ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் வாஷார் மாவட்டத்தில் கடந்த 1–ந்திகதி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராணுவ வீரர்கள் 23 பேர் பலியாயினர். பாதுகாப்பு படையினரின் பதிலடியில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் களம் இறங்கினர். வடக்கு பரியாப் மாகாணத்தின் தவ்லத் அபாத் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் ஷா வாலிகோட் மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஹார் மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் பலியாயினர். பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.