கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம் பெறக்கூடிய ஆபத்து இருக்கின்றது என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதை அலட்சியப்படுத்தியமைக்கு நாட்டின் தலைவரும் அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக இரங்கல் திருப்பலி கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்றது.
அதில் மறையுரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரிவித்ததாவது, பொறுப்புக்களை அலட்சியம் செய்தவர்களுக்கு வழங்கக்கூடிய தண்டனை அவர்களை பதவி நீக்குவதேயாகும். இதுபோன்ற பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
தெய்வத்தின் முன்னிலையில் மண்டியிட்டு வேண்டுதல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் உண்டு. புனித அந்தோனியாரின் எழில் மிகு ஆலயத்தை அப்பாவி மக்களின் இரத்தக்கறையால் தோய்த்து அந்த புனிதரை அகௌரவப்படுத்தியவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.
அதேவேளை, ஈஸ்டர் தினத்தில் தெய்வத்தை தரிசிக்க சென்றவர்களை அழித்தொழிக்கும் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனைத் தடுக்காது புனிதர்களை போல் செயற்படுபவர்கள் மீதும் இறை தண்டனை உண்டு.
பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட நாட்டின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுத் தாக்குதலில் பலியான அனைவரையும் நான் அன்புடன் நினைவு கூருகின்றேன். அவர்களை இழந்து துயருறும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவதற்கு எனது ஆசியை வழங்குகின்றேன். இந்த நாட்டில் சமாதானமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்த மக்களுக்கு ஏன் இப்படியான துயரம் நிகழ்ந்ததென்று கேட்க விரும்புகின்றேன்.
சம்பவம் நடந்த தினம் நான் உடனடியாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வந்தேன். எனினும் பாதுகாப்புப் படையினர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என என்னை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அவ்வாறு நான் வாகனத்தில் ஏறிய பின்பே நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி ஆலயத்திலும் குண்டு வெடித்ததாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அப்போது அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனேன்.
அன்று ஈஸ்டர் தினம் என்பதால் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றவர்கள் இறைவனின் மீதும் புனித அந்தோனியார் மீதும் அதீத விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டவர்கள். முழந்தாள் படியிட்டு இறைவனை வணங்கியவர்கள் தமக்கு இவ்வாறு நிகழும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இது இறைவனின் விருப்பத்தில் இடம்பெற்றதல்ல. மனிதனின் செயற்பாட்டால் இடம்பெற்றது. நான் இதனை கேட்டதும் தாங்க முடியாத துயரில் ஆழ்ந்தேன். ஆலயத்தில் இறைவனை வணங்கப்போனவர்களை இவ்வாறு கொடூரமாக கொலை செய்ததேன்? இதற்கு பதில் கிடைக்கவில்லை. பெற்றோர்கள், குழந்தைகள் , உறவினர்கள் என எதிர்காலத்தைப்பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்தவர்களை கொலை செய்தவர்களுக்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும் இறைவனின் தண்டனை நிச்சயம் உண்டு. இந்த கோர சம்பவம் இடம் பெறுவதை முன்னரே தெரிந்திருந்தவர்கள் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். தெரிந்திருந்தும் அலட்சியம் செய்த தலைவர்களும் அதிகாரிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இதனைச் சிறியதொரு விடயமாகக்கருதி கைகழுவி விட முடியாது. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு நாம் தண்டனை வழங்க வேண்டும். அந்த தண்டனை அவர்களை அப்பதவியிலிருந்து நீக்குவதே ஆகும். இதுபோன்ற பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள். அவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இது ஒரு வஞ்சகமான செயற்பாடு. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. எனில், ஏன் அதை அவர்கள் தடுக்கவில்லை என கேட்க விரும்புகின்றேன்.
இதைச்செய்தவர்கள், அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் தாம் எதனையும் செய்யாதவர்கள் போல் புனிதர்களைப்போல் உள்ளார்கள். இந்த பாவச்செயலிலிருந்து தப்பிவிடலாம் என நினைப்பது தவறு. அவர்களுக்கு இறைவனின் தண்டனை கிடைப்பது உறுதி.
மேலும், ஆலயத்தில் ஓடிய இரத்த ஆறு அன்று கடவுள் முன்னிலையில் காயீன் -ஆபேல் சம்பவத்தில் இறைவன் முன்னிலையில் சிந்திய இரத்தத்திற்கு சமமாகும். இந்த இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும். அவரது தீர்ப்பு கிடைப்பது உறுதி என அவர் மேலும் தெரிவித்தார்.