தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் புஷ்வானமா?

374

திம்பு-டோக்கியோ வரையான தீர்வுத் திட்டங்கள் சாத்தியமற்ற நிலை யிலும், 22பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தரப்பில் அங்கம் வகித்த காலத்திலும் விடுதலைப்புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கையளிக்கப்பட்ட காலத்திலும் ஒரு பலமாகவிருந்தபோது, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள்ளாத நிலையில் இப்புதிய ஆட்சியில் தமிழ் மக்கள் பேரவை யானது தமிழ் மக்களுக்காக தாம் வரைந்த தீர்வுத்திட்டத்தின் ஊடாக விடுதலையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையிலேயே இத்தீர்வுத்திட்டம் அமையப்பெறுவதாகக் கூறுகிறார்கள்.

இது சாத்தியம் அசாத்தியம் என்பதற்கப்பால் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது ஏன் இதுபற்றிச் சிந்திக்கவில்லை. புத்திஜீவிகளை உள் வாங்கிக்கொள்கிறோம் எனக்கூறும் இவர்கள் ஆயுதக்கட்சிகளை உள் வாங்கிக்கொண்டு இவ்வாறு கூறுவது ஏளனத்திற்குரியது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிரெலோ, கருணா குழுவி னர், பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா இவர்களையும் உள்வாங்கிக்கொண்டால் பேரவைக்கு பெரும் பேராதரவு கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ? தமிழினத்தின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த இவர்களுள் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துவருகின்றது. அந்தவகையில் ஏனையவர்களும் உள்வாங்கப்படலாம் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. புத்திஜீவிகள் என்ற போர்வையில் ஆயுதக்கட்சிகளின் உள்வாங்கலை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பேரவையின் செயற்பாட்டிற்கு வணங்கும் முதல்வர் த.தே.கூட்டமைப்பு, வடமாகாணசபையினை பிரித்தாளும் வடிவமாகவே தமிழ் மக்கள் பேரவையினை மக்கள் பார்க்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையான விடயங்களையே உள்ளடக்கியிருக்கின்றது. இது நடைமுறையில் சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறி. அவ்வாறு சாத்தியப்படாத விடயத்தினை செயற்படுத்தத்துணிவது முட்டாள்தனம். இதில் த.தே. கூட்டமைப்பும் உள்வாங்கப்பட்டு செயற் படுமாகவிருந்தால் தமிழ் மக்களுக்கு சாதகமான தன்மையினை ஏற்படுத்துமே தவிர தன்னிச்சையாக பேரவை செயற்படுமாகவிருந்தால் தமிழ் மக்கள் பேரவையையும், அதன் நிபுணர் குழுவின் அறிக்கையையும் புஷ்வானமாகவே மக்கள் கருதுவர். இப்பேரவையின் நிபுணர் குழு வின் அறிக்கையினை பார்ப்போம். இதனை அவதானித்து தமிழ்த்தரப்பினரும், தமிழ் மக்களும் தீர்மானங்களை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.

தமிழ் மக்கள் பேரவை
தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான
நிபுணர் குழுவின் அறிக்கை

அறிமுகம்
தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய முன்மொழிவு ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஒரு நிபுணர்குழுவை நியமித்தது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளும் இவ் நிபுணர் குழுவில் இடம்பெற்றனர். 2016 ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற பல சுற்றுக் கலந்துரையாடல்களின் பின்னர் நிபு ணர் குழுவானது இவ் அறிக்கையையும் முன்மொழிவையும் பேரவையின் கவனத்திற்கும் அதனைத் தொடர்ந்து மக்கள் கலந்துரையாடலுக்குமாக சமர்ப்பிக்கின்றது.
அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் தேவைப்பாடு
புதியதோர் அரசியல் தீர்வு ஒன்றை கண்டறிவது என்பது வெறுமனே புதிய தோர் அரசியலமைப்பை எழுதுவதன் மூலம் எட்டமுடியாது. இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசிய அரசாக இருப்பதே தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகும். தற்போதைய இலங்கை அரசில் (அரசு என்பது அரசாங்கத்தில் இருந்து வேறுபடுத்தி அனுகப்படுகின்றது) முழு அரசும் ஒருதேசத்தோடும் ஒரு மக்கள் கூட்டத்தோடும் அடையாளப்படுத்தப்படுகின்றது. இங்கு அரசானது ஓர் அதிகாரப் படிநிலையை கொண்டிருப்பதும் அவ் அதிகாரப் படிநிலை யில் சிங்கள பௌத்த அரசு முதல் நிலை யில் இருப்பதுமே இங்கு பிரதான பிரச்சினையாகும். இந்த அதிகாரப் படிநி லையானது ஒற்றையாட்சி முறைமையின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. தெற்கில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஒற்றையாட்சியின் பாற்பட்ட சிங்கள பௌத்த அரசு என்ற கருத்தியலில் உறுதியாக இருக்கின்றன. இந்த கருத்தியல் தமிழ் அரசியல் அபிப்பிராயத்தின் எந்த வகையினருக்கும் ஏற்புடையதல்ல. ஆகவே தான் அரசு தொடர்பில் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒர் அடிப்படைப்பார்வை இல்லாது ஓர் அரசியலமைப்பு ஆக்க முயற்சியில் நாம் ஈடுபட முடியாது என்று நாம் சொல்கின்றோம்.

இலங்கையானது ஒரு மதசார்புப் படிமுறையற்ற அரசாக உருவாகுவதற்கு சிங்கள பௌத்த சமூகமானது இலங்கையின் பல்வேறு மக்கள் கூட்டங்களுக்கிடையே ஓரு சமூக ஒப்பந்தம் ஒன்று தேவை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இவ் ஒப்பந்தம் ஊடாக ஒரு புதிய பல்-தேசிய இலங்கை அரசு ஒன்று தோற்றம் பெறவேண்டும். இதன் அர்த்தம் யாதெனில் தமிழ் மக்களினது தனித்துவமும் அவர்களது சுயநிர்ணய உரிமையும் முஸ்லீம், மலையக தமிழ் மக்களின் அரசியல் விருப்பார்வங்களும் அங்கீகரிக்கப்படல் ஆகும். 1978 அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அது ஒற்றையாட்சி முறைமைக்குள் இருந்தமை மட்டுமல்லாது சிங்கள பௌத்த தேசத்தை உச்சத்தில் கொண்டிருந்த ஓர் அதி காரப் படிநிலையுடன் கூடிய அரசிற்குள் உள்வாங்கப்பட்டமையாலும் என்பது விளங்கிக்கொள்ளப்படவேண்டும். இந்த அதிகாரப் படிநிலையோடு கூடிய அரசு என்ற கருத்தியல் நிலை மாறாவிட்டால் சமஷ்டி அரசியலமைப்பு வந்தாலும் அரு நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கும். இதன் காரணமாகவே அரசியலமைப்பு ஏற்பாடுகளைப் பற்றி நாம் பேசத்தொடங்க முன்னர் தமிழ் மக்கள் கூட்டத்தினது தனித்துவமும் சுயநிர்ணய உரிமையும் ஒரு அரசியல் உடன்படிக்கை ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இத்தகையதொரு சிந்தனை நெறியில் இருந்து தான் புதிய அரசியலமைப்பின் ஏற்பாடுகளைப் பற்றிப் பேச முடியும். இத்தகைய சிந்தனை மாற்றம் இல்லாதவிடத்து கடந்தகால அரசியலமைப்பாக்க முயற்சிகள் போன்றே இம்முறையும் அரசியலமைப்பாக்க முயற்சி பெரும்பான்மைவாத தன்னிச்சையான முயற்சியாக அமைந்துவிடும்.

அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலைநோக்குப் பார்வையானது ஓர் உடன்படிக்கை வடிவில் (பொஸ்னியாவில் கைச்சாத்திடப்பட்ட டேய்டன் உடன்படிக்கை, வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட குட் ஃப்ரைடே உடன்படிக்கை போன்றவொரு உடன்படிக்கை)சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவ சியமாகும். இவ்வுடன் படிக்கையில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களில் தமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி, அதிகாரம், பாரம்பரிய தாயகம் ஆகியன உள்ளடங்கும். எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக கிழித்தெறிந்தால் வேறு மாற்றுவழிகள் எதுவும் இல்லாதவிடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன் படிக்கையில் உள்வாங்கப்படவேண்டும். இவ்வுடன்படிக்கையானது மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால் அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால்) உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்கவேண்டும். அரசியலமைப்பு ஒன்று உள்நாட்டு சட்டத்தோடு மட்டுப்படுவதாகக் கருதப்படுவதால், இவ்வுடன்படிக்கை மூலமாக மூன்றாம் தரப்பொன்றின் பங்கு பற்றலை உள்வாங்குவதானது எட்டப்பட்ட அரசியல் தீர்வின் நிலைத்தகு தன்மையை ஒரு சர்வதேச, வெளித் தரப்பு ஒன்றின் உத்தரவாதத்தின் ஊடாக நிலைபெறச்செய்ய உதவும். மேலும் இவ்வுடன்படிக்கையானது. பொறுப்புக் கூறல் மற்றும் நிலை பெறச்செய்ய உதவும். மேலும் இவ்வுடன்படிக்கையானது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சினைகள், இராணுவமயநீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்புத் தொடர்பிலானவை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் உடன்பாடுகளை எட்டிய ஓர் உடன்படிக்கையாக இருக்க வேண்டும். மேற் சொன்ன விடயங்களில் முன்னேற்றம் இல்லாமல் அரசியலமைப்பு விவகாரங்களைப்பற்றிய திறந்த பாதுகாப்பான உரையாடல் ஒன்று வடக்கு கிழக்கில் நடைபெறமுடியாது.

‘மக்கள் கூட்டங்கள்’ மற்றும் ‘தேசம்’ என்ற சொற்பாவனை தொடர்பில் பின்வரும் விளக்கத்தை தருகின்றோம்.
அ) பொதுச் சர்வதேச சட்டம், குறிப்பாக சிவில் மற்றும் குடியியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனை, ‘மக்கள் கூட்டங்கள்’ சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என வரையறுக்கின்றது. சர்வதேச சட்டம் ‘மக்கள் கூட்டங்கள்’ என்ற சொற்பாவனையை வேண்டுமென்றே வரைவிலக்கணப்படுத்தவில்லை என சில புலமையாளர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணம் இப்பதம் அரசியலி னால் வரையறுக்கப்பட வேண்டுமே அன்றி சட்டத்தரணிகளால் வரையறுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதனாலேய ஆகும்.

ஆ) சர்வதேச சட்டம் மிகவும் தெளிவாக சிறுபான்மையோர் என வரையறுக்கும் மக்கள் கூட்டத்தினரை தனியாகவும் தமக்கு சுயநிர்ணய உரிமையைக்கோரும் மக்கள் சட்டத்தினரை வேறோர் வகைக்குரியதாகவும் வேறுபடுத்துகின்றது. வௌ;வேறு துறைசார் புலமையாளர்கள் தம்மை தேசமாக – சுயாட்சிக்கு உரித்தானவர்களாக – கருதும் மக்கள் கூட்டத்தினரே சுயநிர்ணய உரிமையைக் கோருகின்றனர் எனக் கூறுகின்றனர். அத்தோடு சுயநிர்ணய உரிமை என்பது பல உரிமைகளின் கூட்டாக இருப்பதும் அதற்குள் தனி நாட்டிற்கான உரிமை என்பது அவற்றில் ஒன்று மட்டுமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இ) தமிழ் மக்கள் வெகு காலமாகவே அரசியல் ரீதியாகத் தம்மைத் தேசமாகக் கருதி வந்துள்னர். அவ்வாறாக தம்மை தேசமாக வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க ஆவணமாக ஏப்ரல் 1951இல் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலையில் இடம்பெற்ற முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் அமைகின்றது. இத்தீர்மானத்தில் தம்மைத்தேசம் என அழைத்துக் கொள்வதற்குத் தமிழர்கள் சவால் விடப்பட முடியாத நியாயங்களைத் தம்மகத்தே கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட வேண்டியது. இம் மாநாட்டிலேயே தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையும் தெளிவாக முன் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து சமஷ்டிக் கோரிக்கையும் தெளிவாக முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சமஷ்டிக் கோரிக்கைக்கும் தேசம் என்ற அடையாளப்படுத்தலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பதும் இவை முரண்பாடானவை அல்ல என்பதும் பெறப்படும். மேலும் தமிழர்கள் ஓர் தேசத்தவர்கள் என்ற முன் வைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளால் தொடர்ந்து தேர்தல்களில் முன் வைக்கப்பட்டு அவை தமிழ் மக்களால் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்துள்ளமை தெரிந்ததே.

ஈ) ஆகவே இந்த உப குழுவானது வரலாறு, அரசியல் மற்றும் சட்டம் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள மேற்படி காரணங்களுக்காக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்று உறுதிப்படக் கூறுகின்றது. இன்னும் தெளிவாக சர்வதேச சட்ட மொழியில் கூறுவதானால் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டம் என்ற வகை யில் தம்மை தேசமாகக் கருதி சுயநிர்ணய உரிமையைக் கோருகின்றனர். என நிபுணர் குழு சமர்ப்பிக்கின்றது. மேற்சொன்னவை காரணமாக தமிழ் மக்கள் பேரவை யானது தேசம் என்ற சொற்பதத்தை தொடர்ந்து எம்முன் வந்த பல தலைமுறைத் தமிழர்கள் பாவித்தமை போன்றே தொடர்ந்து உபயோகப்படுத்துவதா? என்ற தீர்மானத்தை மக்கள் கலந்தாய்வின் போது மக்களிடம் விடப்படவேண்டும் எனக் கருதுகின்றது. மேலும் தேசம் என்ற அரசியற் பாவனை ஒரு குறிப்பிட்ட கட்சியினது கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஏகபோக உரிமையோ இல்லை என்பதையும் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான வரைபு முன்மொழிவுகள்
1.இலங்கை அரசின் தன்மை
1.1இலங்கை ஒரு பல்-தேசிய, பல்- கலாசார, பன்மொழித்துவ, பல்-மத அரசாகும். அது தனது அக்கத்துவ மக்கள் கூட்டங்களையும், சமூகங்களையும், கொண்டமைந்தது ஆகும். மத்தியும், மாநிலங்களும் மக்கள் கூட்டங்களின், சமூகங்களின் பன்மைத்துவத்தை மதித்து, அங்கீகரித்து, பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டவை.
1.2 சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏயை சமூகங்கள் பல்-தேசிய இலங்கையை உருவாக்குகின்றன.
1.3 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்கும் காரணத்தினால் அதன் ஆயுள்புலபரப்பாக அமையப்பெறும்.
தொடரும்…

நெற்றிப்பொறியன்

tamil-peoples-council-1220

SHARE