சாலை ஓரக் கடைகளில் கைகளில் வித்தை காட்டி, பறக்கவிடுவதுபோல் மேஜிக் செய்து, சுடச்சுடத் தரும் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. நினைத்தாலே நாவில் நீர் ஊறவைக்கும் அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும்.
‘மூன்று வெள்ளைக்காரர்களைத் (அரிசி, மைதா, சர்க்கரை) துரத்தினாலே போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிரஸ்மீட்டில் சொல்லி இருந்தார். பாரம்பரிய உணவான அரிசியையே குறைக்கச் சொல்லும் நாம், மைதாவில் செய்யும் உணவுகளை மட்டும் ஏன் வெளுத்துக்கட்டுகிறோம்? அப்படி மைதாவில் என்னதான் இருக்கிறது? மைதாவினால் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு நல்லதுதானா? டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கமாகப் பேசினோம்.
”தமிழகத்தில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அப்போதுதான் பரோட்டாவும் இங்கு பிரபலமானது. தோலுடன் நன்றாக மாவாக அரைக்கபட்ட கோதுமை மாவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். கோதுமை தவிடு நீக்கப்பட்டு வெண்மையாக்கப்படுவதே மைதா. இந்த மாவை, மேலும் வெண்மையாக்கவும் மிருதுவாக்கவும் ஒரு சில வேதிப்பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன.
கோதுமையின் தோலில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் இருக்கிறது. இப்படி பாலிஷ் செய்து வரும் மாவில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போய்விடும்.
மைதா மாவில் உப்பு இட்டு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து எண்ணெய் சேர்த்து, உருட்டி, தட்டி, நன்றாக அடித்து, வட்ட வடிவில் பறக்கவிட்டு, திரும்பவும் சுருட்டி, வட்ட வடிவில் தோசைக்கல்லில் போட்டு எடுப்பார்கள். இப்படி அடித்து, துவைத்துச் செய்யும் பரோட்டா, வயிற்றுக்குள் போனால், எளிதில் செரிமானம் ஆகாது. இதில் சேர்க்கும் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. நம் ஊர்க் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பன், பர்கர், பிரட், பீட்சா, சமோசா, நான், நூடுல்ஸ் மற்றும் கேக் இவை எல்லாமே மைதாவினால் செய்யப்படும் பேக்கரி தயாரிப்பு உணவுகள்தான்.
கோதுமை மாவையும், மைதாவையும் ஒப்பிட்டால் இரண்டிலும் கார்போஹைட்ரேட் சமம். மைதாவில் கலோரி கொஞ்சம் அதிகம். ஆனால், நார்ச் சத்து துளிகூட இல்லை. புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் குறைவாகவே இருக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், பொட்டாசியம், தாமிரம், சோடியம், இரும்பு போன்றவற்றின் உப்புகளும் இதில் மிகவும் குறைவு.
வட நாட்டினர்கூட சப்பாத்தி, சுக்கா ரொட்டி என அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நம் ஊர் சீதோஷண நிலைக்கு இட்லி, இடியாப்பம் என மிதமான உணவுகள்தான் சரிவரும்.
குடலில் நார்ச் சத்தும், நீர்ச் சத்தும், சேர்ந்தால்தான் சாப்பிட்ட உணவு ஜீரணிக்கும். சாப்பிட்ட உணவு 16 மணி நேரத்துக்குள் வெளியே போய்விடவேண்டும். வயிற்றுக்குள்ளேயே தங்கி இருந்தால், அதனால் பாக்டீரியா வளர்ந்து வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வந்துவிடும்.
இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதால், பல்வேறு பிரச்னைகள் வரும். சாப்பிட்டு முடித்ததும், உடலுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் உடனே தூங்கப்போய்விடுகின்றனர். காலைக் கடன்களைச் சரிவர முடிக்காமல் போகும்போது, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் வரும். அதைத் தொடர்ந்து மூல நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. செரிமானம் இல்லாததால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஏற்படும். உடல் பெருத்து ஒபிசிட்டிக்கும் வழிவகுத்துவிடும்.
மேலும், இதயம் சீராக இயங்க, மைக்ரோ நியூட்ரிஷன்கள் தேவை. அது மைதாவில் இல்லாதபோது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்படும். கூடவே, சர்க்கரை நோயும் தோன்றலாம்.
பேக்கரி தயாரிப்புக்கள் அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு நாள் விரும்பிச் சாப்பிடும்போது, கூடவே பழங்கள், காய்கறிகள் சாலட் எடுத்துக்கொள்வதும் அவசியம். நிறைய நீர் அருந்த வேண்டும். இரவில் மைதாவால் செய்யப்படும் உணவை முற்றிலும் தவிர்ப்பது ஒன்றே ஆரோக்கியத்துக்கு வழி!”