தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வான்எல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதிகளை சேர்ந்த 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
தம்பலகாமம், ஈச்சநகர் பகுதியிலுள்ள மாட்டு உரிமையாளரொருவர் தனது மாடுகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை இனம் கண்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டு வேனில் ஏற்றிச் செல்வதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் கூறியுள்ளனர்.