் எனலாம்.

நெற்றிப்பொறியன்

sampanthan_2486354f

SHARE