தென்கிழக்கு டெல்லியில் 85 வயது நிறைந்த பெண் ஒருவரை அவரது மகள் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்கிழக்கில் கல்காஜி பகுதியில் குடியிருப்பு ஒன்றின் 4வது தளத்தில் 85 வயது கொண்ட விதவை பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். வீடியோவில் தாயை அடிக்கும் அவரது 60 வயது நிறைந்த மகள் சில சமயங்களில் அங்கு வந்து செல்வார். அந்த வீடியோ காட்சியில், பால்கனியில் நின்று கொண்டிருந்த தனது தாயை வலுகட்டாயத்துடன் அறைக்குள் இழுத்துள்ளார் அவரது மகள்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தாயை மகள் அடித்துள்ளார். எதிர்திசை தளத்தின் பால்கனியில் நின்றிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோ பதிவு செய்கிறார். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மகள் சத்தம் போடுகிறார் ஆகியவை பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் குழு ஒன்று அந்த வீட்டிற்கு சென்று உள்ளது. ஆனால் மகள் மீது போலீசில் புகார் அளிக்க அந்த தாய் மறுத்து விட்டார்.
டெல்லி போலீசாரிடம் திட்டம் ஒன்று உள்ளது. அதன்படி, உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து, உதவி செய்வதற்கு என்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஒரு குழுவாக செல்வார்கள். ஆனால் இத்திட்டத்தின் கீழ் உள்ள பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் திட்டத்தில் அந்த தாய் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்தது.
எனவே இத்திட்டத்தில் சேரும்படி அவரிடம் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். அதனால் அவரது சூழ்நிலை குறித்து கண்காணிக்கப்படும் என போலீசார் ஒருவர் கூறியுள்ளார். இரண்டு பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்ற உறுதியை நாங்கள் அளிக்கிறோம் என கூடுதல் டி.சி.பி. (தென்கிழக்கு) விஜய்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.