தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் சாத்தியமற்றுப்போனால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? வேதாளம் திரும்பவும் மரத்தில் ஏறியதைப்போல் இருக்கும் – முன்னாள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன்

375

(தினப்புயல் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்)

 

கேள்வி: நீங்கள் மாகாண சபையிலிருந்து விலகியதன் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில்: நான் மாகாண சபையில் இருந்து விலகவில்லை. பதவிக்காலம் முடிவடைந்தது. முடிவடைந்த நாள் அன்றே ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளேன். கட்சி நடவடிக்கைகள் போய்க் கொண்டிருக்கின்றன. தற்பொழுது மாகாணசபை நடவடிக்கைகள் ஆளுநர் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.

கேள்வி: ஆன்மீக ரீதியாக வடக்கு கிழக்கில் மக்களை ஒருநிலைப் படுத்துவதற்கு உங்களுடைய திட்டம் ஏதாவது இருக்கின்றதா?

பதில்: வடகிழக்கில் மக்களை ஒற்றுமைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். ஆன்மீகம் எம்மை வழி நடத்தும்.

கேள்வி: சிவசேன அமைப்பை பற்றிய உங்களுடைய பார்வை எப்படி இருக்கின்றது?

பதில்: இந்து மக்களின் நலன்களை பேண அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்று அறிகின்றேன். மக்கள் யாவரையும் வேற்றுமை பாராட்டாது அன்புடன் நடத்தத் தொடங்கினால் இவ்வாறான தனி நலன்களைப் பேண அமைப்புக்கள் உருவாக வேண்டிய அவசியம் இருக்காது. காலத்தின் கோலம் இது.

கேள்வி: இந்து சமயத்திற்கான நல் போதனை அமைப்புக்கள் பல இருந்தும் அதற்கான ஒரு தீர்க்கமான சங்கம் ஏன் உருவாக்கப்படவில்லை?

பதில்: ஏன்! அகில இலங்கை இந்து காங்கிரஸ் இருக்கின்றதே!

கேள்வி: கிறீஸ்தவத்துக்கும் புத்த மதத்திற்கும் ஒரு சங்கம் இருப்பது போல ஏன் இந்து சமயத்திற்கு இல்லை?

பதில்: கிறீஸ்தவமும் இஸ்லாமும் தனி நபர்களின் போதனைகளில் இருந்து பிறந்தவை. இந்து மதத்தில் அப்படியல்ல. காலத்திற்குக் காலம் இறை மனிதர்கள் பலர் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் வாழ்கின்றார்கள். இனியும் வாழ்வார்கள். நாம் யாரை முன் வைத்து சங்கம் அமைக்க?

கேள்வி: இலங்கையில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக உங்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள்?

பதில்: நான் யார் ஆன்மீகத்தை வளர்க்க? எனக்கு ஆன்மீகப் பின்புலம் இருக்கின்றது என்றால் அது என் வாழ்க்கையில் புலப்பட வேண்டும், மிளிர வேண்டும், எதிரொலிக்க வேண்டும். அவ்வாறு புலப்படுகின்றதா என்பதை நீங்கள் தான் எனக்குக் கூற வேண்டும்.

கேள்வி: ஆன்மீகத்தால் ஜாதிகளை ஒழிக்க முடியும் என்பது உபதேசம். இந்த உபதேசத்தின் ஊடாக ஜாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தங்களால் மேற்கொள்ள முடியுமா? (அது தொடர்பான பிரச்சினைகள்)

பதில்: சாதிகள் என்பன எமது கடந்தகால சமூக வாழ்க்கையின் எதிரொலிகள், வெளிப்பாடுகள். மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவரை மீனவ சமூகம் அல்லது கரையார் என்றார்கள். விவசாயம் அல்லது வெள்ளாமை செய்தவர்களை வெள்ளாளர் என்றார்கள். இவ்வாறு மக்கள் செய்த தொழில்களை மையமாக வைத்து அவர்களின் குடும்பங்களை, பரம்பரைகளை ஒரு சாதி பெயரில் அழைத்தார்கள். ஆனால் பிறநாட்டார் வந்து போது எல்லோருக்கும் பொதுவாக அவர்கள் நடந்து கொண்டார்கள். பொதுக்கல்வி, பொதுச் சுகாதாரம், பொது இடங்கள் என்று யாவரையும் ஒற்றுமைப்படுத்த முனைந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் சட்டத்தின் முன் யாவரும் சமமே என்பதால் மக்கள் யாவரையும் ஒரே கண்கொண்டு பார்த்தார்கள். முக்கியமாக பொதுக் கல்வியானது தொழில்களைக் கடந்து மக்களை அறிவு ரீதியாக ஒன்றிணைத்தது. ஆங்கிலேயர்கள் கணிதம், எழுதுதல், வாசித்தல் என்பவற்றில் சிறந்தவர் எவராக இருந்தாலும் அவர்களை வேலைக்கு அமர்த்தினர். (3Rs-Arithmatic, Writing, Reading). எல்லாத் தொழில்களையும் எல்லோரும் செய்யக் கூடியவாறு நிலைமை மாறியது. ஆகவே தொழில் முறை அடிப்படையில் வளர்ந்த சாதிகளின் முக்கியத்துவம் மங்கத் தொடங்கியது. எனினும் சாதி முறைமையானது தமக்குக் கொடுத்த அடையாளங்களையும், சிறப்புரிமைகளையும், தனிச் சிறப்புக்களையும், பேறுகளையும் இழக்க சிலர் விரும்பவில்லை. முக்கியமாக சமூகத்தில் ஆதிக்க நிலையில் இருந்தவர்கள் தமது சலுகைகளையும் அதிகாரங்களையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஆகவே தொழில் முறை வித்தியாசங்கள் பொதுக் கல்வியின் நிமித்தம் நீக்கப்பட்டாலும் சாதி வழிச் சிறப்புக்களைப் பேண சிலர் கங்கணங் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். இது காலத்திற்கு ஒத்து வராத ஒரு நிலைமை. இன்று உலகெங்கும் வௌ;வேறு மொழி, இனம், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுகின்றார்கள். திருமணம் செய்கின்றார்கள். ஒருமித்து வாழத் தலைப்படுகின்றார்கள். எமது உறவுகள் கூட பிறநாடுகளில் இனம் மாறி, மொழி மாறி, மதம் மாறி திருமணம் செய்கின்றார்கள். ஆகவே சாதிகளை நாம் ஒழிக்க வேண்டிய அவசியமில்லை. காலக்கிரமத்தில் அவை தானாகவே வழக்கொழிந்து போய் விடுவன. ஒரு காலத்தில் ஆண்டான் – அடிமை என்ற வேறுபாடு இருந்தது. அடிமைத்தனம் அழிக்கப்பட்டவுடன் இன்று எவரும் இன்னொருவரை அடிமைப் படுத்துவதில்லை. அடிமைப்படுத்தினால் சட்டம் அதற்கு நடவடிக்கை எடுக்கும். இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் தான் தமிழரை அடிமைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கின்றன!

கேள்வி: நாட்டில் வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு எட்டுவதற்கு ஆன்மீக ரீதியாக உங்களுடைய கருத்து என்ன?

பதில்: என்னை ஒரு ஆன்மிகவாதியாகவே கருதி கேள்விகள் கேட்கின்றீர்கள். பரவாயில்லை.
கர்மவினை என்பது தனிப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல. ஒருமித்த மக்கட் தொகையினருக்கும், ஒன்று சேர்ந்த நடவடிக்கைகள் எடுக்கும் எந்த ஒரு குழுவினருக்கும் பொதுவான கர்மவினையுண்டு. வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குக் காரணம் நாங்களே அன்றி பிறர் அல்ல.

யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில். எமது தீமைக்கும் நன்மைக்கும் நாமே பொறுப்பாளிகள். நாம் பொறுப்பாளிகள் என்று கூறும் போது எமது பொறுப்பற்ற கடந்தகால நடவடிக்கைகளே காரணம். எமது மதம்(செருக்கு), மாற்சரியம் (பொறாமை), பேராசை, வைர்யம், சுயநலம் போன்றவை அவற்றின் பின்விளைவுகளை எமக்கு ஏற்படச் செய்துள்ளன. நீங்கள் சாதிகள் பற்றிக் கூறினீர்கள். எம்முடைய சில சாதியினர் மற்றைய சாதியினரை நடத்திய விதத்தையும் சிங்கள இராணுவத்தினர் எம்மை நடத்திய பாங்கினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தெற்கில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் இராணுவத்தினுள் உள்நுழைந்தனர். அவர்கள் முன்னிலையில்த்தான் சாதியால் மேம்பட்டதாகக் கருதிய எம்முட் பலர் முழங்காலிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். தற்போது நாம் அனுபவித்து வருவது எமது கடந்த கால வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பு. எமது நன் நடவடிக்கைகளின் நற்பலன்கள் எம்மை வந்தடையும் போது இப்போதைய நிலை மாறிவிடும். இருள் நீங்கும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது. எம்முடைய ஒன்றுபட்ட பிரார்த்தனை அதனைக் கெதிப்படுத்தும். தனிப்பட்ட கிறீஸ்தவர்களும் இஸ்லாமியரும் இவ்வாறான பிரார்த்தனைகளில் ஈடுபடும் அளவுக்கு எமது இந்துக்கள் இனத்தின், நாட்டின், மக்களின் நல் வாழ்வுக்காகத் தாமாகவே முன்வந்து துதிப்பது குறைவு. யாகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தனிமனிதப் பிரார்த்தனைகள் அவசியம். எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களின் விடிவுக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

கேள்வி: நீங்கள் தற்போது தொடர்ந்தும் அரசியலில் பயணிக்க காரணம் என்ன?

பதில்: என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க வடமாகாண சபையில் சதிகள் மேற்கொண்ட போது என் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை முறியடித்தார்கள். அந்த நேரம் நான் அவர்களுக்கு ஒரு உறுதிமொழி அளித்தேன். ‘நான் உங்களுடன் இருப்பேன்’ என்பது தான் அந்த உறுதிமொழி. ஆயிரம்பிறை கண்ட நிலையை எட்டிக்கொண்டிருக்கும் நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்த போது எம்மக்கள் எனது உறுதி மொழியை நினைவுபடுத்தினார்கள். என்னால் என் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அதனால்த்தான் தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன். எனது தொடர்ச்சி எமது கொள்கைகளை மக்கள் ஏற்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பதற்காகத்தான். ஏற்றால் தொடர்வேன். ஏற்காவிட்டால் அமர்வேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி அரசாங்கத்துடன் பேசத் துணியவில்லை. அவை பற்றி உங்கள் நிலையென்ன?

• தேசியம், சுயநிர்ணய உரிமை வழங்கமுடியாது என்பது அரசாங்கத்தின் முடிந்த முடிவு.
பதில்: கனிஷட மாணவர்களின் ‘மாபிள்’ களைப் பறித்தெடுத்து விட்டு சிரேஷ;ட மாணவர்கள் ஒன்றிரெண்டைத் தந்து விட்டு இவ்வளவு தான் தருவோம் என்று கூறுவது போல் இருக்கின்றது அரசாங்கங்களின் ‘முடிந்த முடிவு’கள். பிரச்சினைகள் எம்முடையவை. அவர்கள் பிரச்சினைகள் அன்று. ஆகவே எமது பிரச்சினைகள் எமக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் தீர்க்கப்பட வேண்டும். அதில் சிங்கள மக்களுக்கு ஏதேனும் இடர்ப்பாடுகள் இருந்தால் எம்மிடம் சொல்லட்டும். நாம் அவற்றைத் தீர்த்து வைப்போம்.

• பயங்கரவாதத் தடைச்சட்டம்
பதில்: உடனே கைவாங்குவதாக ஜெனிவாவில் அறிவித்திருந்தார்கள். ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கு வரும் மார்ச் மாதத்தில் காரணம் காட்ட வேண்டும். அக் காரணங்கள் முறையானவையாக இருக்க மாட்டா. அதை அம்பலப்படுத்த வேண்டும். உடனே தடைச் சட்டத்தையும் நீக்கி அதன் கீழ் அடைபட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்;பட வேண்டும். ஏனென்றால் குறித்த சட்டம் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் முரண்பாடுடையது.

• காணாமல் ஆக்கப்பட்டோர்.
பதில்: OMP சட்டம் போதுமானது அல்ல. குற்றவாளிகள் என்று சந்தேகிப்பவர்களை அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்படுவர். வழக்கு 10 வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படும். காணாமல் ஆக்கப்பட்டோரை அவ்வாறான நிலைக்குள் தள்ளக் காரணமாக இருந்தவர்கள் அடையாளம் காட்டப்படாமல் தப்பி விடுவார்கள். இதுவரை நடைபெற்ற அவர்கள் பற்றிய விசாரணை அறிக்கைகள் யாவும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.

• இனப்படுகொலை
பதில்: இனப்படுகொலை பற்றி வடமாகாண சபை ஏற்கனவே ஏகோபித்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சி பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அது பாராளுமன்ற அங்கத்தவர்களாலும், மனித உரிமை தாபனங்களாலுமே முடியும்.

• அரசியல் கைதிகள்
பதில்: உடனே விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத்தடைச் சட்டம் எமது வழமையான சட்டங்களுக்கும் சட்டக் கருத்துக்களுக்கும் முரணானது. அதன் கீழ் கைதாகித் தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

• பொலிஸ் காணி அதிகாரம்
பதில்: ஏற்கனவே 13வது திருத்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரித்துக்களைக் கூட இதுவரையில் அரசாங்கங்கள் எமக்குத் தரவில்லை. எமக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தருவதில் மத்திய அரசாங்கத்திற்கிருக்கும் சிரமத்தை எமக்கு அறிவித்தால் அவற்றிற்கான பதில்களை நாம் கொடுக்க முடியும். அவை தந்தே தீர வேண்டிய உரித்துக்கள்.

• ஒற்றை ஆட்சி
பதில்: ஒற்றையாட்சி என்றால் சிங்கள ஏகாதிபத்தியம் என்றும் அர்த்தம். அதற்கு எதிராகவே 70 வருடங்களாகப் போராடி வருகின்றோம். ஒற்றையாட்சியோ, ஒருமித்த நாடோ, ஏக்கிய இராஜ்யவோ எமக்கு வேண்டாம். தமிழ்ப் பேசும் மக்கள் தங்களைத் தாமே ஆளும் உரித்து அரசாங்கங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை வழங்க வழி அமைக்கப்பட வேண்டும்.

• பூகோள அரசியல்
பதில்: பூகோள அரசியல் என்பது நாடுகள் தமது தனிப்பட்ட தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களுடன் தேனொழுகப் பேசும் வழிமுறையாகும். நாமும் எமது உரித்துக்களை மையமாக வைத்து உரியவர்களுடன் பேச வேண்டும். பெறக்கூடியவற்றைப் பெற வேண்டும். சர்வதேச நாடுகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாக எமது பிரச்சினைகளின் தீர்வுகள் அமைந்தால் அவற்றை நிச்சயம் அந்நாடுகள் நடைமுறைப்படுத்த முன் வருவார்கள்.

கேள்வி: அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை என்ன?
பதில்: தற்போதைக்கு அது வராது. வந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாiஷகளைப் பூர்த்தி செய்யாது. அரசாங்கம் அதனைத் திணித்து எமக்கு ஒரு சில சலுகைகளைப் பெற்றுத் தருவதானால் அது அவர்கள் விருப்பம். தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையில் இருந்து தற்போது பேசப்படும் தீர்வுத்திட்டம் வெகு தூரத்திலேயே அமைந்துள்ளது.

கேள்வி: நீங்கள் ஏன் புதிய கட்சியை உருவாக்கினீர்கள்? ஏன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்த கட்சிகளை கொண்டு கூட்டுச் சேர்ந்து ஒரு கட்சியை உருவாக்க முடியாமல் போனது?
பதில்: இவ்வாறான ஒரு கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளது. வாரத்துக்கொரு கேள்வியில் அதுபற்றிப் பதில் இறுப்பேன்.

கேள்வி: வடகிழக்கு இணைப்பு தொடர்பில் தங்கள் கட்சி கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன?
பதில்: வடக்கும் கிழக்கும் 2000 வருட காலத்திற்கு முன்னிருந்து தமிழ்ப் பேசும் பிரதேசங்கள். அது அவ்வாறே தொடர வேண்டும். இணைய வேண்டும் என்பதிலும் பார்க்க ஏற்கனவே இருந்த மொழியை மையமாகக் கொண்டிருந்த, வடகிழக்கின் ஒருமித்துவ இணைப்பை இல்லதாக்கியோர் வடக்கையும் கிழக்கையும் இருந்தது போல் தமிழ்ப் பேசும் அலகாக இருக்க விட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாம் எம்மை ஆண்டு பரிபாலிக்க உரித்துடையோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து சமஷடி ரீதியான ஒரு அரசியல் யாப்பைத் தர வேண்டும். எமது தனித்துவம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

கேள்வி: டட்லி சேனநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிரிசேன வரை தமிழ் இனத்திற்கான தீர்வினை பெற்றுத் தரவில்லை. இவ் இனவாத தலைவர்களையும் தற்போதைய கூட்டு அரசாங்கம் பற்றியும் தாங்கள் விளங்கிக் கொள்வது என்ன?

பதில்: அவர்கள் இனவாதத் தலைவர்கள் அல்ல. சிறையான தலைவர்கள். சிங்கள மேலாதிக்கம் இலங்கையில் என்றுமே தொடர வேண்டும் என்ற கோட்பாட்டுக்குச் சிறையான தலைவர்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பேசினீர்கள் ஆனால் மிக நன்றாகக் கனிவோடு அக்கறையோடு பேசுவார்கள். உங்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் கேட்பனவற்றைத் தருவார்கள். ஆனால் சிங்கள மேலாதிக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் முறையில் எதுவுமே செய்ய மாட்டார்கள். செய்ய விடவும் மாட்டார்கள். இதற்குக் காரணம் வெள்ளையர்களையும் தமிழர்களையும் தந்திரமாய் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டதே சிங்கள மேலாதிக்க நிலை. அதைக் கைவிட்டால் தமது முக்கியத்துவம் பறிபோய்விடும் என்ற பயமே அவர்களுக்கு.
தற்போதைய அரசாங்கம் கூட்டு அரசாங்கமா? ஜனாதிபதி மூன்று மாதமாக அமைச்சர் அவைக் கூட்டத்திற்கே செல்லவில்லையே!

கேள்வி: தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் சாத்தியமற்றுப் போனால் அதன் எதிர்விளைவு இனி எவ்வாறு இருக்கும்?

பதில்: வேதாளம் திரும்பவும் மரத்தில் ஏறியது போல் இருக்கும்!

கேள்வி: முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில் தாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன?

பதில்: ஏன் அவர்களுடன் நான் சுமுகமான உறவை வைத்துக் கொண்டிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

கேள்வி: நீங்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்து சாதித்தது என்ன? தற்போது சாதித்துக் கொண்டிருப்பது என்ன?

பதில்: தமிழ் மக்களை ஒன்று சேர்த்தேன். விடுபட்டு இருந்த தமிழரசுக் கட்சியினர் கூட தற்போது வாழ்க்கையை எங்கள் கண்கள் ஊடாகப் பார்க்க எத்தனிக்கின்றார்கள். அவர்களின் பார்வையை யதார்த்தம் நோக்கி மாற்றிக் கொண்டிருப்பது தான் நான் தற்போது சாதித்துக் கொண்டிருப்பது.

 

SHARE