இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகரமாக இருந்து வருகின்றது.
இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வவுனியாவில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டின் இறுதி அமர்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையின் முழுவிவரம் வருமாறு:- இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இந்தப் பதினைந்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எமது உரிமைப் போராட்டம் தற்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சிலர் தவிர தமிழ்ப் பேசும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட வட மாகாணசபையானது தேர்தலில் வெற்றிகண்டு பதவியேற்ற பின்னர் பலவிதமான விடயங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கடப்பாடு எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை தமிழர்சார் அரசியல் பின்னடைவுகளை அண்மையில் கண்டதன் காரணத்தால் வடமாகாணந்தான் இப்பேர்ப்பட்ட ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இவ்வளவு காலமும்,அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் முதல், தாம் நினைத்ததைச் செய்து, தாம் நினைத்ததைக் கொடுத்து, தாம் நினைத்ததை எடுத்து போர் வெற்றியின் அடிப்படையில் சர்வாதிகார முறையில் அது நடத்துவித்து வந்த அரசியல் இயந்திரம் பெருவாரியான வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாணசபை பதவி ஏற்றதும் அச்சபை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அல்லது எவ்வாறு அதனை நடத்துவிக்க வேண்டும் என்று தெரியாமல் திகைப்புற்றிருக்கின்றது. அதே நேரத்தில் வெளிநாட்டு சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை சற்று கரிசனை தந்து கொண்டிருப்பதால் அரசாங்க முக்கியஸ்தர்களைப் பொறுத்த வரையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வடமாகாண முதலமைச்சரைப் பக்கத்தில் வைத்துத் தனிமையில் பேச வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் காரணமில்லாமல் வெவ்வேறாகக் கருத்து வெளியிட்டிருக்க மாட்டார்கள். காரணமில்லாமல் நல்லூர் முருகனின் திருவிழாக்காலத்தில் “இன்னும் இன்னும் வலங்குவேன்”; “நீங்கள் முன்னேர் வேண்டும்”; “உங்கள் பிரதேசம் முன்னேர் வேண்டும்” என்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தான் படித்த தமிழில் கூறியிருக்கமாட்டார். இது அரசாங்கத்தின் குழப்ப நிலை. எமக்குள்ளும் ஒரு குழப்பநிலை. எம்மைப் பொறுத்த வரையில் மூன்று விதமான எமது தமிழ் மக்கள் உலகெங்கணும் இருந்து ஒருவரை ஒருவர் சாடி நிற்கின்றார்கள். “இன்று தந்ததை எடு”; “தருவதை ஏற்றுக்கொள்”; “தலையெழுத்தை மாற்ற முடியாது”; “கிடைப்பதைச் சுருட்டிக்கொள்” என்று ஒருசாரார் கூறுகின்றார்கள். அவர்கள் கிடைப்பதைச் சுருட்டிக் கொண்டவர்களாகக் காலம் கடத்துகின்றார்கள்.
தீர்வோ கிடைத்தபாடில்லை. மேலும் ஒரு சாரார் முன்னர் ஒருவர் கண்ட கனவைத் தாங்கள் நனவாக்க முனைகின்றார்கள். முன்னர் கனவு கண்டவரின் கனவு நனவாகவில்லை என்பது பற்றி அவர்களுக்குக் கரிசனை இல்லை. அவ்வாறு கனவை நனவாக்க முனைபவர்கள் அதற்கான தந்திரோபாயங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை அவர்கள் வசம் உள்ளதோ இல்லையோ நான் அறியேன். ஆனால் கனவுகண்டவர்களின் ஆத்ம அனுசரணையாளர்கள் என்று தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு குட்டையைக் கிளறிக்கொண்டிருக்கின்றார்கள் சிலர். அவர்களின் சூரத்தனங்கள் நாம் இன்று நடாத்திக் கொண்டிருக்கும் வடமாகாணசபையை 1988ம் ஆண்டில் உருவான வடகீழ் மாகாணசபையின் முடிவுக்கு எடுத்துச் சென்று விடுவனவோ என்று எண்ண வேண்டியுள்ளது. பத்திரிகையில் படம் வந்தால், ஊடகங்களில் அவர்களின் உன்மத்தக் கருத்துக்கள் உரைக்கப்பட்டால் அன்று காணப்பட்ட கனவை இன்று நனவாக்கிவிட முடியும் என்று அவர்கள் மேலும் ஒரு கனவு காண்கின்றார்கள். மாகாணசபை தொடர்ந்திருப்பதால் என்ன நன்மை என்பது அவர்கள் சித்தாந்தம்? மூன்றாவது சாரார் நிலைமையை முழுமையாக உணர்ந்து கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு, கருத்துக்கு ஏற்றவாறு கண்காணிப்புடன் கருமம் ஆற்றி வருகின்றார்கள். எனினும் அவர்கள் நோக்கிச் செல்லும் தீர்வு யதார்த்தமானது. எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. அரசாங்கமும் அவர்களின் அறிவுரைகளை அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கும். எனவே வடமாகாணசபை வந்தமை பெரும்பான்மையினரை மட்டும் அன்றி எம்மையும் சில குழப்பங்களில் மாட்டிவிட்டுள்ளது. இந்தக் குழப்ப நிலைக்குள்ளேதான் எங்கள் பதினைந்தாவது தேசிய மாநாடு இங்கு நடைபெறுகின்றது. இத்தருணத்திலே இன்றைய இந்த நிலையில் கட்சியின் கடப்பாடு என்ன என்று ஆராய்வது உசிதமானது. மிகச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இருந்து வடகிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு சமத்துவத்தையும், சமாதானத்தையும், பொருளாதார அபிவிருத்தியையும், பாதுகாப்பையும், பயன்தரு நீதியையும் பெற்றுக் கொடுக்க, முயன்று முன்னேறுவதே முக்கிய கடப்பாடாகத் தோன்றுகின்றது. இக்கட்சியின் ஆரம்பத்தை எம் மனதில் நாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரே நாட்டினுள் அஹிம்சை வழியில் எமது அதிகார வரம்புகளை அடையாளம் கண்டு அங்கு நாம் எமக்கென ஒரு ஆட்சியை நிறுவ வேண்டும் என்றே எமது ஆரம்ப கர்த்தாக்கள் முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் “தமிழரசு” என்ற சொல் தம்மிடம் இருந்து எம்மைப் பிரித்துக் கொண்டு செல்ல நாம் முனையும் முஸ்தீபு என்று சிங்களத் தலைவர்கள் முடிவு கட்டியமையால் இன்று வடமாகாணசபை எதிர் நோக்குவது போல் அன்றும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது. “சிங்களம் மட்டும்” என்ற சிந்திக்காத ஒரு சித்தாந்தத்தால் இந்த நெருக்கடி மிக வலுவுற்றது. அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு பண்டா-செல்வா உடன்பாடு கிழித்தெறியப்பட்டதால் ஏற்பட்ட இனக் கலவரத்தை எதிர்நோக்கியமை, 1960இல் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டமை, 197இல் கொண்டுவந்த புதிய குடியரசு அரசியல் யாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தல் என்று போராட்டங்கள் பலவாறாக முன்னெடுக்கப்பட்டன. அக்கால கட்டங்களில் எல்லாம் எமது முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் தோளோடு தோள் நின்று கட்சியை வளர்த்தார்கள். இன்று சற்று பலவீனமுற்று வாடும் எனது நண்பர் மசூர் மௌலானா அவர்கள் என் நினைவிற்கு வருகின்றார்கள். ஏன் என் நண்பர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களும் ஆரம்ப காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேடைகளை அலங்கரித்தவர்தான். அக்காலகட்டத்தில் தமிழர் – முஸ்லிம் நல்லெண்ணம் மட்டுமன்றி மலையக மக்களின் தலைவர்களும் எம்முடன் சார்ந்து நின்றார்கள். அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும், சீ.சுந்தரலிங்கமும் மலையக மக்கள் சார்பில் சௌம்யமூர்த்தி தொண்டமானும் தமிழரசுக் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பினும் தந்தை செல்வாவின் அழைப்புக்;கு மதிப்புக் கொடுத்து ஒரே மேடையில் தோன்றச் சம்மதித்தார்கள். 1965ம் ஆண்டில் டட்லி – செல்வநாயகம் உடன்பாட்டின் காரணமாக சிங்கள – தமிழ் ஒற்றுமையும் ஒரு சில காலம் நிலவியது. 1980ஆம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகளை அரசாங்கம் பறிக்க முயல்கையில் அவர் சார்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ஒரே வேற்றுக் கட்சித் தலைவர் எமது சகோதரர் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களே. அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆகவே கட்சி பேதமின்றித் தமிழ் மக்களையும், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும், தம்பால் ஈர்த்தே தந்தை செல்வா அரசியல் நடத்தினார். பெரும்பான்மை இனத்தவரிடையே பாகுபாட்டுக்கு ஆட்படுத்தப்பட்ட சிங்கள மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு கட்சியாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி அக்கால கட்டத்தில் பரிணமித்திருந்தது. இதனை நாங்கள் மறக்கக் கூடாது. இவை முற்றாகப் பிரிந்து செல்வோம், முடிவாக நாம் பிரிந்து வாழ்வோம் என்ற ஆயுதமேந்திய குரல் ஒலிப்பதற்கு முன்னர் இருந்த சூழல். அதாவது அதிகாரத்தில் உள்ளவர்கள் தரமாட்டோம் என்றாலும் அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டினோம். ஆனால் தவறு செய்தவர்களைத் தண்டிக்க நாம் முன்வரவில்லை. இது அஹிம்சையின் வழி. ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் எமது அந்தப் பாரம்பரியத்தை நாம் மனதில் எடுப்பது உசிதம் என்றதாலேயே அதனை இங்கு நான் குறிப்பிடுகின்றேன். ஆனால் அன்றைய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. ஒரேயொரு தீர்வுதான் உண்டு என்று அந்த இலக்கை நோக்கிச் செல்பவர்கள் அது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் மகாபாரதத்தில் அபிமன்யுவுக்கு நேர்ந்த கதிதான் நடக்க நேரிடும். வியூகத்தை உடைத்து உட்செல்ல அறிந்திருந்தவனுக்கு வெளியேவர வழி தெரியவில்லை. பலர் சேர்ந்து அவனைக் கொன்று விட்டனர். எனவே மாற்றுவழியொன்றை மனதில் நிறுத்தாமல் எம் இளைஞர்கள் நுழைந்த பாதை இப்பொழுது எங்கே எங்களைக் கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். அரசாங்கத்தின் போர் வெற்றி எப்பேர்ப்பட்ட ஓர் இயல்பை வடகிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோமாக. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரங்கள் இன்றி வாடும் நிலை, போர் எம்மக்கள் மனதில் ஏற்றிய பயம், பீதி ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புநிலை, இராணுவ கட்டுப்பாட்டினுள் எம்மக்கள் இடருரும் நிலை, எம்மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் பிறமாகாணத்தில் இருந்து கொண்டுவந்து வேற்று மக்களைக் குடியிருத்தும் நிலை, 13ஆவது திருத்தச் சட்டத்தின் வலுவற்ற நிர்வாக நிலை, எமது சிறிது அளவான நிர்வாக அதிகாரத்தினுள்ளும் திவிநெகும என்ற சட்டம் செய்துள்ள ஊடுருவல் நிலை போன்ற பலதையும் எதிர் நோக்கும் நிலையில் எம்மக்கள் உள்ளனர். எமது வடமாகாணசபை பல இடர்களின் மத்தியில்தான் தனது கடமைகளைச் செய்து வருகின்றது. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் தற்போது நிற்கின்றோம். சர்வதேசச் சூழல், அயல்நாட்டுச் சூழல், மேலும் உள்நாட்டிலும் எழுந்து வரும் சில சூழல்கள் எமக்கு சாதகமாக இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் நாட்டுடன் எங்கள் உறவுகள், அறிஞர் அண்ணாத்துரை காலத்தில் இருந்து இன்று ஜெயலலிதா அம்மையார் காலம் வரையில் சுமூகமாக இருந்து வருகின்றதை இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டும். எம்மைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்தத் தொடர்பு என்றென்றும் இருந்து கொண்டே இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு கட்சி என்ற முறையில் மனதிற்கு எடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதனை அரசியலில் இதுவரைகாலம் உள்நுழையாது நின்று அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவராகக் கூற விரும்புகின்றேன். ஒரு புத்திஜீவியின் கருத்தாக அதை எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர ஓர் அரசியல்வாதியாக என் கூற்றுக்களை எடைபோடாதீர்கள் என்று தாழ்மையுடன் உங்களிடம் கேட்டுக் கொண்டு எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன். முதலாவது – இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகரமாக இருந்து வருகின்றது. அதே நேரத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற மூத்த தலைவர்களை அணைத்துச் செல்லும் கட்சியின் பாங்கை நான் மெச்சுகின்றேன். இரண்டாவது – பெண்களின் பங்காற்றல். தற்பொழுது இலங்கைத் தமிழ் சமுதாயத்தினுள் பெண்களின் தொகை ஆண்களிலுங் கூடியதே என்று நான் நம்புகின்றேன். எப்படியிருப்பினும் வடமாகாணத்தில் இது உண்மையே. எமது அரசியல் செயற்பாடுகளுக்குப் பெண்களைச் சேர்த்துக் கொள்வது மிக முக்கியமாக எனக்குப் படுகிறது. யுத்த காலத்தில் எமது பெண்களின் பங்கு மிக நேர்த்தியாக அமைந்திருந்ததை நாங்கள் மறக்கக் கூடாது. இப்பொழுதும் அவர்களுள் பலர் எம்மிடையே வாழ்ந்து வருகின்றார்கள். பலர் வறுமையினால் வாடுகின்றார்கள். மக்களை ஒருங்கிணைத்து ஓர் அஹிம்சை அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கு அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக அமையக் கூடும் என்று எனக்குப் படுகின்றது.
உரிய உற்சாகத்தையும் அறிவுரைகளையும் பொருளாதார வளங்களையும் வழங்கினால் அவர்கள் நிச்சயமாக எமது மக்களின் ஈடேற்றத்திற்கு வழி வகுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இதைக்கூற இன்னுமொரு காரணமும் உண்டு. உரியவர்களை, உறவினர்களை, உற்றாரைப் பறிகொடுத்து நிற்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளை எதிர்மறையாகப் பிரயோகிக்க விடாது எமக்கு நன்மை தரக் கூடிய தன்னுறுதியுடைய பாங்காக மாற்றியமைத்து முன்னேற அவர்களை அரசியல் போராட்டத்தில், கட்சி விருத்தியில் ஈடுபடுத்துவது நன்மையைத் தரும். மக்களின் தேவைகளை அடையாளம் காணல், அவர்களுக்கான நிவாரணங்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்தல், அதற்கான உதவிகளில் ஈடுபடல் போன்ற பல விடயங்களில் இப்பெண்கள் கட்சி சார்பில் ஈடுபடலாம். எனவே பெண்களை எமது கட்சி நடவடிக்கைகளில் பெருவாரியாகச் சேர்த்துக் கொள்வதையும் பெண்கள் அணியை வலுவுடையதாக மாற்றுவதையும் நான் சிபார்சு செய்கின்றேன். மூன்றாவதாக – இளைஞர்களை ஈடுபடுத்துவது. முதலில் நான் குறிப்பிட்ட இளம் தலைமைத்துவ அங்கத்தவர்கள் மத்திய வயதில் உள்ளவர்கள். இங்கு நான் குறிப்பிடுவது எமது இளைய தலைமுறையினரை. அவர்களை இயக்கக் கூடிய அரசியல் நோக்கத்தை இளைஞர், யுவதிகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு நான் சில இளைஞர் அணிகளுடன் சேர்ந்து சில பல சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றேன். இது வரையில் அவை பயன் தருபவையாகவே மலர்ந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் புதிய புதிய சிந்தனைகளை வெளியிடுபவர்களாகக் காட்சி அளிக்கின்றார்கள். அவர்களின் கணனி அறிவு அதற்கு மெருகூட்டுகின்றது. அரசியல் ரீதியாக மக்களை ஒன்று சேர்க்கவும், அரசியல் சிந்தனைகளை அவர்கள் மத்தியில் வலுப்பெறச் செய்யவும், வருங்காலம் பற்றிய சிந்தனைகள், வாழ்வாதார மேம்பாடுகள் பற்றிய சிந்தனைகள், பண்பாட்டு சூழல் பற்றிய சிந்தனைகள் போன்றவற்றை விருத்தியடையச் செய்து மக்களிடையே கொண்டு செல்லவும் தமிழரசுக் கட்சி உதவி அளிக்க வேண்டும். வெறும் இளைஞர் அணிகளை உருவாக்கி விட்டு சும்மா இருப்பதில் பயன் இல்லை. அல்லது அவர்களுக்கு வன்னியில் இடம் பெற்றுக் கொடுப்பதில் மட்டும் கரிசனை காட்டுவதில் பயனில்லை. அவர்களுக்கான கருத்தரங்குங்கள், பணிமனைகள், விவாதங்கள், கருத்துப்பரிமாறல்கள் என்று அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டி உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதே நேரம் அவர்களுக்கான பொருளாதார விருத்திக்கும் நாம் அடிசமைக்க வேண்டும். தற்போது இராணுவத்தினர் எமது குடும்பங்கள் அனைவரையும் பற்றி சகல விவரங்களையும் கணணியில் உள்ளடக்கி வருகின்றார்கள். எம்முள் பலருக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. நேற்றுமுன்தினம் தான் எமது Body Language உடல் கூறும் மொழி சம்பந்தமாக இராணுவம் ஆராய்ந்து வருவதைப் பற்றி ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் இருக்கும் விதம், சிரிக்கும் விதம், முறைக்கும் விதம், கைகால்களை அசைக்கும் விதம் எல்லாவற்றையும் படம் பிடித்து எடுத்து அவற்றில் இருந்து அந்த மனிதரை எடைபோடக் கூடியதாக விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. இந்தக் கலையில் இஸ்ரேல் நாடுதான் முன்னணியில் நிற்கின்றது. எமது அரசாங்கம் அந்நாட்டுடன் சுமுகமான உறவினைப் பேணிப் பாதுகாத்து வருகின்றது. ஆகவே இராணுவம் வடமாகாணத்தில் இருந்து புல்லுத்தின்று கொண்டிருக்கவில்லை என்பதை எம்மக்கள் உணர வேண்டும். எமது இளந்தலைவர்கள் தலைமையின் கீழ் எமது இளைஞர்கள் இராணுவம் பற்றிய சகல விவரங்களையும் சேகரிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. எங்கெங்கே, எத்தனைபேர், எவ்வளவு ஏக்கர் நிலத்தில் இருக்கின்றார்கள், என்னென்ன வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் போன்ற பல தரவுகளையும் பெற்றுக் கொடுக்க எமது மக்கள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். எமது கட்சி முன்னர் போல் மேடைப் பேச்சுக்கள் பேசுவதுடன் இருந்துவிட முடியாது. நான் கணினி பற்றிய எந்த அறிவும் இல்லாதிருந்தேன் ஒரு 15 வருடங்களுக்கு முன்னர். எங்கள் வயதுக்கு எதற்கு இந்தக் கணினி அறிவு என்ற எண்ணத்தில் இருந்தேன். கருத்தரங்கங்கள் பலவற்றிற்கு நான் வெளிநாடுகளுக்குச் சென்ற போதுதான் எனது குறைபாட்டை நான் உணர்ந்து கொண்டேன். உங்கள் “ஈமெயில்” விலாசம் என்ன என்று வெளிநாட்டில் பலரும் கேட்டார்கள். எனக்கு அப்படியொன்றும் இல்லை என்று கூறக் கூச்சமாக இருந்தது. உடனே வந்து கணனி அறிவை ஓரளவு பெற்றுக் கொண்டேன். இதே போல்தான் கட்சியின் நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டும். மேல் அங்கியின் கீழ் உள்ள கைகளை விடுவித்து நெஞ்சை உயர்த்தி உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி வாக்குப் பெறும் காலம் போய்விட்டது என்பதை நாம் உணர முன்வர வேண்டும். இளைஞர் யுவதிகளின் மனோ நிலையைப் புரிந்து நடக்க முன்வரவேண்டும். இல்லையேல் எமது கட்சி பலவித சோதனைகளுக்கு உள்ளாகும் என்பது எனது கணிப்பு. தலைமைத்துவத்தில் வெளிப்படைத் தன்மையை இப்பொழுதே கோரத் தொடங்கிவிட்டார்கள் இளைஞர்கள். அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். இன்று நாங்கள் தலைமைத்துவத்தை தம்பி மாவையிடம் ஒப்படைத்துள்ளோம். அவர் சூழலைப் புரிந்து கட்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடியவர். அவர் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர். மக்கள் மனம் அறிந்தவர். தமிழ் மக்களின் விடிவெள்ளி. ஆனால் திரண்டு வரும் கருமேகங்களையும் கருத்தில் எடுக்க வேண்டிய கடப்பாடு உடையவர். இளைஞர் அணியில் சேர்ந்து கட்சியின் உச்சநிலையை அடைந்துள்ளார் தம்பி மாவை. அவரை மையமாக வைத்து கட்சி முன்னேற வேண்டும். இளைஞர், யுவதியரின் மனமறிந்த மக்கள் தலைவர் அவர். இளம் சமுதாயத்தை வழிநடத்தும் பாரிய பொறுப்பு அவரைச் சார்ந்துள்ளது என்பதை அன்புடன் இங்கு சொல்லி வைக்கின்றேன். உலகளாவிய ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிக் கிளைகளுடனும் வேறு ஒத்த கருத்துக்கள் உள்ள நிறுவனங்களுடனும் போதிய தொடர்பு வைத்து அவர்கள் செயற்படும் விதம் பற்றிய அறிவைப் பெறவும் மேலும் அரசியல் பற்றிய அறிவையும், அனைத்துலக ரீதியாக எமக்கான வளங்களைப் பெற ஆவன செய்யவும் பின்னிற்கக் கூடாது. புலம்பெயர் எமது உறவுகள் இந்த விடயம் சம்பந்தமாக எமக்கிருக்கும் பாரிய ஒரு வளம் என்பதை நாம் மறத்தல் ஆகாது. கடைசியாக அரசியல் சம்பந்தமான ஒருசில சொந்தக் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இவற்றை நான் முழுமையாகச் சிந்தித்துப் பார்த்துப் பகர்கின்றேன் என்று கூறமுடியாது. மனதில் உதிப்பதைப் பகிர்ந்து கொள்கின்றேன். நான் கூறும் விடயங்களில் ஏதேனும் நன்மைபயக்கும் கருத்துக்கள் இருந்தால் அவற்றை எம் மக்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதாவது ஆங்கிலத்தில் Conglomerate என்ற ஒரு சொல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். திரட்டப்பட்ட அல்லது உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட ஒன்றையே அவ்வாறு குறிப்பிடுவர். இது வாணிப, வணிக உலகில் கையாளப்படும் ஒரு சொல். பல கம்பெனிகள் சிறியதும் பெரியதுமாகச் சேர்ந்து திரட்டப்பட்டு மத்திய ஆளுமையின் கீழ் அவை தனித்துவமாக செயற்படும் போது அந்த முழுமையான கட்டமைப்பைக் ஊழபெடழஅநசயவந அல்லது திரட்டப்பட்ட நிறுவனம் என்று அழைப்பர். இதை ஏன் இங்கு கொண்டு வருகின்றேன் என்றால் அரசியலிலும் இந்தக் கருத்தை நாங்கள் உட்புகுத்தலாம் என்று எண்ணுகின்றேன். ஜோன் கீல்ஸ் போன்ற பெரிய கம்பெனிகள் இப்பேர்ப்பட்ட திரட்டப்பட்ட கம்பெனிகளே. அவை வேலை செய்வதெல்லாம் சமஷ்டி அடிப்டையிலேயே என்பதை இங்கு கூறுவதற்கே இதை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். குறிப்பிட்ட ஒரு பொருளை உற்பத்தி செய்யவோ, ஒரு தொழிற்சேவையை மக்களுக்கு ஆற்றி வழங்கவோ அந்தந்த தனிப்பட்ட கம்பெனிகள் உதவி செய்வன. ஒரு பொருளை உற்பத்தி செய்ய உற்பத்தி செய்ய உகந்த அந்தந்த இடங்களில் கம்பெனியானது நிலைபெற்றால்தான் அந்தக் கம்பெனி தொழிற் திறனுடனும் மலிவான செலவுடனும் செயற்படலாம். கொழும்பில் இருக்கும் அந்தத் திரட்டப்பட்ட கம்பெனியின் தலைமைப் பீடம் மாகாணத்திலோ மாவட்டத்திலோ கிராமத்திலோ தொழிலை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சிறிய கம்பெனியின் செயற்பாடுகளில் பொதுவாகத் தலையிடாது. கொள்கை ரீதியாக மட்டும் சில நேரங்களில் சில கருத்துக்களை முன்வைப்பார்கள். மற்றப்படி சிறிய கம்பெனியைத் தனித்துவமாக செயல்பட இடமளிப்பார்கள். ஆகவே இந்தக் கருத்தை நாங்கள் சிங்கள மக்களுக்கு விற்க வேண்டும் என்று கருதுகின்றேன். சமஷ்டி என்ற சொல் சிங்களவர் அகராதியில் தனித்துப் போதல் என்றே பொருள்படுகின்றது. நாட்டைப் பிரித்தல் என்றே அர்த்தப்படுகின்றது. ஒரு திரட்டப்பட்ட கம்பெனியில் சிறியதொரு கம்பெனி எவ்வாறு தனித்துவத்துடன் செயலாற்றுகின்றதோ அதே வகையில் வடகிழக்கு மாகாணங்கள் தம்மைத் தாமே நிர்வகிக்கும் முறையில் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதையே கடந்த 65 வருடகாலமாக நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். சமஷ்டி என்ற சொல்லை அரசியல்வாதிகள் சகதியாக்கியுள்ளதால்தான் வணிக மொழியில் அதே கருத்தை முன்வைத்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. வடமாகாணம் வித்தியாசமான மாகாணம். வேறு மக்கள், வேறு மொழி, வேறு மதங்கள், வேறு பூகோள நிலை, வேறு சீதோஷ்ண நிலை, வேறு விதமான தாவர, மிருக, பட்சிச் சூழல், வேறு கலாசார பண்பாடுகள், வேறு கலைப்படைப்புக்கள் என்று நாட்டின் மற்றைய பிரதேசங்களுக்கு மாறுபட்ட விதத்தில் இங்கு நிலைமை அமைந்திருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். போருக்குப் பின்னரும் நாங்கள் வித்தியாசப்பட்டுவிட்டோம். மக்கள் பாதுகாப்பு, பயத்தில் இருந்து விடுபடவேண்டிய ஒரு மனோ சூழல்,வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்று பலதையும் குறிப்பிடலாம். இவை மற்றைய மாகாணங்களில் ஒரு பிரச்சினை அன்று. ஆகவே அப்பேர்ப்பட்ட ஒரு தனி அலகைத் தானாக இயங்க விட்டு ஸ்ரீலங்கா என்ற ஒன்று திரட்டப்பட்ட ஒரு பாரிய கம்பெனியின் கீழ் தனித்துவமாக இயங்கும் ஒரு சிறிய கம்பனிபோல் வடகீழ் மாகாணம் இயங்க இடமளிக்க வேண்டும் என்பதை சிங்களப் பெரும்பான்மையினரும், நம்மவரும், உலக நாட்டு மக்களும் உய்த்துணர வழிசெய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கலாம். வாணிப வணிக உலகத்தில் முக்கியமாக ஸ்ரீலங்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது ஒன்று திரட்டப்பட்ட கம்பெனிகள் சமஷ்டி அடிப்படையிலேயே செயற்படுவதைச் சுட்டிக் காட்டுவதால்
சிங்கள மக்களிடையே மாற்றுச் சிந்தனைகள் ஏற்படலாம் என்பதே எனது கருத்து. ஆகவே சமஷ்டிக் கருத்துக்கள் பிரிவினையை ஏற்படுத்தாது ஒன்று திரளப்பட்டிருக்கும் கம்பனிகள் மத்தியில் ஜனநாயகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். எமது புதிய பயணத்தில் பெரும்பான்மையின சிங்கள மக்களின் கருத்தைக் கவர நாம் ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே மேற்படி எடுத்துக் காட்டுக்களை உங்கள் முன்வைத்தேன். இன்றைய இந்த 15ஆவது மாநாட்டில் என்னைப் பேச அழைத்த தம்பி மாவைக்கும் என்பேச்சைச் செவிமடுத்த உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
TPN NEWS